அரிய சந்தர்ப்பம்? தவறவிட்ட ஆனந்தி!

இங்கிலாந்தில் இருந்து கொண்டு எழுத்துமூலம் விடுத்த, முதல்வரின் அறிவுறுத்தல் மீறப்பட்டு நடந்தேறியது, வட மாகாண சபை பிரதி தவிசாளர் தெரிவு. மூன்று வருடங்களா கூடும் சபையின் பிரதி தவிசாளர், அண்மையில் மாரடைப்பால் மரணித்தார். தன்னை அரைநாள் மட்டுமே சபை நடத்த அனுமதித்த கவலை, நீண்ட நாட்களாக அவருக்கு தந்த, நெஞ்சு வலியுடன் தான் அவர் கண்துயின்றிருப்பார். அவருக்கு பரிசுத்த ஆவியின் அருள் கிடைத்தாலும், கடைசிவரை தவிசாளர் கதிரையில், முழுநாள் அமரும் பாக்கியம் கிடைக்கவில்லை.

அதனை வாய்விட்டு சபையில் அவர் சபையில் முறையிட்டும், தவிசாளர் மனம் இரங்கி தன் இருக்கைவிட்டு இறங்கவும் இல்லை, அவர் இறக்கும்வரை அவரை அமர விடவும் இல்லை. இது எனக்கு முன்பு யாழில், வைரமாளிகை என்ற பிரபலமானவரை நினைவில் கொண்டுவருகிறது. யாழ் பஸ் நிலையத்தில் அந்த ஆஜானுபாகுவான கருமேனியர், அப்போது யாழில் பிரபலமான வைரமாளிகை ஸ்தாபனம் வழங்கிய, விளம்பர மேலங்கியுடன் காணப்படுவார். மொத்த பஸ்தரிப்பு நிலையத்தையும் தான் தான் குத்தகைக்கு எடுத்தது போல செயல்ப்படுவார்.
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூர் மாடறுக்குது என்று கூவிவிட்டு, தன் கையில் இருக்கும் சுவீப் டிக்கட்டை வாங்கும்படி பயணிகளிடம் நீட்டுவார். அதில் கவனித்த வேடிக்கை என்னவென்றால் அவரைத் தவிர வேறு எவரும், அந்தப்பகுதியில் அதிஸ்டலாப சீட்டு விற்பதில்லை. காரணம் அவர் அதற்கு அனுமதிப்பதில்லை. வைரமாளிகை உடையில் சர்க்கஸ் கோமாளிபோல இருந்தாலும் ஆங்கிலம் பேசுவார், கூடவே தன் கணக்கு அறிவையும் பறைசாற்றுவார். மெத்தப்படித்தவர் போல் வறுத்து எடுத்துவிடுவார். எப்படா பஸ் புறப்படும் என்ற நிலையில் தான் பயணிகளிருப்பர்.

இன்று அன்ரனி ஜெகனாதன் அமரர் ஆனபின், யாரை பிரதி தவிசாளராய் தெரிவு செய்வது என்ற சலசலப்பில் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவு, சிவநேசன் அல்லது ரவிகரன் என்பது உள்தகவல். அதற்கான ஆதரவு திரட்டும் படலமும் நடந்தேறியது. இடையில் முதல்வர் தான் வரும்வரை தேர்வை நிறுத்தி வைக்கும்படி, பதில் முதல்வருக்கு கடிதம் அனுப்ப விடயம் சூடுபிடித்தது. பொருளாதார அபிவிருத்தி மையம் மாங்குளத்திலா, ஓமைந்தையிலா என்ற ஏட்டிக்கு போட்டியில் முதல்வர் அணி முன்னிலை பெற்றதால், பிரதி தவிசாளர் பதவியும் பேரவை ஆதரவாளர் வசம் போகலாம் என்ற நிலை ஏற்ப்பட்டது.

தமிழரசு கட்சியா கொக்கா என, பொங்கி எழுந்தவர்களின் தெரிவு, மாகாண சபையில் இருந்து பாராளுமன்றம் சென்ற, சிவமோகன் வெற்றிடத்துக்கு தெரிவான வல்லிபுரம் கமலேஸ்வரன். இவரும் சிவநேசன், ரவிகரன் போலவே முல்லைத்தீவு மைந்தன். எப்போதும் கீரைக்கடைக்கு எதிர் கடை போடும் சிவாஜிலிங்கம், இப்போது களம் இறக்கியது அனந்தி சசிதரனை. சபாஸ் சரியான போட்டி என சந்தோசப்பட்டவரை சோகத்தில் ஆழ்த்தியது தேர்தல் முடிவு. வெறும் ஐந்து வாக்குகளால் தன் வெற்றி வாய்ப்பை இழந்தார் அனந்தி. அன்று சபையில் தலைவர் உட்பட பிரசன்னமான 32 பேரில் வென்றவர் பெற்றது 18, தோற்றவர் பெற்றது 13 நடுநிலை 1.

முப்பத்து எட்டு உறுப்பினர் கொண்ட சபையில் அன்று, தவிசாளர் உட்பட வரவு முப்பத்து இரண்டு மட்டுமே. எதிர்கட்சி தலைவர் கொழும்பில், ஈ பி டி பி உறுப்பினர் தவநாதன் நடுநிலை. ஏன் நடுநிலை என கேட்டவரிடம், ஆள் இல்லாத கடையில் யாருக்கு தேனீர் ஆற்றுகிறார்கள் என்று தெரியவில்லை, அதனால் நடுநிலை என்றாராம். உண்மைதான் தெரிவு செய்யப்படும் பிரதி தவிசாளர் அமர தன் இருக்கையில் இடம் தராத, தவிசாளர் நிலைப்பாட்டை அறிந்தவர் தவநாதன். அன்ரனி ஜெகநாதன் அடைய முடியாததை, இனி தெரிவாகுபவர் பெற்றுவிடும் நிலை ஏற்படாது என்பது, தவநாதன் தன் முன்னோர் மூலம் அறிந்த, யாழ் வைரமாளிகை செயல் பற்றிய கேள்விஞானம்.

தேரை இழுத்து தெரிவில் விடுமுன் சிவாஜிலிங்கம் ஆடிய ஆட்டம் கூட, சற்று விசனத்துக்கு உட்பட்டது. முன்பு நிறைவேற்றிய தன் வீரவிளையாட்டை இம்முறையும் அரங்கேற்ற ஓடிய அவரை, எதிர்கொள்ள செங்கோலுக்கு பாதுகாவல் தந்த உறுப்பினருக்கு, துணை நின்றார் சகோதர இனத்தவர். தன் முயற்சியில் தோல்வி கண்டு இருக்கை திரும்பிய சிவாஜியார், நான் தூக்கி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்க, அடித்து கீழே வீழ்த்தி இருப்போம் என யாரோ குரல் எழுப்பினர். அண்மைக்காலமாக தான் உண்டு தன் செயல் உண்டு என, செயல்ப்பட்டு வரும் அனந்தியை, தேர் ஏற்றி இழுத்தவர் சிவாஜியார்.

வென்றால் புகழ் வரும் முன்னே, தோற்றால் இகழ்ச்சி வரும் பின்னே என்பதை அறியாமலே அனந்தி சசிதரன் களம் காண வந்தார். அடுத்தவர் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டால், என்ன நிலை என்பதற்கு அனந்தி நல் உதாரணம். வட மாகாண சபை தேர்தல் முதல், பாராளுமன்ற தேர்தல் வரை, வாக்குகளை பெறும் பகடை காயாகவே, அவர் பயன்படுத்தப்பட்டார். அவருக்கான முகம் சசிதரன் கொடுத்தது. அதே வேளை தான் இராணுவத்திடம் ஒப்படைத்த கணவன் பற்றிய விபரம் அறிய, அவர் நீதிமன்றம்வரை சென்ற அவர் செயல், வாக்குகளை தமக்கு சாதகமாக்கும் சந்தர்ப்ப அரசியல் வாதிகளுக்கு, சாதகமானது தான் வேதனை.

எங்கே சாவு விழும் அங்கே உடன் கடைவிரிப்போம் எனும், சவப்பெட்டி வியாபாரிகள் நிறைந்த அரசியலில், சசிகரன் மனைவி என்பதால் தன்னை சபை ஏற்றுகிறார்கள் என்பதை புரியாத பேதையா, அல்லது பதவி சுகம் விரும்பியா அனந்தி என்பது தெரியவில்லை. இருந்தும் இவரை பயன்படுத்தி தம்மை நிலைநிறுத்த பலர் முயல்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது. தொடர் அவமானங்களை அனந்தி முகம்கொடுத்த போதும், இந்த அரசியல் சதுரங்கத்தில் பகடையாய் தான் பாவிக்கப்படுவதை, ஏன் தொடர்ந்தும் அனுமதிக்கிறார் என்பது புரியவில்லை. அவரிடம் ஒரு போராட்ட குணாம்சம் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

இந்த நிலையில் அவர் பிரதி தவிசாளர் தேர்வில் வென்றிருந்தால், சபையில் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் எனக்கேட்ட போது, அண்ணை அது சங்கீத கதிரை போட்டி போல சுவாரசியமாக இருந்திருக்கும் என்றார் இளம் மாகாண சபை உறுப்பினர். வடை போச்சே என்ற வடிவேலு நிலையில் தான் சிவாஜிலிங்கம். இல்லை என்றால் தவிசாளர் சபை வரும் முன்பே, அவர் செங்கோலை முன்னால் காவிச்செல்ல, ஆனந்தி பின்னால் வந்து சபை அமர்வை தலைமை தாங்கி நடத்தியிருப்பார். தவிசாளரும் அடுத்த அமர்வுக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து, தன் காரியாலயம் கூட செல்லாது, நேரே சபைக்குள் பிரவேசித்து கதிரையை கைப்பற்றி இருப்பார்.

காணற்கரிய அந்த சங்கீத கதிரை போட்டியை, கண்டுகளிக்கும் பாக்கியம் வெறும் 5 வாக்குகளால் கைமாறிப்போன கவலை, அனந்தி சசிதரனுக்கு வாக்களித்த 13 உறுப்பினருக்கும் உறுத்தலாய் இருந்தபோதும், தவிசாளரை பொறுத்தவரை, கதிரை தப்பியது தம்பிரான் புண்ணியம், என்ற மன ஆறுதலை தந்திருக்கும். ஏனென்றால் வாக்களிப்பில் அவரும் கலந்துகொண்டுள்ளார். அவர் அனந்திக்கு நிச்சயம் வாக்களித்திருக்க மாட்டார். எது எப்படியோ கடந்த 3 வருடங்களாக நடை பெறும் சபை அமர்வுகளில் துரிதகதியில் நடந்தேறிய செயல் இது என்பதில், அவர்களின் வினைத்திறன் வெளிப்பட்டிருக்கிறது.

அது கூட முதல்வர் சபையில் மட்டுமல்ல நாட்டிலும் இல்லாததால் தான், இது சாத்தியமாகி இருக்கிறது. இல்லை என்றால் சுன்னாகம் குடிநீர் பிரச்சனை முதல், இரணைமடு தண்ணீர்வரை இழுபறிப்பட்டு, மாங்குளமா? ஓமந்தையா? என ஓடுப்பட்டு, தம்முள் பிளவுபட்டு, முடிவெடுக்கும் ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டு, கால நீடிப்பில் பிரதி தவிசாளர் தேர்வும், திரிசங்கு நிலைக்கு சென்றிருக்கும். இன்றும் ஆளும் கட்சியே தம்முள் பிளவுபட்டுத்தான், பிரதி தவிசாளரை தெரிவு செய்திருக்கிறது. அதிகாரம் இல்லாத பதவிக்கே அணிபிரியும் இவர்கள்தானா, அதிகார பகிர்வில் மத்திய அரசை விமர்சிக்கின்றனர்?.

(ராம்)