ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்

(Gopikrishna Kanagalingam)

ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பில், வெள்ளை மாளிகைக்கு வெளியே அண்மையில் (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போன்று வேடமிட்ட ஒருவர், கைகளில் இரத்தத்தோடு காணப்படுகிறார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் காணாமற்போன சர்ச்சை, ஒருவாறு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சோகமான தகவல் மூலமாகத் தான், அதன் முடிவை நோக்கிய பயணம் ஏற்பட்டிருக்கிறது என்பது, கவலைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது.

ஜமால் எப்படிக் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் உள்ளிட்ட பல தகவல்கள், இன்னமும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் மூலங்களிலிருந்து வெளிவராத நிலையில், இச்சர்ச்சை நீடிக்கப் போகிறது. என்றாலும் கூட, ஐக்கிய அமெரிக்காவின் கைகளில், குறிப்பாக அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளில், ஜமாலின் இரத்தம் காணப்படுகிறது என்பது தான், இதில் ஞாபகப்படுத்த வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது.

துருக்கியில் வைத்து, சவூதி அரேபியால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில், ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஐ.அமெரிக்காவும் எவ்வாறு பொறுப்பாகுவார்கள் என்ற கேள்வி எழலாம். அக்கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு, ஜமாலின் கொலை தொடர்பான பின்னணியை ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.
ஜமால் யார்?

ஜமால் கஷோக்ஜி என்ற பெயர், அண்மைய சில வாரங்களாக, உலகெங்கிலும் அறியப்படும் பெயராக இருந்தாலும், அதற்கு முன்னர், குறிப்பிட்ட அளவிலானோராலேயே அவர் அறியப்பட்டிருந்தார். அவரைப் பற்றி அறிந்திருக்க வேண்டுமானால், சவூதி மீதும் அதன் எதிர்பார்ப்பாளர்கள் மீதும் அக்கறை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஜமால் என்பவர், சவூதியின் மன்னர் குடும்பம் தொடர்பாக, குறிப்பாக அதன் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தொடர்பில், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த ஊடகவியலாளராக இருந்தார். மன்னர் குடும்பத்தை எதிர்த்தார் என்பதற்காக, மன்னராட்சிக்கு எதிரான புரட்சியாளராக எல்லாம், அவரைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை. அதைவிடச் சிறப்பாகச் சொல்வதானால், மன்னராட்சியில் ஊறித் திளைத்த ஒருவராகத் தான், ஜமால் இருந்தார்.

மன்னர் குடும்பத்தோடு நெருங்கிய ஒருவராக இருந்த ஜமாலுக்கு, அதிலிருந்து ஏற்பட்ட பிரிவு அல்லது இடைவெளி, சவூதியில் முடிக்குரிய இளவரசர் சல்மானின் எழுச்சியோடு இணைந்ததாக இருந்தது. அண்மைய சில மாதங்களில், சவூதியிலும் சரி ஏனைய அரேபியப் பகுதிகளிலும் சரி, சுயாதீனமான ஊடகங்களின் தேவை குறித்து, அவர் வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகவும் வஹாபிஸம் தொடர்பான அவரது எதிர்ப்பாலும், சவூதியால் வெறுக்கப்படும் ஒருவராக அவர் மாறியிருந்தார்.

என்ன நடந்தது?

இவற்றின் பின்னணியில் தான், இம்மாதம் 2ஆம் திகதி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்குள், ஜமால் சென்றிருந்தார். தன்னுடைய காதலியை மணமுடிக்க எதிர்பார்த்திருந்த அவர், முன்னைய திருமணத்திலிருந்து விவாகரத்துப் பெறுவது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவே, உள்ளே சென்றிருந்தார். அதன்போது தான், அவர் கொல்லப்பட்டார்.

அவரது கொலை தொடர்பாக, பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றை ஆராய்வது முக்கியமானது என்ற போதிலும், சவூதி அரேபியாவின் இந்த “வீரதீர” செயலின் பின்னால், அந்நாட்டின் நிலைமைகளைப் பற்றி ஆராய்வது அவசியமானது.

சவூதியில் முன்னேற்றம்

மேற்கத்தேய ஊடகங்களை அண்மைக்காலத்தில் பின்தொடர்ந்து வந்தவர்களிடம் கேட்டால், அண்மைய ஆண்டுகளில் அறியப்பட்ட “கொடூரமான நாடு” என்ற நிலையிலிருந்து,” சவூதி முன்னேறியுள்ளது” என்று தான் சொல்வார்கள். முற்போக்கான நாடாக அந்நாடு மாறுகிறது என்ற கருத்துத் தான், அண்மைக்காலத்தில் உருவாகி வந்தது.

அந்நாட்டில் காணப்பட்ட மோசமான நிலைகள் சிலவற்றில் மாற்றம் ஏற்பட்டமை உண்மையானது. வாகனமோட்டுவதற்குப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது; திரையரங்குகளுக்குத் தடை விதித்துக் காணப்பட்ட நிலைமை இல்லாது செய்யப்பட்டது; இசை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டது; ஊழலுக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, செல்வாக்கு மிகுந்த பலர் கைதுசெய்யப்பட்டனர்; அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் சமூகமாக நாடு மாற வேண்டும் என்ற கோரிக்கை, நாட்டின் முடிக்குரிய இளவரசரிடமிருந்து வெளியாகியிருந்தது; எண்ணெயை மய்யமாகக் கொண்ட பொருளாதாரத்திலிருந்து விலகி, நவீன பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் என்று, மேற்கத்தேய நாடுகள் பலவற்றை மகிழ்ச்சிப்படுத்திய மாற்றங்கள் பல காணப்பட்டன.

ஏனென்றால், சவூதி அரேபியாவில், பெண்களுக்கெதிராகக் காணப்பட்ட கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள் பற்றியெல்லாம், மேற்கத்தேய நாடுகளில் பெரிதளவுக்குக் கவனம் காணப்பட்டிருக்கவில்லை. வெளிப்புறத்தில் காணப்படும், “வாகனமோட்டுவதற்குத் தடை” என்ற விடயம் தான், சவூதி தொடர்பான விமர்சனங்களில் எப்போதுமே முக்கியமானதாக இருந்தது.

வாகனமோட்டுவதற்குப் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டமை, மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பெண்களை இரண்டாம்நிலைப் பிரஜைகளாக நடத்தும் ஏராளமான அம்சங்களுக்கு மத்தியில் (நீதிமன்றத்தில் 6 ஆண்களின் சாட்சி முக்கியம்; ஆண்களின் அனுமதியின்றி நடமாட முடியாது; திருமணம் முடிப்பதில் பெண்ணின் அனுமதி அவசியமில்லை என்ற ஏற்பாடு என்று, இந்த நிலைமைகள் நீண்டு செல்லும்), வாகனமோட்டுவது எந்தளவுக்கு முக்கியமானது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

ஆனாலும், வாகனமோட்டுவதற்குக் காணப்பட்ட தடை தான், மேற்கத்தேய நாடுகளின் அதிக கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், அத்தடை நீக்கப்பட்டதும், முற்போக்கானதொரு நாடாக சவூதி மாறிவிட்டது என்ற பார்வை ஏற்பட்டிருந்தது. அதற்கான முக்கியமான காரணமாக, முடிக்குரிய இளவரசர் சல்மான் காணப்பட்டார். மாபெரும் சீர்திருத்தவாதியாக அவர் கருதப்பட்டார். யார் இந்த பின் சல்மான்?

முடிக்குரிய இளவரசர் சல்மான்

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் தான், மொஹமட் பின் சல்மான். அதாவது, சவூதியின் அடுத்த மன்னர் தான் இவர். கடந்த ஓரிரு ஆண்டுகளாக, சவூதியின் முழுமையான கட்டுப்பாடு, இவரிடம் தான் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அதற்கு, ஒரு காரணமும் இருக்கிறது. சவூதி அரேபியா என்ற நாட்டுக்கு, சர்வதேச மட்டத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வந்த சூழலில், சீர்திருத்தங்கள் இடம்பெறும் நாடு என்று காட்டுவதற்காக, இளவரசர் சல்மான் பயன்படுத்தப்பட்டார்.

இவற்றின் பின்னால், அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை. இல்லாவிட்டால், அவற்றுக்குப் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

ஊழல் ஒழிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதன் பின்னால், பாரியளவுக்கு ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது; வாகனமோட்டுவதற்கான அனுமதி, பெண்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட, அது நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அதற்காக முன்னின்று செயற்பட்ட பெண் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்; எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால், “முற்போக்கான சவூதி அரேபியா” என்ற கூச்சலின் நடுவே, இவ்விடயங்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதற்கான பின்னணியில், ஐ.அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் முக்கியமானதாக அமைந்தது.

ஐ.அமெரிக்காவும் சவூதி அரேபியாவும்

சவூதி அரேபியாவின் கொடூரங்கள் மறைக்கப்படுவதற்கும், ஐ.அமெரிக்காவில் மாற்றம் ஏற்படுவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். மிக முக்கியமான தொடர்பு அங்கே இருக்கிறது.

ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவூதியின் மன்னர் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவரெனக் கருதப்படுகிறார். ஜனாதிபதியாகுவதற்கு முன்னரே, சவூதியின் மன்னர் குடும்பத்துடன், ஏராளமான வியாபாரத் தொடர்புகளை அவர் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது; தேர்தல் பிரசார மேடைகளில், அத்தொடர்புகளை அவர், பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சியில், ஐ.அமெரிக்காவுக்கு நன்மைகள் ஏற்படுகின்றனவோ, இல்லையோ, உலக ஒழுங்கில் பாரியளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால், அவரது ஆட்சியென்பது, பணத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. “இந்த ஒப்பந்தம்/ நடவடிக்கை மூலமாக, ஐ.அமெரிக்காவுக்கு (அல்லது தனக்கு) நிதியியல் ரீதியான நன்மைகள் இருக்கின்றனவா?” என்ற கேள்விக்குப் பிறகு தான், அனைத்து விடயங்களையும் அவர் ஆராய்கிறார் என்பதை, அவரின் கருத்துகள் மூலமாக அறிய முடிகிறது. வணிகமொன்றைக் கொண்டு நடத்தும் போது, நிதியியல் நன்மைகளுக்கு முன்னுரிமையை வழங்குவது வேறானது; நாடொன்றின் தலைவராக, அதிலும் உலகில் அதிமுக்கியமான நாட்டின் தலைவராக, இருக்கும் போது, பணத்தைத் தாண்டிய ஏனைய விடயங்கள் தொடர்பிலும் முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால், சவூதியின் தரப்பின் பணம் வழங்கப்படுமாயின், அவர்களோடு நெருங்கிச் செயற்பட முடியுமென்ற அவரது எண்ணமும் செயற்பாடுகளும், பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதற்கான சிறந்ததோர் உதாரணமாக, ஊடகவியலாளர் ஜமால் காணாமற்போனமை தொடக்கம், சவூதியின் மன்னர் குடும்பத்தைப் பாதுகாப்பதற்குச் செயற்படும், தகவல் தொடர்பாடல் அதிகாரி போலவே, ஜனாதிபதி ட்ரம்ப் செயற்பட்டிருந்தார். ஜமாலை, சவூதி கொன்றுவிட்டது என்ற சந்தேகத்தை, உலக நாடுகள் பலவும் எழுப்பிய போது, அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று, சவூதியின் தரப்பில் வழங்கப்பட்ட பதிலை நம்புவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், மன்னர் குடும்பத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கையின் போது, ஜமால் மரணித்தார் என்ற காரணத்தை வெளிப்படுத்த, சவூதி முயல்கிறது என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதே காரணத்தை, ஜனாதிபதி வெளியிட்டார்.

பின்னர், ஜமால் உயிரிழந்து விட்டார் என்று, சவூதியால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், சவூதியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தவே, அவர் முயன்றிருந்தார். ஒரு கட்டத்தில், “முடிக்குரிய இளவரசர் சல்மான், இதில் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று, இவ்விடயத்தில் யாரைப் பற்றி, தனக்கு அதிகமாகக் கவனமிருக்கிறது என்பதை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். ஏற்கெனவே, ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், சவூதியில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கே, ஜனாதிபதி ட்ரம்ப், தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல், ஜமாலின் கொலையைத் தொடர்ந்து, சவூதியுடனான தொடர்புகளைப் பற்றியும் அதனுடனான உறவைப் பற்றியும், உலகிலுள்ள பல நாடுகளும், ஆகக்குறைந்தது பேச்சுக்காவது தமது கவனத்தை வெளிப்படுத்தினாலும், ஜனாதிபதி ட்ரம்ப் மாத்திரம், பண ரீதியாக என்ன பாதிப்பு ஏற்படுமென்பதில் தனது கவனத்தை வெளிப்படுத்தினார்.

சவூதியுடன், 110 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் கைச்சாத்திடப்பட்ட ஆயுத ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய வேண்டும் என்ற அழுத்தங்கள் ஏற்பட்ட போது, அவ்வளவு பணத்தை இழக்க விரும்பவில்லை என்பதை, வெளிப்படையாக, மீண்டும் மீண்டும், ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.

ஏனைய நாடுகளைப் பற்றிய விமர்சனங்கள், தனியாக முன்வைக்கப்பட வேண்டியன. யேமனில், இதே சவூதி தலைமையிலான அரபுக் கூட்டணி, விமானத் தாக்குதல்களை நடத்தி, கொத்துக் கொத்தாகப் பொதுமக்களைக் கொன்ற போதும், அங்கு பட்டினி போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், சவூதியுடனான இராணுவ ரீதியான தொடர்புகளை, இந்நாடுகள் மீளாய்வு செய்திருக்கவில்லை.

அதேபோல், மேற்கத்தேய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற, கொல்லப்படப்போகின்ற பொதுமக்கள் தொடர்பான விவரங்களையும் மறக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

ட்ரம்ப் மாத்திரமா?

இதில், இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சவூதியின் அண்மைக்கால “முற்போக்கு” முகத்துக்கும் அதன் கீழ் அந்நாடு மேற்கொண்ட உண்மைகளை மூடி மறைத்ததிலும், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட முக்கியமான உண்மையாக, இதே பணியில், அவர் மாத்திரம் ஈடுபடவில்லை என்பதுவும் இருக்கிறது.

சவூதியில் தொடர்ந்துவந்த மனித உரிமை மீறல்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், ஐ.அமெரிக்கா, எப்போதுமே அந்நாட்டை, தமது நேச நாடாகத் தான் கருதி வந்திருக்கிறது.

சவூதியின் எண்ணெய்ப் பணமும் மத்திய கிழக்கில் அரசியல் தேவை கருதியும், இக்கூட்டணி, தொடர்ச்சியாகப் பலமாகவே இருந்திருக்கிறது. அந்நாட்டின் அண்மைக்கால ஜனாதிபதிகளில், ஓரளவுக்கு மிதவாதப் போக்கைக் கொண்டவராகக் கருதப்படும் பராக் ஒபாமா கூட, சவூதியோடு நெருக்கமான உறவுகளையே பேணிவந்திருக்கிறார்.

எனவே, ட்ரம்ப் மாத்திரம் தான், சவூதியுடனான இவ்வுறவைக் கொண்டிருந்தார் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. ஆனால், மனித உரிமைகளின் காவலனாகக் காட்டிக்கொள்ளும் ஐ.அமெரிக்கா, பணத்தின் முன்னால் மண்டியிட்டு, சவூதிக்கான உச்சநிலை ஆதரவையும் அங்கிகாரத்தையும் வழங்கியதில், ஐ.அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற “பெருமை”, ஜனாதிபதி ட்ரம்ப்புக்குத் தான் இருக்கிறது.

எனவே தான், இன்னொரு நாட்டிலுள்ள தமது துணைத் தூதரகத்துக்குள் வைத்து, தனக்கு எதிரான குரலை வெளிப்படுத்தும் ஒருவரை, பட்டப்பகலில் கொன்றுவிட்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை, சவூதி கொண்டிருந்தது என்பது ஒரு பக்கமாகவிருக்க, அதற்கான ஆதரவை வழங்கி வருவதென்பது, ஐ.அமெரிக்க – சவூதி என்ற பொருந்தாத் திருமணத்தின், இன்னொரு கேவலமான படியாகவே அமைந்து போனது.

கதைசொல்லல்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாக, சவூதி அரேபியத் தரப்பிலிருந்து, முற்றிலும் முரண்பாடான கருத்துகளே, ஆரம்பத்திலிருந்து கிடைக்கப்பெற்று வந்திருக்கின்றன. சவூதியின் இக்கருத்துகள், இவ்விடயத்தை மூடிமறைப்பதற்கு, சவூதி எவ்வாறு முயன்றது என்பதைக் காட்டுகின்றன.

சவூதியின் இக்கருத்துகள் எவ்வாறு மாற்றமடைந்தன என்பதற்கான காலக்கோடு இது:

ஒக்டோபர் 4: ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகிய பின்னர், ஆரம்பத்தில் மௌனம் காத்த சவூதி, முதன்முறையாகப் பதிலை வழங்கியது. துணைத் தூதரகத்திலிருந்து அவர், உயிருடன் வெளியேறினார் என, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 6: சவூதியிலிருந்து வந்த குழுவொன்றே, ஜமாலைக் கொன்றது என்ற செய்தி வெளியானது. அவ்வறிக்கையை “அடிப்படையற்றது” என்று வர்ணித்த சவூதி, அவற்றைப் பொய்கள் எனவும் குறிப்பிட்டது.

ஒக்டோபர் 8: ஐ.அமெரிக்காவுக்கான சவூதித் தூதுவரும் முடிக்குரிய இளவரசரின் சகோதரருமான காலிட் பின் சல்மான், அறிக்கையொன்றை வெளியிட்டு, கொலை தொடர்பான தகவல்கள் “முழுவதுமாகப் பொய்யானவை என்பதோடு, அடிப்படையற்றவை” எனக் குறிப்பிட்டார்

ஒக்டோபர் 15: ஜமால் காணாமற்போய் கிட்டத்தட்ட 2 வாரங்களாகின்ற நிலையில், சவூதி மன்னர் சல்மானுடன் தொலைபேசி மூலம் உரையாடிய ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஜமால் காணாமற்போனமை தொடர்பில் எதுவும் தெரியாது என, மன்னர் சல்மான், மிகவும் உறுதியாக மறுத்தார்” என்று தெரிவித்தார்.

ஒக்டோபர் 20: ஜமால் கொல்லப்பட்டார் என்பதை, சவூதி உறுதிப்படுத்தியது. துணைத் தூதரகத்துக்குள் ஏற்பட்ட முரண்பாடு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால் அவர் உயிரிழந்தார் என, சவூதியின் சட்டமா அதிபர் ஷேக் சௌட் அல்-மொஜெப் தெரிவித்தார்.

ஒக்டோபர் 21: ஜமாலின் மரணத்தை, “கொலை” என, அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் ஏற்றுக் கொண்டார். இக்கொலையைப் புரிந்தோர், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறிச் செயற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.