“ஈபிஆர்எல்எப்” அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டால் இன்று மாகாணசபை முறைமை இருந்திராது

(தினகரன் வார மஞ்சரி)

உங்கள் கட்டுரைகள் அடங்கிய ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றீர்கள். அவ்வாறு தலைப்பிட்டமைக்கான காரணம் என்ன?

கடந்த 30 – –40 வருடங்களில் அதிகாரம்,- அரசியல்- சமூகம், பாரதூரமான அளவில் வன்முறை மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை சகஜமானது, இயல்பானது, என்ற சொரணையற்ற தன்மை பரவலான நிலைமை. இவை சாதாரணம் என்பது போல. தமிழர் சமூகத்தில் இந்த வன்முறை காட்டுமிராண்டி நிலையை எய்தியது. எனவே இங்கு சமூகத்தில் ஜனநாயக மனித உரிமை விழுமியங்கள் தூக்கிநிறுத்தப்பட வேண்டியிருக்கிறது.

தமிழர்களில் ஒரு பல்லாயிரம் பேர் துரோகிகள் என்ற பெயரில் கொல்லப்பட்டது சரியே என்ற ஒரு போக்கு இன்று வரை ஆதிக்க கருத்தியலாக இருக்கிறது. இது தகர்க்கப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட பேசுவதற்கு செளகரியமான மனித உரிமை மீறல்கள் பற்றி, தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள்.
தெற்கிலும் அவ்வாறு தான். தத்தம் குறும்,பெரும் தேசிய பெருமித உணர்வுகளை மற்றும் தீண்டாமையை மனித உரிமைக்கும் மனிதாபிமானத்துக்குமான அளவு கோல்களாக வைத்திருக்கிறார்கள். சுயவிசாரணை எதுவும் கிடையாது.
அவ்வாறு சுய விசாரணை செய்யாத சமூகம் உருப்படுமா? அது கருதும் நியாயம், நீதி தான், கிட்டுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
தமிழர் சமூகத்தில் நிலவும் தீண்டாமை பற்றியோ, சகோதரப் படுகொலைகள் பற்றி யோ, அல்லது அண்மைய வரலாறு முழுவதும் நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியோ பேசாமல் குறிப்பிட்ட, தெரிவு செய்யப்பட்ட மனித உரிமை பற்றி பேசுவது.
நீதியான சிந்தனை உள்ளவர்கள் பல ஆயிரக்கணக்கில் துரோகி நாமகரணத்துடன் எமது சமூகத்தில் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கிரேக்க தத்துவஞானி சோக்கிரட்டீசின் வாரிசுகள் அவர்கள். ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்டதற்காக கொல்லப்பட்டவர்கள்.
அவர்களின் சரித்திரம் மண்ணோடு மண்ணாக முடியாது. அவர்களின் சரித்திரம் வரலாற்றின் தோள்களில் சுமந்து வரப்பட வேண்டும்.
ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கக் கூடாது என்ற நிலை 30 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரமாக நிலவிய சமூகம் இது. இப்போதும் அந்த கருத்தியல் செல்வாக்கு செலுத்துகிறது. எனவே தான் நெஞ்சில் ஈரம் உள்ள தலைமுறை தேவைப்படுகிறது. கழிவிரக்கம் அல்ல. மனிதனும் சோசலிசமும் என்ற தனது கட்டுரையில் சே புரட்சிவாதி மனித குலத்தின் மீதான பேரன்பினால் வழிநடத்தப்படவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துவார்.
எமது சமூகத்தில் வறுமையாக -வரட்சியாக போன விடயம் இது. அதற்காகத்தான் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய, போலிகளற்ற, அர்ப்பண சிந்தையுள்ள மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறையொன்று எமது சமூகத்தில் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
அந்த புதிய தலைமுறை வரலாறு முழுவதும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எமது சமூக ஆதிக்க சிந்தனை முறையில், அமைப்பு முறையில் அவர்கள் மேலெழுந்து வருவது சவாலான பணி. ஆனால் இந்த சவாலான பணி இடையறாது நிகழ வேண்டும்.யாழ். மைய மேலாதிக்க சிந்தனை போக்கு தகர வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். ஆனால் அவதூறுகளையும் நிந்தனைகளையும் சக்கரவியூகமாக எதிர் கொள்வார்கள். கெட்டி தட்டிப்போன மரபார்ந்த அதிகார வர்க்கம் இதனை இலகுவில் அனுமதிக்காது. தமிழ் ஆயுதப் போராட்டம் பாசிசமாக சிதைவுற்றது ஒருபுறமிருக்க அந்த பழம் பெரும் மரபார்ந்த கனவான்களின் புதிய வாரிசுகள் யுத்தத்தின் பின், மக்களின் அங்கீகாரத்துடன் திரும்பவும் அதிகாரத்திற்கு வந்தார்கள். அந்த மரபார்ந்த தொடர்ச்சி நிலவுகிறது.
அர்ப்பண உணர்வு கொண்டவர்களின் காலம், கண நேர தற்காலிக வெற்றியும் நீண்டகால போராட்டமும் துயரமுமாகத்தான் எமது சமூகங்களில் மாத்திரமல்ல, வேறு பல நாடுகளிலும் காணப்படுகிறது. மக்கள் இப்போது அந்த அரசியலில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறையின் எழுச்சி தொடர்வதற்கான சந்தர்ப்பம் உடனடியாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே சுயாதீனமாக போராடுகிறார்கள். எண்ணிக்கை அளவில் நிகழும் இந்த மாற்றம் குணாம்ச ரீதியாக புதிய தலைமைத்துவம் நோக்கிய தலைமைத்துவ தேடலுக்கான வாய்ப்பான தருணமே. உடனடியாக இல்லாவிடினும் நீணடகாலத்தில் அது சாத்தியமானது, நிஜமானது.
சில சந்தர்ப்பங்களில் சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறலாம்
தமிழர் போராட்ட வரலாற்றின் வலிகளை அதிகளவில் சுமந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனாலும், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ 8 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும், ஏனையவர்களின் தியாகங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு அவர்கள் துரோகிகளாகவே பார்க்கப்படும் நிலை தொடர்கின்றதே?
இந்த துரோகிகள் பட்டம் தமிழ் ஆதிக்க அரசியலினால் நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டது. யாழ்மையவாத தீண்டாமை, பால் சமத்துவமின்மையின் எச்சசொச்சங்களில் இது வேர்கொண்டது. ஆயுதம் ஏந்திய தமிழ் பாசிசம் அதனை விதியாக கட்டமைத்தது. தனது நலனுக்கு குறுக்கே வருபவர்களை எல்லாம் அது துரோகியாக சித்தரித்தது. உடல் மீதியின்றி அழித்தது. அந்த இரத்தம் தோய்ந்த ஆதிக்க கருத்தியல் சமூகம் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. குறிப்பாக தமிழ் ஊடகங்களில். உதாரணமாக தமிழர்களின் உள்ளக ஜனநாயக மீறல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் தமது பிள்ளைகள், உறவுகள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று பொதுவெளியில் கூறமுடியாத நிலை. மனம் மறுகிப் போன நிலை, இன்றளவில் காணப்படுகிறது.
அவர்கள், தாம் அதனை பொது வெளியில் கூறக்கூடாதாக்கும் என்று கருதும் அளவிற்கு பொது வெளி பரோபகாரம் அற்றதாக இருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு, எல்லைப்புறங்களில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு தமிழர் போராட்டத்தின் பேரில் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகள் பற்றி நீடித்த பொருட்படுத்தபடாத மெளனம்.
சிலர் பகிரங்கமாக பேசுகிறார்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் தமது கொல்லப்பட்ட காணாமல் போன உறவுகள் தொடர்பில் மெளனமாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தை நேசித்த பலர் தீண்டத் தகாதவர்கள், துரோகிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது புதிய தலை முறைக்கு தெரியாத சங்கதி.
இப்போது மெதுவாக இந்த கருத்தில் உடைப்பேற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் துரோகிகளாக்கப்பட்டவர்கள் தொகை பிரமாண்டமான அளவில் அதிகரித்திருக்கிறது.
சிறுபான்மையினரின் ஆதரவுடன் உருவான அரசு, எதிர்க்கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித் தலைவர் என்ற பதவிகள் தமிழர்கள் வசமிருந்தபோதும், ஓரங்குல நிலத்தை விடுவிப்பதற்குக்கூட மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்களே?
பொதுவாகவே தமிழர்களின் பிரதான அரசியல் என்பது தேசியவாத போதையை அன்றாட வாழ்வில் ஏற்றிக் கொண்டிருக்கும். மக்களின் ஜீவாதார நலன்கள் அதில் மூழ்கடிக்கப்படும்.
உலகில் சமூக அக்கறை கொண்ட தலைவர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்குவது வீடு சுகாதாரம் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்களில் அக்கறை செலுத்துவார்கள்.
ஆனால் தமிழ் ஆதிக்க அரசியல் சுயநிர்ணயம், -தேசம், -சமஸ்டி,- ஜெனிவா- துரோகிகள்-, அரசியல்கைதிகள்- காணாமல் போனோர்,- பயங்கரவாத தடைச்சட்டம் என்ற சொற்பதங்களுக்கு புகுந்து கொண்டு, விபரீத சித்து விளையாட்டுக்களில் ஈடுபடும். இந்த சொற்களின் உண்மையான அர்த்தம், தாற்பரியம் பற்றி ஒரு பிரக்ஞையும் கிடையாது. விசுவாசமும் கிடையாது.
எல்லாப்பாதையும் ரோமுக்குத்தான்- பாராளுமன்றம், மற்றும் மாகாண சபை
அங்கு இந்த சொற்களின் அர்த்தங்கள் எதுவும் இருக்காது. எல்லா சமரசங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் தனது தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்து கொள்ளும். மக்கள் நலனுக்காக அல்ல.
மக்களின் ஜீவாதார நலன்கள் அதன் பிரக்ஞையில் உறைக்காது. இருக்காது. அவை சுவரசியம் அற்றவை. ஆர்வம் ஊட்டுவன அல்ல. உதாரணமாக நிலம் சம்பந்தப்பட்ட அதிகாரம் மாகாண சபைக்கு இருக்கிறது. அதற்கான நியதிச்சட்டங்களை அவர்கள் உருவாக்கி மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும்.
மத்தியில் இருந்து பிரச்சினை வரும்.வராதென்றில்லை. அவர்கள் அடுத்து நீதிமன்றம் செல்ல வேண்டும்.
உதாரணமாக முன்னாாள் பிரதம நீதியரசர், இலங்கையில் இரண்டு சட்டவாக்க சபைகள் இருக்கிறதென்று சொன்னதால் தானே பிரச்சினை. ஆனால் அந்த தீர்ப்பு முக்கியமானது. இவ்வாறு 300க்கு மேற்பட்ட நியதிச் சட்டங்கள் இருக்கின்றன. அவை மாகாண சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இல்லாதவிடத்து ஏற்கனவே உள்ள பழைய சட்டங்கள் தான் செல்லுபடியாகும்.
ஏனோ அக்கறைப்படுகிறார்கள் இல்லை?
புதிய அரசு இவர்களின் அதரவுடன் தான் நிறுவப்பட்டது. எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் பல உருப்படியான காரியங்களை ஆற்றியிருக்கலாம் ஆற்றவில்லை.
வரலாறு வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் காரியம் ஆற்றாதபோது, மக்கள் அந்த வெற்றிடத்தில் உறுதியாக இயங்குகிறார்கள் இப்போது அது தான் நடைபெறுகிறது.

மாகாண சபை உருவாக்கத்தில் ஈபிஆர் எல் எப்பின் பங்கு முக்கியமானது. எனில் தற்போதைய வட மாகாண சபையின் செயற்பாடுகளை, அதன் செயற்பாடின்மையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ஈபிஆர்எல்எப், அன்று போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று சக கட்சிகளுடன் இறங்கியிராவிட்டால், இன்று வடக்கு கிழக்கில் மாகாண சபைமுறை இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அன்று ஒரு புறம் புலிகளும் மறுபுறம் பிரேமதாச அரசும் மாகாண சபை முறையை முடக்குவதற்கான முழு மூச்சான சதி நாச வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை, மாகாண சபை உறுப்பினர்கள்-, அரச ஊழியர்கள் உயிரை துச்சமென மதித்து அர்ப்பண உணர்வுடன் பணியாற்றினர். தவறுகள் நேரவில்லை என்றில்லை. நிறைய தவறுகள் நேர்ந்தன… அவற்றுக்கும் மத்தியில் பல்லினபாங்கான மந்திரிசபை அமைக்கப்பட்டது.
தென்னிலங்கையில் கிளர்ச்சி தீவிரமடைந்த நிலையில் பலரும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் முற்போக்கான சமூக செயற்பாட்டளர் பலர் திருமலையில் தஞ்சம் அடைந்திருத்தனர்.
இத்தனைக்கும் மத்தியில், திருமலையை நவீன நகரமாக்குவதற்கும், பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கரையோரப்பாதை மற்றும் புகையிரதப் பாதை ஒன்றை நிறுவுவதற்கும் -யாழ்ப்பாணத்தில் மென்பொருள் உற்பத்தியை தொடங்குவதற்கும் இந்திய அனுசரணையுடன் முயற்சிக்கப்பட்டது.
மீன்பிடித் துறைமுகங்களை மறுநிர்மாணம் செய்வது, விவசாய ஆராய்ச்சி நிலையங்களை வடக்கு கிழக்கில் பரவலாக நிறுவுவது, பல்லின சமூகங்களை பிரதிபலிப்பதாக அமைச்சரவையை அமைப்பது, மாகாண அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியில் இருந்த முஸ்லிம் காங்கிரசிற்குமிடையே சுமுகமான உறவு நிலை காணப்பட்டது. மாகாண சபை என்ற கருத்துருவை கட்டுமானத்தை நிறுவுவதில் பல்வேறு விமர்சனங்கள், குறைபாடுகள் காணப்பட்டாலும், மாகாணத்திற்கான சட்டம் ஒழுங்கு முறை ஒன்று நிறுவப்பட்டது. ஓன்றும் சுமுகமாக நிகழவில்லை. பல்வேறு கெடுபிடிகள் பிக்கல் பிடுங்கல்கடன் தான் நிகழ்ந்தது. பெருமளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது.
குறிப்பாக வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதில் மாகாண சபை அக்கால கட்ட நிலைமையில் வினைத்திறனுடன் செயற்பட்டது.
பாரம்பரிய நிலங்களை பாதுகாப்பதிலும், மக்களின் மீள் குடியேற்றத்திலும், தனது ஆற்றலை வெளிப்படுத்தியது.
ஆனால் கெடுபிடிகள் எதுவும் இல்லாத காலத்தில் தங்களின் தயவிலேயே புதிய மத்திய அரசு 2015 இல் உருவாகியிருக்கும் நிலையிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் வினைத்திறனுடன் செயற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தொடர்பிலான 300க்கு மேற்பட்ட நியதிச் சட்டங்களை இப்போது ஆக்கி முடித்திருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அது அவ்வாறு நிகழவில்லை.
பெருந்தொகையான சட்ட அறிஞர்களையும் கல்வியாளர்களையும் ஈடுபடுத்த வாய்ப்பிருந்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் நீண்ட தூரம் போகவில்லை.
இருக்கும் அதிகாரங்கள் வழங்களை வைத்து ஆற்றக் கூடிய காரியங்கள் ஏராளம்.
கல்வி -சுகாதாரம்- போக்குவரத்து- பாதை -சுற்றாடல், நிலம், சட்ட ஒழுங்கு என ஏராளம் வாய்ப்புக்கள். ஆனால் சம்பந்தமில்லாத விடயங்களை கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி நாட்டதில் கொள்ளாத நிலை தான் தொடர்கிறது.
ஆனால் வடமாகாண சபை அப்படி ஆகி இருக்கிறது. கிழக்கு மகாண சபையின் தாக்கமான செயற்பாடுகள் எதுவும் வெளிவரவில்ைல.
சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பிராந்தியங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முக்கிய ஜனநாயக மாற்றம் இந்த மாகாண சபை. அதற்கு அதிகாரங்களை நிலைநாட்டுவது பெறுவது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கடமை. அந்த கடமை செவ்வனே செய்யப்பட வேண்டும்.
பாராளுமன்றம் தவிர்ந்த சட்டவாக்க சபை அது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றில்லை.
அதற்கு ஒளி படைத்த கண்களும் உறுதி கொண்ட நெஞ்சும் வேண்டும்.
மாகாணசபைகள் செயற்படுவதற்கு கட்சி காழ்ப்புணர்வுகளுக்கப்பால் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்
அதற்கான ஜனநாயக இடைவெளி வேண்டும். மாகாண சபையை வழி நடத்துபவர்கள் மக்களை நிர்வகிப்பவர்களாக இருக்கவேண்டும. மத்திய அரசு-, அண்டை நாடு, -1.5 மில்லியன் புலம்பெயர் மக்கள், -சர்வதேச சமூகம் என வளங்களைக் கொண்ட எமது வடக்குகிழக்கு மாகாண சபைகளுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
சாதுரியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் நடந்து கொண்டால் சாதிக்க முடியும்.

அரசியலில் நீங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டியதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுகின்றதே?
வரலாறு தனி மனிதர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. தனிமனிதர்களுக்கான வரலாற்று பாத்திரங்கள் இருக்கின்றன அவை வரையறைக்குட்பட்டவை. சமூக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான இடைவெளியை உருவாக்க வேண்டும்.
அனுபவங்கள் பெரிதாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பக்குவம் உருவாக வேண்டும். புதிய தலைமுறையுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே தற்போதைய எனது பிரதான முயற்சி.