ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி

(தோழர் க. பத்மநாபா)

1986 இல் எழுதியது

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் தூணாக விளங்கிவந்த தோழர் சிறி எம்மிடையே இன்று இல்லாமல் போனது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். அதனிலும் மேலாக சிறி எப்படி இறந்தார் என்பது உலக நாகரீகத்தின் முன்னால் தமிழினமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாக அமைந்தது தான் என்னை மிகவும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்குகின்றது.

1970-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப காலங்களிலிருந்து அதன் உறுப்பினராக இணைந்து செயற்படத் தொடங்கிய சிறி அவர் படுகொலை செய்யப்பட்ட நாள் வரை ஈழத் தேசத்தின் விடுதலை என்னும் குறிக்கோள்களில் வழுவாதவராக செயற்பட்டு வந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகச் சிலரே அனைத்து வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்ட காலந்தொட்டு உறுதியோடு பங்குபற்றினர். சிறிலங்கா அரசின் கொடூரமான சித்திரவதைகளுக்கும் நான்கு வருடங்களுக்கும் மேலாக சிறை வாழ்க்கைக்கும் உட்படுத்தப்பட்ட போதிலும் விடாப்பிடியாக ஈழப்போராட்டத்தின் எல்லா வளர்ச்சியிலும் தனது வராற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றி வந்திருக்கின்றார். ஈழ தேச விடுதலையின் மீது சிறி கொண்டிருந்த நேர்மையான பக்தியையும் உறுதியையும் யாரும் எள்ளளவேனும் சந்தேகப்பட முடியாது என்பதனை சிறியோடு நெருங்கிப்பழகி நன்கறிந்தவன் என்ற வகையில் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

சாதாரண உறுப்பினராக போராட்ட இயக்கத்தில் காலடி எடுத்த வைத்த சிறி ஆற்றல் மிக்க போர் வீரனாகவும் பின்னர் சிறந்த தலைவனாகவும் செயற்பட்டு வந்திருக்கின்றார். தமது கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் உறுதி மிக்கவராகவும் பிடிவாதக்காரராக இருந்து வந்த போதிலும் ஏனையவர்களோடு இணக்கம் கண்டு இணைந்து செயற்படும் பண்பு சிறியிடம் நிறையவே இருந்தன.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் சிறியின பங்கு மறுக்கப்பட முடியாத வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் தமக்கும் எவ்வளவோ கருத்து முரண்பாடுகள் நடைமுறை முரண்பாடுகளும் இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறியைக் கொல்வதற்கு பலவகையான எத்தனிப்புகளில் ஈடுபட்டிருந்த போதிலும் ஒற்றுமை கருதி அவற்றைப் பெரிதுபடுத்தாமல் ஈழத்தேசிய விடுதலை முன்னணியில் அவர;களும் சேர்ந்து இயங்குவதற்கு முன்வந்த சிறியின் மனோபாவம் ஒற்றுமையின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்திய பிரதான நிகழ்ச்சியாகும். ஆனால் அதே தமிழீழ விடுதலைப் புலிகள் தான் பின்னர் அவரைப் படுகொலை செய்தார்கள் என்பது தான் வேதனைக்குரியதாகும்.

நட்புறவு கொண்டவர்கள் மீது சதிமுயற்சிகளில் ஈடுபடும் பழக்கம் சிறியிடம் இருந்ததில்லை. மாறாக மனந்திறந்து முகத்துக்கு நேராக தனது கருத்தை உறுதியாகக் கூறும் பழக்கமே சிறியிடம் இருந்தது. எவ்வளவோ பெரிய அனுபவங்களை இந்தப் போராட்டக் காலத்தில் பெற்றிருந்தும் கூட சிறி தான் நட்புறவு கொண்டவர்களுக்கும் தமக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதைக் கண்டால் அதற்காக அதிகமாக கவலைப்படுபவராகவும் அதே போல் தனக்குப் பிடிக்காதவர;கள் யாராக இருந்தாலும் அவர்கள் முகத்தைக் பார்க்கக்கூட கூச்சப்படுவதுமான குழந்தை மனம் கொண்டவராகவும் இருந்தார்.

தமது இயக்கத்தின் உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் நெருக்கடிகளை சந்தித்த வேளைகளில் அவற்றைப் பதற்றமின்றி மிகவும் சாவதானமாகக் கையாளும் திறன் சிறியிடம் இருந்ததை என்னால் பலதடவைகள் அவதானிக்க முடிந்திருக்கின்றது. தனக்கு மூத்தவர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் சிறிலங்கா அரசினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பெருஞ்சுமைகளைப் பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டது. மிகவும் பொறுப்புடனும் உறுதியுடனும் தமிழீழ விடுதலை இயக்கத்தன் தலைமைப் பொறுப்பை மிகவும் சிறப்பாக தமக்கு மூத்தோரின் வழியில் நின்று தவறாது ஆற்றி வந்திருக்கின்றார் சிறி.

சிறியிடம் சொந்தக்காரன் ஒரே சாதிக்காரன் ஊரைச் சேர்ந்தவன் போன்ற குறுகிய மனோபாவங்கள் இருந்ததில்லை. ஈழத்தேச விடுதலை மீது அக்கறை காட்டிய ஈழத்தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருமுகமாக செயற்பட வேண்டும் என்கின்ற பரந்த தேசியவாத அணுகுமுறை சிறியிடம் காணப்பட்டது. இதனை சில பாராளுமன்ற அரசியற் சந்தரர்ப்பவாதிகளும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் சிலரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்                                                                                                    கொள்ள முயற்சித்தனர். இதனால் சிறியின் தமிழீழ விடுதலை இயக்கமும் பல வீண் பழிச் சொற்களுக்கெல்லாம் ஆளாகவேண்டி ஏற்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தையும் சிறியையும் பயன்படுத்திக்கொண்டு மேற்குறிப்பிட்ட தீயசக்திகள் ஈழப்போராட்டத்தில் தமது கால்களைப் பதித்துக்கொள்ள முற்பட்டன. அத்தீய சக்திகளை அனுபவத்தில் அடையாளம் கண்டுகொண்ட சிறி அவற்றிற்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென உறுதியான முடிவெடுத்துச் செயற்பட ஆரம்பித்த காலத்தில் தான் சிறி படுகொலை செய்யப்பட்டார;.

சிறியை படுகொலை செய்து தமிழீழ விடுதலை இயக்கத்தை அழிக்கத் திட்டமிட்டு செயற்பட்டவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் மட்டும் தான் என்பதில்லை. வேறுசில சக்திகளும் ஈடுபட்டிருக்கின்றன. அவை காலம் வரும் போது அம்பலத்திற்கு வருமென்பது நிச்சயமே.

சிறி வாழுகின்ற போது எப்படி ஈழ விடுதலைக்குப் பங்காற்றினாரோ அவ்வாறே இறந்தும் தமது பங்கைச் செலுத்திக்கொண்டிருக்கின்றார். சிறியின் மீதான படுகொலையானது ஈழத்தில் உள்ள ஜனநாயகச் சக்திகளுக்கும் ஈழ மக்களுக்கும் நல்ல படிப்பினையாகும். அது ஈழப் போராட்டத்தில் உள்ள பல சக்திகளை தெளிவாகத் தரம்பிரித்து அடையாம் காட்டி தந்திருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனைக்கு கால்கோல் காட்டியிருக்கின்றது.

ஈழத்தேசிய விடுதலை முன்னணியிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கத்தை உடைத்து ஆயுதந் தாங்கிப் போராடுகின்ற அமைப்புக்களிடையில் வேறொரு வகைத் தன்மையான கூட்டணியை உருவாக்குவதற்கு பல சக்திகள் பல தடவைகள் கடுமையக முயற்சித்தன. ஆனால் சிறி அதற்கு எள்ளளவும் இடமளிக்காமல் செயற்பட்டு வந்தார் என்பதை தெளிவுபடுத்தும்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உண்மையான நல்ல நண்பராக இருந்துவந்த சிறியின் இறப்பை நாம் தனிப்பட்ட ரீதியில் பேரிழப்பாகக் கருதுகின்றோம். ஈழ விடுதலையானது இனியும் இவ்வாறான வரலாற்றுப் பக்கங்களைச் சேர;த்துக்கொள்ளக்கூடாது என்பதை ஈழ தேச பக்த சக்திகள் அனைவரும் உணர்ந்து செயற்படுவோமாக.

சிறிசபாரத்தினம் நினைவு மலரிலிருந்து . . . . . . . . .