எல்லா மனிதர்களுமே வரலாறுதான்

வரலாறு என்பது எதிர்காலத்துக்கான வழிகாட்டி.அந்த வரலாறுகளில் பொய்களை கலந்தால் எதிர்காலத்தை சரியான முறையில் திட்டமிட முடியாது.இந்த வகையில் பிரபாகரன் வரலாறும் பொய்யாகவே பதிவு செய்யப்படுகிறது.

தமிழக அரசியலில் வெற்றிபெற தி மு க நாடக மேடைகளையும் சினிமாவையும் பயன்படுத்தியது. இதன் காரணமாக திமுக தலைவர்கள் நல்லவர்கள் நேர்மையானவர்கள் என மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.விளைவு எளிமையான மனிதரும் ஊழல் இல்லாத ஆட்சியைத் தந்த காமராசர் தோற்கடிகப்பட்டார்.

அன்று அரசியல் பிரச்சாரத்துக்காக எம் ஜி ஆரைப் பயன்படுத்திய அண்ணாவும் கருணாநிதியும் வாக்கு வங்கிக்காக எம் ஜி ஆரை பயன்படுத்தினார்கள்.

அண்ணா இறந்தபின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றிய கருணாநிதி எம் ஜி ஆரை வெளியேற்றினார். ஆனால் எம் ஜி ஆருக்கு திரையில் கொடுக்கப்பட்ட விம்பத்தை திஜம் என மக்கள் நம்பினார்கள்.அவரின் சினிமா பாத்திரத்தை மட்டுமே நம்பிய மக்கள் எம் ஜி ஆரின் அடுத்த பக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை.எம் ஜி ஆருக்கும் ஜெயல்லிதாவுக்குமான உறவுகள் பலவகைகளில் வந்தபோதும் மக்கள் கணக்கில் எடுக்கவில்லை.

சினிமா நாடகம் பத்திரிகைகள் மக்களை நேரடியாக சந்திப்பவை. அவற்றில் பொய்களைக் கலந்தால் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே சீரழிக்கப்படும்.இந்த சினிமா மூலமாக பிரபாகரனை வீரனாகவும் புனிதனாகவும் காட்டும் முயற்சியே மேதகு என்ற சினிமா.

பிரபாகரனும் ஒரு வரலாறுதான். அவருடைய உண்மையான வரலாற்றை பதிவு செய்தால் வரவேற்கலாம்.அவருடைய வளர்ச்சி ஏன் அரசியலை கையில் எடுத்தார் ? அவருடைய கொலைகள்? தமிழர்களின் உயிரிழப்புகள் பிரதேச இழப்புகள்,ரெலோ படுகொலைகள் கந்தன் கருணை படுகொலைகள்.காத்தான்குடி முஸ்லிம்கள் படுகொலைள் என கொலைகளின் பரிணாம வளர்ச்சி , அவருடைய பின்னணிகள் எல்லாமே காட்டியிருந்தால் வரவேற்கலாம். எதிர்கால சந்ததிகள் தமக்கான புதிய வரலாற்றை திட்டமிட உதவும்.

மேதகு தவறான படப்பிடிப்பு என்பதால் இந்த வரலாறுகளை உண்மைகளை அறிந்தவர்கள் வெளியே கொண்டுவரவேண்டும்.