இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் கடன் நிதி உதவியில் 34அடியாக இருந்த குளத்தை 36அடியாக உயர்த்தி உயர்தர தொழிநுட்பத்தில் பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தரப்பட்டுள்ள குளத்தை துறைசார் நிபுணத்துவம் மிக்க பொறியியலாளர்கள் கண்காணித்தும் பராமரித்தும் வருகிறார்கள்.ஆனால் முகநுாலில் பதிவிடுவோர் மற்றும் செய்தி நிறுவனங்களிற்கு செய்தி வழங்குவோர் குளத்தில் 27அடி நீர் தேக்கினால் என்ன? 30அடி தேக்கினால் என்ன? 32அடி நீர் தேக்கினால் என்ன? என பல்வேறுபட்ட கருத்துக்களை செய்தியாக பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் இவ்வாறு கருத்துக்களை வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன என எம்மால் அறியமுடியாமல் உள்ளது.

1. பொழுது போக்கிற்கு இவ்வாறு பதிவிடுகிறார்களா?

2. வெள்ள அழிவுகள் ஏற்படுகிறது இதை தவிர்க்கலாம் என எண்ணி பதிவிடுகின்றார்களா?

3. குளக்கட்டுமானத்தில் குறைபாடுகள் இருக்கலாம் என எண்ணி பதிவிடுகிறார்களா?

4. குளத்தை பொறுப்பேற்றுள்ள பொறியியலாளர்கள் மீது குறை கண்டு பதிவிடுகின்றார்களா?

5. யாழ் நீர் விநியோகத் திட்டத்தை மீள நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் பதிவீடா?

ஆனால் மேற்படி வினாக்கள் எம்முள் எழுந்தமையால் சில விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு பின்வரும் விடயங்களை பதிவிட முனைகிறோம்.

இக்குளம் முழுமையாக விவசாய நடவடிக்கைகளுக்காக நீர்ப்பாசன திணைக்களத்தால் இலங்கையில் முதலாவதாக உருவாக்கப்பட்ட குளம். 1922ஆம் வருடம் 22அடியாகவும், 1951இல் 30அடியாகவும், 1956 இல் 32அடியாகவும் 1977இல் 34அடியாகவும் உயர்த்தப்பட்டது.

1936இல் கணேசபுரம், 1950இல் உருத்திரபுரம் 1ஆம் வாய்க்கால்,1952 இல் உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் மற்றும் றை ஆறு மத்தியவகுப்புத் திட்டம், 1953இல் வட்டக்கச்சி மற்றும் முரசுமோட்டை, 1955இல் இராமநாதபுரம், 1959இல் வில்சன் வீதி மத்திய வகுப்பு திட்டம், 1966இல் திருவையாறு ஆகிய பகுதிகளில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 22,818 ஏக்கர் நிலங்கள் விவசாய செய்கைக்காக மக்களுக்கு வழங்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் ஆகக் குறைந்த அளவு காணியாக ஒருவருக்கு 3 ஏக்கர் வயல் நிலம் வீதம் வழங்கி காலபோகத்திலும், சிறு போகத்திலும் பயிற்செய்கை மேற்கொள்வதன் மூலம் அவரது குடும்பத்திற்கான வருடாந்த வாழ்வாதார பாதுகாப்பு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒரு விவசாயி தனது குடும்பத்தின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி , சுகாராதம் போன்றவற்றோடு ஏனைய தேவைளையும் நிறைவு செய்யும் வகையில் வருமானம் போதுமானதாக இருந்தது. இக் காலப்பகுதியில் ஒரு குடும்பத்தார் சிறுபோகத்தில் குறைந்தது 1.5 ஏக்கர் வயலாவது செய்வதற்கு நீர் கிடைத்தது. காலபோகத்தை விட சிறுபோகமே அதிக விளைச்சலையும், வருமானத்தையும் தந்தது.

1992ஆம் வருடத்தில் திருத்தப்பட்ட இரணைமடு குள நீர்ப்பங்காளர் இடாப்பில் 5,645 பங்காளர்கள் உள்ளார்கள். 1977இல் இறுதியாக குள புனரமைப்பு நிறைவுற்ற போது குளத்தின் வான் கதவுகள் 36அடி நீர் தேக்கும் வகையில் 11 கதவுகள் பொருத்தப்பட்டது. நீர் பெறும் பங்காளர்களின் அதிகரிப்பை கருத்திற் கொண்டே 36அடியாக குளம் உயர்த்தப்படுவதற்கு 1977ஆம் வருடத்திலேயே திட்டமிடப்பட்டிருந்தது.

நீர் பெறும் பங்காளர் அதிகரிப்பு என்பது தமது பிள்ளைகளுக்கு காணிகள் பங்கீடு செய்யப்படும் போது அவர்கள் தனிக் குடும்பமாக மாறும் போது பங்காளர்களின் எண்ணிக்கை கூடும். குடும்பங்களாக மாறும் போது வாழ்க்கைச் சுமை கூடி பயிற்செய்கைக்கான நீர்க் கோரிக்கை அதிகரிக்கும். இந்த வகையில் பங்காளர்ளின் அதிகரிப்புக்கு ஏற்றவாறு நீர்ப் பங்காளர்கள் இடாப்பு திருத்தப்பட வேண்டும். ஆனால் 1992ஆம் வருடத்திற்குப் பின் நீர்ப்பங்காளர் இடாப்பு திருத்துவதை அதிகாரிகள் செய்யாதிருந்தார்கள். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மைக் காரணம் பங்காளர்களை சட்ட பூர்வமாக அதிகரித்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் நீர் வழங்குவதற்கு குளத்தில் நீர் இல்லாமையே.

இக் காலப்பகுதியில் குளத்தை 2அடியாக கூட்டி அபிவிருத்தி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் கைவிடப்பட்டன. தற்போது நீர்ப்பங்காளர்களின் எண்ணிக்கை 9,500ற்கும் மேற்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் சட்டபூர்வமான நீர்ப்பங்காளர் இடாப்பை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். காரணம் குளம் 2அடியால் உயர்த்தி 36அடி நீர்க் கொள்ளளவை 2018ஆம் வருடத்தில் எட்டியுள்ளமையே .

எதிர்வரும் சிறுபோகத்தில் 9,500பங்காளர்களுக்கும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் ஒரு பங்காளருக்கு ஆகக் குறைந்தது 1.5ஏக்கர் நீர்பங்காவது கிடைத்தல் வேண்டும். அவ்வாறு 9,500பங்காளர்களுக்கும் 1.5 ஏக்கர்படி நீர் வழங்குவதாயின் 14,250ஏக்கர் வயல் நிலங்களிற்கு நீர் வழங்க வேண்டும். 14,250ஏக்கர் வயல் செய்வதற்கு 99,750 ஏக்கர்அடி நீர் தேவை. 36அடி குளத்தின் நீர்க்கொள்ளளவு 119,500ஏக்கர் அடி நீர். இதில் 99,750 ஏக்கர் அடி நீர் போக மிகுதி 19,750ஏக்கர் அடி நீர். இதில் திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம், நகர குடிநீர் , மீன் மற்றும் ஏனைய உயிரினங்களின் பயன்பாட்டிற்கானவை .

இந்த நிலையில் குளத்திற்கான நீர்மட்டத்தை குறைத்தல் என்பதோ அல்லது நீரை வேறு பயன்பாட்டிற்கு எடுத்தல் என்பதோ ஏற்றுக் கொள்ள முடியாததும், நியாயப்படுத்த முடியாதவையாகவும் உள்ளது.

எமது குழந்தைகளும் தரமான உணவு, தரமான கல்வி, தரமான சுகாதார வசதிளை பெற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறா?. இவை எமது அடிப்படை தேவைகளும் உரிமைகளும் தானே. கிளிநொச்சி விவசாய மாவட்டமாக இருந்த போதிலும் போசாக்கு மட்டத்திலும் கல்வி மட்டத்திலும் இலங்கையில் இறுதி மாவட்டமாக உள்ளோம் என்பது அதிகார பூர்வமான தகவல்கள்.

எல்லா வளமும் இருந்தும் எமது மக்களிற்கு ஏன் இந்த நிலை. எதிர்வரும் காலங்களாவது எமக்கு நின்மதியானதாக அமைவதற்கு இரணைமடுக் குளத்தையும் அதன் நீரையும் எம்மிடம் விட்டுவிடுங்கள்.

மேலும் சில கருத்துப் பதிவுகளை தொடர்ந்தும் தருவோம்.

(இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்)