இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 1)

‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

சிங்களம் மட்டும் என்ற முழக்கம் அரசியலில் சிங்கள – பவுத்த மக்களதும் பவுத்தமத தேரர்களதும் மேலாதிக்கத்தை நிறுவியது. அதன் மூலம் அரசியல் மேலாண்மை சிங்கள – பவுத்தர்களது கைகளில் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உறுதி செய்யப்பட்டது. இந்தத் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாகத் திரண்டவர்களில் பெரும்பாலோர் இரமண்ண (Ramanna) மற்றும் அமரபுர (Amarapura) பவுத்தமத பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் ஆவர். இந்த பவுத்த பீடங்கள் சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார சமூகத்துக்கு உரியன.

கண்டி தலதா மாளிகை சியாம் பவுத்த பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரியா (1764) இரண்டையும் சேர்ந்த சிங்கள ரதல (Radala) மற்றும் கொவிகம (Govigama – வெள்ளாளர்) சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றன. எனவேதான் சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார வகுப்புப்பைச் சார்ந்தவர்கள் அதற்குப் போட்டியாக இரமண்ண (1864) மற்றும் அமரபுர பவுத்மத பீடங்களை (1800) நிறுவினார்கள். அமரபுர மதபீடம் சாதி அடிப்படையில் மேலும் 21 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த – ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே (Don David Hewawitharane – September 17th, 1864) என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மபாலர் ஆவர். இவரது தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்றை நடத்தினார். சிங்கள வணிகர்களின் பண உதவியால் இயங்கி வந்த பவுத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வணிக முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களைத் தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் திரட்டுவோர் என்றும் புகழ்ந்தது. அன்றைய இலங்கையின் பணக்கார வணிகரின் மகனாக இவர் தேரவாத பவுத்தத்தை தழுவித் தன்னுடைய பெயரை அநகாரிக தர்மபாலர் என மாற்றிக் கொண்டார். இவருடைய கால கட்டத்திலே இலங்கையில் கிறித்தவ மதப் பரப்புரையாளர்கள் வடக்கிலும் தெற்கிலும் மதமாற்றத்தைச் செய்து கொண்டிருந்தனர்.

அநகாரிக தர்மபாலர்

அநகாரிக தர்மபாலர் பவுத்த மேலாண்மை கருத்தியலை வளர்ப்பதற்குச் சிங்கள பவுத்தாய என்ற பெயரில் செய்தி ஏடு ஒன்றினை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிக்கும்படி தனது செய்தித்தாளிலும் வெளியீடுகளிலும் வேண்டுகோள் விடுத்தார். சிங்கள பவுத்தாய என்ற சொற்றொடரை முதலில் புனைந்தவர் தர்மபாலரே!

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாச சிரிசேன தனது சிங்கள ஜாதிய என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரைத் தாக்கி எழுதினார். தர்மபாலர் சிங்களவர் ஆரியர்கள் என்றும் அவர்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்கள் ஆரிய நாகரிகத்தைச் சார்பு படுத்துகிறார்கள் என்றும் அவர்களது உடலில் அடிமைக் குருதி ஓடவில்லை என்றும் அவர்களை புறச்சமயிகளான தமிழர் ஆகட்டும் மூன்று நூற்றாண்டு காலம் நிலத்தையும், புராதன கோயில்களையும் நூல்நிலையங்களையும் அழித்த அய்ரோப்பிய அழிவுக்காரர் ஆகட்டும் ஒரு போதும் சிங்களவர்களை வெற்றிகொள்ளவில்லை என்று எழுதினார்.

தர்மபாலர் கிறித்துவ மதப்பரப்புரையாளர்களுக்கு மாற்றாக பவுத்தத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாது சிங்கள மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். எல்லா மதங்களிலும் பவுத்த மதமே உயர்ந்தது என்று வாதிட்டார். இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் எனக் கடுமையாகச் சாடினார்.

எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே!

இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்றார். முஸ்லீம்கள் ஏமாற்றிச் சம்பாதிக்கிறார்கள், மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என எழுதினார். ஆரிய சிங்களவர்களின் புனித பூமியான இலங்கை இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் கிறித்தவர்களாலும் அழித்தொழிக்கப்பட்டது எனவும் அதைக் காப்பது சிங்கள – பவுத்தர்களது கடமை எனவும் பரப்புரை செய்தார். அவரது எண்ணத்தின்படி இலங்கையில் தமிழர், முஸ்லிம் ஆகியோருக்கு இடமில்லை. கிறித்தவ சிங்களவர்களையும் அவர் சிங்களவர் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தார். தர்மபாலர் தான் நடத்திய சிங்கள பவுத்தாய செய்தி ஏட்டின் வாயிலாக “முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள், அப்படி முஸ்லிம் கடைகளைப் புறக்கணிப்பவர்கள் மட்டுமே நாட்டின் உண்மயான தேச பக்தர்கள்” என்று எழுதினார்.

அவர் மேலும் “பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர், சிங்களவருக்கு சமயத்தாலும் இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள். பவுத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தியோகத்தர்கள் சிங்களவரைச் சுடலாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்குப் பொருளாதார ஆன்மீக அடிப்படையில் காரணங்கள் இருந்தன” என்று முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டினார்.

1915 சிங்கள – முஸ்லிம் கலவரம்

மே 29, 1915 இல் சிங்களவர் – முஸ்லிம் கலவரம் கண்டியில் வெடித்தது. இதுவே முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் ஆகும். ஒரு பவுத்தமத விழா ஊர்வலம் மசூதிக்கு அருகாமையில் போவதை முஸ்லிம்கள் ஆட்சேபித்ததன் விளைவாகவே கலவரம் வெடித்தது. ஒன்பது நாள்கள் நீடித்த இந்தக் கலவரம் மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் சம்புரகாமுவ போன்ற மாகாணங்களுக்குப் பரவியது. மாத்தளை, வட்டகம, கடுகண்ணாவ, கம்பொல, இரம்புக்கான, பாணத்துறை மற்றும் அக்குராசா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் ஒன்றுதிரண்டு முஸ்லிம்களையும் அவர்களது கடைகளையும் தாக்கினார்கள். சில இடங்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கினார்கள். இத் தாக்குதலில் 25 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 189 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். நான்கு முஸ்லிம் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 250 கடைகள், வீடுகள் எரியூட்டப்பட்டன. 4,075 கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.

அநகாரிக தர்மபாலர் சிங்கள இனத்தின் புகழைப் புதுப்பித்தவர் என்றும் பவுத்த மதத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்தவர் என்றும் சிங்கள – பவுத்தர்களால் கொண்டாடப்படுகிறார். அநகாரிக தர்மபாலர் சிங்கள மக்களைச் சிலாகித்துச் சொல்லும் போது �சிங்களவர் பழைய வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆரிய இனத்தின் இனிமையான, மென்மையான, மிருதுவான பிள்ளைகள்…..இற்றை நாளில் உலகில் எமது நாட்டைப் போன்று ஒளிமிக்க வரலாறு கொண்டிருந்த நாடு வேறு எதுவும் இல்லை…. …சிங்களவர்களது நாட்டை சிங்களவர்கள்தான் ஆள வேண்டும் (The sweet, tender, gentle Aryan children of an ancient, historic race. No nation in the world has had a more brilliant history than ourselves. The country of the Sinhalese should ruled by the Sinhalese ……Sri Lanka and Tamil National Struggle – Chapter 4) எனக் கூறினார்.

“சிங்களம்” ஆரிய மொழி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை சிங்கள – பவுத்த பேரினவாதிகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் ஆரிய சிங்கள இனத்தவர் திராவிட இனத்தவற்கு மேலான உயர்குடிப் பிறப்பாளர்” என வாதிக்கலாயினர்.

(தொடரும்…..)