இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்தி

இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்திபெற்று தற்போது கோழிக்கோடு ( calicut) மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்களின் குடியுரிமையைப் பறித்து திருப்பி அனுப்ப தொடங்கியது. அங்கிருந்து லட்சக்கணக்கானோர் தாயகம் திரும்பினர். இன்பசேகரனின் குடும்பமும் மீண்டும் தாயகம் திரும்பியது.

பிழைப்புக்காக கொடைக்கானல், ஏற்காடு என பல மலைக் கிராமங்களில் வேலை வாய்ப்பினைத் தேடி அலைந்தனர். இறுதியாக நீலகிரி மாவட்டம் படகராவுக்கு வந்து குடியேறியனர் இன்பசேகரனின் பெற்றோர். கூடலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து, வாழ்க்கையை ஓட்டினர்.

தொடக்கக்கல்வி படிப்பை பந்தலூரில் உள்ள அரசு பள்ளியில் இன்பசேகரன் படித்தார். தினமும் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்துதான் பள்ளிக்குச் செல்வார். அடர்ந்த வனப்பகுதியில், தினமும் 2 மணி நேர நடைக்கு பிறகுதான் பள்ளிக்கே செல்ல முடியும். யானை, சிறுத்தைப் புலி எல்லாம் சர்வ சாதாரணமாகக் கடந்து செல்லும் பகுதி அது.

கடுமையான வறுமைக்கிடையேயும் பள்ளி படிப்பை முடித்த இன்பசேகரன் கோவை, ஹைதராபாத் வேளாண் பல்கைலையில் பட்டம் பெற்றப் பிறகு, வேளாண் விஞ்ஞானியாக பணி புரியத் தொடங்கினார். எனினும் ஐஏஎஸ் ஆவதுதான் அவரது ஒரே இலக்கு. அதற்காகக் கடுமையாக உழைத்த இன்பசேகரன், தற்போது ஐஏஎஸ் பாஸாகி, கோழிக்கோடு மாவட்டத் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில், முதல் ஐஏஎஸ் இன்பசேகரன்தான்.

நன்றி – விகடன்
(பதிப்பு : 04/07/2016)