இரத்தக்களரி ஏற்படுத்தும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

இந்தக் கட்சி தொடங்கப்பட்டதின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள கட்சி ஒன்றின் பெயரில், அதுவும் ‘பாரதிய ஜனதா’ என்ற பெயரே தமிழ் பெயரல்லாத நிலையில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டிருப்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகத்தான் மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆட்சி நடத்தும் பாரதீய ஜனதாக் கட்சியின் கொள்கைகள் என்ன என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்தக் கட்சி அமெரிக்காவுக்கும் பெரும் கோப்பரேட் நிறுவனங்களுக்கும் சார்பான ஒரு கட்சி என்பது ஒருபுறமிருக்க, அதுவொரு தீவிரமான இந்துவெறிக் கட்சி. முஸ்லீம்களுக்கும் இதர சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயற்படும் கட்சி. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் என்போருக்கு எதிராகவும் செயல்படும் கட்சி. பிற மொழிவழி மாநிலங்களில் இந்தித் திணிப்பை மேற்கொள்ள முயற்சிக்கும் ஒரு கட்சி.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைகள் அனைத்து இந்திய மக்களையும் துன்பப்படுத்தி வருவது போதாதென்று, அது தனது விஸ்தரிப்புவாதக் கொள்கைகளை அயல் நாடுகளிலும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள ஒரு கட்சி. அண்மையில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாரதீய ஜனதாக் கட்சித் தூண்களில் ஒருவரும், உள்துறை அமைச்சருமான அமித் சா பங்குபற்றிய நிகழ்வில் விரைவில் நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைக்கப்படும் எனப் பேசப்பட்டுள்ளது.

நேபாளமும் இலங்கையும் இந்தியாவின் அண்டை நாடுகள். இருந்தும் இந்தியக் கொள்கை காரணமாக அந்நாட்டுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருக்காத நாடுகள். அது மட்டுமின்றி, இந்தியாவின் எதிரியாகக் கருதப்படும் சீனாவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த நிலைமையில் இந்த நாடுகளில் இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர்கள் பேசுவது, இந்தியாவின் விஸ்தரிப்புவாதக் கொள்கைகளையும், உள் நோக்கங்களையும் அம்பலப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் இலங்கையில் பாரதீய ஜனதாக் கட்சியின் பெயரில் ஒரு கட்சியை சில தமிழர்கள் ஆரம்பித்திருப்பது உண்மையில் சந்தேகத்துக்குரியதும் அச்சத்துக்குரியதும்தான்.

அதுவும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த மாதிரியான ஊடுருவலைச் செய்ய முயற்சிப்பது பாரதூரமான விடயம். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் ஏற்கெனவே பிரிவினைவாத யுத்தம் ஒன்றால் மிகவும் பாதிக்கப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருப்பவர்கள். போதாதிற்கு சில சக்திகளால் சிங்கள – தமிழ் விரோதம், தமிழ் – முஸ்லீம் விரோதம், சைவம் – கிறிஸ்தவ விரோதம் என்பன கிளறி விடப்பட்டுள்ள சூழலில் வாழ்பவர்கள். ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் செயற்படும் தமிழ் கட்சிகள் இந்த நிலைமைகளுக்கு தீர்வு தேடாது தமது சுயநல அரசியலை முன்னெடுத்து வரும் சூழலில், அந்த நிலைமைப் பயன்படுத்தி அந்நிய நாடொன்றின் தூண்டுதலால் உள் நோக்கங்களுடன் சிலர் கட்சிகளை ஆரம்பிப்பது, குழப்பங்களை மட்டுமல்லாது எதிர்காலத்தில் நாட்டில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இரத்தக்களரியை ஏற்படுத்துவதில் கொண்டுபோய் நிறுத்தும்.

எனவே, நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள், இத்தகைய சதி நடவடிக்கைகளையிட்டு விழிப்பாக இருப்பதுடன், அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை தாமதமின்றியும், ஈவிரக்கமின்றியும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வெள்ளம் வந்த பின்னர் அணை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும்.