எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part5)

மதங்களில்……. இது சம்மந்தமான சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவனாக நான் இருந்தாலும் வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்புக்கள் கிடைக்கும் போது அத் தலங்களுக்குரிய ஒழுக்க நெறிமுறைகளை நான் மிகவும் ‘பவ்வியமாக’ பின்பற்றுபவன். இதற்கு சில காரணங்கள் உண்டு. எமது மக்களின் வாழ்வுடன் இந்த வழிபாட்டுத்தலங்கள் ஒரு கலாச்சார இணைப்பாக இணைந்திருப்பதுவும் பலரின் தூய்மையான நம்பிக்கைகளை மதிப்பவன் என்ற காரணத்திலானாலும் ஆகும். இந்த வகையில் இந்து ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் மேல் அங்கியை கழட்டி விட்டு நான் ஆலயங்களுக்குள் நுளைவேன். இதனையே நயினாதீவு ஆலயத்தினுள் செல்லும் போது பின்பற்றி ஒரு ஓரமாக பவ்வியமாக நின்றேன்.

ஒரு நிலையில் இரு கரங்களையும் எதனையோ வாங்குவதற்கு தயாராக இருப்பது போல் வைத்திருந்த போது இரு மோதங்கள் எனது கையில் வீழ்ந்த விடயம் எனக்கு அருகில் நின்ற என்மகனிலால் அதிசயkhக பார்க்கப்பட்டது. ‘அப்பா உங்களுக்கு மோதம் வழங்கியவர் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவரா…?’ என்ற கேட்டபோது ‘இல்லை’ என்ற பதிலுடன் ‘….இதுதான் வழிபாட்டு இடங்களில் தமிழர்களின் விருந்தோம்பல் மரபு இது ஒரு சிறப்பான அணுகுமுறையும் கூட….’ என்று சிறு பிராயத்தில் நாங்கள் கோவில்களில் மோதம், வடை, பொங்கல் என்று கூடிப் பரிமாறி மகிழ்ந்த தருணங்களை நீங்கள் இன்று பெறமுடியாத மேற்கத்திய இயந்திர வாழ்விற்குள் முழ்கி பல சந்தோஷங்களை இழந்து நிற்கின்றீர்கள் என்று வாழ்வியலின் ஒரு பக்கத்தை எடுத்தியம்பினேன்.

கோவில் உள், வெளிச் சுற்றாடல் எந்த அளவிற்கு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்ற என் பார்வையில் நயினை அம்மன் கோவில் இது பலமடங்கு முன்னேற்றம் அடைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்து. இதில் ஒரு முக்கிய விடயம் சும்மா எல்லா இடங்களிலும் கற்பூரம் எரிப்பதை தவிர்க்குமாறு போடப்பட்ட வேண்டுகோளை மக்கள் பின்பற்றுவது சூழலியல்(விஞ்ஞானம்) தெரிந்த மக்களுக்கு தெரிந்த காபன் ஓர் ஒட்சைட்டு ஆபத்தை தவிர்பதுவும். தீவிபத்திலிருந்து உயிராபத்துக்களைத் தவிர்பதும் என்ற பாதுகாப்புக் காரணங்களில் ஏற்பட்டக்கூடிய ஆபத்து பற்றி விழப்புணர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.(இது இன்று எல்லாக் கோவில்களிலும் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது).

அம்மன் தரிசம் முடிந்து புத்தன் தரிசனம் என்று யாவரும் செல்வதும் அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்குள் அம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பிரவேசிக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் ஒரு பார்வையுடன் அதனைக் கடந்து செல்வதும் எனக்கு சற்று அந்நியமாகப்பட்டாலும் மதங்களின் ஒழுக்காற்றல்களை நாம் எதேச்சாகராமாக நிராகரிக்கக் கூடாது மாறாக அறிவூட்டல் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியலை என்னுடன் வந்தவர்களிடம் அவர்களின் எள்ளி நகையாடும் வார்த்தைகளுக்கு பதிலாக கூறினேன். கூடவே கிறஸ்தவ மதத்தினரின் நம்பிக்கை இடங்களையும் இதற்கு அருகில் நிறுவி இருந்தனர். ஆனால் நோஞ்சான் ஆன கடைசிப்பிள்ளையின் தோற்றத்தில் இது காணப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.

தற்போது தோரயமாக 3000 மக்கள் வாழும் இத் தீவில் புத்த பிக்கு தவிர்ந்த எந்த சிங்களக் குடும்பமும் முஸ்லீம் குடும்பமும் இல்லை என்பது ஒரு கூடுதல் செய்தியாக கிடைத்தது. உயர்தரப் வகுப்க்களுடன் கூடிய பாடசாலை அமைந்திருந்ததும் பிள்ளைகள் ஆர்வத்துடன் பாடசாலை செல்வதும் பாடசாலை முடிவில் புதிதாக திறகப்பட்ட முருகன் கோவில் ஆலய மண்டபத்தின் மதிய உணவுப்பரிமாற்றம் இவரகளினால் நடாத்தபட்டதும் நாமும் இதில் கலந்து கொண்டோம். துiரியல் அமரந்து சம்மாடி கொட் சாப்பிடப் பணிகப்பட்ட நிலையில் பலரும் குனிந்து சோறு அள்ளிச்சாப்பிட முடியாமல் குழம்புடன் சண்டையிட்டதையும் பாயாச சட்டியைக் கண்டு சோத்திற்கே இந்தப்பாடு என்றால் பாயாசத்திற்கு எப்பாடு என்று என் வளையும் உடலை(உபயம் யோகா பயிற்சி) எண்ணி எனக்குள் திருப்திப்பட்டு கொண்டேன்.

போரின் முடிவின் பின்னர் நினைத்த நேரத்தில் இருதரப்பு பயணங்கள் சாத்தியமாகி இருந்தாலும்….. இல்லை என்று சொல்லும் அளவிற்கு புங்குடுதீவிற்கு மீள்குடியேறிவர்கள் என்ற நிலமைகள் காணப்படுவதாகவும் அறிய முடிந்தது. இது ஒரு பொதுவான் போக்காக தமிழ் பிரதேசம் எங்கும் காணப்பட்டாலும் இங்கு வெறும் பத்து புள்ளி மட்டும் கிடைக்கும் மாணவனின் நிலை இலங்கைத் தீவிற்குள் தீவாக(யாழ் தீவகற்பம்) அதற்குள்ளும் தீவாக(நயினாதீவு) இருக்கும் இந்த தீவுகளின் எதிர்காலம் பற்றி பல கேள்விகளை எழுப்பியே நிற்கின்றது.

மூன்று ஆட்டோவில் பல வீடுகளுக்கும் எம்மை அழைத்துச் சென்ற ஒட்டு வேட்டியை ஏற்கனவே அறிந்த எனக்கு பாக்கெட் போட்ட வேட்டியுடன் அறிமுகமான ஜெகன் என்பவரின் உபசரிப்பும் புங்குடுதீவில் உற்பத்தியாகும் கடல் உணவை கொழும்புவரை கொண்டு சென்று சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் அந்த இளைஞனின் அறிமுகத்திற்கும் இரு வழியிலும் கடல் கடக்க உதவி இவரை மீண்டும் ஒரு தடவை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியுள்ளது. கூடவே 1970 களின் பிற்பகுதியில் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மயிலிட்டி கடற் தொழிலாளர்களுடன் வாழ்ந்த சில நாள் வாழ்கையை இவருடன் பரிமாறிய போது ‘…நீங்கள் சகல விடயங்களையும் அறிந்திருக்கின்றீர்;கள் ஆனால் நீங்கள் கடற்தொழிலாளி அல்ல என்று என்னை அம்பலப்படுத்தி சந்தோஷம் அடைந்த அந்த ஜீவனுக்கு இவ்விடத்தில் ஒரு நன்றி.

செய்த உதவிகளுக்கு பரிசு கொடுத்து மகிழும் விடயத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பணம் கொடுத்து அன்னியப்படுத்த விரும்பாத நான் பரிசுப் பொருள் இல்லாமல் மனதில் வெறுமையுடன் யாழ் பெரு நிலப்பரப்பை நோக்கிய பயணத்தை சுருவில் மெலிஞ்சமுனை போன்ற கரையோரக் கிராமங்கள் வழியாக வேலணை மகாவித்தியாலயத்தின் வண்ணம் பூசிய சுவரை(பாடசாலைகளுக்குரிய கௌரவ வண்ணங்களை விட கடும் நிற வண்ணங்கள் பூசி மெருகூற்றப்படும் பாடசாலைகளின் வண்ணங்களில் ஏதோவொரு கௌரவக் குறைப்பு இருப்பதாக என் உணர்வுகள் இருக்கும் விடயத்தில் என்னுடன் பலரும் உடன்படுவார்களே தெரியாது ஆனாலும் என் உணர்வுகளைப் பதிவு செய்யவே விரும்புகின்றேன்) ரசிக்க முடியாமல் எனது பால்ய நண்பன் ஓய்வு பெற்ற அதிபர் ஆரூரனை சந்திக்காமல் அவருடனா யாழ் இந்து மாணவ பருவங்களை மனத்திரையில் ஓடவிட்ட வண்ணம் பண்ணைப் பாலத்தை நோக்கி பயணமானேன்
(இன்னும் வரும்…..)