உத்தரப் பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா?

தமிழ்நாடும் உத்தரப் பிரதேசமும் வெவ்வேறான அரசியல், கலாசாரக் கட்டமைப்புகளைக் கொண்டவை என்ற போதிலும் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டிற்குச் சில செய்திகள் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பா.ஜ.க. முக்கால் பங்கு இடங்களை (312) வென்றிருக்கிறது. அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட சிறிய கட்சிகளின் வெற்றியையும் கணக்கில் கொண்டால், பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ள இடங்கள் 325.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மின்னணுப் பணப்பரிமாற்றத்திற்கு ஊக்கம் என்ற அன்றாட வாழ்க்கையைச் சிரமமாக்கிய நடவடிக்கைகளுக்குப் பிறகும் இத்தகைய வெற்றியை பா.ஜ.க. பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இதன் பின்னுள்ள அரசியல் என்ன?

ஒருவகையில் இந்த வெற்றி உலகம் எந்தத் திசையில் நடக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் வெற்றி. எல்லா நாடுகளிலும் மக்கள்தொகையில் ஏதோ சில மக்கள் பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள். சிங்கப்பூரில் சீனர்கள். இலங்கையில் சிங்களர்கள். மலேசியாவில் மலாய்க்காரர்கள். ஒரு தேசத்தின் குடிமக்கள் என்ற பொது அடையாளத்திற்குள் நிறத்தாலோ, மொழியாலோ, கலாசாரத்தாலோ, மதத்தாலோ அவர்கள் தனியான அடையாளம் சூட்டப்பட்டு அல்லது அதை விரும்பி ஏற்று, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது சரியா தவறா என்பது அறிவார்ந்த தளத்தில் நடக்கும் விவாதம். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இருக்கின்றன என்பதும் அவற்றை மக்கள் நிராகரிக்கவில்லை என்பதும் யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தை அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரம் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவற்றை ஊக்குவிக்கின்றன. ஊக்குவிப்பதற்காக முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன அல்லது கூர்மைப்படுத்துகின்றன. அப்படிச் செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைகின்றன.
பெரும்பானமையராக உள்ள மக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முடியாது என்ற கள யதார்த்தத்தின் காரணமாக அவை சிறுபான்மையராக உள்ளவர்களைத் தங்கள் பால் கவர்ந்திழுக்கும் செயல்களை மேற்கொள்கின்றன. அந்தச் செயல்கள் சில நேரங்களில் பெரும்பான்மையினரின் வாய்ப்புக்களைப் பாதிக்க நேர்ந்தாலும் அரசியல் கட்சிகள் அதைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள்தான் பிரிந்து கிடக்கிறார்களே, ஒட்டு மொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லையே. இதுதான் வாக்கு வங்கி அரசியல்.

அண்மைக்காலமாக உலகில் பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த வாக்கு வங்கி அரசியலை நிராகரித்துப் பெரும்பான்மையிசத்தை மீட்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் பெற்ற வெற்றி இதன் ஓர் அடையாளம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இங்கிலாந்து மக்கள் வாக்களித்தது இன்னுமொரு உதாரணம்.
ஒபாமாவின் சில கொள்கை முடிவுகளால் வெள்ளையினத் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். அது டிரம்பின் வெற்றிக்கு விதையானது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை ஐக்கிய ராஜ்யத்தின் பொருளாதாரத்தைப் பாதித்தது. அதன் எதிரொலி பிரக்சிட்.

இந்தியாவில், குறிப்பாக மொழியால் வேறுபடாத இந்தி பேசும் மாநிலங்களில், பெரும்பான்மையினரின் பொது அடையாளம் இந்துக்கள் என்ற மத ரீதியான அடையாளம்.
இந்து மதத்தின் சாபக்கேடு, பலவீனம் அதன் உட்பிரிவான ஜாதி அமைப்பு முறை. உத்தரப் பிரதேசத்தில் சில கட்சிகள் இந்த பலவீனத்தைத் தங்களுக்கு சாதகமாகக் கொண்டு வாக்கு வங்கி அரசியலைக் கட்டமைத்தன. சமாஜவாதி யாதவர்களையும் பகுஜன் சமாஜ் கட்சி பட்டியலின மக்களையும் அடித்தளமாகக் கொண்டிருந்தன. இந்த அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்து என்ற பொது அடையாளத்தைப் பலவீனப்படுத்தி வெற்றிகளைப் பெற்று வந்தன. சிறுபான்மையினரைக் கவர்ந்திழுப்பதில் கவனம் செலுத்தின. இந்தப் பிரித்தாளும் உத்தி, நம்மை ஆண்ட காலனி ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற அரசியல். வெள்ளைக்காரர்கள் விடை பெற்ற பிறகு நம் அரசியல் கட்சிகள் அதைக் கையில் எடுத்துக் கொண்டன.

இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் உள்ள மக்களைப் போன்றே, சிறுபான்மையினரைக் கவர்ந்திழுக்கப் பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாதிப் பிளவுகளை ஒருங்கிணைத்து மத அடையாளத்திற்குட்பட்டு, கூட்டணி அமைத்தது பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

ஜனநாயக நடைமுறையை ஏற்றுக் கொண்டுவிட்ட நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாகச் சிறுபான்மையினர், உரிமைகளை விட பொருளியல் வளர்ச்சியை முதன்மையாகக் கருதுகிற காலம் இது. சட்டப் புத்தகங்களில் உள்ள சமத்துவங்களை விட நடைமுறையில் காணும் பொருளாதார வளர்ச்சி பாதுகாப்பளிக்கிறது என்ற எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இனக்குழு அல்லது சமூகம் என ஒரு திரளாக முக்கியத்துவம் பெறும் உரிமைகள், தனிநபர்களாகத் தளர்வுற்றுள்ள நிலையில் முக்கியத்துவம் இழந்து பொருளியல் முன்னேற்றம் முதன்மை பெறுவது காரணமாக இருக்கலாம்.
இது சரியா தவறா என்ற வாதங்களுக்கு அப்பால், இது மனித குலத்தின் இயல்பாக இருந்து வந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

ஆயுதங்களால் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து “அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்ற நிலைக்கு மாறிப் பின் அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் தங்களைப் பாதுக்காப்பர் என்ற எண்ணம் கொண்டு இன்று “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற நிலைக்கு வந்திருக்கிறது மனித குலம்.
இந்த இயல்பை அனுபவ ரீதியாக முதலில் புரிந்து கொண்டவர்கள் எந்தச் சமூகத்திலும் சிறுபான்மையினரே. பெரும்பான்மைச் சமூகத்தோடு உரிமைகள், சமத்துவம் என்ற உணர்வுநிலைக் கருத்துக்களுக்காக முரணிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பதைவிட சில விட்டுக் கொடுத்தலோடு இயைந்து வாழ்வது நடைமுறையில் பலனளிக்கும் என்ற எண்ணம் மெல்லப் படர்ந்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள், அவர்கள் நலனின் பாதுகாவலன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சமாஜவாதியை ஒதுக்கிவிட்டு, ஓர் இஸ்லாமிய வேட்பாளரைக்கூட நிறுத்தாத பா.ஜ.க.விற்கு வாக்களித்திருப்பது இதன் காரணமாகத்தான்.
சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையினர்தான். மக்கள் தொகையில் ஏழு சதவீதத்திற்கு அதிகமாக அவர்கள் இருந்ததில்லை. சிங்கப்பூர் குடியரசாவதற்கு முன்பே சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தது. திடீரெனத் தன் மீது சுதந்திரம் திணிக்கப்பட்ட நிலையில், இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத சிங்கப்பூர், பொருளியில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தனித்துத் தாக்குப் பிடிப்பதற்கேகூட, மனிதவளத்தைத்தான் சார்ந்திருந்தது.

பணியிடங்களில் திறனை மேம்படுத்த, அது கல்வியில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதன் விளைவு, இன்று பெரும்பான்மையான தமிழ்க் குடும்பங்களில் வீட்டு மொழி ஆங்கிலமாக இருக்கிறது. அரசியல் அடையாளங்களுக்காகவும்,சமூக ரீதியாகப் பலன் பெறவும் தமிழ் அடையாளம் தேவை எனக் கருதும் மூத்த தலைமுறையினர் இது குறித்துக் கவலை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் தங்கள் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து விடவில்லை என்பதால் பல குடும்பங்களில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் இது குறித்த வருத்தம் இருப்பதாக உணரமுடியவில்லை. பொருளியல் முன்னேற்றம் தந்த வாழ்க்கையை அவர்கள் மகிழ்ச்சியாகவே உணர்கின்றனர்.

இது ஒரு சமரசம்தான். பெருமபான்மைச் சமூகத்தோடு இணைந்து முன்னேறுவதற்காகச் சிறுபான்மைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட சமரசம். தனி இன அடையாளங்களைவிட நாட்டின் முன்னேற்றம் என்ற பொது இலக்கு முக்கியம் எனக் கருதி மேற்கொண்ட சமரசம்.
இதன் மறுபக்கம் இலங்கை. இலங்கையர் என்ற பொது அடையாளத்தைவிட இன உரிமைகள் முக்கியம் எனக் கருதி நடந்த ஆயுதப் போரட்டத்தின் வடுக்கள் இன்னமும் வலிக்கின்றன.
இந்த இரு தீவுகள் சொல்லும் பாடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இது அவரவர் சிந்தித்து விடைகாண வேண்டிய கேள்வி.

தனி அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள உரிமைப் போர்கள் நடத்தித் தனித்துப் போய் வாழ்வியல் முன்னேற்றங்களில் பின் தங்கிவிடப் போகிறோமா அல்லது ஒரு பொது லட்சியத்திற்காக பெரும்பான்மையோடு இணங்கிச் செல்லும் சமரசங்களை ஏற்று பொருளியல் முன்னேற்றங்களைக் காணப் போகிறோமா? “தமிழன் என்று சொல்லடாவா’ “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வா?’
இதில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது நூறு சதவீதம் மனநிறைவளிக்காது. இன்றையத் தேவை என்னவென்று எண்ணித் தேர்வதே அறிவுடைமை.

ஆனால், உலகைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று தெரியும். 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முகிழ்த்த தத்துவங்கள், இந்தப் புத்தாயிரத்தில் வடிவமிழந்து வாசமிழந்து கொண்டிருக்கின்றன. காலனி ஆட்சிக் கால அரசியல் முறைகளான பிரித்தாளுதல், அதன் நீட்சியாக அடையாள அரசியல், அதன் தொடர்ச்சியான வாக்கு வங்கி அரசியல் ஆகியவை பலவீனமுற்று வருகின்றன.

இது இந்தியாவிலும் தொடங்கிவிட்டது என்பதன் அடையாளம்தான், உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள். சமத்துவம் என்பது சமவாய்ப்பு என்பதாக மாற்றம் கொண்டு வருகிறது. சலுகைகள் சம வாய்ப்புக்கு முரணானவை என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. ஜனநாயகம் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பின் பங்கேற்பு என்பதிலிருந்து சிறுபான்மையினரின் சம்மதத்தோடு பெரும்பான்மையினரின் ஆட்சி என வடிவம் கொள்கிறது. தேசியம் என்ற கருத்தாக்கம் உலகமாயமாதல் என்ற நகர்வில் கரைந்து போகிறது. ஜனநாயகம், சமத்துவம், தேசியம் என்ற தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட மத்திய வர்க்கம், பொருளியல் வளர்ச்சி என்ற தனிமனித இலக்கின்பால் தன்னை இழந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? உலகோடு ஒட்ட ஒழுகுமா? ஒதுங்கித் தனித்துப் போகுமா

(மாலன்)