ஆனந்தசுதாகரனின் மகள்…….!

ஆயுள்தண்டனை பெற்ற அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் தனது மனைவியின் இறுதி நிகழ்வில் சமூகமளிப்பதற்காக பொலீஸாரால் அழைத்துவரப்பட்டார். மூன்று மணி நேரம் மாத்திரம் அவகாசமளிக்கப்பட்ட அந்த இடைவெளியில் ஆனந்தசுகாதரன் தனது மனைவியின் உடலுக்கான இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டார். மனைவியின் உடலத்துக்கு சூடம் காண்பிக்கும்போதுகூட காவல்துறையினர் கடமை தவறாமல் அவரது காலுக்குள்ளேயே நிற்கிறார்கள். தப்பித்தவறி, ஆனந்தசுதாகரன் அவரது மனைவியின் உடலத்தோடு சேர்ந்தழுது அவரது உயிர் பிரிந்துவிட்டால் நல்லாட்சி அரசின் நீதிக்கட்டுமானம் சரிந்து விழுந்துவிடும் என்ற பயம்தான் அந்த காவலாளிகளின் கண்களில் தெரிகிறது. ஒரு வாரமாக முஸ்லிம் மக்களை கலைத்து கலைத்து வெட்டிய சிங்கள காடையர்களை இன்னும் கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இந்த ஆனந்தசுதாகரனை மாத்திரம் அசையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவ்வளவு கடமை உணர்ச்சி. மனைவிக்கு வாய்க்கரிசி போடும்போது ஆனந்தசுதாகரன் அழுதார். அருகில் நின்றுகொண்டிருந்த பிள்ளைகள், தங்களது தகப்பனாரின் முகத்தில் – இவ்வளவு காலத்தில் – சிறுதுளி சிரிப்பை கண்டிருப்பார்களோ தெரியவில்லை, முதல் தடவையாக அவர் அழுதததை கண்டு வியந்துபோய் நிற்கிறார்கள்.

மனைவியின் உடலத்தை மயானத்துக்கு எடுத்துச்சென்ற கையோடு, ஆனந்தசுதாகரனும் நடைபிணமாக சிறைச்சாலை வாகனத்தை நோக்கி நடக்கிறார். நாவல் நிற சட்டையில் – காலுக்கு செருப்பும் போடாமல் – தகப்பனின் கையை பிடித்துக்கொண்டு வந்த ஆனந்தசுதாகரனின் மகள், தனது தந்தை எங்கே போகிறார் என்றே தெரியாமல் சிறைச்சாலை வாகனத்தில் தானும் சென்று ஏறிக்கொள்கிறாள்.

எந்தக்கல்நெஞ்சக்காரனுக்கும் இரண்டு துளி கண்ணீரை கன்னத்தில் பிரசவித்துவிடுகின்ற கொடூரமான காட்சி.

இன்னொரு வகையில் சொல்லப்போனால், சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்று உலகெங்கும் டமாரமடித்து புலிகள் அமைப்பொரு கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று நோட்டீஸ் ஓட்டிய சிறிலங்கா அரசு, இன்று இந்த சிறுமி சிறை செல்வதற்காக வாகனத்தில் ஏறுவதற்கு ஏதுவான ஒரு ஆட்சியைத்தான் நடத்திவருகிறது என்பதை பட்டவர்த்தனமாக காண்பித்த “கண்கொள்ளா காட்சி”

இதன் விளைவுகளை இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பார்த்தாயிற்று. எத்தனை கவிதைகள்..எத்தனை கட்டுரைகள்…(இது உட்பட) சிறிலங்கா அரசுக்கான மிரட்டல் பதிவுகள், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான ஏவல் கடிதங்கள் – இப்படி எத்தனையோ.

இங்கு சிறைச்சாலை வாகனத்தில் ஏறுவதற்காக சென்ற ஆனந்தசுதாகரனின் மகள் வேறு யாருமல்ல. தமிழர் தேசத்தில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் சிறுமிகளின் ஒற்றைப்பிரதிநிதி. இன்று இவளது தாய் இறந்த காரணத்தால் – அதற்கு இவளது தந்தையும் சிறையிலிருந்து வந்து போன ஜனரஞ்சக காட்சி கிடைத்த காரணத்தால் – ஊடகங்கள் அனைத்தும் இவளை மொய்த்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால், இன்னும் எத்தனையோ ஆயிரக்கணக்கான யோகராணிகளின் பிள்ளைகளும் ஆனந்தசுதாகரன்களும் இந்த ஊடகங்களின் கண்களுக்கு அகப்படாமல் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து வந்து ஏறினால், இந்த சிறைச்சாலை வாகனமே போதாது. ஏன், சிறைச்சாலைகளேகூட போதாமல் போகலாம்.

இப்படி எத்தனையோ சிறுமிகள் தாயகத்தின் மூலை முடுக்கெங்கும் தங்கள் தகப்பன்மாரை யாரென்றே தெரியாமல் இவளைப்போல காலில் செருப்பில்லாமல் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் காலைநேர உணவில்லாமல்தான் பாடசாலைகளின் கடைசி வாங்கில் போய் அமர்ந்துகொள்கிறார்கள். அழுகிறார்கள். பின்பு அலைகிறார்கள்.

“அங்குதானே எத்தனையோ அமைப்புக்கள் இருக்கின்றன” – என்று மட்டும் யாரும் பீற்றாதீர்கள். சிறைகளிலிருந்து ஒலிக்கும் இரவுநேர தொலைபேசி அழைப்புக்கள் எத்தனை கண்ணீர் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றன தெரியுமா?

அடுத்தடுத்த மாதங்களில் நல்லூர் திருவிழாவுக்காக போய் இறங்குவதற்கு டிக்கெட்டுக்களை சரமாரியாக முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கும், புலம்பெயர் பக்தகோடிகளே –

அடுத்த 29ஆம் திகதி யாழ். நகர மேயர் தெரிவை காண்பதற்காக கதிரை நுனியில் குந்திக்கொண்டிருக்கும் தாயகத்துக்கு நேர்முக வர்ணனையாளர்களோ –

மைத்திரி – ரணில் – மகிந்த – சம்பந்தன் – சுமந்திரன் என்று எல்லோரையும் “போட்டுத்தள்ளினால்தான்” இந்த சிறுமிகளுக்கு உதவலாம் என்ற “புத்திசாலித்தனமான உங்களது திமிர்த்தனம்” புரிகிறது. அதற்காக காத்திருப்பதும்கூட நல்ல விஷயம்தான். அது உங்கள் “வீரத்தை” காண்பிக்கிறது. ஆனால், உங்களது கனவு நிறைவேறும்வரை, இப்படியான காணொலிகளை கண்டு கணினி திரைகளை கொத்தி கிழித்துக்கொண்டிராமல் அவர்களுக்காக உதவும்வகையில் கொஞ்சம் இறங்கி வாருங்கள்.

சிறையிலிருப்பவர்களை வெளியில் எடுப்பதுதான் சிங்கள மேலாதிக்கத்தின் பிடியிலுள்ள – சட்ட சமநிலையற்ற – நீதிக்கட்டமைப்புக்களுக்குள் சிக்கிப்போயுள்ள – விவகாரம் என்றாகிவிட்டது. எந்த நூலை பிடித்து இழுத்து சிக்கெடுப்பது என்பது யாருக்கும் தெரியாத முடிச்சாக தொடர்கிறது.

அப்படியென்றால் எனன செய்வது?

சற்று முன்பு பேசிய குரல் இப்படி கூறியது –

“அண்ண, எங்களை பற்றி கவலைப்பாடாதேங்கோ, எங்கள இவங்கள் கடைசிவரைக்கும் விடப்போறதில்லை. அது எங்களுக்கு வடிவா தெரியும். இப்படியே இதுக்குள்ளையே கிடந்து நாங்கள் சாகவேண்டியதுதான். தயவுசெய்து எங்கள் குடும்பம் – குழந்தையள கொஞ்சம் பாத்துவிடுங்கோ அண்ணை. அதை நீங்கள் செய்தியள் எண்டால், நாங்கள் நிம்மதியாகவேனும் சாகலாம்”
(ப. தெய்வீகன்)