எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – (பகுதி – 4)


(அ. வரதராஜப்பெருமாள்)

  • எட்டு மணி நேரம் கடுமையாக உழைத்தும் வறுமைக் கோட்டுக்குள்ளேயே சுழலும் மக்கள்

*பெரும்பான்மையான குடும்பங்கள் பெறுகின்ற பரிதாபகரமான வருமான நிலைமை

இலங்கையின் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தமது வருமானத்துக்குள் தமது அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சமூக பொருளாதார புள்ளிவிபரங்களும் பல்வேறுபட்ட கள ஆய்வுகளும் கூறுகின்றன. இலங்கையில் வாழும் பெரும்பான்மையான குடும்பங்கள் தமது வருமானத்துக்குள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு போராட வேண்டியவர்களாக இருக்கின்றமைக்கு, அந்தக் குடும்பங்களில் உள்ள உழைப்பாளர்களால் போதிய நாட்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற முடியாமையே காரணமென கூறமுடியாது.