அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?

(அதிரதன்)

பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தான், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில், அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து, ஓரணியில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, கிழக்குத் தமிழர் ஒன்றியம் தோற்றம் பெற்றிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய ‘பொறிமுறை’ ஒன்றை உருவாக்கும் முகமாக, சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதன், எழுத்தாளர் செங்கதிரோன், த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், கடந்த ஜனவரி ஆரம்பத்தில் மட்டக்களப்பில் அதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது கிழக்கின் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு, கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

தமிழர்கள் சார்ந்திருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த முன்னெடுப்புக்கு ஒத்துழைக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகம் என்கிற விடயத்தில், 100சதவீதம் முன்னேறியிருக்காத நிலையில், இந்த ஒற்றுமை சாத்தியமா என்பதும், பிரதேசவாதச் சிந்தனைக்கு தூபம் இடுவதாக அமைந்து விடுமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில்தான், கடந்த திங்கட்கிழமை (02) மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுவதோ, முஸ்லிம்களுக்கு எதிராகஇயங்குவதோ இந்த அமைப்பின் நோக்கம் அல்ல; மாறாக, கிழக்குத் தமிழர்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் அமைப்பாகவே செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கும், தேசியரீதியில் அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கும், தேவைகள் சார் நிறைவேற்றுதல்களுக்கும் எதிராகவுமே பிரதேசவாதம் என்ற ஆயுதம், பயன்படுத்தப்படுகிறது.

தமிழர்களின் ஒற்றுமை என்ற சிந்தனைகளை இல்லாமல் செய்யும் வகையில், ஒரு பக்கம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அதையும் தாண்டிய வகையில், பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகளின் அச்சத்துக்கு மத்தியிலும் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு, எத்தகைய ஆதரவு கிடைக்கப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும். அதேவேளை, இந்த முயற்சிகள் ‘விழலுக்கு இறைத்த நீராகி’ விடுமா என்று ஏக்கங்கள், சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

மக்கள் தமக்கிடையில் பேதங்களை மறந்து ஒன்றுபடத் தயாராகவே உள்ளனர். ஆனால், தலைவர்களும் கட்சிகளும்தான், தங்கள்தங்கள் தனிநபர் செல்வாக்கு மற்றும் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால், பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றுபடுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழ்க் கட்சிகளுக்குள் செல்வாக்குச் செலுத்தும் கட்சி முக்கியஸ்தர்கள், பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்குத் தங்கள் கட்சிகளின் தலைமைப் பீடங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்; பொதுமக்களும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தைத் தமிழர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டுமானால், எதிர்வரும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில், சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் போட்டியிட்டால் மட்டுமே, அது சாத்தியம்.

“சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைய வைப்பதற்குக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் அணி திரளவேண்டும். அதற்குத் தமிழ் ஊடகங்களும் பாரிய பங்களிப்புச் செய்ய வேண்டும்” என்று கிழக்குத் தமிழர் ஒன்றியம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதில், கிழக்குத் தமிழர் ஒன்றியம் கடைப்பிடிக்கும் அரசியல் அறமாக, ‘மக்களுக்காகவே கட்சிகள்; கட்சிகளுக்காக மக்கள் அல்ல’ என்பதாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

அரசியல் அதிகாரம் என்பது, ஆளுதல் என்பதில் தான் ஆரம்பிக்கிறது. இதன் வெற்றி என்பது, கிழக்கில் அதிகாரமற்று இருக்கின்ற தமிழர்களுடைய செயற்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாகக் கொண்ட தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக உழைத்தல், கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாகக் கொண்ட தமிழர்கள் அனைவரையும் சாதி, மத, பிரதேச, பால், வர்க்க மற்றும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தல், கிழக்கு மாகாணத்தில் வதியும் ஏனைய சகோதர இனங்களுடன் நல்லுறவைப் பேணி வளர்த்தலினூடாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களித்தல் என்றெல்லாம் தமக்கான தாரக மந்திரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது கிழக்குத் தமிழர் ஒன்றியம்.

அத்துடன் மிக முக்கியமாக, இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்த் தீர்வாக, குறைந்த பட்சம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து, ஒரே அலகாக அமைந்த, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, போதிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பெற்ற, ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சி அலகையே கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும் என்றும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் அத்தகைய தீர்வு எட்டப்படும் வரை, வட மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு, கிழக்கு மாகாணத்துக்குப் பொருந்தாத களநிலையைக் கருத்தில் கொண்டு, கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில், பொருத்தமான அரசியல் வியூகங்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து, அதை வினைதிறனுடன் செயற்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கடந்த 70 வருடங்களில், 30 வருடங்களாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம், அரசியல் போராட்டம் என அனைத்துப் போராட்டங்களும் எந்தவித வெற்றிகளையும் தராத நிலையில், ‘புலி வருகிறது’ என்ற பீதி நாட்டில் எங்கும் நிரம்பி இருக்கிறது. இவ்வாறானதோர் அச்சநிலைமையின் தோற்றமானது, நாட்டின் பெரும்பான்மையின மக்களியே, தேசியக் கட்சிகள் அரசியல் நடாத்துவதற்குரிய சாதக சூழ்நிலையையே ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியலில் அமுக்கக் குழுக்களின் தேவை மிக முக்கியமானதாகவே இருக்கிறது. இருந்தாலும், அவ்வாறான அமுக்கக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பலம், ஆதரவு இருக்குமாக இருந்தால், அவற்றின் பணிகள் சாத்தியமே.

இருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு இல்லாமல்போகும் ஆபத்தொன்று அடையாளம் காணப்படுகின்ற சூழ்நிலையில், முழு கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையிலமைந்த வெகுஜன அமைப்பாக, கிழக்குத் தமிழர் ஒன்றியம் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துகள் கிடையாது.

இருந்த போதிலும், தமிழ்த் தேசியம் சார்ந்த சிந்தனைகளை இரத்தத்துடன் சேர்த்தே வைத்திருக்கின்ற தமிழர்களின் இறுதித் தேர்தல் வாக்களிப்புதான் இதற்கான முடிவைச் சொல்லும்.

அதனைவிடவும், தொடக்கத்திலேயே காணாமல் போகின்ற அமைப்புகளுக்கு மத்தியில், இந்த முன்னெடுப்புக்கு எவ்வகையான பிரயோசனம் இருக்கப் போகிறது என்பதும் கேள்வியாகத்தான் இருக்கும்.

களையெடுப்பு, காணாமல் ஆக்கப்படுதல் என்ற களங்களின் காரணமாக, கடந்த காலத்தில் தமிழர்கள் மத்தியில் இருந்து காணாமல் போன சிறந்த வழிகாட்டல் என்ற விடயம், இனிமேலும் உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுதல் மிகவும் அவசியமே.

இத்தகைய அவசியத்தை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்ளுகின்ற போதுதான், எந்த ஓர் அரசியல் முயற்சியும் கிழக்கில் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், மக்கள் மயப்படுகின்ற ஜனநாயக சூழ்நிலையில், யாரைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது முக்கியமே.