ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

(நீரை.மகேந்திரன்)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியதும் அரசியலில் கணிக்க முடியா குழப்பம் உருவாகிவிட்டது. எம்ஜிஆர் நினைவு நாளை அனுசரிக்க வெற்றிமாலையோடு யார் செல்வார்கள் என்று இன்று காலை வரை நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் அதிமுகவில் அடுத்த கட்ட போக்குகள் எப்படி இருக்கும், அதிமுக ஆட்சியில் நிலைத்தன்மை இருக்குமா என்பதற்கான கேள்விகளுக்கு இப்போது முடிவு கிடைக்கப் போவதில்லை. டிடிவி தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் என்று அரசியல் நோக்கர்களாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. வெற்றி வெற்றிதான் வேறொன்றும் சொல்வதிற்கில்லை.

ஆர்.கே.நகர் தேர்தலில் அரசு அதிகாரம், ஆளும் கட்சியின் காவல்துறை, திமுகவின் செயல் தலைவர் வியூகங்களையும் தாண்டி தினகரன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் மிகையில்லை. எதிரிகளாலும், துரோகிகளாலும் சூழப்பட்டிருந்த சூழலிலும் அசராமல் அதை எதிர்கொண்டு நின்று அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து தினகரன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதனால் அவரை மதிப்பிட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

அரசியல் சுழலில் சகிசலா குடும்பம் சறுக்கிக் கொண்டிருக்கும் காலம் இது. அதிகாரம் இல்லாத நிலையில் அரசியலில் தாக்குப் பிடித்து நிற்பதே பெரிய வலிமைதான். அதை மிகச் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். ஊடகங்களுக்கு கடுகடுத்ததில்லை, எல்லா நேரத்திலும் எல்லா கேள்விகளையும் எதிர்கொள்கிறார். வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கும் வழக்குகள், அச்சுறுத்தும் அந்நிய செலாவணி வழக்கு, திகார் சிறை, ஓட்டுக்கு பணம், டோக்கனுக்கு பணம், பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் என எத்தனையோ சிக்கல்களை சந்தித்திருந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் தினகரன் தன் அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

திமுகவின் செயல்பாடுகள் ஸ்டாலினை சுற்றி இயங்கத் தொடங்கியதும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை என இறுமாந்திருந்தார் ஜெயலலிதா. அந்த நேரத்தில்தான் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு அவரை இறுக்கிச் சுற்றியது. அதன் இறுதிச் சுற்றை எதிர்கொள்ளும் நேரத்தில் அவர் உயிருடன் இல்லை. வழக்கின் தீர்ப்பு அவரது தோழியை பெங்களூரு சிறைக்கு அனுப்பியது. ஆனால் ஜெ.உடனான 30 ஆண்டுகால நட்பில் சேர்க்கப்பட்ட சொத்துகள், புகார்கள் குறித்தெல்லாம் பேசினால் சட்டத்தின் அனைத்து ஷரத்துகளிலும் வழக்கு தொடுக்கலாம் என்பார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த அளவுக்கு புகார்களோடு வாழ்ந்தவர் சசிகலா என்றால் மிகையில்லை. எனினும் என்ன ஏ பிளஸ் பி 2 = ஏபி 2 என்கிற விதிப்படி ‘அம்மா’வின் விசுவாசிகள் அருமைத் தோழிக்கும் விசுவாசிகள் ஆகினர்.

திரைக்கதையின் சுவாரஸ்யமே, இந்த இடத்திலிருந்து உருவான டிடிவி தினகரனின் பாத்திரம் தமிழக அரசியலில் இப்போது மையம் கொண்டுள்ளதுதான். அவரது முதல் அத்தியாயக் காட்சிகள் வரலாற்றின் மங்கிய காட்சிகள். ஆனால் அதைத்தான் அவரது அரசியல் எதிரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் நடப்புக் கணக்குகள்தான் அவரது கவுரவப் பிரச்சினையாக இருந்தது.

ஆட்சி அதிகாரம் நோக்கி சசிகலா நகர்ந்தபோது ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்த போராட்டம்தான் அதிமுகவில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிவைத்தது. சசிகலாவை முன்னிறுத்தி அதிமுகவையும், ஆட்சியையும் தொடர்வது கவுரவமாக இருக்காது என்பதால் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக பாஜக கொடுத்த அஜண்டாதான் அந்த தர்ம யுத்த போராட்டம் என்கிற பேச்சும் இருந்தது. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் தனக்கு விசுவாசமானவர்கள் என்றுதான் கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் பிரித்து அளித்துவிட்டுச் சென்றார். ஆனால் தர்மயுத்தப் போராட்டம் ஈபிஎஸ் வரை தொடர்கிறது. ஆட்சியில் தினகரன் தலையிட்டார் என்பதால் ஈபிஎஸ் எதிர்த்துக் கொள்ளவில்லை. இந்த முறையும் மறைமுக அஜண்டாதான் தினகரனை பதம் பார்த்தது.

சசிகலாவும், தினகரனும் மதவாத எதிர்ப்பாளர்கள், திரும்பவும் திராவிட ஆட்சியைத் தக்கவைக்க நினைப்பவர்கள் என்பதால் பாஜக எதிர்த்து விடவில்லை. ஆட்சி அதிகாரம் மறைமுகமாக தங்கள் எல்லைக்குள் இருப்பதுபோல பாஜக தனக்கான ஆதரவு ஆட்களை அதிமுகவுக்குள் உருவாக்கி கொண்டதுதான் விசுவாசிகளிடையே பிளவை உருவாக்கியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதிகாரத்தை இழந்த ஓபிஎஸ், இழக்க விரும்பாத ஈபிஎஸ் இருவரையும் பின்னாளில் இணைந்ததும் அல்லது இணைத்ததும் வரலாறு ஆனது.

அதற்குப் பின்னர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை வேறு யாரேனும் சந்தித்திருப்பார்கள் என்றால் அரசியலில் இருந்தே விலகியிருப்பார்கள். திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம், ஆதரவாக நின்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு, சகிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை என எல்லாவற்றையும் சந்தித்தார். ஆனாலும் எல்லா நெருக்கடிகளிலும் தமிழக அரசியலைத் தாண்டி அவர் விமர்சனங்களை செய்ததில்லை.

கட்ட கடைசியாக அவரது அரசியல் அத்தியாயத்தை இறுதி செய்யும் விதமாகத்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு. கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலும், கட்சிக்குள் அவர் இல்லை. இரட்டை இலை சின்னம் இல்லை, அதிமுக கொடி இல்லை, கடந்த தேர்தலில் கிடைத்த தொப்பி சின்னமும் இல்லை என களம் இறங்கினார்.

ஆளும்கட்சி பலம் பொருந்திய மதுசூதனன், வலிமையான எதிர்க்கட்சியாக திமுகவின் மருதுகணேஷ் என போட்டி பலமாக இருந்தாலும் சுயேச்சை வேட்பாளராக சற்றும் சளைக்காமல் அவர் நடத்திய போராட்டம் தேர்தலை சுவாரஸ்யமாக்கியது.

தமிழக அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பழுத்த அரசியல்வாதிகள்கூட டிடிவி தினகரனின் தேர்தல் வியூகத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர். மாற்றுக் கட்சியில் உள்ள நிர்வாகிகள் மிரள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறுவது யார் என்பதுதான் தேர்தலில் விதி. இங்கு நியாய தர்மங்களுக்கு இடமில்லை. எப்பாடுபட்டாவது ஜெயிக்க வேண்டும். இதற்கான விடைதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். இதன்மூலம் தமிழக அரசியலில் அவரது இருப்பும் உறுதி செய்யப்ட்டுவிட்டது.

சாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பெரியது. மறைமுகமான அதிமுகவினரின் ஆதரவு மட்டுமல்ல, அவரது அணுகுமுறையால் மாற்றுக் கட்சியினரும் அவர் மீது அனுசரணையான போக்கையே கடைபிடிக்கின்றனர் என்பதும் உண்மை. ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும், பெண்களின் வாக்குகளும் டிடிவி தினகரனுக்கே பெரும்பாலும் கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். பணம், செல்வாக்கு, அல்லது ஆளுங்கட்சி மீதான அதிருப்தி என குறிப்பிடலாம். ஆனால் பிரதான வேட்பாளர்கள் பிறரும் இதே வழிமுறையை கையாண்டவர்களே என்பதையும் மறுக்க முடியாது. எனவேதான் அரசியல் நோக்கர்களாலும் டிடிவி தினகரனின் இந்த வெற்றியை கணிக்க முடியவில்லை.

தினகரன் ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது உறுதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் அரசியல் போக்குகளும் மாறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி எம்எல்ஏக்களில் சிலர் அணி தாவவும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தீர்மானிக்கப்படலாம். முடிவு சாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக யோசித்தால் அது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும்.

இந்த வெற்றியை வைத்து கட்சி அணியினரின் கணிசமாக நம்பிக்கையையும் தினகரன் பெறுவார் என்றே நம்பத் தோன்றுகிறது. ஒருவேளை அதிமுக தினகரனின் கைகளுக்குச் சென்றால், காலம் கனியட்டும் என காத்திருக்கும் திமுக தரப்புக்கு போட்டியாக உருவாகி நிற்பார் என்பதே உண்மை.

அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி மட்டுமே பொதுத்தேர்தலுக்கான முன்னுரையும் அல்ல. ஆனால் தினகரனின் வளர்ச்சி, பாஜகவிற்கு எதிரானதல்ல, திமுகவிற்கு எதிரானது. அதிமுகவை உயிர்ப்பிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். இதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவும், மற்ற கட்சிகளும் புரிந்து கொண்டால் நல்லது.