என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு !

(மாதவன் சஞ்சயன்)

Oct102015_1

பயணங்கள் எமக்கு நல்ல/கெட்ட அனுபவங்களை மட்டுமல்ல பல உண்மைகளையும் பகர்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்கிவதே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம். திட்டமிடப்படாத என் பயண ஆரம்பமே நல்ல சகுனமாக அமைந்தது. திறந்து விடப்பட்ட ஓமந்தை சாவடியூடாக முதல் முதலில் பயணித்த வாகனங்களில் நான் பயணித்த பேரூந்தும் அடங்கும். இது பற்றி எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளேன். அதுவரை சுற்றி வளைத்து சோதனை சாவடியில் இறங்கி ஏறும் எம்மை, தேர்தல் காலத்தில் மட்டும் சோதனை இடாது போக அனுமதிப்பர். உடன் அறிக்கை வரும் சொர்க்க வாசல் திறந்து என்று. தேர்தல் முடிந்ததும் வைகுண்ட வாசலில் மீண்டும் சோதனை நடவடிக்கை தொடரும். அறிக்கை விட்டவர் எம்மவரிடம் படமாளிகையில் வைத்து வேறு விடயம் பற்றி காதில் பூ சுற்றுவார் ( றீல் விடுவார் ).

அனுபவப்பட்ட சகபயணி இது ஐ நா கூத்து. கூத்து முடிந்ததும் மீண்டும் தொடங்கும் சோதனை நாடகம் என்றார். பட்டறிவு உள்ள அவர் கூறிய நிகழ்ச்சி இன்று வரை இல்லை. இனி எப்படியோ ? சாமி சரணம். வவுனியாவை அண்மிக்கும் வரை காது கிழிய பழைய தமிழ் பாடல்களை கேட்ட எங்களை நாம் எம் தமிழ் மண்ணின் எல்லை நகரை அண்மிக்கிறோம் என்பதை அறியத்தர, புஞ்ச்சிலி சிலி சில்ல மலேயா என்ற சிங்கள துள்ளிசை பாடல் ஒலிக்க தொடங்கியது. தாண்டிக்குளத்தை அண்மிக்கும் போது உள்ள இரும்பு பாலத்தில் உள்ள, மெதுவாக செல்வதற்கான தடைகளை அண்மித்து உள்ள காவலரண் காவலர்களிடம், பேரூந்தின் ஓட்டுனர் ஆயுபோவன் மாத்தையா என ஒரு வணக்கம் வைத்தார். அவர்களும் ஆயுபோவன் ஆயுபோவன் என பதிலுக்கு கூறினார்.

யாழ் தனியார் பேரூந்து நிலையத்தில் காலை 6 மணிக்கு கொழும்பு, கொழும்பு என கத்திய நடத்துனர், 9 மணிக்கு வவுனியா பேரூந்து நிலையத்தில்
கொழம்ப, கொழம்ப என கத்தினார். 3 மணித்தியால பயணத்தில் ஒரு நாடு, இரு மொழி யதார்த்தத்தை புரியவைத்த பெருமகன் பேரூந்து நடத்துனர். எல்லைக் காவலன், அடங்கா தமிழர் முன்னணி தலைவர், இங்கிலாந்து மகாராணிக்கு கணிதம் போதித்தவர் என புகழப்பட்ட சுந்தரலிங்கம் தமிழ் ஈழ கோசத்தை முன்வைத்து இதே வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டி இட்டு, சமஸ்டி கோசம் வைத்து போட்டியிட்ட தமிழரசு கட்சியின் வேட்பாளர் சிவசிதம்பரதிடம் தோற்றுப் போன வரலாறு என் மனதில் கேள்விக் குறியாக எழுந்தது !… அன்றே எம்மவர் பிரிவினையை ஆதரிக்க வில்லையா ?

வவுனியா இன்று தமிழர் பிரதேசம், சிங்களவர் பிரதேசம் என கூறுபட்டு கிடக்கிறது. இரண்டு மொழிப் பகுதியை காட்டும் 2 மணிக்கூட்டு கோபுரங்கள், பிரதேச சபைகள். அதனால் தான் அன்று பிரிவினை வேண்டாம் என்றவர்கள், தம் மீதான தொடர் துன்புறுத்தல்களால் விருப்பின்றி ஆதரிக்க தூண்டப்பட்ட முடிவுதான் தனி நாட்டு கோரிக்கை என்பதும் எனக்கு புரிகிறது. இப்போது தூண்டியவருக்கு தம் தவறுகள் புரியும் காலமும் கனிகிறது. முறிகண்டியில் 10 நிமிடம் மட்டுமே பேரூந்து நிற்கும் என்ற நடத்துனர் மதவாச்சிக்கு அண்மித்ததாக இருந்த பிரமாண்ட மான உணவகத்தில் எம்மை ஆசுவாசமாக்கி வரச் சொன்னார். காரணம் அவருக்கும் ஓட்டுனருக்கும் அங்கு கிடைக்கும் சிறப்பு இலவச விசேட கவனிப்பு.

முன்பு போல முருகண்டியில் சூடான வடை மற்றும் சுவையான உணவுகள் வழங்கும் உணவகங்கள் இல்லை. அந்த நாட்களை இரைமீட்டி பார்க்கும் போது ஒரு ஏக்க பெருமூச்சு மட்டுமே வந்தது. யுத்தம் முடிந்த பின், பசில் ராஜபக்சவின் உறவினர் மட்டும் பேக்கரி வசதியுடன் ஒரு நவீன உணவகம் நடத்துகிறார். தென்னிலங்கையில் இருந்து யாப்பாபட்டுணவை பார்க்க வருபவர்களுக்கு ஏற்ற உணவு வசதி அங்கு உண்டு. என் போன்ற பஞ்சத்துக்கு ஆண்டியா பரம்பரை ஆண்டியா என்போருக்கு அது கட்டுபடியாகது என்பதால், பேரூந்து நிறுத்தும் இடத்தில் தரும் உணவை தரம் பாராமல், விலை பற்றி நோகாமல் உண்பதே எம் தலைவிதி. முன்பு பயணம் என்றால் புட்டு பிரட்டல் தந்து விடும் மனைவி போற வழியில் எதையாவது கடியும் என்கிறாள்.

கொழும்பு செல்லும் பேரூந்துக்கு இரு வழித்தட பயண அனுமதி உண்டு. தம்புளை குருணாகல் வழி, புத்தளம் நீர்கொழும்பு வழி. நான் ஏறியது குருணாகல் வழித்தட பேரூந்து. குருணாகல் பேரூந்து நிலையத்தில் நின்ற வேளை மலை உச்சியில் ஒரு பிரமாண்டமான புத்தர் அமர்ந்த நிலையில் சிலையாக காட்சி தந்தார். வாய் பிளந்து பார்த்த என்னிடம் சக பயணி ஒரு தகவல் தந்தார். மாத்தையா இதை விட பெரிய சிலை இங்கிருந்து சிறு தூரத்தில் இருக்கிறது. உலகில் உள்ளதில் மிக உயர்ந்த சிலை என, அதை பார்க்கும் ஆவலை என்னுள் தூண்டினார். திட்டமிடாத பயணம் என்பதால் நடத்தினரிடம் வயிற்றை கலக்குவதாக கூறி பயணம் தொடர முடியாததால் மிகுதி பணத்தை தரும்படி கேட்டு, வேண்டா வெறுப்புடன் அவர் தந்த மிகுதி பயணப் பணத்துடன் குருணாகலில் கால் வைத்தேன்.

சக பயணி கூறிய சிறு தூரம் என்பது 17 கிலோ மீற்றர் என்பது முச்சக்கர வண்டி சாரதி கூறிய போது தான் தெரியவந்தது. பயணத்தூரம், அந்த இடத்தின் விபரம் என சுற்றுலா பயணிக்கு விளக்குவது போல விளக்கிய அவர் கேட்ட கட்டணம், எனது பஜட்டில் துண்டு விழுத்தும் என்பதால் அந்த வழித்தட பேரூந்தை விசாரித்து அதில் ஏறினேன். ஆட்டோ சாரதி வாய்க்குள் முணு முணுத்தது காதில் கேட்காவிட்டாலும் அவர் என்னை திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. முன்பு சென்னையில் ஆட்டோகாரிடம் பேரம் படியாவிட்டால் வரும் அரச பேரூந்தில் பாய்ந்து தொத்தி ஏறும் போது போய்யா சாவுக்கிராக்கி என பல தடவை தமிழில் திட்டு வாங்கிய தன்மான தமிழன் என்பதால், சிங்களத்தில் சத்தமின்றி புறுபுறுத்த அவர் ஒரு பண்பாளராக தென்பட்டார்.

அந்த பேரூந்தில் பயணித்த அனைவருக்கும் காது தெளிவாக கேட்கும் போலும். அதனால் அளவான ஒலியில் சிங்களப் பாடல்கள் ஒலித்தன. நான் நினைக்கிறேன் துப்பாக்கி வெட்டுகள், செல் அடிகள், விமான குண்டு வீச்சுகள் என பேரொலிகளை கேட்டு பழகியதால் தான் எம்மவர், பேரூந்துகளில் காது கிழிய பாடல்களை ஒலிபரப்புகிறார்கள் போலும். நான் இறங்கவேண்டிய இடம் றிதீகம. நாலு தடவை நடத்துனரை ஞாபகப்படுத்த அவரும் என்னை வாய்க்குள் எதோ முணு முணுத்தபடி (சாவுக்கிராக்கி என சபித்திருப்பார் ) இறக்கிவிட்டார். அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் முகத்தை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். காரணம் அதன் உயரம் அறுபத்து எட்டு அடிகள். மலையை செதுக்கி இந்திய சிற்பிகள் உருவாக்கிய மிகப் பிரமாண்ட சாந்த சொரூப சிலை.

கழுத்து வலிக்க பார்த்த என் காதுகளில் மாத்தயா கொகித என்ற குரல் கேட்டு திரும்பினால், பக்கத்தில் காவி உடையில் பௌத்மத சாது. தயக்கத்துடன் யாப்பணய என்று கூறிய என்னை கூட வரும் படி கூறி அருகில் இருந்த விகாரைக்குள் சென்றார். கூட்டிச் சென்று கும்மப் போகிறார் என்று பயந்தேன். மாறாக எனக்கு சூடு தணிக்கும் செவ் இளநீர் தந்தார். சக பயணி தந்த தகவலால் என் கொழும்பு பயணத்தின் இடை நடுவில் இறங்கியதை கேட்டு மனம் மகிழ்ந்தவர், உங்களைப் போல ஏனையவர்களும் இங்கு வரவேண்டும் என்றார். நூற்றாண்டுகள் கடந்த புத்தரின் புனிதப் பல் இருக்கும் கண்டி தலதா மாளிகைக்கு குண்டு வைப்பித்த, பிரபாகரனும் பொட்டம்மானும் உயிரோடு இல்லை என்ற துணிவில் தான் இந்த வேண்டுகோள் என என் உள்மனம் சொன்னது.

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தகர்க்கப் பட்ட, நின்ற நிலை தோற்றம் கொண்ட புத்தர் சிலைகள் பற்றி தனது தம்ம போதனையில் கூறிய புத்த பிக்குவிடம், மாணவர்கள் கேட்ட கேள்வியின் விடை தான் இந்த பிரமாண்ட சிலை. எம்மால் அப்படி ஒரு சிலையை உருவாக்க முடியாதா ? என்ற அவர்களின் கேள்வி, அவர்களின் சிறுதுளி பங்களிப்பு, படிப்படியாக பெரு வெள்ளமாகி பல கோடிகளை செலவிட்டு இன்று வரலாறாய் மாறிவிட்டது. இங்கு என் மன நெருடலை பதிவு செய்கின்றேன். வடக்கில் இன்று நடக்கும் வாள் வெட்டுகள், புலி படத்துக்கு பாலபிசேகம் செய்யும் கூத்துக்கள், பல்கலைக் கழகத்தில் பாலியல் லஞ்சங்கள், படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவரின் எடுபிடிகள், என செயல்ப்படுவது எம் மாணவ இளைஞர் தான் என்ற உண்மை சுடுகிறது.

அன்று படமாளிகையில் படம் மட்டும் தான் காட்டப்பட்டது. ஆனால் அண்மைக்காலம் வரை ஒரு அரங்கில் மட்டும் பல்கலைக் கழகத்தினருக்கும் போதனை கிடைத்தது. அங்கு கட்சித் தலைவருக்கு வழிந்து பொறுக்கியவர்கள் தான், எம் மாணவரை/ இளைஞர்களை தெருப் பொறுக்கிகளாய் சமூகத்தில் உருமாற்றியவர்கள். பன்சலையில் தம்ம போதனை கேட்டவர், அழிவில் இருந்து ஆக்கத்துக்கு மாறி தாம் வணங்கும் புத்தருக்கு உயர்ந்த சிலை அமைக்க, படமாளிகையில் பாடம் படித்தவர், எம்மவரின் கலாச்சார சீரழிவை கண்டும் காணாமல் விட்டும், தம் நலன் ஒன்றே நோக்கமாய் கொண்டு, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என செயல்ப்பட்டு, தனி நபர் தலைமையை துதிபாடி, தம் காரியங்களை மணல் முதல் தீவகப் பெண்கள் வரை முடித்த செயலால் நாறிக்கிடக்கிறது நம் சமூகம்.
– நீட்சி 2 ல் –