எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம்

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களை விட, அதிக விசுவாசமானவர்களைக் கொண்டதொரு கட்சி, வேறொரு தெரிவை எடுக்க நியாயமில்லை. அப்பாவிகளுக்கும் அதிலும் குறிப்பாக, அப்பாவி போல் காட்டிக் கொள்ளும் அயோக்கியர்களுக்கும் இம்முடிவு, எதிர்பாராத முடிவாக இருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்தைக் குறிப்பாகப் போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில், அதன் இயலாமையை அறிந்தவர்களுக்கு, இது புதிதல்ல.

ஆறுகட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையின் பின், அதில் ஐந்து கட்சிகளின் கூட்டணி, 13 அம்சக் கோரிக்கை என்ற அனைத்து நாடகங்களும் அரங்கேறி, இறுதியில் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற முடிவைத் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோரில் ஒருபகுதியினர் எட்டியுள்ளனர்.

அவர்கள், ஒருவரைத் தோற்கடிப்பதற்காக இன்னொருவருக்கு ஆதரவு என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இது புதிதல்ல; இறுதிப்போரை நடத்திப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று தீர்த்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவரான, இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதரவளித்தபோதும், இதே போன்றதொரு சாட்டையே சொன்னது. இப்போது அது வேறு வடிவங்களில் தொடர்கிறது.

தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகச் சொல்லிக் கொள்வோரில், இன்னொரு பகுதி முன்னெடுக்கும் புறக்கணிப்பு அரசியல், எதுவித சாரமுமற்ற வெற்றுக் கூச்சலாகத் தொடர்கிறது. அதில், ஓர் அறிவாளி, “வடக்குக் கிழக்கில் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 80 சதவீதத்தினர் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் வாக்களிக்கவில்லை” என்று அவிழ்த்து விடுகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இரண்டு நிலைப்பாடுகளில் உள்ள தமிழ்த் தேசியத்தின் காவலர்களின் அரசியல் வங்குரோத்து வெளிப்பட்டு நிற்கிறது.

எந்தவொரு வேலைத்திட்டமும், முன்வைக்கப்படாமல் சாரமற்ற வார்த்தைகளிலே, தமிழ்த் தேசிய அரசியல் நகர்ந்து செல்கிறது. இது எடுத்துக் காட்டும் விடயம் ஒன்றே ஒன்றுதான். மக்கள் நலன்களை முன்னிறுத்தாத மக்களின் பிரச்சினைகளின் மேல், அக்கறையற்ற அரசியல் இவ்வாறுதான் இருக்க முடியும்.

இந்த அரசியல் வெறுமை, சில முக்கியமான செய்திகளைச் சொல்கிறது. தமிழர் அரசியலின் இந்த அவலம், திடீரென முளைத்ததல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் அவசியம்.

தமிழ் மக்களிடையே, தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கருத்து மிகவும் பழையது. டொனமூர் ஆணைக்குழுவின் முடிவுகளை ஏற்காமல், யாழ்ப்பாணத்தில் அரச சபைத் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டது.

1983 இல் பொதுத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக, 1982 ஆம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் நோக்கங்களை விளங்காமல், தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் பங்குபற்ற மறுத்து நின்றது. இளைஞர்களும் முதலில் அதில் பங்கு பற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பின்னர், மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் விளைவாக இந்த நிலைப்பாடு மாறியது.

1989 ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாஸவுக்கு எதிராகப் போட்டியிட்ட சிறிமா பண்டாரநாயக்காவுக்கு வெற்றி வாய்ப்பை மறுக்கிற விதமாக, வடக்கில் ஒருவிதமான முயற்சியும் தெற்கில் வேறொரு விதமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.

வடக்கின் தமிழர்கள், யாரையும் ஆதரிக்கக்கூடாது என்ற அடிப்படையில் சிறிமா பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் மீது, கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இடதுசாரி வேட்பாளரை ஆதரித்த அண்ணாமலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிலர், தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குடாநாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. தென்மாகாணத்தின் ஜே.வி.பி, தனது மிரட்டல் அரசியலையும் பிரசார இயந்திரத்தையும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற திசையில் முடுக்கிவிட்டது. யூ.என்.பிக்கு எதிரான உணர்வுகள், வலுவாக இருந்த இரண்டு பகுதிகளில் பகிஷ்கரிப்பு என்பது, யூ.என்.பிக்குச் சாதகமாக அமையுமென அறிந்து கொண்டே, அது பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில், சிறிமா ஆட்சிக்காலத்தில் நன்மை கண்ட விவசாயிகளின் ஆதரவு, வலுவாக இருந்ததால் சிறிமாவுக்கு அங்கே பெரும்பான்மையான வாக்குகள் கிட்டின. தென்மாகாணப் பகிஷ்கரிப்பால், யூ.என்.பி ஆதரவாளர்களை மறிக்க இயலவில்லை.

எனவே, ஜே.வி.பியின் பகிஷ்கரிப்பு, யூ.என்.பி எதிர்ப்பு, வாக்காளர்களையே பங்குபற்றாமல் தடுத்தது. அதன் விளைவுகளை பிரேமதாஸா ஆட்சிப்பொறுப்பை ஏற்று, சில மாதங்களிலேயே ஜே.வி.பி அனுபவித்தது.

அதேவேளை, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியவாதிகளின் ஆதரவு என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கானதாகவே இருந்து வந்துள்ளது; இது புதிதல்ல. அதன் தொடர்ச்சியே, சஜித்துக்கான தமிழரசுக் கட்சியின் ஆதரவும், அரசியல் அடிப்படை அறஞ் சார்ந்தது.

அந்த அறத்தைத் தமிழ்த் தேசிய வாதம் என்றும் பின்பற்றியதில்லை. மக்கள் அந்த அறத்தைத் தமிழ்த் தேசிய வாதிகளுக்குக் கற்பிக்கும்வரை, எமது அரசியலின் தலைவிதியை மாற்றவியலாது.