இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்

சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் ஆகிய தேசிய இனங்களினதும் பரங்கியர், மலேயர், ஆதிவாசிகள் சமூகங்களின் இணை- சம்மேளனமாக இலங்கை அமைய வேண்டும் என சமூக சீராக்கல் இயக்கம் புதிய அரசமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்காக நடாத்திய கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியவம்சாவளி தமிழர்களாக தற்போது அரச ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும் வரும் மலையக மக்களை, மலையக மக்கள் என அரசப்பினூடாக அங்கீகரிப்பதே அவர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பற்கு ஏற்ற அடையாளம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மிகவும் விரிவாக உள்ளடக்கி உறுதி செய்யும் அதேவேளை, அவற்றை அனுபவிக்க எவ்வித மட்டுபாடுகளும் இருத்தலாகாது என்றும், அத்தோடு அடிப்படை உரிமைகள் மீறும் போது அதற்கான நிவாரண ஏற்பாடுகள் தனி அத்தியாயமாக அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் எற்றுக் கொள்ளப்பட்டது. அடிப்படை உரிமைக்கான நீதிமன்ற நிவாரணங்கள் மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் அரசமைப்பில் ஏற்பாடு இருக்க வேண்டும் எனவும் அடிப்படை உரிமைகளை விசாரிக்க மாவட்ட ரீதியில் விசேட நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்தல், மனித உரிமைகள் ஆணைக்குழுவை மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் மீளமைத்து அது சட்ட அங்கீகாரம் பெற்ற கட்டளைகளை வழங்கும் அமைப்பாக மாற்றுதல் மற்றும் ஒப்புட்ஸ்மனுக்கு அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக கட்டளை வழங்க அரசமைப்பில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நவீன இலங்கையை தாபிப்பதற்கு அரசின் அதிகாரங்கள் தேசிய இனங்களுக்கு பிரஜைகளுக்கும் அவர்களை பலப்படுத்தும் விதத்தில் அதாவது மக்களைப் பலப்படுத்தும் விதத்தில் அமைவதே பொருத்தமானது. எனவே அதிகார பரவலாக்கம் தேசிய இனங்களின் நிலத் தொடர்ச்சியை அடிப்படைகளை கருத்திற்கொண்டும் நிலத்தொடர்ச்சியற்ற அம்சங்களை கருத்திற்கோண்டும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குதல் என்ற தளத்தில் நின்று அமையவேண்டும் என ஒருமைப்பாடு எட்டப்பட்டது. அந்த வகையில் வடக்கு கிழக்கு வாழ் இலங்கை தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி பிரதேசம் அமைய வேண்டும் எனவும், அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு சுயாட்சி பிரதேசம் அமைய வேண்டும் எனவும், நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு மலையக மக்களுக்கு ஒரு சுயாட்சி பிரதேசம் அமைய வேண்டும் எனவும் தென் பகுதிகளில் வாழும் சிங்கள தேசிய இன மக்களின் அரசியல் அதிகாரத்தை உறுதி செய்ய ஏற்புடைய எண்ணிக்கையில் சுயாட்சி பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சுயாட்சி பிரதேச அலகு ஒன்றில் வசிக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள ஏனைய தேசிய இனங்களின் சுயாட்சியை உறுதி செய்ய உப சுயாட்சி பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியை அடிப்படையாக கொண்டும், நிலத் தொடர்ச்சியற்ற அம்சங்களை கருத்திற் கொண்டும் உருவாக்கப்பட வேண்டும். சுயாட்சி பிரதேச அலகுகளுக்கு பரவலாக்கப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெறாத அரசமைப்பில் ஏற்பாடுகள் கொண்டிருக்க வேண்டும். அதேவேளை சுயாட்சி உப பிரதேச அதிகார அலகில் சுயாட்சி பிரதேச அலகு அத்துமீறி தலையிடுவதை தடுக்கும் கையிலும் ஏற்பாடுகள் அரசமைப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த விடயங்களையும் அரசமைப்பு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்ட ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளையும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு நுவரெலியாவில் நாடத்தும் மக்கள் கருத்து கேட்பில் வழங்குவதற்கு சமூக சீராக்கல் இயக்கம் ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.