இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும்

இந்தத் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி, அண்டை நாடுகளிலும் எதிரொலிக்கும். குறிப்பாக, மோடியின் மீள்தெரிவு, இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறையில், எவ்வாறான தாக்கத்தை உண்டாக்கும் என்ற வினா தவிர்க்கவியலாதது.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத்தின், கீழவைக்கான தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி, பெரும் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது தடவையாக ஆட்சியமைக்கிறது.

பா.ஜ.கவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது, அதிகப்படியான வாக்கு சதவீதத்துடனும் அதிக ஆசனங்களுடனும் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது, இந்திய மக்களின் மனோநிலையையும் பா.ஜ.கவுக்கான ஆதரவுத் தளத்தையும் சுட்டி நிற்கின்றது.

தேர்தல் முடிவுகள்: சில செய்திகளும் எழும் வினாக்களும்

தேர்தல் முடிவுகள் சொல்லுகின்ற சில வலுவான தரவுகள், கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, ஆட்சியில் உள்ள பா.ஜ.க, புதிய மாநிலங்கள் பலவற்றில் தனது ஆதரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் மத்தியிலும் மாநிலங்களிலும் நீண்டகாலத்துக்கு பா.ஜ.க பதவியில் இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன.

இரண்டாவது, தேசியக் கட்சியாகத் தனது நிலையை, காங்கிரஸ் கட்சி மெதுமெதுவாக இழந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சி மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

மூன்றாவது, நாடாளுமன்ற இடதுசாரிக் கட்சிகளின் தோல்வி, காலங்கடந்ததும் சீரழிந்ததுமான தேர்தல் சூதாட்டத்தை ஆடிய இடதுசாரிகளுக்கு, நல்லதொரு பாடத்தை வழங்கியுள்ளது.

நான்காவது, வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே, மிகுந்த வேறுபாடுகள் உண்டு என்பது, மீண்டுமொருமுறை நிரூபணமாகி உள்ளது.

ஐந்தாவது, ‘இந்து’, ‘இந்தியா’, ‘தேசியப் பாதுகாப்பு’ என்பன அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளை விட, முக்கிய பேசுபொருளாகி உள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ள கேள்விகள், ஒருவகையில் தர்க்கம் சார்ந்தவை; இன்னொரு வகையில், புதிரானவை. இவ்வகையில், இரண்டு முக்கிய கேள்விகளின் ஊடு, இதை அணுகலாம்.

முதலாவது, மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், பெரும் வேலை இழப்புகளும் விலைவாசி உயர்வும் விவசாயிகள் தற்கொலைகளும் வங்கி மோசடிகளும் ஊழல்களும் மலிந்திருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. ஆனால், இவை, எந்த வகையான எதிர்ப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. இது எவ்வாறு நடந்தது?

இரண்டாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது. இம்மூன்றிலும் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. இம்மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாரதிய ஜனதாக் கட்சியோ, தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதில் கவனிப்புக்குரியது யாதெனில், தான் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி, தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி வந்துள்ளன. இதை எவ்வாறு விளங்குவது?

இவ்விடத்தில், ஒருவிடயத்தைச் சொல்லியாக வேண்டும். தேர்தலுக்கு முன்பே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பது, பல்வேறு முறைகளில் நிரூபிக்கப்பட்டது.

தேர்தலுக்குப் பலகாலத்துக்கு முன்பே, எதிர்க்கட்சிகள் இந்தச் சந்தேகத்தை எழுப்பின. ஆனால், அதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதையும் தேர்தல் ஆணையம் எவ்வாறு பக்கசார்பாக நடந்து கொண்டது என்பதற்குமான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளியான நிலையிலுமே, இந்தத் தேர்தல் முடிவுகளை நோக்க வேண்டியுள்ளது. தேர்தல் மோசடி குறித்து, வேறுயாரையும் விட, இலங்கையர்கள் நன்கறிவார்கள்.

இந்தத் தேர்தல் முடிவுகள் எழுப்புகின்ற பிரதானமான கேள்வி யாதெனில், நாடு முழுக்க விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவிடும் காரணிகளை விட, தேசப் பாதுகாப்பு என்ற, பாரதிய ஜனதாவின் கூச்சல் வலிமையானதா? பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புகள் ஆகியவற்றால், தமது வாழ்வாதாரத்தை இழந்த சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரும், இத்தொழில்களை நம்பி வாழ்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளிகளும் தமது வாழ்வாதாரத்தைப் பறித்த காரணிகளை விட, தேசப் பாதுகாப்பு என்ற காரணி, வலிமை மிக்கதாகக் கருதுகிறார்களா? அப்படிக் கருதியிருந்தால், அது தென்மாநில விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளிகளிடம் ஏன் சென்றடையவில்லை?

கடந்த ஐந்தாண்டு காலத்தில், சுயாதீனமான அமைப்புகள் அனைத்தையும் (நீதித்துறை தொடங்கி தேர்தல் ஆணையம் வரை) அரசியல்மயப்படுத்தி, தன்வசப்படுத்தியதன் பயன்களை பா.ஜ.க அறுவடை செய்திருக்கிறது. இது ஒருபுறம் சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் முன்னெப்போதுமில்லாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மறுபுறம், பா.ஜ.க உருவாக்கத் துடிக்கும் ‘இந்து’ இந்தியாவானது, மதச்சார்பின்மைக்கான மிகப்பெரிய சவாலாகியுள்ளது.

இந்திய அயலுறவுக் கொள்கை: எதை எதிர்பார்ப்பது?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், இந்திய அயலுறவுக் கொள்கை மிகுந்த குழப்பகரமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. கடந்த கால மோடியின் அயலுறவுக் கொள்கை, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

முதலாவது, ‘அமெரிக்காவின் கேந்திரக் கூட்டாளி’ என்ற நிலையை அடைவதும், அதற்காகப் பணியாற்றுவதும் ஆகும்.

இரண்டாவது, இந்தியப் பெருமுதலாளிகளின் தேவைகளுக்கமைய, அயலுறவு சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதும் செயற்படுவதும் ஆகும். இதை அவர், 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

‘இன்று, இந்திய – அமெரிக்க உறவு, வரலாற்றின் தயக்கங்களைக் கடந்து வலுப்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளியாக, இந்தியா என்றும் இருக்கும். இந்தியாவின் 125 கோடி மக்கள், அந்நாட்டை, அமெரிக்க வணிகத்துக்கான இசைவான கூட்டாளியாக மாற்றியுள்ளார்கள்’. இது, மேற்சொன்ன இரண்டு விடயங்களையும் உறுதிப்படுத்துகிறது.

இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படை, அதன் பொருளாதார நோக்கங்களே என்பது தெளிவு. உலக அரங்கில், இந்தியாவைத் தேசமாக அல்லாது, சந்தையாகவே மோடி முன்னிறுத்துகிறார். அயலுறவுக் கொள்கையும் சந்தையின் அடிப்படையிலும் அமெரிக்காவின் நல்லதோர் அடியாளாக மாறுவதிலுமே தங்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சியையே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் காணவியலும்.

பா.ஜ.கவின் அயலுறவுக் கொள்கையானது, உள்நாட்டுக் கொள்கையில், அவர்கள் கடைப்பிடிக்கின்ற பிற்போக்குத்தனத்தின் நீட்சியாகும். இது அப்படியே, அவர்களின் அயலுறவுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது.

சர்வதேச நாடுகளின் மூலதனத்துடன் சமரசமும், ஒத்துழைப்பும் மேலோங்கிய பொருளாதாரப் பாதையில் பயணிக்கும் மத்திய அரசாங்கத்தின் அயலுறவுகளிலும் அதன் பிரதிபலிப்பு உள்ளது.

உள்நாட்டுத் தேசியவாதத் தேவைகளுக்காக, அயலுறவுக் கொள்கைகளை அடகுவைக்கும் அபாயத்தை, மோடி அரசாங்கம் கடந்த காலங்களில் செய்துள்ளது.

தேசியவாதத் தேர்தல்

இலங்கை விடயத்திலும், இந்தியாவின் அயலுறவுக் கொள்கை, இதேபாணியில் பயணிக்கும் என எதிர்பார்க்கலாம். சீனாவுக்கு எதிரான மூலோபாயக் கூட்டாளியாக, அமெரிக்காவுடன் இணைய இந்தியா முண்டியடிக்கிறது.

அவ்வகையில், தெற்காசியாவில் சீன எதிர்ப்பை, அமெரிக்கா சார்பாக முன்னெடுக்கும் பங்காளியாக, இந்தியா முன்னிலைக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கில், எவ்வாறு அமெரிக்க நலன்களைச் சவூதி அரேபியா பாதுகாக்கிறதோ, அதே வேலையை, தெற்காசியாவில் இந்தியத் தேசபக்தியின் காவலர்கள் செய்வதற்குக் காத்துக் கிடக்கிறார்கள்.

இலங்கையில், இந்தியப் பெருமுதலாளிகளுக்குத் தேவைகளை நிறைவேற்றுவதையும் சீனாவுக்கு எதிரான, அமெரிக்கக் கூட்டாளியாகச் செயற்படுவதையுமே இந்தியா செயற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அதன் ஒருபகுதியே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து, திருகோணமலைத் துறைமுகத்தைக் குறிவைத்திருப்பதாகும். இலங்கையில், பழைய இரும்பைப் பயன்படுத்தி, வீடுகள் அமைக்கும் திட்டம் முதல், பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் ஊடு, இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களை, இந்திய அயலுறவுக் கொள்கை, கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் முன்தள்ளியுள்ளது.

இலங்கை மீதான, முழுமையான கட்டுப்பாட்டை இந்தியா விரும்புகிறது. அது, சாத்தியமில்லாவிடினும் இந்திய நலன்பேணும் ஆட்சியை இலங்கையில் இந்தியா எதிர்பார்க்கிறது. அதை, தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் வழங்கவில்லை என்பதை, யாவரும் அறிவர். எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், இந்தியா எதை விரும்பும் என்பது, ஊகிக்கக் கடினமானதல்ல.

அரசியல் தீர்வு, தமிழர்களுக்கு வாழ்வு என்பவற்றை இந்தியாவே பெற்றுத்தரும் என்று சொல்பவர்கள் தொடர்ந்து சொல்லட்டும்; அது செல்லரித்துப்போன கிணற்றுத் தவளைத் சிந்தனையின் கையறுநிலை. அயலுறவுகள் நேர்கோட்டில் நிகழ்வதில்லை. தமிழர்களின் நலன்கள் குறித்த அக்கறை என்பது, வெறும்பேச்சு; ஏனெனில், நிகழ் அரசியல்; நிழல் அரசியல் அன்று.