இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய காட்டு மாடு, மான் மரை வத்தல், உடன் பிடித்து சமைத்த உடும்பு கறி, கைக்குத்தல் அரிசிச் சோறு, அவரது தோட்டத்து மரக்கறி, பூநகரி கடலில் பிடித்த குட்டன் மீன், கணவாய், இறால், நண்டு, திருக்கை, சுறா, கூடவே உளுத்தம்மா கழி, அவித்த பனங்கிழங்கு, எள் உருண்டை, ராசவள்ளி அவியல், என அத்தனையும் உண்ட  பலத்தால்,

பத்து ஏக்கர் நெல்வயல், ஐந்து ஏக்கர் மேட்டு நிலப்பயிர் என, தனது இருபதுவயதில் இருந்து, நாலு சோடி உழவுமாடுகள், கலப்பைகள், இரண்டு காரிக்கன்வண்டில் மாடுகள், ஐந்து கறவைப்பசுக்கள், யாழ்ப்பாண தோட்டம் கொத்தும் மண்வெட்டி என, அக்கராயன் குளத்தருகில் விவசாயம் செய்து, நேற்றுவரை வாழ்ந்த என் மானசீக பிதாமகன் பற்றிய பதிவு இது.

கிளிநொச்சியில் பிறந்தாலும் இரண்டு வயது முதல் பன்னிரண்டு வருடங்கள், என் தாயாரின் ஊரான மானிப்பாயில் கிடைக்காத அத்தனை சுதந்திரம் உட்பட, நல்ல பல அனுபவங்களும் மீண்டும் இரண்டு ஆண்டுகள் மட்டும் கிளிநொச்சியில் வாழ்ந்த எனக்கு கிடைத்தது. அதற்கு காரணமானவர் நான் சந்தித்த என் பிதாமகன் மூக்குப்பேணியர்.

மூக்குப்பேணியர் என என் பிதாமகன் பெயர் பெற காரணம் அவர் தம் நீண்ட மூக்கு. அன்று நாம் தேநீர் அருந்தும் பாத்திரத்தை சற்று நினைவில் கொண்டு வந்தால் நான் சொல்லவருவது புரியும். புரியாத இளையவருக்கு விளக்கமாக கூறுகிறேன். பொதுவாக சுத்தபத்தம் என்ற நிலையில் அன்று வீடுகளில் தேநீர் அருந்தும் குவளை மையத்தில் மூக்குப்போல் நீண்டிருக்கும். கிளாஸ், கப் போல வாய்வைத்து குடிக்க கூடாது. அதனால் அதனை எவரும் எச்சில் படுத்தாமல் அண்ணாக்காக வாயில் ஊற்றுவர்.

நான் மூக்கில் வாய்வைத்து உறுஞ்சி உதட்டில் சுண்டு வாங்கியிருக்கிறேன். அந்த தேநீர் குவளையின் அடையாளப் பெயர் தான் மூக்குப்பேணி. என் பிதாமகனின் மூக்கும் அதுபோல் கூராக இருந்ததால் அவரை மூக்குப்பேணியர் என அவரில்லா இடத்தில் பேசுபவர், அவர் முன் நடேசண்ணை என பம்முவர்.

அப்போது கிளிநொச்சி வாரச்சந்தை சனிக்கிழமைகளில் மட்டும் புகையிரத வீதிக்கு அருகில் கூடும். வட்டக்கச்சி, ராமநாதபுரம் முறிப்பு அக்கராயன் மண்ணில் விளைந்தவை ஓரிடத்தில் ஏலம் விடப்படும் அல்லது கூவிக் கூவி விற்கப்படும். அப்போதெல்லாம் குபெட்டா, யன்மர் என இருசக்கர உழவு யந்திரம் பாவனைக்கு வந்ததால் பலர் அதற்கு பின்னால், ட்ரெயிலர் இணைத்து, புடு புடு என்ற சத்தத்துடன் வாழைக்குலைகள், மிளகாய், மரக்கறி ஏற்றிவருவர். அதன் பல்லினப் பயன்பாட்டில் இதுவும் ஒன்று.

மற்றப்படி தோட்டம் உழுதல், நீர் இறைத்தல், சனி ஞாயிறு குடும்பத்துடன் கிளிநொச்சி சண்முகா, ஈஸ்வரன், பராசக்தி தியேட்டர்களில் படம் பார்க்கப்போவது, திருமண தம்பதியர்கள் வாழை தோரண அலங்காரத்துடன் பயணித்து சாமி தரிசனம், என பன்முகம் கொண்ட பயணங்கள். புளியம்பொக்கணை முதல் கனகாம்பிகை அம்மன் பொங்கல் வரை தெய்வதரிசனம் கூட அதில்தான்.

இத்தனை பயன்பாடு இருந்தும் மூக்குப்பேணியர் பயணிப்பது தனது இரட்டை மாட்டு வண்டியில் மட்டுமே. பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதியான காரிக்கன் இன பால் வெண்மை நிறம் கொண்ட, நீண்ட கொம்புகளுடன் மிடுக்காக கழுத்து மணி அடிக்க வரும் நாம்பன்களை, பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படும். நாம் பார்க்கிறோம் என்றவுடன் மூக்குப்பேணியர் அவற்றின் வாலை முறுக்குவார். அவை திமிறிக்கொண்டு ஓடத்தொடங்க,

கழுத்து சலங்கை ஜல் ஜல் என ஓசை எழுப்ப, நாமும் குசியாகி கொஞ்சதூரம் கூடவே ஓடுவோம். டூர்ர்ர்.. என மூக்கு பேணியார் ஒலி எழுப்ப அவைகள் ஓடும் வேகம் அதிகரிக்கும். எம்மால் ஈடு கொடுக்க முடியாது போக மூக்கு பேணியர் கெக்கட்டம் விட்டு சிரிப்பார்.

எப்படியும் அந்த வண்டிலில் ஒருதடவையாவது ஏறவேண்டும் என்று முனைந்தால், கேட்டிக்கம்பால் விடுவார் அடி. அதன் அருகில் செல்ல முடியாத அளவுக்கு புதுப்பெண்டாட்டியை பராமரிப்பது போல வண்டிலையும் தன் மாடுகளையும் கவனித்துக் கொள்வார். சந்தைக்குள் அவர் சென்றதும் நெருங்க முற்ப்பட்டால் காவலுக்கு இருக்கும் பைரவன் எனும் கறுப்புநிற நாய் தன் உறுமலால் அம்முயற்சியை கைவிடச் செய்யும்.

தூர நின்றே காதல் கொண்ட எனக்கு, அதில் ஏறிப்பயணிக்கும் சந்தர்ப்பத்தை, தென்னிலங்கையில் ரோகண விஜேவீர தலைமையில் அரசுக்கு எதிராக, கிளர்ச்சி செய்து பிடிபட்டு, தடுத்து வைக்கப்பட்டவர் ஏற்படுத்தித் தந்தனர். அரசு அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு முகாம் அமைக்க தெரிவு செய்த இடங்களில் ஒன்று அக்கராயன்.

பாதுகாப்பான சுற்று முள்வேலி அதனுள் தங்கும் மண்டபங்கள், பயிற்சி மண்டபம், தியான மண்டபம், குளிப்பதற்கு பெரிய நீர்த்தொட்டிகள், தொடர் மலசல கூடங்கள் என அமைக்கும் பணி நடைபெறுவதை பார்க்க, கிளிநொச்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் நண்பர்களுடன் சென்றேன். அதுவரை இப்படி ஒரு பிரமாண்டமான கட்டிட தொகுதியை காணாத ஆச்சரியத்துடன் நாம் வீடு திரும்பம் வேளை வினையாக வந்த நிலத்தில் கிடந்த முள்வேலி கம்பி.

டயரை துளைத்து ரியூப்பில் புகுந்து காற்றை வெளியேற்றியது. அக்கராயனுக்கு அரோகரா சொல்லும் நிலை. காரணம் அங்கு இருந்த சயிக்கிள் திருத்தும் கடைக்காரரும் கிளிநொச்சி போய் விட்டார். எனக்கோ நேரத்துக்கு வீடு போகாவிட்டால் அம்மாவின் அகப்பை காம்பு அடிவிழும் என்ற பயம். (எனக்கென்றே ஒரு அகப்பை காம்பு வீட்டில் இருந்தது).

பேந்தப் பேந்த முழித்து கொண்டு நின்ற வேளை ஜல் ஜல் சத்தம் காதில் கேட்டது. திரும்பிப்பார்த்தால் மூக்குப்பேணியர் மாட்டுவண்டில். எமதருகில் வந்தவர் ஓவ் ஓவ் என ஒலி எழுப்ப, மாடுகள் நின்றன. டேய் பொடியள் இஞ்ச என்னடா செய்யிறியள் என கேட்டவர் என்னைப்பார்த்து ஏண்டா பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிறாய் என கேட்க, நான் விளப்போகும் அகப்பை காம்பு அடிபற்றி கூறினேன்.

அதுவரை தன் வண்டியை நாம் தொடமுற்பட்டாலே கேட்டிக்கம்பால் அடிப்பவர் என்னையும் சயிக்கிளையும் தான் புதுப்பெண்டாட்டி போல பார்த்துக்கொண்ட தனது மாட்டு வண்டியில் உள்ளே அமரவைத்து, கிளிநொச்சி நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார். அவர் ஏற்றிவந்த மிளகாய் மூடை நெடி மூக்கை துளைக்க நான் தும்மியதை பார்த்து, தன் பக்கத்தில் முன்னே அமர வைத்தார்.

பெரும்பேறு பெற்ற நிலையில் இருந்த நான், அவரிடம் என் சந்தேகத்தை கேட்டேன். அண்ணை எல்லாரும் யன்மர், குபேட்டா என இருசக்கர உழவு யந்திரத்தில் பயணம் செய்ய நீங்கள் ஏன் இன்னமும் மாட்டு வண்டில் ஓட்டுகிறீர்கள் என கேட்டபோது அவர் கூறியது, அவரின் இயற்கையோடு வாழும் விருப்பை எனக்கு விளக்கியது. தம்பி விவசாயம் என்பது என்ர வாழ்வு. விஞ்ஞானம் எதையும் கண்டு பிடிக்கட்டும்.

ஆனா என்ர பாட்டன், முப்பாட்டன் முட்டாள்கள் இல்லை. இயற்கைஉரம், நோய் எதிர்ப்பு இயற்கை கிருமி நாசினி, ஆழ உழவு, அதற்கு ஏற்ப எங்கட உடல் உழைப்பு எல்லாம் எங்களை ஆரோக்கியமாய் வைச்திருக்கு. எப்ப பெருமெடுப்பில் செயல்பட அதை கைவிட்டோமோ அப்பவே நோய் நொடிகள் எங்கள் உடம்பில் கூடாரம் போட்டு குடித்தனம் பண்ண தொடங்கிட்டுது என்றார்.

நான் காலை ஐந்து மணிக்கு எழும்பிறன். உடன் அள்ளிய கிணத்து நீர் குடிக்கிறன், அரை மணி நேரத்தில மலம் தானே வெளியேறிய பின்தான் பனங்கட்டி தேநீர் குடிக்கிறன். ஆறு மணிக்கு தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பு, ஏழு மணி முதல் வயலில் களையெடுப்பு, எட்டு மணிக்கு மாட்டு தொழுவம் சுத்தம் செய்தல், மாடுகளை புல் வெளியில் தென்னை மர நிழலில் கட்டல், எட்டு மணிக்கு தண்ணீரில் ஊறவைத்த பழம் சோறு பினாட்டு கரைசல்

கூடவே பொடிசாய் அரிந்த சின்ன வெங்காயம், ஊறுகாய் கலந்த மோர், மதியம் காட்டு இறைச்சி, அல்லது கடல் உணவு குத்தரிசி சோறு, மாலை மரவள்ளி, சோளம், பயறு அவியல், இரவு புட்டு, இடியப்பம் தக்காளி ரசம் எண்டு சாப்பிட்டுத் தான், நான் இன்றுவரை நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாய் இருக்கிறன் என்றார்.

முப்பத்து இரண்டு வயதில் முறுக்கேறிய அவரின் உடல்வாகு கண்டு மயங்கியவர் பலர். இருந்தும் அவர் ஏனோ திருமணம் செய்யவில்லை. உடல் அலுப்பு தீர என எந்த மதுவும் அவர் கைபட்டதில்லை. புகைப்பழக்கம் அடியோடு இல்லை. அவரின் ஒரே விருப்புத் தெரிவு தோடம்பழ இனிப்பு. அப்போது தோடம்பழசுழை வடிவில் ஒரு இனிப்பு இருந்தது. வாயில் போட்டால் தோடம்பழ சுவையில் நா ஊறும்.

காரமான உணவு உண்டபின் அதை வாயில் போட்டால் அடையும் இன்பமே தனி. அவரும் அதை வாய்நிறைய போட்டு உமிவார். இடுப்பு வேட்டியில் இரண்டு பக்கமும் சுருக்கு பையை செருகி இருப்பார். ஒன்று பணம் வைக்க மற்றது தோடம்பழ இனிப்பு வைக்க. அவர் வெற்றிலை போட்டுக்கூட நான் பார்த்ததில்லை. பளிச்சென்ற பற்கள்.

மாட்டு வண்டியில் பயணித்தால் தேகப்பயிற்சி கிடைக்கும் என, பள்ளம் திட்டுகளில் வண்டில் பயணிக்கும் போது குலுங்கி குலுங்கி சொல்வார். அப்போதெல்லாம் காப்பற் வீதி கிடையாது. முக்கிய பாதைகள் மட்டும் தார் வீதி. மற்றப்படி அனேகமாக எல்லாமே கிரவல் மண் வீதிகள் தான். சிறு வயதில் சயிக்கிள் பழகும் போது நாம் ஆரம்பத்தில் குரங்குப்பெடல் போடும்போது சறுக்கி விழுந்தால் முழங்கால் சிரட்டைத் தோலில் பெரும்பகுதியை கிரவல்ரோட் எடுத்துவிடும்.

மாட்டுப் பட்டிகளில் எரு ஏற்ற என யாழில் இருந்துவரும் லொறிகள் எழுப்பும் கிரவல்புழுதியில் குளித்தால் செவ்விந்தியர் போல மாறிவிடுவோம். லொறிகள் பின்னால் வந்தால் வண்டிலை பக்கத்து ஒழுங்கைக்கு திருப்பிவிடுவார். மாடு வெருளும் என்றே திருப்பினியள் எனக்கேட்க, இல்லையடா தம்மி, கிளம்பிற புழுதியில என்ர வெள்ளை மாடுகள் செம்மாடுகளாய் கலர் மாறிடும் என்பார்.

பென்ஸ் கார் வைத்திருப்பவருக்கு இருக்கும் அக்கறையை விட, தன்னுடைய மாடுகளும் வண்டிலும் ரிப் ரொப் கொண்டிசனில இருக்கவேண்டும் என்று அக்கறை எடுப்பார். சாமி ஆசாரியின் பட்டறையில் மட்டும் தான், மாடுகளுக்கு லாடம் அடிப்பது முதல் வண்டில் சில்லுக்கு பட்டமும் அடிப்பிப்பார். அதுவும் சாமி ஆசாரி தன்னுடைய கையால் இவரின் கண்ணுக்கு முன்னால் செய்யவேண்டும். அந்த வேலைகள் முடியும்வரை அவசரத்துக்கு கூட எங்கும் விலத்திப் போகமாட்டார்.

வண்டிலில் தன்னோடு கொண்டுவரும் பெரிய சுரக்குடுவையில் இருக்கும் தன் கிணற்று தண்ணியதவிர, வெளியில்போனால் எங்கும் சோடா சர்பத் எண்டு வாங்கி குடிக்கமாட்டார். எத்தனை மணி எண்டாலும் வீடுபோய்த்தான் சாப்பாடு. இடையில் பசிஎடுத்தால் சாப்பிட புளுக்கொடியலும் பனங்கட்டி குட்டானும் உமல்பையில் வைத்திருப்பார். அந்த முதல்நாள் பயணத்தில் அவரோட சிநேகிதமாகி, பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தையில் அவரை சந்திக்கும் பழக்கம் தொடர்ந்தது.

இரண்டு வருடங்கள் நீண்ட அந்த அன்னியோன்யம் என் உயர்தரவகுப்பு படிப்பு தெற்கில் தொடர்ந்ததால் சிறிது காலம் தடைப்பட்டது. இருந்தும் விடுமுறைக்கு வீடு திரும்பும் பழக்கம் எம்மை மீண்டும் சந்திக்கவைத்தது. அப்போது கொழும்பில் இருந்து புறப்படும் இரவு தபால் புகையிரதத்தில் வெள்ளி புறப்பட்டால் சனி அதிகாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி செல்லலாம். நான் உடனே வீடு செல்லாமல் சந்தைக்கு அருகில் இருக்கும் காக்கா தேனீர்கடை மூலை மேசையில் மூக்குப்பேணியர் வரவுக்காக தூங்கி வழிந்துகொண்டிருந்தேன்.

பொல பொல என விடியும் வேளை ஜல் ஜல் என்ற சத்தத்துடன் அவர் வண்டில் வந்தது. நான் அருகில் சென்றதும் என் பயணப்பையை பார்த்தது, டேய் வீட்ட போகாம இஞ்ச என்னடா செய்யிறாய் என்றார். நான் இண்டைக்கு உங்களோட அக்கராயன் வந்து தங்கிப்போட்டு பிறகு வீட்ட போவன் என்றேன். நான் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

ஏழு மணிக்குள் அவர் கொண்டுவந்த அவரின் உற்பத்திகள் எல்லாம் காசாகிவிட்டது. மாடுகளுக்கு தவிடு புண்ணாக்கு, வீட்டுக்கு தேவையான மண்எண்ணை, அவற்ற யுனிக் ரான்சிஸ்டர் ரேடியோவுக்கு பற்றி எல்லாம் வாங்கிகொண்டு, வண்டில் அக்கராயன் நோக்கி உருண்டது. அந்த பயணம் தந்த இன்பம் போல இன்று எத்தனையோ நாடுகளுக்கு விமானத்தில், ரயிலில், காரில் என பயணித்தும் கிஞ்சித்தும் கிடைக்கவில்லை. காரணம் அது இயற்கையோடு இணைந்த பயணம். காலை நேர குளிர்காற்று, சருமத்துக்கு புத்துணர்ச்சி மருந்தான சூரியஒளி, பாதையோரம் சலசலத்து ஓடும் வாய்க்கால் நீர். பரந்து விரிந்திருக்கும் வயல் வெளிகள்,

இடையிடையே தென்னம் தோட்டங்கள், காட்டிக்கொடுக்க சத்தமிடும் ஆள்காட்டி பறவைகள், தென்னை மரத்தில் மரங்கொத்தி இட்ட துளையில் இருந்து எட்டிப்பார்க்கும் கிளிகள். கூட்டமாய் பறந்து செல்லும் சிட்டுக்குருவிகள். பாதையின் இருமருங்கும் இருக்கும் முதிரை மரத்தில் இருந்து பாலை மரத்துக்கு தாவும் மந்திகள், வீதிக்கு குறுக்கே ஓடும் முள்ளம்பன்றி, தோகை விரித்தாடும் மயில் என எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என பாரதி பாடியது போன்ற அனுபவம் அதன் பின் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஒரு விவசாயின் வீடு எப்படி இருக்கும் என்ற முன் அனுபவம் இல்லாத எனக்கு, ஒரு பல்கலைகழகம் தரும் படிப்பைவிட பெரும் அனுபவபடிப்பை தந்தது அவரின் வீடு. இயற்கை எமக்காக தந்த அத்தனை பொருட்களும் கொண்டதாக அமைந்தது அந்த வீடு. முற்றிய கருங்காலி தூண்களில் பாலை மர வளை. கோப்பிசம் முதல் கூரை முகடுகள் பனைமரம். முதிரை கதவுகள். பக்க சுவர் காட்டு கம்பு வரிந்து புற்று மண்கழி அடைப்பு. நிலத்துக்கும் அதே புற்றுமண்.

மேல் பூச்சு சுவருக்கும் நிலத்துக்கும் தடித்த மாட்டு சாண கரைசல். கதவு நிலை இடுக்குகளில் வேப்பிலை கொத்து. வாசல் படியருகே பித்தளை குண்டாவில் மஞ்சள் கலந்த நீர். உள்ளே போகுமுன் செம்பு நீர் மோந்து பின்குதிக்கால் நனையும் விதம் கால் கழுவி, வாசல்படி நிலவிரிப்பான சணல் சாக்கில் கால் துடைத்து தான் இரண்டாவது அடியை உள்ளே வைக்கவேண்டிய ஏற்பாடு.

உள்ளே நுழைந்ததும் வந்தவர் தம்மை ஆசுவாசபடுத்த மண் கூசாவில் ஊறிய துளசி நீர். அதை அருந்த மூக்குப்பேணி. தென்னங்கீற்று ஓலை கூரையை ஊடறுக்கும் சூரிய ஒளி, நிலத்தில் புள்ளி புள்ளி புள்ளியாய் வினோதமான கோலம் போடும். இந்த ரம்மியத்தை பார்க்க கண்கோடி வேண்டும். அன்று அந்த பாக்கியம் பெற்ற என்னைப்போல, இன்று விஞ்ஞானத்தின் உச்சம் பெற்ற நாட்டில் வாழ்ந்தும் இயந்திரகதியில் வாழ்வை தொலைத்த எவரும், அன்று நான் அனுபவித்து, இடையில் தொலைத்த அந்த இன்ப வாழ்வை அனுபவித்திருந்தால்

அவர் தம் இதயம் கனத்து, ஏக்க பெருமூச்சு விட்டு மீண்டும் அந்த இன்பம் பெறமுடியாத தம் இயலாமை எண்ணி ஒரு துளி கண்ணீராவது சிந்துவர். காரணம் புலம்பெயர் தேசம் வந்த பின்பு வீட்டு கடன், கடன் அட்டை கடன், பிள்ளைகள் படிப்பிற்கு என சீட்டு பிடித்த கடன் என பலதுக்கும் கடன்பட்டதால், அந்த கடன்களை கட்டி முடிக்கும்வரை, இடையில் காலன் காவு கொள்ளாதவரை, பனியிலும் குளிரிலும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை.

இளைப்பாறிய பின்பாவது ஊர் போக முற்பட்டால் அவர்தம் பென்சன் காசுக்காய் கியூவில் நிற்கும் எம் உறவுகள். அம்மாவை அப்பாவை நான் பார்க்கிறேன் என வீட்டோடு சேர்க்கும் மகன்கள் மகள்கள், அதனால் கிடைக்கும் வரவை மட்டும் கணக்கில் எடுப்பர். வரவுக்காக மட்டுமே உறவுகளை தம் உடன் வைத்திருக்கும் செயல் ஒருவகையில் பராமரிப்பு எனும் போர்வையில் நடக்கும் இலாபகர வியாபாரம். கடைசியாக நான் அவரை கண்டபோது எப்படா ஊரோட வாற உத்தேசம் என கேட்டார்.

ஐயா அறுபத்து ஆறு வயதில தான் பென்சன். இன்னம் ஐந்து வருடங்களில் நிரந்தரமாய் வந்துவிடுவேன், உங்களது 100வது பிறந்தநாள் அன்று நான் உங்களோட இருப்பன் என்றேன். கெக்கட்டம் விட்டு சிரித்தவர் உன்ர பென்சன் காசுக்கு கணக்கு போட்டு வைத்திருக்கிறவை உன்ன இஞ்ச வரவிடுவினமோ என நக்கலாக கேட்டார். நாம் இருவர் மாட்டுமே என்பதால், நானும் மனைவியும் நிச்சயம் வந்துவிடுவோம் என்றேன்.

இன்று அவர் இல்லை. அவர் விருப்பபடி காலை மரணித்தவர் உடலத்தை அன்று மாலையே, ஊரவர் தீயிடம் கையளித்தனர். இறுதிநாள் வரை தனிமனிதனாய், அத்தனை இடப் பெயர்வுகளை சந்தித்தும் இறுதியில், தனது இருபது வயதிலிருந்து தான் பண்படுத்திய மண்ணில், தன் இறுதி பயணத்தை முடித்த அவர் வாழ்ந்த வாழ்வைப் போல, தாமும் வாழவேண்டும் என ஆசைப்படும் எம்மில் பலர்,

இன்று அகிலமெல்லாம் டொலருக்கும் பவுண்சுக்கும் காலமாற்றங்களுக்கு உட்பட்டு, இயந்திரங்களுடன் கட்டுண்டு, மீட்சியின்றி வாழ்கின்றோம். ஊருடன் போகும் ஆசை எம்மில் பலருக்கு இருந்தாலும் நாட்டு நடப்பு, உறவுகளின் பாசப்பிணைப்பு என பல காரணங்கள் எம்மவர் கனவை கானல் நீராக்குகின்ற சோகம் தொடர்கின்றது.

பென்சன்காசை என் பிள்ளைகள் தானே கேட்கின்றனர் என பேதலிக்கும் அம்மாக்களும், அப்பாக்களும் நடுங்கும் பனிக்குளிரிலும் தங்கள் உறவுகள் வாழும் தேசத்தை தான், தம் சொந்த மண்ணாக நினைத்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் தொடர்வதால், அவர்கள் தம் இதயத்தை சூடாகவே வைத்திருக்கின்றனர்,  காலனின் அழைப்பை எதிர்பார்த்து.

வாழ்வாங்கு வாழ்ந்த அந்தப்பெரியவர் வாழ்ந்த வாழ்வு இன்று அகிலமெல்லாம் இடம்பெயர்ந்து அதனை தம் வாழ்விடமாகிய எம்மவரில் எவருக்கு அவர்தம் இறுதி நாட்களிலாவது கிடைக்கும் என்ற ஆரூடம் கூறமுடியாது. காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அவர்தம் சூழ்நிலை. இருந்தும் எனது அனைவர்க்கும் அது கிடைக்க வேண்டும் என்பது பேராசை என்றாலும், இயலுமானவர்களை போகவிடுங்கள் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.

கிடுகுவேலியின் பொட்டுக்கள் ஊடாக புகுந்து, அடுத்த வீட்டு புதினம் அறிதல், மதிய உணவின் பின் மாமர நிழலில் சாக்கு கட்டிலில் குட்டித் தூக்கம், கோவில் கேணியில் கால் கழுவி சாமி தரிசனம் முடித்த பின், தேர்முட்டி மண்டப படியில் அமர்ந்து ஊர் நடப்பு நாட்டு நடப்பு என யாருக்கும் சேதாரம் அற்ற விவாதம், அது முடிய மாலைக் கருக்கலில் வீடு திரும்பும் வேளை, பாதை ஓரம் விழுந்திருக்கும் பிலா பழுத்தல் இலையை நீள கம்பி நுனியில் குத்தி சேர்த்து, தமது வீட்டில் கட்டி வளர்த்து,

அடுத்த தீபாவளிக்கு தமக்கே இரையாக போகும் கிடாய் ஆட்டுக்கு இரையாக போடுதல், என எத்தனை எத்தனையோ இன்பம் அனுபவித்த அவர்கள் சந்திர மண்டலம் போன ஆம்ஸ்ட்ரோங் அணிந்த ஆடைகளுடன், உங்களுடன் தான் வாழ வேண்டுமா? நாலு முழ வேட்டி தோழில் ஒரு துண்டு,, எட்டு முழ சேலை நெற்றி நிறைந்த பொட்டுடன் வாழ்ந்த, வாழ விரும்பும் அவர்களை புலம்பெயர் தேசத்து தங்ககூட்டு கிளியாக பாராமரிப்பதுதான் நிரந்தரமா?.        .

(ராம்)