இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இனமுரண்பாடுகள் மற்றும் சமாதானத்துக்கான கற்கைநெறிகளுக்கான ஒரு வழிகாட்டியாக, அதன் போக்கில், பாரிய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்ற அருளானந்தம் சர்வேஸ்வரன், தமிழ் மக்கள், தமது பிரச்சினைகள் தொடர்பில் தென்இலங்கைக்குத் தெளிவூட்ட வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, தென்னிலங்கையின் தற்கால இளைஞர்கள், முற்போக்கானவர்கள் உரையாடல்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சர்வேஸ்வரனின் உரைக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல், “தமிழ் மக்கள், தமது பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 70 ஆண்டுகளாகத் தென்இலங்கைக்குத் தெளிவுபடுத்த முனைந்திருக்கின்றார்கள். ஆனால், அந்த முனைப்புகளை தென்இலங்கை எந்தவிதத்திலும் மதித்ததில்லை. அப்படியான நிலையில், எமது பிரச்சினைகளைத் தென்இலங்கைக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்கிற நிலைப்பாடு எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது? அது அர்த்தமற்றது இல்லையா”? என்கிற தொனியில் கேள்வி எழுப்பினார்.

அத்தோடு, “இலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகப் போராடி வரும் தமிழ் மக்களின் இழப்பு பாரியது. அந்த இழப்புகளை நாம் அர்த்தமற்றதாக்கிவிடக்கூடாது. அரைகுறைத் தீர்வுகளுக்குள் நாம் ஒடுங்கிவிடக்கூடாது” என்றார்.

தமிழ்த் தேசிய அரசியலில், தற்போது ஆளுமை செலுத்துகின்ற கருத்தியல்கள் இரண்டு. முதலாவது, சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கிடைக்கும் அதிகாரங்களை உள்வாங்கி, அவற்றைப் படிநிலைகளாகக் கொண்டு, முன்னோக்கிப் பயணிப்பது.

இரண்டாவது, இறுதியானதும் மீளப்பெற முடியாததுமான தீர்க்கமான அதிகாரப்பகிர்வுள்ள தீர்வு ஒன்றைப் பெறுவது. (இதில், படிநிலைகளுக்கு இடமில்லை). அருளானந்தம் சர்வேஸ்வரன் முதலாவது கருத்தியலையும் இரட்ணவேல் இரண்டாவது கருத்தியலையும் பிரதிபலிக்கின்றார்கள்.

இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு கருத்தியல்களும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, மக்களைத் தமது பக்கத்தில் சேர்ந்துக் கொள்வது, தொடர்பிலான ஆட்டத்தை ஆட வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியப் போராட்டங்களின், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கருத்தியல்களுக்குள் முட்டல் மோதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஏகத்துவ நிலையை எந்தத்தரப்பு அடைகின்றதோ, அவர்களின் நிலையே (வழியே) இறுதியானதாக இருந்திருக்கின்றது.

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிருந்து பிரிந்து வந்து, தந்தை செல்வா சமஷ்டிக் கட்சியை (தமிழரசுக் கட்சி) ஆரம்பித்தது முதல், அதுவே நிலை. அதுதான், தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளை, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் கொள்ள வைத்தது. அதன் நீட்சிகளில் நின்றே, இன்றைய நிலைப்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

இடைக்கால அறிக்கை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு எது என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப். தவிர்ந்த, ஏனைய பங்காளிக் கட்சிகள், இடைக்கால அறிக்கையினூடு முன்வைக்கப்பட்டு, புதிய அரசமைப்பில் இறுதியாக்கப்படும் விடயங்களுக்கு, ஒத்துழைப்பது சார்ந்த நிலையிலேயே இதுவரை இருக்கின்றன.

ஆக, கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சியின் வழியையே டெலோவும் புளொட்டும் பின்தொடரும். இன்று வரையான நிலை அதுதான். இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கடந்த ஒரு வருட காலமாகத் தமிழ் மக்களிடையே முன்வைத்து வருகின்ற தீர்வு என்கிற வடிவம் இடைக்கால அறிக்கையில் இருப்பவைதான். இந்த நிலையில், அந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில், நம்பிக்கையான கட்டங்களையே, அவர்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

“ஒருவர் நோயுற்றிருந்தால், முதலில் அந்த நோய் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், அந்த நோய்க்கு எவ்வாறான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று ஆராய வேண்டும். அதன்பின்னரே, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மாறாக, நோயின் வரலாற்றையும் ஆழத்தையும் அறியாது நோயுற்ற நபருக்கு சிகிச்சை வழங்கினால் சிக்கல் ஏற்படும். இப்போது, நாம் நோயைப் புரிந்து கொள்ளாத சிகிச்சையிலேயே ஈடுபட்டுள்ளோம். ‘இடைக்கால அறிக்கை’ நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும்”.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்து பருமட்டாக மேற்கண்டாறு அமைந்திருக்கின்றது.

கேள்வி – பதில் வடிவில் வெளியான, முதலமைச்சரின் அறிக்கையே கடந்த நாட்களில் வெளியான விமர்சனக் கருத்துகளில் முக்கியமானது. ஏனெனில் அந்த அறிக்கை, இடைக்கால அறிக்கையை, கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன், தமிழ் மக்கள் அதற்கு இணங்கமாட்டார்கள் அல்லது இணங்கக்கூடாது என்கிற நிலைப்பாட்டோடு வெளிவந்திருக்கின்றது.

வழக்கமாகவே, ‘தமிழரசுக்கட்சி எதிர் விக்னேஸ்வரன்’ என்கிற நிலையில் மட்டும் வைத்து முதலமைச்சரின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான விமர்சனத்தை நோக்கத் தேவையில்லை. அது, ‘இறுதியானதும், மீளப்பெற முடியாததுமான தீர்க்கமான அதிகாரப்பகிர்வுள்ள தீர்வு ஒன்றைப் பெறுவது’ என்கிற நிலைப்பாடு சார்ந்தது.

அந்த நிலைப்பாட்டில்த்தான் தமிழ்த் தேசிய அரசியலின் பெறுமானங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இருந்தபோிலும், கடந்த கால யதார்த்தங்கள் சார்ந்து, முன்னோக்கிய பயணத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பது சார்ந்தே, ‘சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கிடைக்கும் அதிகாரங்களை உள்வாங்கி, அவற்றைப் படிநிலைகளாகக் கொண்டு, முன்னோக்கி பயணிப்பது’ என்கிற கருத்தியல் தற்போது முன்னோக்கி வந்திருக்கின்றது.

‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்  (ஈ.பி.டி.பி) கோசத்தின் பக்கத்தில்தான், இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியலே பெருமளவு ஒதுங்கியிருக்கின்றது. புலிகள், காலத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்த முடியாத, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ கோசம், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியலில், யதார்த்த அரசியல் கோசமாக மாறியிருக்கின்றது.

ஆனால், இடைக்கால அறிக்கையூடு, தமிழ் மக்களை நோக்கி வருகின்ற தீர்ப்பு, ‘ஒருமித்த நாட்டுக்குள், மாநிலத்தில் குறையாட்சி’ என்ற விடயத்தையே முன்வைக்கின்றது. அது, தென்இலங்கைக் கட்சிகளோடு சேர்ந்து, இரண்டு தசாப்த காலமாக இயங்கிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கோசத்தை விடவும் குறைவானது என்பதுதான் இன்னும் வேதனையானது.

‘லேபிள்கள் அல்ல; (சுமந்திரன் மொழியில் ‘பெயர்ப் பலகைகள்’ அல்ல) அவற்றின் உள்ளடக்கங்களே இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன’ என்கிற விடயத்தை முன்னிறுத்துவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் குறிப்பிட்டளவான தரப்புகள் நம்பிக்கையோடுதான் இருக்கின்றன.

ஆனால், உள்ளடக்கங்களின் அழுத்தம், வலு, நின்று நீடித்திருக்கும் தன்மை பற்றிய ஆய்வும் உறுதிப்பாடும் இன்றி, ‘லேபிள்களைத் தவிர்ப்போம்’ என்கிற மேம்போக்கான உரையாடல்களை எதிர்கொள்வதில் பாரிய சிக்கல் உண்டு. அந்த இடத்தில்தான், சுமந்திரனின் நிலைப்பாடு கேள்விக்குள்ளாகின்றது. அதன்போக்கில், இடைக்கால அறிக்கையை வெகு கவனமாகக் கையாள வேண்டி ஏற்படுகின்றது.

ஏனெனில், தீர்வு விடயத்தில், குறிப்பாக புதிய அரசமைப்பு விடயத்தில், தமிழரசுக் கட்சி என்ன முடிவை எடுக்கப் போகின்றதோ, அதற்காக என்ன காரணங்களை அடுக்கப் போகின்றதோ, அதன் வழியே தமிழ் மக்களும் வேண்டா வெறுப்பாகவேனும் பயணிக்கத் தலைப்படுவார்கள்.

ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான அணியொன்றை, தமிழ்த் தேசிய அரசியல் உருவாக்குவதற்கான சூழல் இருந்தும், அந்த வாய்ப்புகளை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. (அல்லது அதற்கான தைரியத்தை யாரும் கொண்டிருக்கவில்லை).
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், மாற்று அணியை உருவாக்குவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அந்த உரையாடல்களை முதலமைச்சரே மறுத்துரைத்து ஒரு வருடத்துக்கும் மேலாகின்றது.

அப்படியான கட்டத்தில், இன்னமும் முதலமைச்சருக்காகக் காத்திருந்து காத்திருந்து, மாற்றத்துக்கான வெளியை கானல் நீரினால் நிரப்பிவிட்ட தரப்புகளின் பக்கத்தில் நிற்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சியின் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த கூட்டமைப்பின் பக்கத்திலேயே தமிழ் மக்கள் ஒதுங்குவார்கள்.

அதுவே, புதிய அரசமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இறுதியான முடிவாகவும் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், புதிய அரசமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் குறிப்பிட்டளவான ஏமாற்றத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல, மாற்று வெளியை நாசமாக்கியவர்களும் காரணமாக அமைவார்கள். அது, ஒருவகையான தோல்வி மனநிலையை, தமிழ் மக்களிடம் விதைத்தாக அமையும்.