எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?

(Jeeva Kumaran)

இலங்கையில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மாவிட்டபுர கந்தசாமி ஆலய தேர் எரியூட்டப்பட்டது கறையூட்டப்பட்ட சரித்திரம். சுமார் 1½ மாதங்களுக்கு முன்னால் வரணியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் தேரை JCB இயந்திரம் கொண்டு இழுத்துள்ளார்கள் கோயிலின் நிர்வாகத்தினர்.

காரணம் குறிப்பிட்ட ஒரு சாதியினரின் கைகள் தேர் வடத்தில் பட்டால் தங்கள் கைகளும் கறைப்பட்டு விடும் என்று.

தாங்களும் சேர்ந்து தேரை இழுத்து புண்ணியத்தை தேட வேண்டிய மக்கள் அனைத்து புண்ணியத்தையும் JCB இயந்திரத்திற்கு கொடுத்துள்ளார்கள்.

பாவத்தை தாம் பெற்றிருக்கின்றார்கள்.

இன்னோர் ஆலயத்தில் இராணுவத்தினர் சேர்ந்து தேர் இழுத்த காட்சிகள் பரவலாகிக் கொண்டு இருக்கின்றது.

இந்துக்கள் பௌத்த ஆலயங்களும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் செல்வது இயல்பாக போய் விட்ட நிலையில் தேர் இழுக்க வந்த இராணுவத்தினரிடம் நீங்கள் வேட்டி கட்டிக் கொண்டு தான் தேர் இழுக்க வேண்டும்… உங்களிடம் இல்லாவிட்டால் நாங்கள் தருகின்றோம் என்று அதனைத் தருகிறோம். ஆதனைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று எங்கள் கோயில் நிர்வாகம் சொல்ல முடியாதது ஏன்?

பயம்!

ஒரே தமிழ் சமுதாயத்துக்குள் உள்ளவர்கள் தேரை இழுக்க கூடாது என்று இயந்திரத்தை வைத்து தேர் இழுத்தும்… இராணுவத்தினருக்கு முன்னால் கதைக்கப் பேச பயந்து மௌனித்தும் இரட்டை வேடம் இந்தப் போக்கு அல்லது இரட்டை முகம் ஒரு சமுதாயத்திற்கு எந்த சொந்த முகத்தையும் இல்லாமல் செய்து விடும்.

ஊர்ப்பிரச்சனை இது… இதில் ஏன் போய் தலையிடுவான்… என மக்கள் மௌனித்து இருந்தால் இன்னோர் மாவிட்டபுர சரித்திரங்கள் திரும்பும் காலங்கள் அதிக தூரத்தில் இல்லை.

அறிவு ஜீவிகள்… சமூக ஆர்வலர்கள்… அரசியல் பிரதிநிதிகள்…தேரில் உட்கார்ந்திருக்கும் ஆலய குருக்கள்கள்… இதற்கான தீர்வுகளை கண்டு கொள்ளாவிடில் தேரில் இளநீருக்கும் நுங்குக்கும் பதிலாக வெசாக் கூடுகளைக் கட்டி தேர் இழுக்க வேண்டி வரும்