உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்”

சீனாவைவிட கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டது இத்தாலி தான்.. சொன்ன பேச்சை கேட்காமல் இத்தாலி மக்கள் அசால்ட்டாக இருந்ததால் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகிறது.. இத்தாலியில் கொத்து கொத்தாக விழும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்துவிட்டன.. அப்போதுதான் மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலிய சென்று உதவிகளை செய்ய தொடங்கியது.

52 டாக்டர்கள், நர்ஸ்களை அந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தது கியூபா.. தங்கள் உயிருக்கும் ஆபத்து வரும் என்று தெரிந்துதான் இவர்கள் இத்தாலிய மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தனர்.. இத்தாலி மட்டுமல்ல… மேலும் 5 நாடுகளுக்கும் கியூபா டாக்டர்கள் சிகிச்சை தந்து வருகின்றனர்… இன்னமும் உதவி செய்ய தயாராகவும் உள்ளனர் என்றால் இதற்கு என்ன காரணம்? இந்த மகத்தான சேவைக்கு பின்னால் ஒரு மாவீரரின் லட்சிய கனவு அடங்கி உள்ளதுதான் அடிப்படை!

அமெரிக்கா பிறருக்கு உதவிகளை அளித்து உயிர்காக்கும் அளவுக்கு கியூபா ஒன்றும் பணக்கார நாடு இல்லை.. இன்னமும் ஓர் ஏழை நாடுதான். ஆனால் ஒரு சில குறிக்கோள்களை வகுத்து அதற்குள் பயணித்து வருகிறது.. தன்னை நசுக்கும் அமெரிக்கா போன்ற ஜாம்பவான்கள் இருந்தும்கூட இந்த பயணத்தில் எந்த தங்குதடையும் இல்லை.. உலகில் தீராத ஒரு பகை இருக்கிறதென்றால் அது கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள பகைதான்…

இது வாய்க்கால் தகராறும் அல்ல.. அடிதடி விவகாரமும் அல்ல.. “நீ யார் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த” என்று அமெரிக்கா கேள்வி கேட்டால், நாங்கள் என்ன உன்னைவிட குறைந்து போய்விட்டோம் என்று பதில் கேள்வி கேட்கும் கியூபா.. கென்னடி காலத்தில் இருந்தே.. 1959-லேயே இவர்களுக்குள் விவகாரம் வெடித்துவிட்டது. புரட்சி போராட்டம் பிடல்காஸ்ட்ரோவும், சேகுவேராவும் ஒன்றாக கரம் கோர்த்து, அவர்களின் புரட்சி போராட்டத்தில் வித்திட்டதுதான் மக்கள் குடியரசு.

இதற்கு பிறகுதான் அமெரிக்காவின் பரம எதிரி லிஸ்ட்டில் ஒன்றானது கியூபா.. இன்றுவரை அந்த பகை படு ஸ்ட்ராங்காக உள்ளது.. ஒன்றல்ல, இரண்டல்ல.. நூற்றுக்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை இந்த குட்டி நாட்டின் மீது விதிக்க ஆரம்பித்தது அமெரிக்கா.. பொருளாதார தடைகளுடன் சேர்த்து ஏராளமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் கியூபா மீது திணித்தபடியே இருந்தாலும், அதை மிக சாதுர்யமாக கையாண்டார் பிடல் காஸ்ட்ரோ.

கற்று கொடுங்கள் அமெரிக்காவை அடித்து சாய்க்க ஆயுதம் உதவாது.. “அறிவாயுதமும், சுயசார்பும்”தான் கை கொடுக்கும் என்பதை உணர்ந்தவர் காஸ்ட்ரா. அதைதான் கையில் எடுத்தார். “தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்” இதைதான் மக்கள் முன்பு முன்வைத்தார்.

காஸ்ட்ரோ… அனைவருக்கும் இலவச கல்வியை புகுத்தினார்.. தனியார் பள்ளிகளே இங்கு இல்லை.. முழுக்க முழுக்க அரசே பள்ளிகளை எடுத்து நடத்தி அதில் இலவசமாக கல்வியை வழங்கியது.. அதனால்தான் கியூபாவில் எழுத படிக்க தெரிந்தவர்களின் அளவு 98.2 சதவீதமாக உயர்ந்தது.

டாக்டர்கள் இதில் கூடுதலாக காஸ்ட்ரோ கவனம் செலுத்தியது மருத்துவத்தில்தான்… தன்னுடைய நாட்டு மருத்துவ குழு உலகம் முழுமைக்கும் உதவவேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருந்தார் காஸ்ட்ரோ… புரட்சி வென்ற பின்பு கியூபா தன்னுடைய மருத்துவர்களில் பாதி பேரை இழந்துவிட்டது… இதற்கு காரணம், அங்கிருந்த 6,000 டாக்டர்களில் 3,000 பேர் கியூபாவை விட்டு வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதனால்தான் எஞ்சியிருந்த டாக்டர்களை ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் 2 பிரிவாக பிரித்தனர். ஒரு வகையானவர்கள் தங்கள் நாட்டை கவனித்து கொண்டாலும் இன்னொரு குரூப் மருத்துவர்கள் உலகம் முழுவதும் குறிப்பாக பேரிடர் சமயங்களில் அந்தந்த நாட்டு மக்களுக்கு விரைந்து சென்று உதவுவார்கள்.

எனவே கியூபாவின் இன்றைய மருத்துவ உதவி என்பது திடீரென முளைத்த விஷயம் இல்லை.. எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் காஸ்ட்ரோவின் விருப்பப்படியே 50 வருடமாகவே கியூபா தன் சேவையை விடாமல் நடத்தி வருகிறது. மருத்துவம் இது ஒரு கம்யூனிச நாடு என்பதால் அந்த நாட்டில் உள்ள எல்லா சொத்துக்களும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு இருக்கின்றன.

அதனால் மருத்துவத்தை மனிதர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதில் கியூபா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. அந்த நாட்டில் எல்லோருக்குமே ஒரே மாதிரி வைத்தியம்தான்.. ஏற்றத்தாழ்வுகள் இல்லை.. மருத்துவத்தை வைத்து லாபம் சம்பாதிக்கும் தொழிலாகவும் கியூபா இதுவரை நினைத்ததும் இல்லை.

இன்றைக்கு உலகில் இருக்கும் தலைசிறந்த டாக்டர்களில் பாதிபேர் கியூபாவில்தான் இருக்கிறார்கள். இத்தாலி கியூபா தந்து வரும் இந்த மருத்துவ உதவிதான் கொரோனாவைரஸிடம் சிக்கித் தவிக்கும் பலருக்கும் மலைபோல உதவி வருகிறது.

அமெரிக்கா என்னென்ன பொருளாதார தடைகளை கியூபா மீது விதித்ததோ அது அனைத்தையும் முழுமையாக ஆதரித்த நாடுதான் இத்தாலி.. இப்போதும் அவைகளை ஆதரித்து வரும் நாடும்கூட… நோய் தொற்று பரவ தொடங்கியவுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் இத்தாலி உதவியை கேட்க தொடங்கியது.. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை.

உயிரிழப்புகள் எதையும் மனசில் வைத்து கொள்ளாமல் தானாக உதவி செய்ய முன்வந்தது கியூபா.. 50க்கும் மேற்பட்ட கியூப டாக்டர்களை ஏர்போர்ட்டில் பார்த்ததுமே அவர்களை எழுந்து நின்று வரவேற்றனர் இத்தாலியர்கள்! கியூப டாக்டர்களின் வருகையால் உயிரிழப்புகள் கொஞ்சம் குறைய தொடங்கியது இத்தாலிக்கு சற்று தெம்பையே தந்தது.. முற்றிலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், கியூபா மெடிக்கல் டீம் தங்களுடன் இருப்பது ஆறுதலையும் நம்பிக்கையும் நிறையவே தந்து வருகிறது!!

பிரேசில் செல்வம் கொழிக்கும் ஐரோப்பிய நாட்டுக்கு ஒரு ஏழ்மையான கியூபா நாடு உதவி செய்து வருவதை உலக நாடுகளே இன்று திரும்பி பார்க்கின்றன.. “உங்கள் டாக்டர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்புங்களேன்” என்று வெனின்சுலா, ஜமைக்கா போன்ற நாடுகளே வாய்விட்டு வேண்டுகோள் விடுக்க தொடங்கி உள்ளன.. அவ்வளவு ஏன், இதே பிரேசில்தான் கியூபா டாக்டர்களை தீவிரவாதிகள் என்றனர்.. கேலி கிண்டல் செய்தனர்.. ஆனால் இப்போது பிரேசிலும் கியூபாவின் உதவியை கேட்க தொடங்கிவிட்டது.

டெங்கு காய்ச்சல் Cuban Interferon Alpha 2B என்ற மருந்தைதான் கியூபா கொடுத்து உதவியதால், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்று சீனஅரசே ஒப்புக் கொண்டுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.. இந்த Cuban Interferon Alpha 2B மருந்தானது 1981ம் ஆண்டு முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டு டெங்குவை ஒடுக்கி பெரும் வெற்றி பெற்ற மருந்தாகும். அதுதான் சீனாவுக்கு தற்போது கொரோனாவைரஸ் நோய்க்கு எதிராக பயன்பட்டுள்ளது.

தொற்று நோய்கள் முக்கியமாக, கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் 4 மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்…கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான, முற்றும் முழுமையான மருந்து இது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், எந்த மருந்துமே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை, WHO ஒப்புக் கொள்கிறது.. அதனால்தான் இந்த மருந்தையும் பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது. நன்றி கியூபா.

அதேபோல, 1,000 பேருடன் கரீபியன் பகுதியில் பயணித்து வந்த ப்ரீமர் சொகுசு கப்பலில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த கப்பலை எந்த நாடும் தங்கள் துறைமுகத்தில் நிறுத்தி கொள்ள ஒப்புக் கொள்ளாத நிலையில் “நாங்க இருக்கோம்’ என்று முன் வந்தது கியூபா.. நங்கூரமிட்டதற்கு அனுமதி தந்ததற்காக, பிரிட்டன் தன் இதயம் கனிந்த நன்றிகளை மறக்காமல் உதிர்த்தது.. “நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்” என்று பதாகைகளை ஏந்தி உரக்க சொன்னது!

நெருக்கடி ஆனால் இதில் எந்த நாட்டின் விரோதத்தையும் கியூபா மனசில் வைத்து கொள்ளவில்லை.. உலக மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது.. தன்னை வஞ்சித்த, தன்னை ஏளனம் செய்த, தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கின, எந்த நாட்டையுமே கியூபா குத்தி காட்டவில்லை.. பழி தீர்த்து கொள்ளவில்லை.. பதிலாக உயிரை மட்டுமே காப்பாற்றி உலக நாடுகளை வெட்கப்பட செய்து வைத்து வருகிறது.

உலகளாவிய மருத்துவமும், திறனான திட்டமிடலும், தீர்க்கமான எதிர்கால பார்வையையும், பொதுநல சிந்தனையையும் எப்போதுமே ஒரு நாடு வளர்த்து கொள்ளல் வேண்டும் என்பதும், ஒரு பேரிடரோ, பயங்கரமோ நாட்டை கவ்வும் சமயத்தில் தடுமாறி விழித்து கொண்டு திணற கூடாது என்பதற்கான பாடத்தையும் கியூபாவிடம் உலக நாடுகள் கற்று கொள்வது அவசியமாகிறது.

விமர்சனம் ஆனால் இதற்கும் குறை சொல்லி கொண்டிருக்கிறது அமெரிக்கா.. ‘இத்தனை காலம் இழந்த பணத்தை சம்பாதிக்கவே, கியூபா, தன் டாக்டர்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது’ என்று கொஞ்சம்கூட ஈவிரக்கவில்லாமல் அமெரிக்கா விமர்சனம் செய்திருந்தது.. ஆனால் இதையும் கியூபா பொருட்படுத்தவில்லை.. “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதுதான் கியூபாவின் ஆல் டைம் பதிலடி!

சபாஷ்.. சல்யூட்! முடிவில்லாத பகை.. முடிவில்லாத தடை.. முடிவில்லாத வன்மம்.. இவைகளைகூட தன் சேவை மூலம் கற்பித்து விரைவில் அமெரிக்காவையும் வெட்கி தலைகுனிய வைக்கும் செயலில் கியூபா இறங்கினாலும் ஆச்சரியமில்லைதான்.. இந்த நேரத்தில் காஸ்ட்ரோவின் கனவும் நனவாகி கொண்டே வருகிறது.. அமெரிக்காவால் செய்ய முடியாததை, ஐரோப்பாவால் செய்ய முடியாததை சின்னஞ்சிறு கியூபா செய்து காட்டி வருகிறது.. உலக அரங்கில் ஹீரோவாக உருவெடுத்து வரும் இந்த ஏழை நாட்டிற்கு ஒரு ராயல் சல்யூட்!!