எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?

அண்மைக்காலமாக மாணவர்களின் அரசியல் பார்வை அவர்களை எடுப்பார் கை பிள்ளை நிலைக்கு உட்படுத்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையை மட்டும் விமர்சிப்பது முதல், சர்வதேச அரசியலில் முதிர்ச்சி உள்ளவர் போல அவர்கள் பேசும் பேச்சுக்களே அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது.

1970பதுகளில் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசின் கல்வி அமைச்சர் பதியுதீன் முகமத் அவர்கள் அறிமுகம் செய்த, பல்கலைகழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைமையால் வடக்கில் குறிப்பாக யாழ் குடா நாட்டில் எழுந்த கல்லூரி மாணவர்களின் எதிர்ப்பு எழுச்சியை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு.

அன்று சத்தியசீலன் தலைமையில் உருவான மாணவர் பேரவை பேரெழுச்சியாக எழுந்த வேளை அதனை தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக உள்வாங்க, தமிழ் அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்ப்பட்டன. அடக்கு முறை அரசின் மாணவர் பேரவையின் முக்கியஸ்த்தர்களை கைது செய்யும் நடவடிக்கையால் அந்த அமைப்பே சிதறுண்டு போனது.

சிறிமா அரசின் அடக்குமுறை பொலிசின் கரங்கள் நீண்டு பலரை சிறைக்குள் தள்ளியது. சத்தியசீலன் உட்பட பலரின் சிறை வாசம் மாணவர்களாய் இருந்த இளையவர் மனதில் வஞ்சத்தை விதைக்க கூடவே தமிழ் ஆராச்சி மாநாட்டு நிகழ்வில் பொலிசாரின் அத்துமீறல் அவர்களுக்கு பழிவாங்கும், பதிலடி கொடுக்கும் உணர்ச்சியை ஊட்டியது.

முதல் புள்ளியை போட்டு போராட்டத்தை ஆரம்பித்தார் உரும்பிராய் சிவகுமாரன். பொலிஸ் அதிகாரி முதல் யாழ்ப்பாணம் மேயர் வரை அவரின் இலக்கு தவறினாலும் இறுதிவரை அவர் தன் பழிவாங்கும் முயற்சிகளை கைவிடவில்லை. ஆனால் கோடரிக்காம்பான காட்டிக்கொடுக்கும் சதிகாரரின் செயலால் அவர் தான் பிடிபட்டு மற்றவர்களும் பிடிபடக் கூடாது என எண்ணி சயனைட் அருந்தி தியாகி ஆனார்.

அந்த இழப்பு வீட்டில் கூட தம் அரசியல் அறுவடையை செய்ய வந்த அன்றைய தலைமைகள் பேசிய பேச்சு இளையவர் இரத்தத்தை மேலும் சூடாக்கி காசி மாவை வண்ணை என வரிந்து கட்டி இளைஞர் பேரவை, அரசியல் தலைமைகளின் பின் அணிதிரள, மறுபுறம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என புஸ்பராசா, முத்துகுமாரசாமி, பத்மநாபா, வரதராஜப்பெருமாள் புறப்பட, புதிய புலிகள் என பிரபாகரன் முன்னிலைப்பட்டார்.

இவர்களின் செயல்ப்பாட்டை முளையில் கிள்ளிவிட அரசு தமிழ் இரகசிய பொலிசாரை பயன்படுத்தி பலர் பிடிபட, சிலர் தலைமறைவும் ஒருசிலர் வெளிநாடுகளுக்கும் தப்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் எவருமே போராட்ட முனைப்பில் இருந்து விலகவில்லை. வெளிப்படையாக செயல்பட முடியாத போதும் அடக்குமுறைக்கு எதிரான தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்தேறின.

1983 இனக்கலவரம் வரை மறைமுகமாக இயங்கிய விடுதலை புலிகள், புளட், டெலோ, ஈபிஆர்எல்எப், ஈரோஸ் உட்பட புதிதாய் உருவான பல இயக்கங்களும் வெளிப்படையாக ஆயுத போராட்டத்தில் முனைப்புக்காட்ட முற்பட்ட வேளையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தம் கல்வியை துறந்து இனத்தின் விடியலுக்கு என போராளிகள் ஆகினர்.

இதில் 1981ல் முன்னிலை பெற்றிருந்த ஈழ மாணவர் பொது மன்றம் வேறுபட்டு நின்றது. மாக்சிச கொள்கைகளை வரித்துக்கொண்ட அவர்கள் வெறும் ஆயுத குழுவாக அல்லாமல் மக்களை அரசியல் மயப்படுத்திய போராட்ட வடிவமாக தம்மை செழுமைப் படுத்தினர். அவர்களின் பிரச்சார பீரங்கியாக அன்று முன்னிலை வகித்தவர் மானிப்பாய் இந்து கல்லூரி மாணவன் முடியப்பு டேவிட்சன்.

தமிழர் விடுதலை கூட்டணிக்கு சவால்விட்டு மே தின கூட்டத்தை முற்றவெளியில் நடத்தி ‘’அன்று மண்டபத்தில் கூடிய நாம் இன்று யாழ் முற்றவெளியில் பல்கிப் பெருகி உள்ளோம். ஆனால் அன்று முற்றவெளியில் கூடியவர்கள் இன்று மண்டபத்தில்’’ என அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையையே விமர்சிக்கும் அளவிற்கு அமைந்தது மாணவர் செயல்.

கைதுகள் தடுத்துவைத்தல் பண்ணை பாலத்தின் கீழ் கொலை செய்து வீசுதல் என தொடர்ந்த அரசின் அராஜகங்கள் எதுவுமே அவர்களை கட்டுப்படுத்தவில்லை. மாணவர் பேரவையில் இருந்த வேளையில் நிர்ப்பந்தத்தின் பேரில் வெளிநாடு சென்றவர்களின் விடுதலை வேட்க்கையில் லண்டனில் உருவானதே ஈரோஸ் இயக்கம். அதன் மாணவர் அமைப்பே ஈழ மாணவர் பொது மன்றம். ( G U E S – கெஸ் )

1978ல் மட்டக்களப்பில் வீசிய சூறாவளி, மேற்குலகு சென்ற ஈழத்து மாணவரை தமது தாய் மண்ணுக்கு மீண்டும் வரும் வாய்பை கொடுத்தது. லண்டனில் அவர்களுக்கும் பாலஸ்த்தீன மாணவர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பால் பாலஸ்தீன பாசறையில் தாம் பெற்ற ஆயுத பயிற்சியை ஈழப்போராட்டத்துக்கு வித்தாக்கும் செயலை ரட்ணா, அருளர், மனோ, நாபா போன்றோர் செய்தனர்.

எழுச்சிமிகு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை என தொடர் நிகழ்வுகளும், மாணவர்களின் பேரணிகளும் ஏற்கனவே இருந்த அரசியல் தலைமைகள் பற்றி மக்கள் மத்தியில் மாற்று சிந்தனை முளைவிட்ட வேளையில் தான் 1983 தென்னிலங்கை இனக்கலவரம், ஆயுத போரட்டம் தான் ஒரே தீர்வு என்ற நிலைக்கு அனைவரையும் தள்ளியது. அதற்கு இந்தியா உதவியது.

உத்தரபிரதேசத்தில் பயிற்சி முடித்து வந்த இளையவர்கள் ஈழம் தான் தம் இறுதி முடிவு என சத்தியம் செய்தனர். ஆனால் அது நடைமுறை சாத்தியமா என்ற யதார்த்த நிலை பற்றிய அறிவு, அவர்களிடம் இருக்கவில்லை. இந்திய நிலைப்பாடு பற்றிய தெளிவு இல்லாதது தான் அதற்கான காரணம் என்பதை அவர்கள் அறியும் முன்பே, தம்முள் மோதியே பலர் பரலோகம் போய்விட்டனர்.

எடுப்பார் கை பிள்ளை போல செயல்ப்பட்ட நிலையால் இயக்கங்கள் பிளவுபட இலங்கை இராணுவம் இலகுவாக வடமராட்சியில் கால் பதித்தது. அப்போதும் இந்தியா போட்ட உணவு பொட்டலத்துள் தமிழ் ஈழ வரைபடத்தை தேடியவர்கள் தலையில் விழுந்த சம்மட்டி அடிதான், இலங்கை இந்திய ஒப்பந்தம். அதுவரை இந்தியா எமக்கு ஈழம் பெற உதவும் என்ற, கற்பனை கதைக்கான முடிவுரை தான் அது.

அதுவரை இந்திய நிலைப்பாட்டை முழுமையாக அறிந்திராத போதும் அது இலங்கையுடன் ஒப்பந்தம் போட்ட பின்பாவது நாம் தெளிவு பெற்றிருக்க வேண்டும். விடாக்கண்டர்களும், கொடாக்கண்டர்களும் இழுபறிப் பட்டதால் இணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அதுவரை நிறைவேறாது போன ஒப்பந்தங்களை விட மேலானதை கூட, இன்று நாம் இழந்து நிற்கிறோம்.

இந்திய படைகளுடன் மோதி அந்த நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்று இந்தியாவை ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறை அற்ற நிலைக்கு தள்ளிவிட்டது நாம்மவரே. ஏக தலைமையின் பின் அனைவரும் அணிதிரண்டதாக பெருமைப்பட்ட வேளையில், சர்வதேச நிலைப்பாடு என்ன என்பது பற்றி அவர்கள் தம் கவனத்தில் கொள்ளவில்லை. கவனித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்திராது.

அது முடிந்துபோன விடயம் என்றால், இனி எமது அடுத்த நகர்வு என்ன? இந்தியா மௌனித்த வேளை ஜெனீவா குரல் எழுப்புகிறது. ஆனால் அது முழுமையாக எமக்கு சாதகமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என எண்ணும் எம்மவரில் சிலர் தம்மை பூகோள அரசியல் அறிந்த ஜாம்பவான்கள் போல பத்திரிகையாளர் முன் பறை அடித்து நேரடி விவாதத்துக்கு வா என சவால் விடும் நிலையில் தான்,

அண்மையில் இரண்டு கல்லூரிகள் இடையே விவாத அரங்கு இடம்பெற்றது. ஒரு அணியின் அதி முக்கிய இலக்கு சம்மந்தன் மற்றும் சுமந்திரன். வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேறிய ஆண்டோ அல்லது தமிழ் கட்சிகள் முதல் முதல் கூட்டாக தேர்தலில் போட்டியிட்ட ஆண்டோ சரியாக தெரியாது வாதிட்டவர், எங்கள் ஒற்றை தலைமை (பிரபாகரன்) என பேசி கைதட்டல் வாங்குகிறார்.

இங்குதான் என் நினைவுகள் எழுபதுகளை நோக்கி பயணிக்கிறது. அன்று மாணவர்கள் முதலில் தங்கள் கல்விக்கு தரப்படுத்தல் வந்த போது தான் பொங்கி எழுந்தார்கள். பொலிசார் தமிழ் ஆராச்சி மாநாட்டை குழப்பியதால் தான் பொறுமை இழந்தார்கள். தென் இலங்கை இனக்கலவரம் தான் அவர்களை ஆயுதம் எந்த வைத்தது. சரியான வழி நடத்தல் இன்மையால் அது பாதை மாறிய பயணம் ஆனது.

அந்த நிகழ்வால் இழந்த உயிர்கள் அழிந்த உடமைகள் எல்லாம் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள். அதில் இருந்து மீண்டு வருவதா அல்லது மீண்டும் எம் இளையவரை அந்த கந்தக நெருப்பில் ஆகுருதி ஆக்குவதா? என்ற கேள்வியே இன்று எம் முன்னால் உள்ளது. தென்னிலங்கை அரசியல் நிலைமை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து எப்போதும் காணாத வகையில் இன்று மாற்றம் கண்டுள்ளது.

எதிர் எதிர் அணியில் இருந்த இரண்டு பெரும்பான்மை இன கட்சிகள் இணைந்த ஒரு அரசு உருவாகிய இரண்டு வருடங்களுக்குள் 69 வருட பிரச்னையை தீர்க முன்வந்து, முயலும் வேளையில் வெளியில் நின்று விமர்சிப்பது சுலபம். ஆனால் விடயங்களை ஒப்பேற்றுவது கடினம். கேள்விகளை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் அதற்கான விடையை கண்டறிதலில் நிதானம் தேவை.

காரியம் ஆற்ற விரும்புபவனுக்கு தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கு தேவை. தோல்விகள் படிப்பினை ஆகும் போதுதான் வெற்றிகளை அவன் பெறமுடியும். அன்று அமிர்தலிங்கத்தை கேள்விக்கூண்டில் நிறுத்தியவர்கள் பலர் இன்று அதற்கான பதிலை தாமும் பெற முடியாமல் தான் அகதிகளாக கனடாவிலும் லண்டனிலும் தம் குடும்பநலன் பேணுகின்றனர் என்ற உண்மை பலருக்கு கசக்கும்.

மாணவ பருவத்து சுதந்திரம், அவர்களின் பொறுப்பில்லாத செயல்கள் எல்லாம் ஒழுங்கமைக்கப்படும் போது மட்டுமே அது பலன்களை தரும். மாறாக சுயலாபம் கருதி அவர்களை பயன் படுத்தினால் சமூக சீரழிவு தான் ஏற்படும். எழுபதுகளின் மாணவர் எழ்ச்சி காலத்தின் கட்டாயம். இதய சுத்தியுடன் இழப்புகளை சந்தித்த அந்த கால கனவுகளே, கானல் நீராய் போய்விட்டது கூட காலக் கொடுமைதான்.

இன்றை மாணவர் எழுச்சியின் பின்னால் புலம் பெயர் சாட்டைக்கு சுற்றும் உள்ளூர் பபரங்கள் தான் உள்ளனர். அவர்கள் தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இவர்களை பயன்படுத்துகின்றனர். இனத்தின் மீதும் எம் இளையவர் மீதும் இவர்களுக்கு அக்கறை இருக்குமானால் இன்று கல்வி தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள எம்மவர் நிலை பற்றி விவாதிக்க சொல்லுங்கள்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய தொழில் வாய்ப்பு மையங்களை உருவாக்குங்கள். போதை வஸ்த்து பாவனையில் இருந்து இளைஞர் மீள கருத்தரங்குகள் நடத்துங்கள். பாடசாலை, கல்லூரி மாணவர்களை அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டில் முன்னிலை வகிக்க செய்யுங்கள். பல்கலை கழகம் சென்ற பின் அவர்களே தங்கள் அரசியல் விவாதங்களை வடிவமைத்து கொள்வார்கள்.

நீங்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களுக்கு கொடுத்திருக்கும் கால அவகாசம் வரை அவர்களின் வேலைகளை சுதந்திரமாக செய்ய விடுங்கள். இடையில் தடி ஓட்டி அவர்களை தடம் மாற செய்யாதீர்கள். ஜனநாயகத்தில் ஒருவரை தெரிவு செய்வதற்கும் பிடிக்காத போது அடுத்த தேர்தலில் தோற்கடிக்க செய்யவும் உரிமை உங்கள் கையில் இருக்கும் போது எதற்கு இந்த உள்குத்து.

(ராம்)