இன்று ஈழத்து புரட்சிப்பாடகர் ஷாந்தன் அவர்களின் பிறந்தநாளாம்…. இந்நாளில் அவரை பற்றி கொஞ்சம் நினைத்து பார்க்கின்றேன்…..

2010 ஆம் ஆண்டு, போர் முடிவுற்று பாதைகள் திறக்கப்பட்டு…. மக்கள் வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நல்லூர் திருவிழாவும் வந்தது. DAN TV யாழ் ஒளி தொலைக்காட்சி அப்போதுதான் மெல்ல யாழில் காலூன்ற ஆரம்பித்து இருந்தது…. நல்லூர் திருவிழாவில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் நம் தொலைக்காட்சியை ஜனரஞ்சக படுத்த வேண்டும்…..

இந்தியாவில் இருந்து கலைஞர்களை கொண்டுவந்து ஒரு இசை நிகழ்ச்சி செய்வோம் – இது நான்

ஏனப்பா இந்திய கலைஞர்கள்?? நம் நாட்டில் இல்லாத திறமை சாலிகளா? இது தொலைக்காட்சியின் உரிமையாளர் Kuha Nathan அவர்கள் சொன்னது.

நம் நாட்டில் அப்படி ஜனரஞ்சகமான இசைக்கலைஞர்கள் யார் இருக்கின்றார்கள்? – நான்

ஒருவர் இருக்கின்றார்…… அவர் வந்தால் இந்திய கலைஞர்களை விட மக்கள் அவரை பார்க்க வருவார்கள். ஆனால் அவர் வருவதில் ஒரு சிக்கல் இருக்கின்றது… என்று உதடு பிதுக்கினார் குகநாதன் அவர்கள்.

அப்படி யாரை சொல்கின்றீர்கள்?

விடுதலை பாடகர் ஷாந்தன்! அவர் இப்போது புனர்வாழ்வு முகாமில் இருக்கின்றார்…. அவரை உம்மால் கொண்டுவர முடியுமா என்றார்..

எனக்கு அப்போது ஷாந்தன் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது… நான் சந்தேகத்துடன் அவரை பார்த்தேன்….. ஆனால் குகநாதன் அவர்கள் நம்பிக்கையோடு இருந்தார். அத்தோடு குகநாதன் அவர்களுக்கு தெரியும், அக்காலகட்டத்தில் புனர்வாழ்வுக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் (இப்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்) சுதந்த ரணசிங்கவை நான் நன்றாக அறிவேன் என்பதை.

நீர் அவரிடம் ஏன் ஒரு முறை பேசிப்பார்க்க கூடாது?

கதவு திறக்கப்படுவதும் திறக்காததும் நமது பிரச்சனை அல்ல, தட்டிப்பார்ப்பதில் தவறில்லை அல்லவா?பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை மேடையில் கொண்டுவந்து பாடவைத்து விட்டு மீண்டும் திருப்பி அனுப்புவதா??? எனக்கு உதயகீதம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் உடனே ஞாபகத்தில் வந்தது.

சுதந்த ரணசிங்க அவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து விடயத்தை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டார்… பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஏற்பாடுகளை செய்யவேண்டும்… கடைசியில் ஷாந்தன் வராவிட்டால்???

பரபரப்பு பற்றிக்கொண்டது…. உடனே போஸ்டர் அடிக்க வேண்டும்… யாழில் எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட வேண்டும்.. ஆனால் ஷாந்தனின் படத்துக்கு எங்கே போவது? நமது அலுவலகத்தில் யாரோ ஷாந்தன் பேட்டி கொடுக்கும் ஒரு வீடியோவை எடுத்து தந்தார்கள்.

அதில் ஒல்லியான ஒரு உருவத்தில் ஒருவர்…. போர் பிரதேசத்தில் மக்கள் பட்ட அவலத்தை ஏதோ ஒரு புலம் பெயர் தொலைக்காட்சிக்கு சொல்லிக்கொண்டு இருந்தார். இவர்தான் அவரா??? என் சந்தேகம் இன்னும் அதிகரித்தது. சோகமே உருவாக இருக்கும் இவரால் ஒரு நிகழ்ச்சியை முழுதாக நடத்த முடியுமா? என் சந்தேகத்தை புரிந்து கொண்ட குகநாதன் அவர்கள் இணையத்தில் அவர் பாடிய சில பாடல்களை தேடி எனக்கு ஒலிபரப்பி காட்டினார். சந்தேகம் இப்போது பயமாக மாறியது… அது அனைத்தும் விடுதலை புலிகளின் பிரச்சார பாடல்கள்.

களம் இறங்கியாயிற்று, இனி ஆவதை பார்ப்போம் என்று இறைவனை பிரார்தித்து கொண்டேன். ராகம் இசைக்குழுவினர் நிகழ்ச்சிக்கு இசை வழங்கஆயத்தமாக இருந்தனர். கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. ஷாந்தன் வரும்வரையில் அவர் வருவாரா இல்லையா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது! மக்கள் நிகழ்ச்சியை பார்க்க கூடி இருந்த போதிலும் அவர்களுக்கும் சந்தேகமாகவே இருந்தது.

குகநாதன் அவர்கள் சொன்னது போல கூட்டம் பின்னேரத்தில் இருந்தே கூடத் தொடங்கியது…. சொன்னது போலவே புனர்வாழ்வு ஆணையாளர் எந்தவித கெடுபிடிகளும் இன்றி ஷாந்தன் அவர்களை எமது அலுவலக ஓட்டுனரோடு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைத்திருந்தார்.

நான் ஷாந்தன் அவர்களிடம் சென்று நிலமையை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை…. என்னென்ன பாடல்களை பாட போகின்றீர்கள் என்று விபரம் கேட்டேன். அவர் தெளிவாகவே இருந்தார்…. பக்தி பாடல்களையும், டீ எம் எஸ்சின் திரை பாடல்களையும் தெரிவு செய்து வைத்திருந்தார்.

ஷாந்தன் அவர்களின் சிறைமீண்ட நிகழ்ச்சியை பார்க்க கூடி இருந்த கூட்டத்தை பார்க்க எனக்கு ஆச்சர்ய்மாக இருந்தது. கொழும்பு இசை நிகழ்ச்சிகளுக்கு வந்து ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டங்களை போல‌ இல்லாது, அமைதியாக ஏதோ மண்டபத்தில் டிக்கட் வாங்கி வந்து அமர்ந்திருப்பது போல தரையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருந்தனர். அதிலும் பலர் மத்திம வயதையும் சிலர் வயோதிப வயதை உடையவர்களாகவும் இருந்தது எனக்கு இன்னும் ஆவலை தூண்டியது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்ட நெரிசலில் வித்தியாலயத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்தது தனிக்கதை.

நிகழ்ச்சியை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துவிட்டு, மேடையை விட்டு கீழ் இறங்கி நிகழ்சியை காண அவலோடு காத்திருந்தேன். ஷாந்தன் பாட ஆரம்பித்தார்….அவரது குரல் கேட்டதுமே அமர்ந்திருந்த ஒரு வயோதிபர் கண்ணீர்மல்க வானை நோக்கி கும்பிடு போட்டுக்கொண்டே எழுந்தார்…. அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன் ஷாந்தன் அவர்களின் குரலின் வீரியத்தை.

நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது….. எனக்கு ஒரு சிறு ஆசை வந்தது. ஷாந்தன் நிகழ்ச்சியின் இறுதியில் ஏதாவது ஒரு புரட்சி பாடலை பாடினால் எப்படி இருக்கும்??? என் விருப்பத்தை சொன்ன போதும் ஷாந்தன் அசருவதாய் இல்லை. தெளிவாகவே இருந்தார். பின்னர் எனது கட்டாயத்தின் பேரில் மிக மிதமான புரட்சிப்பாடலான, “தமிழா நீ பேசுவது தமிழா?” என்ற இந்திய பாடகரின் பாடலை ஓரிரு வரிகளை பாடினார்.

நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அதுதான் ஷாந்தன் அவர்கள் போருக்கு பின்னர் பாடிய முதல் இசை நிகழ்ச்சி, அதை நடத்துவதில் நானும் ஒரு சிறு பங்குதாரராக இருந்ததில் எனக்கு இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அவர் மீண்டும் புனர்வாழ்வு முகாமுக்கு செல்ல வேண்டும், ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த மண்ணில் தன் குடும்பத்தையும் நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்தவுடன் ஓரிரு நாட்கள் தங்கிச்செல்ல வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்…. அதற்காக நான் புனர்வாழ்வு ஆணையாளரிடம் பேசியபோது, நீங்கள் அவரை அனுப்பி வைக்க பொறுப்பெடுப்பதாக இருந்தால் ஓரிரு நாட்கள் தங்கி வரட்டும் பரவாயில்லை என்று அவர் சொன்னார். அது அவர் மீது ஆணையாளர் வைத்திருந்த நன்மதிப்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.

புனர்வாழ்வை முடித்து வந்த ஷாந்தன் அவர்கள் தம் சொந்த இசைக்குழுவை உருவாக்கி பல நிகழ்ச்சிகளை செய்து வந்தார்… ஆனால் அவரை அதன் பின்னர் நான் நேரில் சந்திக்கவே இல்லை.

சமீபத்தில் அவரது மகனின் முகப்புத்தகமூடாக அவர் சுகவீனமுற்றிருப்பதை அறிந்துகொண்டேன்… இன்று அவரது பிறந்தநாளில் அவர் மீண்டும் நலம் பெற்று அதே புத்துணர்வுடனும் எழுச்சியுடனும் மேடைகளில் தோன்றி பாட வேண்டும் என்று எல்லோர்க்கும் பொதுவான வல்ல இறைவனை வேண்டி பிரார்திக்கின்றேன்……

(Sharthaar Mjm)