உதவி ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட ரூபா 10000 தொடர்ந்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது – மக்கள் ஆசிரியர் சங்கம்

ஆசிரிய உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபா கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அது உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். எனவே, இம்மாதமேனும் தங்களின் மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கும் என எண்ணிய ஆசிரிய உதவியாளர்களுக்கு வழமை போலவே ஏமாற்றமே மிஞ்சியது. இம்மாதம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நாங்கள் சில வலய கல்விக் காரியாலய கணக்காளர்களிடம் கேட்டபோது கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்தவித சுற்றறிக்கையும் வரவில்லை எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட 6,000 ரூபா கொடுப்பனவே இம்மாதமும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

எனவே மீண்டும் ஒரு முறை ஆசிரிய உதவியாளர்கள் கல்வி அமைச்சரினால் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவு பிரச்சினை தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் பல காலமாக ஆசிரியர் உதவியாளர்களின் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துவதாக கூறி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்வாசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் பெப்ரவரி மாதத்திலிருந்து இக் கொடுப்பனவு அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் மே மாதம் நிலுவைகளுடன் இக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். மே மாத கொடுப்பனவில் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டது போன்று இவ்வாசிரிய உதவியாளர்களுக்கு இக் கூடிய கொடுப்பனவோ நிலுவையோ வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக நாம் வலய கணக்காளர்களிடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பாக எழுத்து மூலமான கட்டளைகள் எதுவும் இது வரை தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அப்படி கிடைக்குமாயின் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாசிரிய உதவியாளர்கள் மிகுந்த வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு கொடுப்பனவு அதிகரிப்பதாக கூறி ஆசிரிய உதவியாளர்கள் ஏமாற்றப்படிருந்தனர். இவ்வாறு தொடர்ந்து வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி கல்வி அமைச்சு ஆசிரிய உதவியாளர்களை எமாற்றி வருகின்றது.
மலையக தோட்டப்புர பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள் ஆட்சேர்க்கப்பட்டு 2 வருடங்கள் ஆகின்ற போதும் அவர்களுக்கு தொடர்ந்தும் மாதாந்த கொடுப்பனவாக 6000 ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது. எனினும் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச வேதன சட்டத்தின் படி தனியார்துறையில் தொழில் செய்யும் ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் 10,000 ரூபாவாக ஆக்கப்பட்டிருந்து. இச்சட்டம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2016ஆம் வரவுசெலவுத் திட்ட கொடுப்பனவு சட்டத்தின் பிரகாரம் தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே இன்று தனியார் துறை ஒன்றில் வேலை செய்யும் ஒருவர் ரூபா 12,500 குறைவாக தொழிலுக்கு அமர்த்தப்பட முடியாது. ஆசிரிய உதவியாளர்கள் அரச துறையில் இருந்த போதும் அவர்களுக்கு இந்த சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் 2016 ஜனவரி மாதத்தில் இருந்தே கொடுப்பனவுகள் 12,500 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் கல்வி அமைச்சு அதனை செய்ய வில்லை. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட நிகழ்வின் போது இவர்களது கொடுப்பனவை 13,000ஃ- ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். எனினும் 10,000 ரூபா வழங்குவதாக கூறப்பட்டுவருகின்ற போதும் அதுவும் வழங்கப்படவில்லை.
ஆசிரிய உதவியாளர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளவர்கள் ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின்படி ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் 2 ற்கு தகுதியானவர்கள். இது தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது கல்வி அமைச்சின் அதிகாரி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் முன்னைய ஆட்சியில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமையவே 6000 ரூபா கொடுப்பனவுக்கு ஆட்சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களாக சொல்லப்படும் கல்வி இரா ஜாங்க அமைச்சர் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் 2 ற்கு தகுதியானவர்கள் என்பதை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே கல்வி இராஜாங்க அமைச்சர் முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் விட்ட தவறை தொடராமல் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் 2 ற்கு உள்ளீர்ப்பற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அது வரையில் அதிகரிக்கப்பட்டதாக கூறப்படும் 10,000ஃ- ரூபாவை நிலுவையுடன் விசேட சம்பள பட்டியல் மூலமாவது மிக விரைவில் இவ்வாசிரிய உதவியாளர்களுக்கு கிடைக்க இராஜாங்க கல்வி அமைச்சர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். என குறிப்பிட்டார்.