இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?

எம் தேசத்து மன்னர் ஆட்சி முறைமை அன்னியர் வரவால் அகன்று, போத்துக்கேயரும் அவர் தடம் அறிந்து வந்த ஒல்லாந்தரும் ஆண்ட பின், ஆங்கிலேயர் எம் முழு தேசத்தையும் ஆக்கிரமித்தனர். ஆட்சி இலகுவிற்காக மாகாணங்களாக எம் தேசம், கொழும்பை தலைநகராக கொண்ட ஆளுமைக்கு உட்பட்டது. இரண்டாம் உலக போரின் பின் அது சிங்கள தலைமைகளிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், உருகுணை இராச்சியம் என இருந்த அனைத்தும் கொழும்பு இராச்சியமாக மாறியது. அன்றில் இருந்து அரசியல் சாசனம் என்ற சூத்திரம் கொண்டு, பெரும்பான்மை இனம் தனக்கு வேண்டிய சட்டமூலங்கள் மூலம் மற்ற இனத்தவர் மீதான, தன் ஆளுமையை நிலை நாட்டி வந்தது. அது இன்றுவரை நீடிக்கிறது.

முதல் சட்டமூலம் இந்திய வம்சாவளி மலையக தமிழர் மீது ஆரம்பித்து, பாரளுமன்றத்தை விட்டு தமிழர் விடுத்தலை கூட்டணி கூண்டோடு வெளியேறிய ஆறாவது திருத்தம், காலவரை இன்றி தமிழ் இளைஞர்களை பூசா முகாமில் தடுத்து வைத்து, சித்திரவதை செய்ய வழிவகுத்த பயங்கரவாத தடை சட்டம், என பாராளுமன்ற சட்டங்களை வைத்தே இனத்தின் உரிமைகளை பறித்த தேசம் எம் தேசம்.

இலங்கை என்ற அழகிய தீவின் வடக்கும் கிழக்கும் தெற்கும் மேற்கும் தனித்து இருந்த வேளை யுத்தங்கள் நடந்த போதும், ஒப்பந்தங்கள் மூலம் நிர்வாகங்கள் கைமாறினாலும் மக்கள் நிம்மதியாக இருந்த வரலாறுகள் உண்டு. ஆனால் ஒன்றுபட்ட தேசத்தில் ஒற்றை ஆட்சி முறை பிரித்தாளும் தந்திரத்தால் விதைத்துப் போன, விச விதைகள் முளைத்து பெரு விருட்சமாக நச்சு காய் காய்க்கிறது.

ஆங்கில மொழி கல்வியால் ஆட்கொள்ளப்பட்ட யாழ் குடாநாடு, அன்னியர் ஆட்சியில் முன்னிலை பட்டது. அதனால் அரச பதவிகளில் முன்னிலைப்பட்ட அவர்களின் மீது ஏனைய பிரதேசங்களில் வன்ம மன நிலை உருவானது. மலை முகடுகளை தேயிலை தோட்டங்களாக மாற்றிய இந்திய தமிழர் மீது மலையக சிங்கள மக்கள், தம் வளங்களை சூறையாட உதவுவோர் என்ற வெறுப்பு வேர் ஊன்றியது.

தம் சாதி மேலாதிக்க சிந்தனையால் சேர் மார்க்கஸ் பெர்னாண்டோ வெல்லக் கூடாது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே, பொன்னம்பலம் ராமநாதனை களம் இறக்கி வெற்றி வாகை சூடியது எப் ஆர் சேனநாயக்க தலைமை. இஸ்லாமியர் மீது தாம் நடத்திய தாக்குதலால் சிறைப்பட்ட சிங்களவரை காப்பாற்றிதால், குதிரை வண்டிலை தாமே இழுத்து இராமநாதனை பெருமைப்படுத்தினர் டி எஸ் கூட்டம்.

ஆனால் கொழும்பு தொகுதி பங்கீட்டில் அருணாசலத்தை ஏமாற்றி அவரை ஓரம் கட்டியதும் அதே டி எஸ் சேனநாயக்கா கூட்டம் தான். தேசாதிபதி குணதிலக்கவை தூபம் போடச்சொய்து, ஐம்பதுக்கு ஐம்பது கேட்ட ஜி ஜி பொன்னம்பலத்தையே தனது மந்திரி சபையில் இணையத்தூண்டி, அவரை செல்வநாயகம் போன்றவர் வெறுக்க செய்தவரும் சாட்சாத் இதே டி எஸ் சேனநாயக்கவே.

பதவிக்காக மொழியை முன்னிலைப்படுத்தி ஆங்கிலத்தால் முன்னிலைப்பட்டு, அரச உத்தியோங்களில் நாடெங்கும் இருந்த தமிழர்களின் மீது வன்மம் கொண்டிருந்த சிங்கள பேரினவாதிகளின் துணையுடன் பிரதமரான பண்டாரநாயக்கா கூட, நேர்மையாக நடப்பதாக கூறி நீண்ட கலந்துரையாடலின் பின்னர் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை, பிக்குகளின் முன்னிலையில் கிழித்து எறிந்தார்.

கனவான் என பெயரெடுத்த டட்லியின் அரசுக்கு முட்டுக்கொடுத்து, மந்திரி பதவியும் பெற்ற பின்னர் திருமலையை புனிதநகர் ஆக்கும் முயற்சியில் தோற்றதும், பின் திருச்செல்வம் பதவி விலகியதும் இனப்பிரச்சனை தீர்வு என டட்லி – செல்வா ஒப்பந்தம் ஏற்ப்பட்டும் அதுவும் நிறைவேற்ற முடியாத நிலையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் போலவே கானல் நீரானதும், நாம் கடந்து வந்த வரலாறு.

வட்டமேசை மாநாடு என்று கூறித்தான் தேர்தலை சந்தித்தார் ஜே ஆர். ஆனால் தேர்தலில் அவர் அடைந்த வரலாறு காணாத பெரும்பான்மை வெற்றி அவரை தடம் மாறச்செய்தது. எம்மவருக்கும் தமது வெற்றிக்காக மட்டுமே முன்வைத்த தமிழ் ஈழம் என்ற கோசம் அவர்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்தது. இரு பகுதியினரது கயிறு இழுப்பும் இங்கு ஆரம்பிக்க தமிழ் இளையவர் முறுகினர்.

தனிநாட்டு கோரிக்கை வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமே என்பது போல் அது தலைமைகளால் கைவிடப்பட்டு மாவட்ட சபையை கொண்டுவந்தது. ஆனால் அதற்கு அதிகாரங்கள் போதவில்லை என்ற காரணத்தால் மீண்டும் சலசலப்பு தொடங்க, வெறுத்தும் போன தமிழ் இளையவர் தமது பழைய தலைமைகளை இனியும் நம்ப முடியாது என தாமே தலைமை தாங்க ஆயுதங்களுடன் வந்தனர்.

அதனை அடக்குவதற்கு ஜே ஆர் கையில் எடுத்த ஆயுதம் அரசியல் அமைப்பு. வேண்டிய திருத்தங்கள் செய்யவும் சட்டமூலங்களை உருவாக்கவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசு, அவர் கைவசம் இருந்ததால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டுமே என்னால் முடியாது மற்றப்படி எதுவும் என்னால் முடியும் என பேச வைத்து, தம்மிஸ்ட (தர்மிஸ்ட) ஆட்சி புரியவைத்தது.

விளைவுகளின் உக்கிரம் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம். அதுவும் அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் என்ற பெயரில் மாகாண சபையாக. பலவிதமான உள்குத்து வைத்து உருவானது மாகாண சபை அதிகார பகிர்வு. உன் பிள்ளை என் பிள்ளை நம்பிள்ளை என்பது போல மாகாண நிரல், மத்திய நிரல், பொதுநிரல். இதில் நம் பிள்ளையை யார் வைத்திருப்பது என்பதில் தான் புடுங்குப்பாடு.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பல தடவைகள் நேரடியாக பேசியும், அதிகார பகிர்வு விடயத்தில் பொதுநிரல் மத்தியின் ஆளுமைக்கு உட்பட்ட நிலையில் நம்பிள்ளை எம்மோடு இருப்பது தான் அதற்கும் மாகாணத்துக்கு ஆரோக்கியம் என்ற முடிவுக்கு வந்த மாகாண அரசு, மத்திக்கு பல கோரிக்கைகளை முன்வைத்து பிரேரணையை நிறைவேற்றி அனுப்பியது.

அதை முழுமையாக பார்வையிடாமல் ஈழப்பிரகடனம் என்ற ஒற்றை வரியில் அதனை வரையறுத்து அடுத்த நகர்வுக்கு கூட வழிவிடாது, பாராளுமன்ற சட்டதிருத்தம் மூலம் அந்த சபையையே கலைத்தது பிரேமதாசா அரசு. அடுத்து வந்த சமாதான புறா சந்திரிகா அரசு நியாயமான தீர்வை நீலன் பீரிஸ் கூட்டு தயாரிப்பாக முன்மொழிய முற்ப்பட, அதை பாராளுமன்றில் எரித்தது ரணில் தலைமை.

மகிந்த சிந்தனை 13 பிளஸ் என கூறிக் கூறி இணைந்திருந்த வடக்கு கிழக்கையே பிரித்தது. இதற்கு அது தன் கட்டுப்பாட்டில் இருந்த நீதித் துறையை பயன்படுத்தியது. அதுவரை அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்தும், சட்டமூலங்களை நிறைவேற்றியும் தனக்கு சாதகாமான விடயங்களை சாதித்த பேரினவாதிகள் மகிந்த காலத்தில் தான் நீதிதுறயையும் தம் தேவைக்கு ஏற்ப செயல்ப்பட செய்தது.

சர்வாதிகார போக்கு மற்றும் சீனாவுடனான கரம் கோர்ப்பு சர்வதேசத்தின் பார்வையில்பட்ட போது உலக ஒழுங்கு என்ற சூத்திரப்படி நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது. இரவு ஒன்றாக இருந்து அப்பம் உண்டவரே அடுத்த ஜனாதிபதி ஆனார். தனது ஆட்சியில் தான் கொண்டுவந்த தீர்வை எரித்வருடன் சந்திரிகாவும், தனது ஆட்சியை அற்ப ஆயுளில் கலைத்தவருடன் ரணிலும் கைகோர்த்தார்.

மகிந்தவுடன் அப்பம் தின்ற மைத்திரி, அரசியல் தீர்வு பொதியை எரித்த ரணில் ஆட்சியை கலைத்த சந்திரிகா மூவரின் கூட்டில் உருவானதே நல்லாட்சி. அதிமுக்கிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண இவர்களுடன் இதயத்தால் இணைந்து, அந்த ஆட்சி அமைய தமது ஆதரவை எந்த முன் நிபந்தனையும் இன்றி நம்பிக்கையில் கருமங்களை முன்னெடுக்கிறது கூட்டமைப்பின் தலைமை.

மாற்று வழி வேறு ஏதேனும் உண்டா என கேட்டால் தீர்க்கமான திட்ட முன் மொழிவு எவரிடமும் இல்லை. சம்மந்தரை சீண்டுவதும் சுமந்திரனை செம்பு என்பதும் மட்டுமே அவர்களின் விமர்சனம். சர்வதேச அழுத்தம் என்பது எந்தளவு சாத்தியம் என்பது பற்றி எப்போதும் பூகோள அரசியல் வகுப்பு எடுக்கும் பிரமுகர் கூட சாமானியர் புரியக்கூடிய விதத்தில் விளக்கமாக கூறுவதில்லை.

சாமானியரின் கேள்விகள் மிகத் தெளிவானது. எப்போது சிறையில் வாடும் எமது உறவுகள் விடுதலை செய்யப்படுவார்கள்?. என்று எம் சொந்தக்காணியில் நாம் மீளக்குடியேற முடியும்?. காணாமல் போன எம் உறவுகளின் நிலை என்ன?. ராணுவத்திடம் கையளித்த எம்மவர் எங்கே?. நல்லாட்சி அரசிடம் இவர்கள் கேட்கும் விடயங்களுக்கு பதில் சொல்ல அரசியல் அமைப்பு திருத்தம் தேவை இல்லை.

சிறையில் இருப்பவருக்கு எதிராக வழக்கை பதிவு செய்வதை துரிதப்படுத்தலாம், விசேட நீதிமன்றம் மூலம் விசாரணையை விரைவாக முடிக்கலாம், எல்லாவற்றிக்கும் மேலாக பொது மன்னிப்பு கூட வழங்கலாம். அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தவிர்ந்த முகாம்கள் அகற்றப்பட்டால், மக்களின் மீள் குடியேற்றம் துரிதமாகும். உறவுகள் பற்றி இராணுவத்திடம் நேரடிப் பதில் கூறமுடியும்.

இதை நாலு வரியில் நான் பதிவது போல் நிதர்சன நிலை இல்லை என்பது தான் உண்மை நிலைமை. நல்லாட்சி அரசு என்றாலும் அது நிலையான ஆட்சி அரசா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதில் செலவிடும் நேரம் நாட்டை சீர்செய்வதில் செலவிடும் நேரத்தை விடவும் அதிகமாக தேவைப்படுக்கிறது. ஒரு அடி முன்நோக்கி வைத்தால் இரண்டு அடி பின்னுக்கு இழுக்கிறது.

சர்வதேச மேற்ப்பார்வை எம் தேசத்தின் மீது நிழல் ஆடினாலும் அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடைமுறைப்படுத்தபடும். ஜெனீவாவில் அண்மையில் நீடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கால நீடிப்பே அதற்கான அதற்கான முன் உதாரணம். நேரடியாக தலையீடு செய்த அயல் நாடே இப்போது அடக்கி வாசிக்கிறது. உங்கள் கோரிக்கையில் உறுதியாக இருங்கள் நாம் பின் நிற்போம் என்கிறார்கள்.

இறுதி தீர்வை இதயத்தால் இணைந்தவர் மட்டுமே எட்ட முடியும் என்கின்ற நிலைதான் நிதர்சனம். அதற்கு விட்டுக்கொடுப்புகள் நிறையவே தேவைப்படுகிறது. சிறை வாடுவோர் விடயம் தொடக்கம் காணிகள் விடுவிப்பு உட்பட காணாமல் போனவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோர் வரை விடயங்கள் பேசப்பட்டாலும் வேகம் போதவில்லை என்ற குற்றசாட்டு பாதிக்கப்பட்டோர் பக்கமிருந்து.

அதேவேளை துரிதநடவடிக்கை பற்றிய அறிவிப்பு வந்தால் புலிகளை திறந்து விடுகிறது அரசு, முகாம் மூடல் புலிகளை மீளுற செய்யும், காணாமல் போனோர் மற்றும் கையளிக்கபட்டோர் பற்றி கேட்டால் இராணுவத்தை காட்டி கொடுக்கிறது அரசு என்ற கூக்குரல், எதிர் தரப்பிடம் இருந்து எழுகிறது. அரசை தக்கவைப்பது முதல் எதிர்ப்பை குறைக்கவும், இருதலை கொள்ளி எறும்பு நிலையில் அரசு உள்ளது.

இதயத்தால் இணைந்தவரே துரிதப்படுத்தும் அல்லது விட்டு வெளியேறும் என்கிறது எம்மிடையே உள்ள எதிர் தரப்பு. ஏதோ அவர்கள் விலத்திவந்தால் தாம் உள் புகுந்து வெட்டி வீழ்த்தி விடுவர் போல வீராப்பு பேச்சு. வரலாற்றில் எத்தனை முயற்சிகளோ அத்தனை தோல்விகளையும் கண்ட கசப்பான அனுபவம் எம் தலைமைகளுக்கு உண்டு. ஆனால் அப்போது இருந்த நிலையில் மாறுபட்ட சூழல் இன்று.

வேறுபட்டு நின்ற இரண்டு பெரும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து இருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை. இனியும் இவ்வாறு ஒரு நிலை வரும் என்று ஆரூடம் கூற முடியாது. இன்று இருப்பது நல்லாட்சியா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால் தாம் விட்ட தவறை திருத்த இரண்டு தலைவர்கள் முயல்கிறார்கள் என்ற நோக்கில் மட்டுமே, இதயத்தால் இணைந்தது கூட்டமைப்பு.

சந்திரிகாவின் தீர்வை எரித்த ரணிலும், ரணிலின் ஒப்பந்தத்தை நடைமுறை சாத்தியமற்றதாக ஆக்கிய சந்திரிகாவும், அதனால் நடந்த பின் விளைவுகளின் அளவிற்கு தாம் தாம் காரணம் என்ற உணர்வில் இன்று மைத்திரியின் கூட்டில், நாட்டில் நிரந்தர சாமாதானம் ஏற்பட கூட்டமைபுடன் பேச்சுவார்த்தை நடத்த முக்கிய காரணம், அதுவே தமிழ் மக்களின் பெரும்பான்மை கட்சி என்பதால் மட்டுமே.

எத்தனை உள் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் மக்கள் தம் தெரிவாக கூட்டமைப்பை தவிர வேறு கட்சிகளை பெருமளவில் ஆதரிக்கவில்லை என்பது உண்மை. அதனால் அவர்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு. வரலாற்றில் பல தடவைகள் எம் தலைமகள் ஏமாந்த கதை அவர்களுக்கு தெரியும். தமிழர் விடுதலை கூட்டணி மூலம் பாராளுமன்ற சென்ற நாள்முதல், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட மூத்தவர் திரு சம்மந்தன்.

அந்த அனுபவத்தை அவர் இதயத்தால் இணைந்தாலும், புத்தியால் செயல்ப்படுத்தவேண்டிய தருணம் இது. யு என் பி, எஸ் எல் எப் பி என்ற இரண்டு பெரும்பான்மை இன கட்சிகளுக்கு இணையாக பேரம் பேசும், தீர்வை தேடும் பொறுப்பு கூட்டமைப்பின் தலைமை மீதுள்ள பாரிய பொறுப்பு. கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சாதிக்க வேண்டிய சவால் சம்மந்தருக்கு. கூடவே சுமந்திரனுக்கும் மற்றவர்க்கும்.

இன்னமும் எவ்வளவு காலம் நிகழ்வுகளின் இறுதி இலக்கை எட்ட தேவைப்படும் என்ற எதிர்வு கூறல் அறிவிக்கப்பட்டாலும், அது காலம் கடந்து நீண்டு செல்வது தவிர்க்க முடியாதது. சுதந்திரம் அடைந்தது முதல் தொடங்கிய பிரச்சனை நல்லாட்சி அரசில் சுலபமாய் முடியும் என்ற விருப்பு தவறல்ல. ஆனால் அது யாதார்த்தமும் அல்ல என்ற பதிலும் தவறல்ல. முயற்சி தொடகின்றது வெற்றியை அடைய.

அதற்கு நல்லாட்சி அரசு நீடிக்க வேண்டும். தெற்கில் அதனை குழப்ப பல அணிகள் ஓர் அணியில் இருப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால் வடக்கிலும் அதுபற்றிய சலசலப்பு விமர்சனத்துக்கு உட்பட்டது, காரணம் மக்கள் வாக்களித்து வெல்லவைத்து அனுப்பியவர்கள் முயற்சியை, அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரை பொறுத்திருந்து பார்த்து தான், அது பற்றி விமர்சிக்க வேண்டும்.

சாதிக்க தவறியவர்களை தண்டிக்க தேர்தல் முறைமை கைகொடுக்கும். தம் விரல்படும் மைகொண்டு அவர்களை மதிப்பிடும் உரிமை வாக்காளருக்கு உண்டு. அரசியல் தீர்வுக்கான பயணங்கள் ஒன்று என்றாலும் அதற்க்கான பாதைகள் அவரவர் தெரிவு. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தான் தேர்வு செய்த பாதையில் பயணிக்கும் சுதந்திரத்தை, நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

சாண் ஏற முழம் சறுக்கும் நிகழ்வுகள் ஒரேயடியாக ஒரு முடிவை எடுக்க உதவாது. வழுக்கு மரம் போல் நழுவிச்செல்லும் முயற்சிகளை எடுத்த எடுப்பில் விமர்சிக்க கூடாது. பொறுத்திருந்து நிகழ்வுகள் அடையும் முன்னேற்றம் பற்றிய ஆலோசனை, அனுசரணை அனைவராலும் முன்வைக்கப்படலாம். பலாலி பகுதி காணியில் இன்று நிகழும் நிகழ்வை போலத்தான், ஏனைய விடயங்களும் நழுவலாம்.

அதற்காக அந்த விடயங்களை விலத்தி செல்ல முடியாது. அதே வேளை முழுமையான அரசியல் அமைப்பு மாற்றத்தில் முன்பு விட்ட வரலாற்று தவறுகளையும் கவனத்தில் கொண்டே, கூட்டமைப்பு தன் பங்களிப்பை வரையறுக்க வேண்டும். இந்த கடப்பாடு நல்லாட்சி அரசு என்ற பெயரில் அமைந்த தென்னிலங்கை கட்சிகளின் மனதிலும் பிரதிபலிக்க வேண்டும். அவர்களும் வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

பண்டாரநாயக்காவும் டட்லியும் இணங்கித்தான் தமிழ் தலைமைகளுடன் ஒப்பந்தங்கள் போட்டனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்த வேளையில் தாமே பின்வாங்கினர். ஜே ஆர் நெருக்குதலால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றாலும், அதை தமிழ் மக்களுக்கு சாதகமற்றதாக்கவே 13வது திருத்தத்தை வடிவமைத்தார். இந்த செயலை இன்று தீர்வு பற்றி பேசும் மூவர் அணி கவனத்தில் கொள்ளவேண்டும்.

தவறினால் நாளை மகிந்த எதிர்ப்பு, கூட்டு எதிரணி எதிர்ப்பு என கூறி பழையபடி வேதாளம் முரங்கை மரம் ஏறுவதும், தம் முயற்சியில் சளைக்காத விக்கிரமாத்தித்தன்களாக தமிழ் தலைமைகள் மீண்டும் தீர்வு பற்றி பேச, சர்வதேச பயணங்கள் முதல் மனித உரிமை பேரவை, பாதுகாப்பு பேரவை, பூகோள அரசியல் என புதிய தேடல்களை தொடர, பாடையில் படுத்த நிலைதான் தமிழ் மக்களுக்கு தொடரும்.

(ராம்)