ஆம் ஆத்மியின் அபார வெற்றி சொல்லும் செய்தி என்ன?

2013 டிசம்பரில் முதன்முறையாக டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவாலுக்குப் பெரும்பான்மை வலு இல்லை. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 34 தொகுதிகள் கிடைத்தன. பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக, 28 இடங்களில் வென்ற ஆஆக கட்சி ஆட்சிக்கு வர 8 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தந்தது. அதன் பிறகு, கேஜ்ரிவாலால் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல்போனதன் விளைவாக, 49 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்துவிட்டு 2014 பிப்ரவரியில் பதவி விலகினார் கேஜ்ரிவால். அடுத்து நடந்த, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களைப் பிடித்து வரலாறு காணாத வெற்றிபெற்றார். கேஜ்ரிவாலின் ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தின் சாதனைகளைப் பார்த்த பிறகு, மக்கள் இப்போது மீண்டும் அமோக ஆதரவு தந்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர்.

நிர்வாகம் எனும் வசீகரம்

இந்தியா பிரிவினையால் பாதிக்கப்பட்டபோது பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் டெல்லியில் குவிந்தனர். பஞ்சாப் மாநிலம் பக்கத்திலேயே இருப்பதாலும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களைப் போல சீக்கியர்களும் கணிசமான எண்ணிக்கையில் டெல்லியில் தங்கியதாலும் சீக்கியர்-பஞ்சாபி ஆதிக்கம் டெல்லியில் அதிகம். சமீப காலங்களில், டெல்லியைச் சுற்றி காஜியாபாத், பரீதாபாத், குருகாவோன், நொய்டா, ரேவாரி ஆகிய ஊர்களில் தொழிற்பேட்டைகள் உருவானதால் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் அதிகம் குடியேறினர். வங்காளிகளும் பிஹாரிகளும் வேலை தேடி வந்து அதிக எண்ணிக்கையில் குடியேறியுள்ளனர். வேலை நிமித்தமாகக் கணிசமான தென்னிந்தியர்களும், வடகிழக்கு மாநிலத்தவர்களும்கூட டெல்லியில் குடியேறியுள்ளனர்.

இன்னொருபுறம், மத்திய அரசின் தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் அலுவலகங்கள், இல்லங்கள், முப்படைத் தளபதிகளின் தலைமையகங்கள், காவல் துறைத் தலைமையகம், துணைநிலை ராணுவப் படைகளின் தலைமையகங்கள் என்று முக்கியத்துவம் வாய்ந்த பல அலுவலகங்கள் இருப்பதாலும் சிவில், ராணுவத் துறைகளின் மூத்த அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் பணிபுரியும், வாழும் இடமாகவும் டெல்லி இருக்கிறது. எனவே, இங்கு படித்தவர்கள், உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம். அதுதான் எழுத்தறிவிலும் நபர்வாரி வருமானத்திலும் எதிரொலிக்கிறது. அதுமட்டுமல்லாது, வடஇந்தியாவின் கேந்திரமான வணிகத் தலமும் டெல்லிதான். டெல்லி மாநகரக் காய்கறி மண்டியாகட்டும், தானிய மண்டியாகட்டும் ஆசியாவிலேயே பெரியது. பல மாநிலத்தவர்கள் இங்கு வந்து மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நிலையில் உள்ளவை.

ஆம் ஆத்மி கட்சியானது நல்வாழ்வு, தூய நிர்வாகம் ஆகிய இரண்டு பிரதான லட்சியங்களுடன் மக்கள் சித்தாந்தத்தை வரித்துக்கொண்டது. அது செயலிலும் பிரதிபலித்ததன் விளைவாகப் பெருந்திரளான மக்களின் இதயங்களை அதனால் வென்றெடுக்க முடிந்திருக்கிறது. டெல்லி சட்டமன்ற எல்லைகளில் 49% பேர் குடிசைப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். இங்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் கிடையாது. மின்னிணைப்புகளும் தேவைக்கேற்ப இல்லை. சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மியின் வரவு முக்கியத்துவம் பெற்றது.

கேஜ்ரிவாலின் நிர்வாகம்

ஆம் ஆத்மி கட்சியின் மையப் புள்ளியாக இருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் அவருடைய நிர்வாகத் திறமையால் கவனம் ஈர்த்தவர். கரக்பூர் ஐஐடியில் இயந்திரப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற கேஜ்ரிவால், மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். அரசியல் வருகையை முன்னிட்டு வருமான வரித் துறையில் இணை ஆணையராக வகித்த பதவியை ராஜிநாமா செய்தார். கேஜ்ரிவாலின் படிப்பும் அதில் விளைந்த சிந்தனையும் அவருடைய நிர்வாகத்திலும் எதிரொலித்தது. எப்படி குஜராத்தின் நிர்வாகத் திறமைக்காக மோடி செல்வாக்கும் பாராட்டும் பெற்றாரோ அதைப் போலவே கேஜ்ரிவாலின் நிர்வாகம் பேசுபொருளானது.

ஆனால், டெல்லி அரசுக்கு சுயாட்சி தருவதையோ, கேஜ்ரிவால் சிறந்த நிர்வாகி என்று பெயர் வாங்குவதையோ மத்திய அரசு விரும்பவில்லை. சட்டத்தைக் காரணம் காட்டி அவருடைய அரசு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட முடியாதபடி முட்டுக்கட்டைகளைப் போட்டது. எனவே, கேஜ்ரிவால் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட கல்வி, சுகாதாரத் துறைகளில் முழுக் கவனம் செலுத்தினார். 2018-19 நிதிநிலை அறிக்கையில், டெல்லியின் கல்விக்காக ரூ.13,997 கோடியை ஒதுக்கினார். இது மொத்த நிதி மதிப்பில் 26%. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்குக் கல்விக்காக நிதி செலவிடப்படவில்லை. சுகாதார வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டன. எல்லா மருத்துவமனைகளும் கூடுதல் வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனர். யாரும் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு தாண்ட அவசியமில்லாதபடி அருகமை மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

ஆம் ஆத்மி அரசின் சாதனைகள்

ஆம் ஆத்மி கட்சி என்பதன் பொருளான சாமானியர்களின் கட்சி என்பதற்கு ஏற்பவே அதன் சாதனைகளெல்லாம் சாமானியர்களோடு கரைத்துக்கொண்டதாகவே இருக்கின்றன. அதிக நிதி, நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசு குவித்து வைத்துக்கொண்டு துணை நிலை ஆளுநர் மூலம் தொல்லைகளை அளித்தபோதிலும் செலவிடப்படாமல் இருந்த உபரி நிதியையெல்லாம் கல்வி, சுகாதாரம், மின்சாரம், அடிப்படை வசதிகளுக்குத் திருப்பிவிட்டு, தன்னுடைய திறமையை நிரூபித்துவருகிறது ஆஆக.

1) ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் இலவச மருத்துவ வசதிகளை அளிக்கும் மொஹல்லா கிளினிக்குகள் அப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனும் அளவுக்கு மாறிவருகின்றன. நடுத்தர வகுப்பினரும் இவற்றை நாடத் தொடங்கிவிட்டனர். இதன் வெற்றியால் கவரப்பட்டு, பிற மாநிலத் தலைவர்கள் மட்டுமல்ல; தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென்அமெரிக்க நாடுகளின் தூதர்களும் பிரமுகர்களும் தங்களுடைய நாடுகளிலும் இந்த முன்னெடுப்பைத் தொடங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். சர்வதேசப் பத்திரிகைகள் பலவும் இவற்றைப் பாராட்டி எழுதின.

2) தகரக் கொட்டகைகளில் காற்று, வெளிச்சம் இல்லாமல் இருந்துவந்த அரசுப் பள்ளிக்கூடங்கள் இப்போது மூன்று மாடி, நான்கு மாடிக் கட்டிடங்களாகத் தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் வசதிகளுடன் உயர்ந்து நிற்கின்றன. பள்ளிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகளுடன் போதிய காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள வகுப்பறைகள் அதிக எண்ணிக்கையில் கட்டித் தரப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், மதிய வேளைகளில் சத்துணவும் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கென கணினிகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளும் அளித்து, அபாரமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறையைப் போதிக்க அரசு செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கேஜ்ரிவால்.

3) மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும்கூட அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆட்சியால் டெல்லிவாழ் மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரத்தையும் 20,000 லிட்டர் குடிநீரையும் இலவசமாக வழங்க முடிந்தது.

4) டெல்லி அரசின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மகளிரும் டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற ஏற்பாட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. பெண்களினுடைய வாழ்க்கைத் தரத்தை இது உயர்த்தியுள்ளது. பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதால் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

5) நகரச் சாலைகளும் பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், குழந்தைகள் விளையாட விளையாட்டுத் திடல்களும் விளையாட்டுக் கருவிகளும் நகர நிர்வாகத்தால் அளிக்கப் படுகின்றன. இது அவர்களுடைய உடல், மன ஆரோக்கியத்தை வளர்க்கிறது. டெல்லியின் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றான காற்று மாசைக் குறைப்பதற்குப் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது. அடுத்த கட்டமாக ஏழைகளுக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் வீடுகள் கட்டித் தரும் திட்டமும், குப்பையில்லா நகரமாக டெல்லியை மாற்றும் திட்டமும் ஆஆகவிடம் இருக்கின்றன. அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையும், ஏழைகள் மீதான பரிவுணர்ச்சியும், லஞ்ச-ஊழல் குறைந்த போக்கும் மக்களால் பாராட்டப்படுகின்றன.

ஆம் ஆத்மி ஆட்சியின் மகத்துவத்தைப் பேசும் இந்தச் சாதனைகள் எல்லாமே சாமானியர்களோடு ஒன்றியிருக்கிறது என்பதும், நடுத்தர மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக இருக்கிறது என்பதும் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிறது. சமகாலப் போக்கில் சாமானியர்களின் வாழ்க்கையில் அதிக செலவு வைக்கக்கூடியதாக மாறியிருக்கும் கல்வியையும் மருத்துவத்தையும் கேஜ்ரிவால் அரசு கையில் எடுத்தது என்பதே மிகப் பெரிய கனவின் வெளிப்பாடுதான். இந்தக் கனவு ஒட்டுமொத்த இந்தியாவும் வரித்துக்கொள்ள வேண்டியதும்கூட.