இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 10)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

இக்கடிதத் தொடரை வாசித்த சிலர் என்னிடம் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றனர்:-

  1. இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகள் தமிழர்களுக்கு பயனுடையது மற்றும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமைகின்றது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
  2. இந்தப் 13வது திருத்தம் பயனற்றது என்றுதானே நீங்கள் ஒரு தலைப்பட்சமாக ஈழப் பிரகடனம் செய்தீர்கள்?
  3. இலங்கையில் ஒற்iறாட்சி அரசியல் அமைப்பு முறை இருக்கும் வரை எந்தவொரு அதிகாரப் பகிர்வும் மாகாண சபைகளை சுயாட்சியுடையவைகளாக இயங்குவதற்கு அனுமதிக்குமா?
  4. இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறையைக் கொண்டிருக்கிற வரை மாகாண சபைகள் எந்த வகையிலும் சுயாட்சி உடையவையாகச் செயற்பட முடியாது என்று சொல்லித் தானே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மாற்று அரசியல் யாப்புத் திட்டத்தை முன் வைத்தார்? அப்படித்தானே சட்டப் பேரராசிரியரும் இப்போதைய வெளிநாட்டு அமைச்சரும்,; முன்னாள் அரசியல் யாப்பு அமைச்சருமான கௌரவ பீரிஸ் அவர்கள் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பல அறிக்கைகளை விட்டார், பல விளக்கவுரைக் கூட்டங்களையும் நடத்தினார்
  5. 13வது திருத்தம் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதியதல்ல என்பதாற்தானே 2002 க்கும் 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வெளிநாடுகளின் முன்னால் ஒரு சமஷ்டி அரசியல் முறையை ஆக்குவதற்கு ஒப்புக் கொண்டார்?
  6. அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட புலிகள் இருந்த காலத்தில் 13வது திருத்தத்துக்கும் மேலாக அதிகாரங்களைத் தமிழர்களுக்குத் தருவேன் என்றுதானே கூறினார்?
  7. இந்தியாவும் மற்றும் உலக நாடுகளும் 13வது திருத்த ஏற்பாடுகள் போதியதல்ல என்பதாற்தானே 13வது திருத்தத்தை உடனடியான முழுமையாக நிறைவேற்றுவதோடு 13வது திருத்தத்துக்கும் மேலதிமாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு இலங்கை அரசாங்கம் பகிர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன?

நண்பர்களே! தோழர்களே!
மேலே தொகுத்தடுக்கியுள்ள கேள்விகளுக்கான விடைகளை ஒற்றை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. அவை விரிவாக பார்க்கப்பட வேண்டியவை. மேலே எழுப்பட்டுள்ள கேள்விகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் காலங்களில் தமிழர்கள் கொண்டிருந்த பலங்கள், தமிழர்களுக்குச் சாதகமாக இருந்த ஆதரவுகள் மற்றும் வாய்ப்புக்கள், அன்றைய காலகட்டத்pல் நிலவிய சர்வதேச மற்றும் இந்து சமுத்திரப் பிராந்திர புவிசார் அரசியல் நிலைமைகள் என்ற பல்வேறு விடயங்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். வெறுமனே 13வது திருத்தத்தையும் இருக்கின்ற மாகாண சபை முறையையும் நிராகரிப்பதற்கான வாதங்களை நடத்துவதற்கான இலக்குடன் கேள்விகள் அமையக் கூடாது. மாறாக இன்றைய சூழ்நிலையில் அரசியல் பொருளாதார விடயங்களை முற்போக்கான பாதையில் நகர்த்துவதற்கான இலக்குடனேயே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேட வேண்டும்.

குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை ஏற்கனவே எனது இந்த தொடரின் முன்னைய கடிதங்களின்; வெவ்வேறு இடங்களில்; ஆங்காங்கே நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உண்மையில், என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கடிதத்தொடரினூடாக பல விடயங்களை உங்களுடன்; பகிர்வதன் மூலம் நான் தேடுவது என்னவென்றால்:-
• இப்போதுள்ள அரசியற் சூழ்நிலையில் இலங்கையில் ஒரு பாரிய மாற்றங்களைக் கொண்ட ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான நிலைமை இங்கு இல்லை. எனவே மாகாண சபைகளை வலுவாக்கவும் பயனுடையதாகவும் ஆக்குவதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களுக்குள்ளேயே என்னென்ன செய்யலாம்.
• அடுத்ததாக, பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையோடு மேற்கொள்ளக்கூடிய சட்ட மாற்றங்களை – திருத்தங்களை எவ்வகையில் சாத்தியமாக்கலாம்.
• மேலும் அரசியல் யாப்பில் உள்ள சர்வசன வாக்கெடுப்பு விடயங்களில் கை வைக்காமல் மாகாண சபையின் அமைப்பு முறை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் யாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதறகான வாய்ப்புகளை எப்படி வசமாக்கலாம் என்பவையே.

1983ம் ஆண்டுக்கும் 1987ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் கொடுத்த நெருக்கடிகளும் இந்தியாவின் நேரடியான தலையீடுமே இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதுவே இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தத்துக்கு வழி வகுத்தது.

13வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது பலராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு,
13வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்திய அரசாங்கமும் மற்றும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி கொடுத்து வருகின்றன,


13வது திருத்தப்படி உள்ள “பொலிஸ் அதிகாரங்களையும் நில அதிகாரங்களையம் மாகாண சபைகளுக்கு வழங்க மாட்டோம்” என ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் முழு மூச்சாக உள்ளனர்,
சிங்கள தேசவாதிகள் 13வது திருத்தத்தை முற்றாக அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டுமென பிடிவாதமாக நிலைப்பாடு கொண்டிருக்கின்றனர்.

இவையெல்லாம் எதனைக் காட்டுகிறது. 13வது திருத்தத்தில் அடிப்படையான பயனுள்ள பல விடயங்கள் உள்ளன என்பதைத்தானே கோடு காட்டி நிற்கின்றன.

ஆகையாற்தான், இப்போது இலங்கையின் அரசியல் யாப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மாகாண சபைகளை தமிழர்களுக்குப் பயனுடையவைகளாக பயன்படுத்திக் கொள்ள முடியாதா என்பது எனது அக்கறையாக உள்ளது. தமிழ் மக்களால் ஜனநாயகபூர்வமாக சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் நிர்வாக நிபுணர்களென பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பிரமுகர்கள் நாடாளுமன்றத்திலும் மாகாண அளவிலும் பிரதேச சபைகள் மட்டத்திலும் இருக்கிறார்கள். அவர்களையே இலங்கையின் தமிழ்ச் சமூகத்திலுள்ள பெருங்குடி பிரமுகர்களிற் பெரும்பான்மையானவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இவ்வாறான நிலையில் 13வது திருத்தம் பயனுடையது என்றோ அல்லது பயனற்றது என்றோ அறுதியாகவும் உறுதியாகவும் சொல்வதற்கு நான் யார்? அதற்கு எனக்கென்ன தகுதியுண்டு? என’ற கேள்வி என்னிடத்தில் .ல்லையென்ற நீங்கள் கருதிவிட வேண்டாம்.

13வது திருத்தத்தை மாற்றி அதைவிடவும் கணிசமான அளவு சிறப்பான ஏற்பாடுகள் கொண்ட ஓர் அரசியல் யாப்பு – இன்னும் சில ஆண்டுகளுக்குள் போனாலும் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்புக்கள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதும் ஒரு மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பை அனுமானிப்பதற்கு எனது அறிவோ அல்லது எனது அனுபவமோ இடமளிக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரை – புரிந்த வரை இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த 13வது திருத்தத்தை மையமாக வைத்தே இந்தியா என்றாலென்ன தமிழர்கள் மீது அனுதாபம் கொண்ட உலக நாடுகளென்றாலென்ன குரலெழுப்பப்போகின்றன.

அதிகபட்சம் எதிர்வரும் பத்தாண்டுகளுக்குள்ளாக இலங்கைவாழ் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு இலங்கையில் அரசியல் யாப்பு வகையாக காத்திரமான ஓர் அரசியல் ஏற்பாடு நடைமுறைக்கு வரவில்லையெனில் அதன்பின்னர் தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது தேர்தல் மேடை அரசியல் நடைபெறுவதைத் தவிர வேறேதுவும் நடைபெற மாட்டாது என்பதே எனது அறிவுக்கு எட்டிய அபிப்பிராயம்.

இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கைத் தமிழர்களை மறந்து போய் விடக் கூடியவை.

அதற்குப் பின்னர் தமிழர்களின் தலைவர்கள் சுடுகாடு சுடுகாடாகச் சென்று கிடந்து புரண்டு அழுது புலம்பினாலும் அதனைக் கண்டு கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். ஜெனீவா மனித உரிமை நாடகமெல்லாம் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு தமிழ்த் தலைவர்களும் களைத்துப் போய்விடுவார்கள். மேலைத்தேச நாடுகளில் இன்னும் சில லட்சம் பிரதானமாக வடக்குத் தமிழர்கள் புதிதாக புலம் பெயர்ந்து போய்; குடியேறுவார்கள். யாழ்ப்பாணத்தில் மேலும் சில ஆயிரம் வீடுகளும் சில ஆயிரம் ஏக்கர் காணிகளும் சொந்தக்காரர்கள் அற்றவைகளாக ஆகிவிடும்.

நண்பர்களே! தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்டுள்ள யதார்த்தங்களுடன் மேலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது தமிழர்களுக்கு வாய்த்துள்ள அரசியற் தலைவர்களும் அவர்களோடு ஒட்டிய பிரமுகர்களும் தேர்தல் வாய்ப்புக்கள் மற்றும் பதவி சார் நலன்களை மையமாகக் கொண்டே செயற்படுகின்றனர்.
சொல்லில் சுத்துமாத்தும் செயல்களில் போலித்தனமான வேடங்களும் கொண்டவர்;களாகவே உள்ளனர் – மக்களை எப்போதும் தம்மைப்பற்றிய கனவு நிலையிலும் அரசு தொடர்பாக கொதிநிலையிலும் வைத்திருப்பதனையே குறிக்கோளாகக் கொண்டு விடாப்பிடியாக செயற்படுகிறார்கள் – தேர்தல் வெற்றியை மட்டுமே இலட்சியமாகக் கொண்டவர்கள் – இவர்களிற் பலர் தமிழர்களின் இழப்புகளையும் துன்பங்களையும் வியாபாரம் பண்ணி பணக்காரர்களானவர்கள் – இவர்களிற் பலர் இப்போதும் அரசசின் அரசியற் தலைமை மட்டத்திலும் இராணுவ அதிகாரிகளுடனும்; இரவு விருந்துபசாரம், நல்லெண்ண சந்திப்பு என கள்ளமாக நல்ல பல உறவுகளை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் மட்டும் அதே அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக வீரவசனம் பேசும் அரசியலைக் கொண்டிருக்கின்றனர் – மக்களை மயக்க நிலையில் வைத்து அரசியல் அறுவடை செய்வதற்குத் தேவையான பகிரங்க நடிப்பு வித்தைகளை இவர்கள் நன்றாகவே கற்று பயிற்சி பண்ணி வைத்திருக்கிறார்கள்.

கொழும்பு அரசாங்கத்தோடு மட்டுமல்ல இராணுவ உளவுத் துறையோடும் பின்கதவு வழி ரகசிய உறவுகளை வைத்துக் கொண்டு தமக்கு வேண்டிய உத்தரவாதங்களையும் பலாபலன்களையும் மடியில் முடிந்து கொள்கிறார்கள். தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தனக்குச் சாதகமான அரசியலை நடத்துவதற்கு வசதியாக வடக்கில் இவர்களே அதிதீவிர தமிழ்ச் சுலோகங்களை முழங்குகிறார்கள். தமிழ்த் தேசியர்கள் என நடமாடுபவர்களுக்கள் இவர்களே மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே இங்கு வேடிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களை தமிழ்சமூகத்தில் வெற்றிகரமான அரசியல்வாதிகளாகக் காப்பாற்றி வைத்திருக்கும் சமூக சமய புத்திஜீவித் தமிழ்ப் பிரமுகர்களும் போலி இரட்டைவேடதாரிகள் தானோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இப்படியாக உள்ள நிலையில் 13வது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து விட்டு அரசியல் யதார்த்தங்களை வேறு மையங்களுக்கு நகர்த்துகின்ற தகுதியோ தயாரிப்போ இப்போதிருக்கும் தமிழ்த் தலைமைகளுக்கு இல்லை என்பதே நிஜம். எனவேதான் நான் 13வது திருத்தத்தை மையமாகக் கொண்டே தமிழர்களின் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறேன்.

அதுமட்டுமல்ல, பகுத்தறிவுபூர்வமாக நாம் கழித்தல் அல்லது விலக்கல் தர்க்க முறையில் (னுநனரஉவiஎந டுழபiஉயட ஆநவாழன) பார்த்தோமானால்

(1) எந்த வகையிலும் மீண்டும் ஆயுதங்கள் தாங்கிய போராட்டத்தை தமிழர் சமூகம் ஏற்க மாட்டாது. மேலும் இலங்கையின் சமூக அரசியல் புவியியற் சூழலில் அவ்வாறானதொரு போராட்டம் பொருத்தமானதாக இல்லை:
(2) தமிழர்களுக்கென ஒரு சுதந்திர நாட்டை அமைத்தல் என்பது கனவாக வந்து கலைந்து போன ஒரு விடயம். சோவியத் யூனியன் வடிவில் சுயநிர்ணய உரிமை கொண்ட இரண்டு தேசங்களின் ஒன்றியம் என்பதுவும் ஒரு கற்பனை என்பதற்கப்பால் வேறெந்த அர்த்தத்தையும் இங்கு கொண்டதாக இல்லை.
(3) வெறுப்பு, விரக்தி, ஆத்திரம், பழி வாங்கும் உணர்வு எனபவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் ஒரு நியாயமானதோர் அரசியற் தீர்வை எட்டுவதற்கு வழிவிடமாட்டா:
(4) சமஷ்டி என்பதுவும் ஒரு தூரத்து நட்சத்திரமே
மணலைக் கயிராகத் திரிப்போம்! வானத்தில் கோட்டை கட்டுவோம்! என்று கங்கணம் கட்டி நிற்பவர்களோடு விவாதிக்க நான் விரும்பவில்லை. சரியான ஒன்று சாத்தியமற்றது என்பதனால் தவறான ஒன்றாகி விடுமா என்று சிலர் கேட்கலாம். உண்மையில். சாத்தியமில்லாத இலக்கு ஓர் இலட்சியக் கனவாக இருக்கலாம் ஆனால் அது சாதிப்பதற்கான அரசியலுக்குச் சரியானதாகாது.
மேற்கூறியவற்றிலிருந்து தர்க்கபூர்வமாக பெறும் விடை என்னவெனில், மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு எந்த அளவு வழங்கப்பட்டிருக்கின்றது – அது எந்த அளவுக்கு சுயாதீனமாக செயற்படுகிறது என்பவை பற்றிய விவாதங்கள் இருப்பினும் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வானது இருக்கின்ற மாகாண சபை கட்டமைப்பின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நண்பர்களே! தோழர்களே!
இங்;கு இதுவரை மேலே கூறப்பட்டவைகள் ஒரு புறமிருக்க, கடந்த கடிதத்தின் தொடர்ச்சியாக சில விடயத்தை இங்கே தொட்டிட விரும்புகிறேன்.

13வது அரசியல் யாப்பு திருத்த ஏற்பாடுகளின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே மாகாண அரசாங்கம். இந்த அமைச்சரவையின் தலைவர் மாகாண முதலமைச்சரே தவிர ஆளுநர் அல்ல.

ஆளுநரையே தொடர்ந்தும் மாகாண அரசாங்கமாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையை வெறுமனே ஆலோசனைச் சபையாகவும் மத்திய அரசாங்கம் கருதினால் அது அரசியல் யாப்புக்கு விரோதமானதாகும்.

அது கொழும்பு மைய மத்திய அரசாங்கத்தின் அகங்காரத்தனமான நிலைப்பாட்டின் வெளிப்பாடே தவிர சட்டப்படியான செயற்பாடு அல்ல.
சுதந்திர இலங்கையில் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு வரும் வரை இலங்கையின் மகாதேசாதிபதியாக இருந்தவரே இலங்கை அரசின் தலைவராக இருந்தார். அவர் இங்கிலாந்து மகாராணியின் பிரதிநிதியாக இருந்தார். ஆயினும் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே இலங்கையின் அரசாங்கமாக இருந்தது. அரசாங்கத்தின் தலைவராக பிரதமரே இருந்தார்.

1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக ஆக்கப்பட்டதோடு சம்பிரதாய பூர்வமாக இங்கிலாந்தோடு இருந்த அரசியல் யாப்புத் தொடர்புகள் முற்றாக நீக்கப்பட்டன. 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி இலங்கையின் ஜனாதிபதியே இலங்கையின் அரச தலைவராக இருந்தார். எனினும் இலங்கையின் அரசாங்கமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்ட அமைச்சரவை இருந்தது. பிரதமரே அதன் தலைவர்.

இங்கு ஓர் அரசுக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இறைமை ஆதிக்கம் கொண்டிருந்த இங்கிலாந்து மகாராஜாக்களுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் காரணமாக மகாராஜாக்களின் கைகளிலிருந்து அரச அதிகாரங்கள் மக்களின் பிரதிநிதிகளுக்கு மாறின. அதன் விளைவாக இந்கிலாந்து மாகாராஜாக்கள் அல்லது மகாராணிகள் வெறுமனே பெயரளவிலான அந்தஸ்த்துக்கு உரியவர்களானார்கள்.

இங்கிலாந்து மகாராணியிடம் நிறைவேற்றதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர்களின் சட்டங்கள் கூறினாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு அமையவே அந்த நிறைவேற்றதிகாரங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவுகளே நிறைவேற்றதிகார முடிவுகள். நடைமுறையில் அமைச்சர்களே அரச நிர்வாக கட்டமைப்புகளை இயக்கி அரசின் கொள்கைகளை, திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இதுவே இங்கிலாந்தில், கனடாவில், அவுஸ்திரேலியாவில் மற்றும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதே பாரம்பரியத்திலேயே இந்தியா, கனடா மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள மாநிலங்களில் – மாகாணங்களில் ஆளுநர் மற்றும் மாகாண அமைச்சரவைக்கு இடையே உள்ள உறவுகளும் அமைந்துள்ளன.

இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான 13வது அரசியல் யாப்பு திருத்த ஏற்பாடுகள் வசனத்துக்கு வசனம் சொல்லுக்குச் சொல்லு இந்திய மாநில அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட வகையாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1984 தொடக்கம் 1986 இறுதி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அதுவே அடிப்படையாக இருந்தது.

ஆளுநருக்கும் அமைச்சர்களுக்குமிடையே நிறைவேற்றதிகாரம் தொடர்பான விடயத்தில், கனடாவில் மற்றும் அவுஸ்த்திரேலியாவில் உள்ள மாகாண ஆட்சிகளுக்கு உள்ள அரசியல் யாப்பு ஏற்பாடுகளை ஏறத்தாழ ஒத்த கருத்துடையாகவே இலங்கையின் அரசியல் யாப்பிலும் அடிப்படை விதிகள் உள்ளன.

எனவே இந்திய, அவுஸ்த்திரேலிய மற்றும் கனடிய மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே மாகாண அரசாங்கமாக இருக்கும் போது அதேவகையான அரசியல் யாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இலங்கையில் மட்டும் மாகாண அமைச்சரவையானது நிறைவேற்றதிகாரங்கள் எதுவுமே அற்ற, வெறுமனே ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் சபையாக மட்டுமே என எவ்வாறு அமைய முடியும்.

இலங்கையின் நீதிமன்றங்களும் இங்கிலாந்து சட்ட பாரம்பரியங்களை ஏற்றே இன்று வரை அனைத்து விடயங்களிலும் தீர்ப்பு வழங்கி வருகின்றன. எனவே மாகாண அமைச்சரவையின் நிறைவேற்றதிகாரம் தொடர்பான விடயங்கள் இலங்கையின் உச்சநீதிமன்றத்தினால் பரிசோதிக்கப் படுமானால், இங்கும் இங்கிலாந்து, இந்திய, அவுஸ்த்திரேலிய, கனடிய சட்ட பாரம்பரியங்கள் மற்றும் அவை தொடர்பான கடந்த காலத் தீர்ப்புகள் ஆகியவை கவனத்துக்கு எடுக்கப்பட்டே இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

(சிலர் ஆளுநருக்குரிய தன்னிச்சையான நிறைவேற்றதிகாரம் பற்றிய குழப்பத்தில் உள்ளனர். அரசாங்கமும் அப்படியொரு குழப்பத்தை உருவாக்குகிறது. அது பற்றி இங்கு நான் விபரித்தால் அது இக்கடிதத்தை மேலும் நீளமாக்கிவிடும். எனினும் இதற்கு முன்னைய கடிதத்தில் வலிறுத்திய ஒரு விடயத்தை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி விரும்புகிறேன் – அதாவது, 13வது திருத்தம் உட்பட இலங்கையின் அரசியல் யாப்பில் எந்த இடத்திலும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படுவதற்கான எந்தவொரு விடயமும் “ விசேடமான பொறுப்பாக” வழங்கப்படவில்லை என்பதேயாகும்.)

இது தொடர்பாக திரு சம்பந்தன் அவர்களுக்கோ அல்லது கௌரவ முன்னாள் நீதியரசரும் இந்நாள் முதலமைச்சருமான திரு விக்கினேஸ்வரன் அவர்களுக்கோ சட்ட ஆலோசனை வழங்கும் அளவுக்கு அல்லது இவர்களை நோக்கி சட்ட விடயங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பும் அளவுக்கு நான் அறிவுடையவனா அல்லவா என்பதல்ல இங்கு முக்கியம்.
இங்கு “பூனைக்கு மணி கட்டுவது யார்;” என்பதே கேள்வியாகும். மாகாண அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பாக நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மணி அடிப்பதற்கான கடமையையும் பொறுப்பையும் கௌரவ திரு விக்கினேஸ்வரன் அவர்களுக்கே மக்கள் ஆணையாக வழங்கியிருக்கின்றனர்.

அடுத்த கடிதத்தில் தொடருவோம்
இப்படிக்கு
உங்கள் அன்பின்
வரதராஜப்பெருமாள்