இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக…

கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந்தேதி மணிப்பூரில் உள்ள மலோம் என்ற சிறிய நகரத்தின் மோசமான காலை வேளை. 28 வயது பெண் கவிஞர் ஒருவர் அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். தட…தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.


தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வியும் கேட்காமல் சுட்டுக் கொல்லும் சிறப்பு அதிகாரத்தை(The Armed Forces (Special Powers) Act, or AFSPA) அந்த மாநிலத்தின் ராணுவம் பெற்றிருந்ததே இதற்கு காரணம்.

பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம். கொதித்து எழுந்த அந்தக் பெண் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.
இப்படி ஒருநாள் இரு நாள் இல்லை 16 ஆண்டுகளாக மூக்கு குழாயின் உதவியுடன் திரவஉணவு மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
”நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்… திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… எங்கும் அன்பை தரவும் பெறவும் விரும்புகிறேன்… எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் இன்றளவும் நிலவும் அந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ… வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட 143 ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ… அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை வேருடன் கொளுத்திவிட்டனர்.
இது இரோம் ஷர்மிளாவிற்கு வேண்டுமானாலும் புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களுக்கு இது பழைய விஷயமே.
அமான் மணி என்பவர் மனைவியை கொலை செய்த வழக்கில் இப்போதும் சிறையில் இருப்பவர், சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.இப்படி… குற்றப்பின்னணியுள்ள பலர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்
எங்களுக்கு வைஜெயந்தி மாலாக்களும்,ஜெயப்பிரதாக்களும்,குத்து ரம்யாக்களும்,ஹேமமாலினிக்களுமே குற்றப்பின்னனி உள்ளவர்களுமே போதும் என்று முடிவு செய்துவிட்ட மக்களிடம் நீங்கள் 90 ஒட்டு வாங்கியதே அதிகம்தான்.
-எல்.முருகராஜ்