இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை

75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. 

மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-கத்தோலிக்க மோதலும் 1915இல் நடந்தேறிய சிங்கள (பௌத்த) – முஸ்லிம் கலவரங்களும் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதம் சகிப்புத் தன்மையற்றது என்பதையும் இனத்தை விட மதம், அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை நாம் உணரலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கை தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட முரண்பாடுகள், சுதந்திர இலங்கையில் பன்மைத்துவ சமத்துவ சமூகம் என்பது சவால் நிறைந்தது என்பதைக் காட்டி நின்றது. 

சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மையப்படுத்தி இருந்தன. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு, ஜனநாயகப் படுகொலையின் தொடக்கத்துக்குக் கட்டியம் கூறியது. 

இந்தப் பின்புலங்களில், சுதந்திரமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர், 1983 இல் நடந்தேறிய இனக்கலவரம், இலங்கையை முழுமையாகத் திருப்பிப்போட்டது.  ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ எனப் பலவாறு இது அழைக்கப்படுகிறது. இந்தக் கொடுநிகழ்வை, ‘கலவரம்’ என்று சுட்டுவதே தவறானது. ஆனால், வரலாற்றில் அது அவ்வாறு தான் அழைக்கப்பட்டு, பொதுப்புத்தி மனநிலையில் ஒரு கலவரவமாகவே நிலைபெற்றுள்ளது. 

இதன் பின்னாலுள்ள அரசியலும் வரலாறும் கவனிப்புக்கு உள்ளாகவில்லை. இக்கொடூரம் நடந்தேறி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 40 ஆண்டுகால வரலாற்றை இணைக்கின்ற ஒரு பொது இழை, இனமுரண்பாடு ஆகும். 

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இனமுரண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கவியலாது. 

இன்றைய நெருக்கடியை, வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அதை அவ்வாறு பார்க்கவே அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. கதையாடல்கள் அதன் வழிப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் தேசியவாத எழுச்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வர்க்கப் பரிமாணத்தையும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் வரலாறு சொல்லப்படாமையையும் அவதானிக்கலாம். இது தற்செயலானதல்ல; வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது, எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பன எல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. 

நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா, பொய்களா என்பது ஒரு புறமிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. 

நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமாயின், சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன? அந்த மாற்றங்களின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை? அவற்றை இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை, எழுதப்பட்ட வரலாற்றுக்குள் இருந்து வடிகட்டி எடுக்க வேண்டிய தேவை நமக்குள்ளது. வரலாற்றுத் திரிப்பும் மறைப்பும் நலன்களைப் பேணும் முக்கிய கருவிகளாக உள்ளன. 

இனங்களுக்கு இடையிலான பகைமையாக வரலாறு சித்திரிக்கப்படுகிற போது, உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள், அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே இத்தொடர் 1983இல் நடந்தேறிய திட்டமிட்ட வெறிச்செயலின் பின்னணி, அதை சாத்தியமாக்கிய காரணிகள், அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை நோக்க விளைகிறது. 

எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர்களாக நாம் இந்தக் கொடுஞ்செயலில் இருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள் எவை? சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் மோசமான குறுந்தேசியவாத அரசியலின் வழிப்பட்டு சீரழிவதற்கான அடிப்படைகள் எவை? ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் மேலும் ஒடுக்கப்படுவதையும் அதற்கு சிறுபான்மைத் தேசியவாதங்களின் முக்கியமான பங்கு யாது ஆகிய கேள்விகளையும் ஆழ நோக்க விளைகிறது. 

சமூகத்தில் ஆழ வேரூன்றிய பண்பாட்டு வேர்களைக் களைவதில் நேரடியாகக் குறுக்கிடுவதால் வரக்கூடிய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இலங்கையின் கொலனிய நிர்வாகம் பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்களுக்குத் தடையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. 

கொலனியத்தைத் தூக்கி எறியாமல், சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே பௌத்த, சைவ, இஸ்லாமிய மீளெழுச்சிகள் நிகழ்ந்தன. இவற்றிடையே குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் இருப்பினும் முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. இது பேசப்பட வேண்டியதொன்று. 

அதைப்போலவே, இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி வரை சிங்களவரிடையே சாதி அடிப்படையிலான அரசியல் போட்டி இருந்த போதும், தமிழ்-சிங்களவர் என்ற அடிப்படையிலான முரண்பாடு முன்னணிக்கு வரவில்லை. இனத்தை விட, மதம் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. சாதியும் மதமும் மொழியை விட முக்கியமான அடையாளங்களாகச் செயற்பட்டன. 

தமிழர் – சிங்களவர் என்ற மொழிவழி வேறுபாட்டின் அடிப்படையில் அரசியல் விருத்தி பெறாமைக்கான காரணம், எந்த விதமான பண்பாட்டு ஒற்றுமைகளையும் விட மேலாக, அந்த இரு அடையாளங்களுக்கும் உட்பட்ட மேட்டுக் குடிகளுக்கும் ஓரளவு வசதி படைத்த பகுதியினருக்கும் இடையே போட்டிக்குரியதாகப் பொதுவாக எதுவுமே இல்லாமை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே வலுவான நல்லுறவு இருந்தது. இது இன்றுவரை பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்ற ஒன்று! 

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் தேசிய அரசியல் உருவாக்கத்தில் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழரும் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதை,  கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. 

கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள், தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்துகிற சூழ்நிலை ஏற்பட்ட போது, அவ்விரிவாக்கத்தில் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன. 

ஏன் அவை முன்னின்றன? அதற்கான காரணம் என்ன? இது எவ்வாறு இலங்கை இனமுரண்பாட்டில் சாதாரண உழைக்கும் மக்களைப் பாதித்தது என்ற வினா விரிவான ஆய்வுக்கு உட்பட்டதில்லை.

இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையோ அதைப் புதிய திசைவழிக்கு இட்டுச்சென்ற 1983 வன்செயல்களையோ நோக்கவியலாது. இவ்வன்செயல்கள் தவிர்த்திருக்கக் கூடியவை; ஆனால், அதை அரசாங்கம் விரும்பவில்லை. 

இந்நிகழ்வு, இலங்கையின் அயலுறவுகளில் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணியது. மேற்குலகக் கவனம், தமிழர்களுக்கு ஆதரவானது என்ற மாயை வலுப்பட்டதன் கொடிய விளைவுகளை, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டியது. 

ஆனால், இன்று அந்தக் கொடிய நினைவுகளின் 14 ஆண்டுகளின் பின்னரும் மேற்குலகின் மீதான மாயை இன்னும் வலுவாகவுள்ளது; இது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகம், இந்த கையறு நிலைக்கு ஏன் வந்தது? இதற்கு வெறுமனே சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் மட்டுமே காரணமா? 

இது கவனமாகவும், பொறுப்புணர்வுடன், சுயவிமர்சனத்துடனும் தமிழ்ச் சமூகம் கேட்கவேண்டிய கேள்வி. இக்கேள்வியை அமைதியாகக் கடந்துபோவது, கொல்லப்பட்ட மக்களுக்கும் விடுதலைக்காக உயிர்நீர்த்தோருக்கும் இழைக்கும் அநீதி. 

சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதில் நமது தலைமைகளின் பங்கென்ன? இன்னமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று புதிய கதைகளோடு தொடரப்போகிறோமா?

 உடல்களின் மீது அரசியல் செய்வது புதிதல்ல. அதைத் தொடக்கி வைத்ததும் 1983 தான். நாம் கற்காத பாடங்களையே கடந்த 40 ஆண்டுகால வரலாறு காட்டி நிற்கிறது என்பதே பெருந்துயர். 

Leave a Reply