இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து

மிகவும் சிக்கலான உலகத் தொடர்புகளுடன் மிகமோசமான பயங்கரவாதக்குழு ஒன்றினை இலங்கை அழித்தபோதிலும் அதற்கான உரிய பலன் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. உலகில் வேறெங்கிலும் இல்லாதவாறு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது. அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உணவளிப்பதற்கு வேண்டி, பட்டினியால் வாடும் குழந்தைகளென இலங்கையில் கிடையாது என்பது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. பெருந்தொகையில் மக்கள் அவலம், தொற்று நோய்கள் மற்றும் பட்டினி போன்றவற்றை இலங்கை தவிர்த்துள்ளது என்பதை மேற்குலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழித்த அதேவேளையில், ஓர் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்று பார்த்தால், பொறாமை கொள்ளத்தக்க வகையில் சமூக பொருளாதார தரத்தை இலங்கை அடைந்துவிட்டது. எனினும் அதற்கான எந்த அங்கீகாரமும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் அங்கீகாரத்தை இலங்கை அரசும், அதன் ஜனாதிபதியும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். ஆயினும் அது நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயல்பான செயற்பாடு கொண்டதாக இருக்கின்ற போதிலும், மேற்குலகினால் ஊக்குவிக்கப்படாமல் உள்ளது.


பின்னணி: 27 ஆண்டுகால குருதிதோய்ந்த மோதலுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான தோல்வியுடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ‘வொண்டர்லாண்ட்டில் அலிஸ்’ (Alice in Wonderland) என்ற திரைப்படக்காட்சி போன்று, நாடு எல்லையற்ற அச்சமும் நிச்சயமற்றதுமான ஒரு சூழலிலிருந்து, அமைதிக்கும் முழுமையான தணிவுக்கும் ஒரே இரவில் மாறியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு வந்து, ஒப்பிட முடியாத மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உணவக உரிமையாளர்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதிகளில் சென்ற அனைத்து வழிப்போக்கர்களுக்கும் தாமாகவே உணவு வழங்கினர்.