இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 11)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

இதுவரை பத்து கடிதங்களை இத்தொடரில் உங்களின் கவனத்துக்கும் கருத்துக்கும் எழுதியிருக்கிறேன். இந்தக் கடிதத் தொடருக்கான தலையங்கத்துக்கு உரிய பதிலை “ஆம்” அல்லது “இல்லை” என்ற அறுதியிட்டுக் கூறும் வடிவில் தருவது எனது நோக்கமாக இருக்கவில்லை.
மாறாக, இலங்கையில் நடைமுறையில் இருக்கும் மாகாண சபைகளை தமிழர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்கு வேண்டிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது அவசியமா? அல்லது இல்லையா?
வடக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்டு வட மாகாண ஆட்சியை அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்கள் ஏதாவது அவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுகிறார்களா? எவ்வளவு தூரம் ததேகூக்காரர்கள் அக்கறையோடு மேற்கொள்கிறார்கள்? அல்லது எதுவுமே முயற்சிக்காமல் மஹிந்தவின் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியபடி ததேகூக்காரர்கள் அடுத்த மாகாணசபைத் தேர்தல் வரை காலத்தைக் கடத்தப்போகின்றார்களா? அல்லது மாகாண சபையால் எதுவும் செய்ய முடியாது என ததேக்கூக்காரர்கள் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் மாகாண சபையால் மக்களுக்குப் பயனடையதாக எதுவுமே செய்து விடக்கூடாது என இருக்கிறார்களா? என உங்;களை நோக்கி கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை நீங்கள் கண்டு பிடிக்கவும் தெளிவான அரசியற் புரிதல்களைப் பெறுவதற்குமென உங்களது சிந்தனைகளைத் தூண்டுவதே எனது நோக்கமாகும்.
எனது எழுத்து ஓரு நாவல் படிப்பதாக அல்லது ஒரு சிறுகதை வாசிப்பதாக இருக்காது. இது ஓர் அரசியல் ரசாயனம். எனது இலக்கை அடையும் விதமாக எனது இந்த கடிதத் தொடர் அமைந்திருக்கிறதா? இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் உங்களிற் சிலர் மத்தியிலாயினும் ஒரு சிறு பொறியை மூட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இத்தொடரை அடுத்த கடிதத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தக் கடிதத் தொடரானது மாகாண சபை தொடர்பாக கவனமுள்ள அக்கறையுள்ள தமிழர்கள் மத்தியில் ஓர் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துமாயினும் எனக்கு மகிழ்ச்சியே. நாளை கிடைக்கக் கூடுமென இருக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் களாக்காய் பயன் தருவது நிச்சயமானது என்பது பழமொழி. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுவே பிரதானம்.
“சுயநிர்ணய உரிமையுன் கூடிய அமைப்பு”, “கனடாவில் இருப்பது போன்ற அமைப்பு”, “இந்தியாவில் இருப்பது போன்ற மாநில அரசுகள்”, “சுயாட்சி”, “சமஷ்டி” எனப்பல கோஷங்கள் – கோரிக்கைகள் காணப்பட்டாலும் 80 வருட நாடாளுமன்றத் தேர்தல் அரசியலூடாகவும் 30 வருட யுத்த அரசியலினூடாகவும் தமிழர்கள் யதார்த்தத்தில் இதுவரை பெற்றுக் கொண்ட ஒன்றேயொன்று – அது 13வது அரசியல் யாப்பு திருத்தத்தினூடாக ஆக்கப்பட்டுள்ள மாகாண சபை மட்டுமே.
இந்த மாகாண சபை அமைப்பும் அது உருவாக்கப்பட்ட 1987ம் ஆண்டு கொண்டிருந்த சட்டவாக்க, நிதிவருமான மற்றும் நிறைவேற்றதிகாரங்களிற் பலவற்றை இழந்து விட்ட நிலையிலேயே இன்று இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், 13வது திருத்தம் மூலமாக உள்ள மாகாண சபை அமைப்பை முற்றாகப் புறக்கணித்து விட்டு வேறோரு அரசியற் தீர்வை நோக்கி தமிழர்களின் அரசியல் செல்வதாகவும் இல்லை என்பதோடு, அவ்வாறு செல்வதற்கான வாய்ப்புகளையும் காண முடியவில்லை என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன்.
13வது திருத்தத்தை தமிழர்கள் எந்த வகையிலும் பயனற்றது என்று கருதினால், பின்னர், அதனால் உருவாக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களிற் பங்கு பற்றுவதுவோ அல்லது அதன் பதவிகளிற் குந்திக் கொண்டு இருப்பதுவோ முரணான அணுகுமுறையாகும் – பொய்யான, ஏமாற்றுத் தனமான ஒன்றாகும். 13வது திருத்தம் பயனற்றது என்றால் அதனால் உருவான ஒரு மாகாண சபையில் அரசாங்கச் சார்பான ஒரு கட்சி பதவியில் இருந்தாலென்ன அல்லது அரசாங்கத்துக்கு எதிரான ஒரு கட்சி பதவியில் இருந்தாலென்ன?
அரசாங்கச் சார்பான ஒரு கட்சி மாகாண சபையில் இருந்தால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அதிகாரரீதியாகவும் நிதிரீதியாகவும் ஒத்துழைப்புக் கொடுத்து பல்வேறு அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு தமிழர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவிடும் என்று கருதித்தான் ததேகூக்காரர்கள் மாகாண சபையைத் தாங்கள் கைப்பற்றி வைத்திருப்பதாகக் கூறினால் அது தமிழர்களின் நலன்களுக்கு விரோதமான செயலல்லவா? தங்களால் முடியாத ஒன்றை அரசாங்க சார்பான கட்சியொன்று செய்தால் அது தமிழர்களுக்கு நன்மையானது என்றுதானே கருத வேண்டும்.
ஒன்றில் மாகாண சபையைக் கைப்பற்றி இருக்கும் ததேகூக்காரர்கள் அதனைத் தமிழர்களுக்குப் பயனுடைய விதமாக கொழும்பு மைய அரசாங்கத்தை ஏதோ வழிமுறைகளைக் கையாண்டு ஒத்துழைக்க வைத்து காரியங்களை ஆற்ற வேண்டும். அல்லது மாகாண சபையில் உள்ள வள வாய்ப்புகளையும், சட்டரீதியான நியாயாதிக்க வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த மாகாண சபைகளை பயனுள்ளதாக – காரிய ஆற்றல்ரீதியில் அர்த்தம் உள்ளதாக ஆக்குவதற்கு வேண்டிய செயற்திட்டங்களை ஆற்ற வேண்டும். அல்லது இந்த மாகாண சபை அமைப்பை முற்றாகப் புறக்கணித்துவிட்டு வேறொரு சரியான முறையான முழுமையான அரசியற் தீர்வுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து எந்த வழிமுறைகள் சரியோ சாத்தியமோ அந்த வழி முறைகளில் எந்தத் தியாகத்துக்கும் தயங்காது அயராது உறுதியாக வீதிகளில் இறங்கி மக்களைத் திரட்டிப் போராட வேண்டும்.
ஆனால், வீராவேச மேடைப் பேச்சுக்களையும் உணர்ச்சியூட்டும் பத்திரிகை அறிக்கைகளையம் அரசின் மீது மாறிமாறி குறைகள் பாடும் ஒப்பாரிகளையும் தவிர ததேகூக்காரர்கள் எதனையும் செய்ய மாட்டார்கள் என்பது வெளிப்படை. நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதற்காகவும் – ஆபத்தெதுவுமில்லாமல் பதவிகளை அனுபவிக்கலாம் என்பதற்காகவும் – நோகாமல் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவும் – தமிழ்த் துரோகிகள் என்ற பேர் கிடைக்காமல் ரகசியமாக அரச உறவுகளைப் பேணிக் கொள்ளலாம் என்பதற்காகவும் – ஆடைகளில் அழுக்கு எதுவும் படாமல் உலகத் தமிழர்கள் மத்தியில் மாவீரர்களாக வலம் வரலாம் என்பதற்காகவும் – அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற பெயரில் வெளிநாட்டு அரசுகளின் அரவணைப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவுமே ததேகூவில் பெரும்பான்மையானவர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்த ஒரு விடயம்.
போராட்டம், தியாகம், கஷ்டங்கள், துன்பங்கள், சிறைவாசங்கள், சித்திரவதைகள் கொண்ட அரச விசாரணைகள்;, குடும்பங்களைப் பிரிந்திருக்க வேண்டும், ஊருராக நடந்து திரிய வேண்டும் என்ற ஒரு நிலைமை வந்தால் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் துண்டும் வேண்டாம் துணியும் வேண்டாம் என ஓடி ஒழிந்து விடுவார்கள் என்பதுவும் பொது அறிவு.
போராட்டம், போராளிகள், தியாகங்கள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகாலமாக தமிழ்ச் சமூகம் நடந்து கொண்டுள்ள விதமானது தமிழ் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை தம்மைத் தியாகங்கள் செய்யும் போரட்டங்களில் ஈடுபட்டு விடாத மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் மாற்றம் ஏற்பட இனிப் பல தசாப்தங்கள் ஆகலாம். கடந்த ஐந்து ஆண்டுகால தமிழ் அரசியலானது தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமல்ல தமது சொந்த சமூகத்தின் மீதான வெறுப்பையும் விரக்தியையும் கணிசமாக ஏற்படுத்தி விட்டுள்ளது.
எனவே, தமிழர்கள் மத்தியில் மாற்று அரசியற் தீர்வுக்கோரிக்கை என்பது இன்று தமிழ் அரசியலில் வியாபாரப் பொருளாக மட்டுமே உள்ளது. பத்திரிகை அறிக்கை, மேடைப் பேச்சுகள் என்பதற்கு மேல் அவை செல்லாது என்ற நிலையிலிருந்தே இன்றைய மாகாண சபை அமைப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்போதிருக்கும் மாகாண சபை அமைப்பை பயனுள்ளதாக நகர்த்துவதன் மூலம் மேலும் ஒரு படி முன்னேற்றகரமான அரசியல் நிலையை நோக்கி விடயங்களை முன்னேற்றுவது என்பதே யதார்த்தபூர்வமான நேர்மையான அரசியலாக அமைய முடியும். இப்போதிருக்கும் மாகாணசபை ஒன்றுக்குமே உதவாதது என்பதை என்னால் ஏற்க முடியாது. எப்படி அதனைப் பயனுடையதாக்குவது – அதனை எப்படி காரிய ஆற்றல் கொண்டதாக ஆக்குவது – அதனூடாக அரசியல் முன்னேற்றங்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக்குவது என்பதைக் கண்டு பிடிப்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் கடமையாகும். அதற்கு வேண்டிய அறிவும் வளமும் வாய்ப்புக்களும் அவர்களிடமே உள்ளது.
விதைத்தது தினையாக இருந்தால் அறுப்பதுவும் தினையாகத்தானே இருக்க வேண்டும்!

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!
“ஆளுநரும் அரசாங்கமாக உள்ளார்” என்கிறார் முதலமைச்சர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ விக்கினேஸ்வரன் அவர்கள் ஹிந்து பத்திரிகைக்கு அண்மையில் வழங்கியுள்ள பேட்டியில் அவர் கூறியுள்ள சில விடயங்கள் என்னுள் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் ஓர்; இடத்தில் “ஆளுநர் சமாந்தரமாக ஓர் அரசாங்கத்தை நடத்துகிறார்” என்கிறார்.
சட்டங்களால் தரப்பட்டுள்ள, பெறப்பட்டுள்ள கடமைகளையும், அதிகாரங்களையும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுகின்ற அரச நிறுவனமே அரசாங்கம்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துப்படி பார்த்தால் மாகாண மட்டத்தில் தனது தலைமையில் உள்ள அரசாங்கத்துக்குச் சமாந்திரமாக ஆளுநரும் அரசாங்கத்தை நடத்துகிறாhர் என்பதுதான். ஆக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அமைச்சரவையும் இங்கு ஓர் அரசாங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றுதானே அவர் கூறுகிறார்! தங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை! ஒன்றுமே செய்ய விடாது ஆளுநரும் மத்திய அரசாங்கமும் தங்களை முடக்கி;வைத்திருக்கின்றது என்ற நிலை இங்கு முழுமையாக இல்லை என்பதுதானே அதன் அர்த்தம்! மாகாண சபை அமைப்பின் பல்வேறு குறைபாடுகளின் மத்தியிலும் அரை குறையாகத்தானும்; காரியங்களை ஆற்றக் கூடிய வாய்ப்புக்களை முதலமைச்சரும் கொண்டிருப்பதாகத்தானே அவர் கூறுகிறார்!
முதலமைச்சர் தாங்கள் ஓர் அரசாங்கமாகச் செயற்படுகிறார்களா? இல்லையா? என்று அவரின் பேட்டியிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு என்னால் வர முடியவில்லையென்றாலும், ஆளுநர் முதலமைச்சருக்குச் சமாந்தரமான ஓர் அரசாங்கமாகச் செயற்படுகிறார் என்று கூறுவதிலிருந்து முதலமைச்சரும் ஒரு அரசாங்கமாக இருக்கிறார் என்ற புரிதலையே பெறுகிறேன்.

நண்பர்களே! தோழர்களே!
இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்!

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களால் எந்தவித சட்டமும் இயற்ற முடியாத வகையிற்தான் மாகாண சபை இருப்பதாகக் கூறவில்லையே! ஆனால் மாகாண சபையில் சட்டங்களை விரைந்து ஆக்குவது தொடர்பாக தாங்கள் எந்தளவு தூரம் முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். எத்தனை சட்டங்களை இதுவரை ஆக்குகின்ற தயாரிப்பில் இருக்கிறார்கள் என்று எந்தத் தகவலையும் ஏன் வெளியிடாமல் இருக்கிறார்கள்.
அரசியல் யாப்பிலுள்ள மாகாணசபைக்கான சட்டவாக்க நிரல்கள் தொடர்பாக நிறைவேற்றதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1989ம் ஆண்டு பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டுள்ள “மாகாணசபைகள் (மறுமையில் ஏற்பாடுகள்) சட்டம் ஜீசழஎinஉயைட ஊழரnஉடைள (ஊழளெநஙரநவெயைட Pசழஎளைழைளெ) யுஉவஇ 1989ஸ” என்னும் சட்டத்தின் மூலம் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமது நிறைவேற்றதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றமையை ஏற்கனவே முன்னைய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இங்கு எனது கேள்வி என்னவென்றால், முதலமைச்சரும் மற்ற மாகாண அமைச்சர்களும் அந்த சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து எவ்வளவு தூரம் நிர்வாக மற்றும் அபிவிருத்தி விடயங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் – முன்னெடுக்கிறார்கள் என்பதே. இதற்கான விடை இன்னமும் யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது. அது பற்றி இவர்கள் ஏன் இதுவரை எதுவும் கூறாமல் இருக்கிறார்கள்?
13வது திருத்தம் தமிழர்களுக்கான முழுமையான அரசியற் தீர்வு அல்ல எனவும் அதனால் அதனை தாங்கள் ஏற்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆளுக்காள் திரும்பித் திருப்பி கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே! 13வது திருத்தம் ஒரு முழுமையான தீர்வு அல்ல என்பது தமிழர்கள் மத்தியில் உள்ள எல்லாக் கட்சிக்காரர்களிடமும் அதன் மீதான விமர்சனங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே உள்ளது. இங்கு பிரதானமானது என்னவென்றால் அதைவிட மேலதிகமாக ஒன்றை இப்போதைக்கு எப்படி எடுப்பது – யார் எடுத்துத் தருவார்கள்.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தனது நேரத்தில் கணிசமான காலத்தை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஈடுபடுத்தினார் – அவரது அமைச்சர்களான திரு சிதம்பரமும், திரு நட்வார்சிங்கும் பல மாதக்கணக்கில் தமிழர்களின் தீர்வுக்காக ஈடுபடுத்தப்பட்டனர் – இந்திய வெளியுறவு அமைச்சு அன்றைய காலகட்டத்தில் பாகிஸ்த்தான் விவகாரங்களுக்குச் சமமாக இலங்கை விவகாரத்திலும் ஈடுபடுத்தப்பட்;டது – இந்திய வெளியுறவு உளவுத் துறையின் மிகப்பிரதானமான வேலைத்திட்டங்களில் இலங்கை பிரதானமான இடத்தை வகித்தது – இந்தியாவில் ஈழத் தமிழர் பயிற்சி முகாம்கள் – ஈழப் போராளிகளின் கையில் இந்தியாவின் ஆயுதங்கள் என்றவாறாக இருந்த காலத்திற் கூட இந்தியாவால் 13வது திருத்தத்துக்கு மேலாக ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
இப்போது இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தியாவின் விவகாரங்களில் நூற்றில் ஒன்று. இந்த நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் சுயநிர்ணய உரிமை கொண்ட மாநில சுயாட்சியை எடுத்துத் தரும் என்று நம்பிக்கையில் இருப்பது சரியானதா? அப்படியொரு கனவோடு இருந்தாலும் கூட கையிலிருக்கின்ற மாகாண சபையை பயனற்றதாக ஆக்க வேண்டும் என்பது கட்டாயமான தேவையா?
இப்போதிருக்கும் இலங்கையின் அரசியல் யாப்பை முற்றாக மாற்றி புதியதோர் அரசியல் யாப்பைக் கொண்டு வருவது அல்லது அரசியல் யாப்பில் இருக்கும் 13வது திருத்தத்துக்குப் பதிலாக இன்னொரு அரசியல் யாப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவது பற்றிய விவாதங்கள் ஒரு பறமிருக்க, இப்போது இருக்கும் அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபைகளின் கட்டமைப்பு தொடர்பான மற்றும் அதற்கான அதிகாரப் பகிர்வுகள் தொடர்பான பிரச்சினைகளை இப்போது எப்படி அணுகுவது என்பதே தமிழ் அரசியற் பிரதிநிதிகள் முன்னாலுள்ள பிரதானமான கேள்வியாகும். அந்த விடயங்கள் பற்றி அடுத்த கடிதத்தில் எனது கருத்துக்களைக் குறிப்பிடுவதோடு இந்தக் கடிதத் தொடரை முடித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பன் – தோழன்
அ.வரதராஜப்பெருமாள்