ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி

(புருஜோத்தமன் தங்கமயில்)

குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார்.

தற்போதைய குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய அத்துமீறிய செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக, தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றத் தொடங்கியிருக்கின்றார்.

அதன்மூலம், எதுவுமே அறியாத அப்பாவி தான் என்கிற தோரணையை, அவர் வரவழைக்க முயல்கிறார். கடந்த மூன்று வாரங்களில் அவர், இரண்டு தடவைகள் தொலைக்காட்சி வழி, நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.

அரசியலுக்கும் ஆட்சியதிகாரத்துக்கும் வர விரும்புகிறவர்கள், தங்களுடைய தாழ்வுச் சிக்கல்களை ஆரம்பத்திலேயே களைந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தத் தாழ்வுச் சிக்கல்களால், சம்பந்தப்பட்ட நபர் மாத்திரமல்ல, அவரை நம்பியவர்களும் நாட்டு மக்களும் பாதிக்கப்பட நேரிடும்.மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் உணர்த்திக் கொண்டிருப்பது அப்படியானதொரு கட்டத்தையேயாகும்.

மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை (11) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டியிருந்தால், நாடாளுமன்றத்துக்குள் அடிதடி நிகழ்ந்து, சிலர் மரணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 – 500 மில்லியன் ரூபாய் வரை, விலை கொடுத்து வாங்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அதன் காரணமாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும் நியாயம் பேசுகிறார்.

அரசமைப்புக்கு முரணாக, ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த முனைந்த ஒருவர், (அதாவது, சதிப்புரட்சிக்கு ஒத்துழைத்தவர்) அதன் விளைவுகள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பது வேடிக்கையானது.

அதுவும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை, தன்னுடைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு அலைபேசி வழி அழைக்கும் ஒலிப்பதிவுகள், இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் நிலை காணப்படுவதால், நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நியாயம் பேசுவது வேடிக்கையானது. மக்கள் எதையும் அறியமாட்டார்கள் என்கிற தோரணையில், நடந்து கொள்வது, உண்மையிலேயே அவரின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

ஜனாதிபதியாக, நாட்டின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருக்கின்ற மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பாலும் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் யார் என்பதை, தேர்தல்களின் வழி மக்கள் தேர்தெடுத்தாலும், அவர்களுக்கான அங்கிகாரத்தைப் பௌத்த பீடங்கள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, தென்னிலங்கையின் வழக்கம்.

ஆனால், இலங்கையின் மூத்த பௌத்த பீடங்களான மல்லவத்த – அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர், மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதையே தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி உண்மையானால், இலங்கை வரலாற்றில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தலைவர் ஒருவர், சந்திக்கும் பெரும் அவமானமாகும்.

நல்லாட்சிக் கோசத்தின் வழி, ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால, அந்தப் பதவியைத் தக்க வைப்பதற்காகக் கடும்போக்காளர்களோடு கரம் கோர்க்க முயன்றார். ஆனால், அந்தக் கடும்போக்காளர்களின் பிரதான பீடங்களே, அவரை இன்றைக்கு நிராகரித்திருக்கின்றன என்றால், அவரின் செயற்பாடுகளை அங்கிகரித்தால், நாட்டு மக்களின் பரிகசிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என்கிற நிலையில், மைத்திரிபாலவின் வருகையைக் கண்டு கொள்ளவில்லை.

அதுமாத்திரமின்றி, ராஜபக்‌ஷக்களோடு உடன்பாடொன்றுக்கு வருவதனூடு, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற முடியும் என்கிற அவரின் கணக்கும், தற்போது சந்தேகத்துக்குரியதாக மாறியிருக்கின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால கைப்பற்றியதும், அதற்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ராஜபக்‌ஷக்கள் ஆரம்பித்தார்கள். அதன் வழி, கடும்போக்குச் சிங்கள வாக்குகளைக் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெற்றார்கள். அந்த வாக்குகளில் பெருவாரியானவை, சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளாகும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குள்ளேயே, மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், 30க்கும் அதிகமானவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்திருக்கின்றார்கள். அதன் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்‌ஷ இன்னும் சில தினங்களில் ஏற்கக் கூடும்.

அப்படியான கட்டத்தில், சுதந்திரக் கட்சிக்குள் இன்றைக்கு மிஞ்சியிருப்பவர்களில் ஒரு பகுதியினர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் விசுவாசிகள். அவர்கள் என்றைக்கும், ராஜபக்‌ஷக்களுடனான கூட்டொன்றில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். எஞ்சியுள்ள சிலரே மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகள். அவர்களில், மக்களின் பெரும் அபிமானம் பெற்றவர்களாக, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இந்த நிலையில், இலங்கையை அதிககாலம் ஆட்சி செய்த கட்சியொன்றை, ஏதுமற்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலைத் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதும், அதன் மூலம் அரசாங்கத் தலைமை என்கிற அடையாளத்தை மீண்டும் அடைந்து கொள்வதுமே ராஜபக்‌ஷக்களின் நோக்கமாகும். அதற்காக அவர்கள், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவோடு தமது தந்தையார் டி.ஏ. ராஜபக்‌ஷ இணைந்து ஆரம்பித்த சுதந்திரக் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று வேறு தெரிவுகள் இல்லை. ராஜபக்‌ஷக்களின் இழுவைக்கு ஆடியே ஆக வேண்டும்.

ராஜபக்‌ஷக்களிடையே இருக்கின்ற அதிகாரப் போட்டி நிலைமை மாத்திரமே, மைத்திரிபால சிறிசேனவுக்கு இப்போதுள்ள ஒரே ஆறுதல். அதாவது மஹிந்த, தன்னுடைய மகன் நாமலை ஜனாதிபதியாக்கும் வரை, அதிகாரத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார். அந்தக் காலப்பகுதியை, தன்னுடைய சகோதரர்களின் கைகளில் கொடுப்பதை அவர் விரும்பவில்லை.

எனெனில், அதிகாரத்தைக் கொடுத்தால், மீளப்பெறுவது முடியாதது என்கிற ஒரே காரணத்தால் ஆகும். அந்த ஒரு விடயம் மாத்திரமே, மைத்திரிபாலக்கு ஒரே ஆறுதல். அதைக் கொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் ஆதரவோடு ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்பதாகும்.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் தற்போதையை நடவடிக்கைகள், அவர் மீதான நம்பிக்கைகளை தவிடி பொடியாக்கியுள்ள நிலையில், ஐ.தே.க சஜித் பிரேமதாஸ போன்ற ஒருவரை, குறிப்பாக கடும்போக்கு சிங்களவர்களிடமும் அபிமானம் பெற்ற ஒருவரை, வேட்பாளராக அறிவிக்குமாக இருந்தால், மைத்திரிபாலவின் எதிர்காலத்துக்கான கனவும் காணாமற்போகும்.

இன்றைக்கு, இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளும், மேற்கு நாடுகளும் மைத்திரிபாலவைத் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அப்படியான தருணத்தில், அவரைக் கடும்போக்கு சிங்களவர் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடைபெறவில்லை. மாறாக, பௌத்த பீடங்களும், அதன் துணை நிறுவனங்களும், சொந்தக் கட்சியினரும் கூட நிராகரித்திருக்கின்றனர்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகவோ, ஆதரவாகவோ என்ன வகையிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கினாலும், அதிவிரைவாகத் தேர்தலொன்றை, நாடு எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கும். அந்தக் கட்டத்தை மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியிருக்கின்றார். அப்படியான நிலையில், அவரும் மக்களை நோக்கி வர வேண்டியிருக்கின்றது.

அப்போது, அவருக்கான பதிலை மக்கள் வழங்குவார்கள். அதை உணர்ந்து கொண்டுதான், மொட்டுக்காரர்கள், தங்களது சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார்கள்.
இன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இணைந்த கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய தேவை, ராஜபக்‌ஷக்களுக்கு இருப்பதாக சிரேஷ்ட கல்வியாளர் ஒருவர் கூறுகிறார்.

ஏனெனில், தனிக்கட்சியொன்று ஆட்சி அமைக்கும் போது, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் மேலாக அதிகரிக்க முடியாது. அது, சிக்கலை ஏற்படுத்தும்.

அதனால், சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன ஆகியன, தனிக்கட்சிகளாத் தேர்தலை எதிர்கொண்டு, கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதன்மூலம், தமது தரப்பினரை திருப்திப்படுத்த முடியும் என்றும் நினைக்கின்றன.

ஆனால், முடிவு எதுவாக இருந்தாலும், அடுத்து வரப்போகும் அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாகவே இருப்பார். அவரை நம்பிப் பயணிப்பதற்கு யாரும் தயாரில்லை என்பதுதான், தற்போதைய உண்மை.