ஏப்ரல் கிளர்ச்சியின் 50 ஆண்டுகளின் பின்னர்: ஜே.வி.பியும் தமிழரும்

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில், ‘இறுதிப் போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களைக் கண்டறியவும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை, இலங்கை உருவாக்க வேண்டும்’ என்ற பொருள்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய கருத்து, தமிழ் ஊடகங்களில் கவனம் பெற்றாலும், அதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதற்கு, ஜே.வி.பியைப் புரிந்து கொள்வது அடிப்படையானது. இதற்கான வாய்ப்பை, கடந்தவாரம் ஜே.வி.பியால் நினைவுகூரப்பட்ட 1971ஆம் ஆண்டுக் கிளர்ச்சி தந்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், ஆயுதமேந்திய முதலாவது கிளர்ச்சி என்றவகையில் அது முக்கியமானது. 1962, 1966ஆம் ஆண்டுகளில், இராணுவச்சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ள போதும், ஒரு கிளர்ச்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முதன்முயற்சியை, 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரோகண விஜயவீர தலைமையிலான ஜே.வி.பி மேற்கொண்டது. இதேவகைப்பட்ட இன்னொரு முயற்சி, 1988/ 89 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டும் படுதோல்வியில் முடிவடைந்ததோடு, ஏராளமான உயிர்களைக் காவுகொண்டன. அரச வன்முறையின் தொடக்கத்துக்கும் இராணுவமயமாக்கல், பொலிஸார் ஆயுதமயமாக்கல் போன்றவற்றுக்கு இவ்விரண்டு கிளர்ச்சிகளும் வழிவகுத்தன.

ஜே.வி.பியை விளங்குவதற்கு அதன் நிறுவனர் ரோகண விஜேவீரவை விளங்குவது முக்கியமானது. இன்றும் அவரின் கொள்கைகளையே பிற்பற்றுவதாக ஜே.வி.பியினரும் அதிலிருந்து பிரிந்தோரும் சொல்கிறார்கள். ரோஹண விஜேவீர, மாக்ஸிய லெனினியக் கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, பேரினவாதச் செயற்பாடுகள் காரணமாக 1966இல் வெளியேற்றப்பட்டார் என்பது முக்கியமானது. அவரது தமிழர் விரோத நிலைப்பாடுகள் முக்கியமானவை.

குறிப்பாக, ஜே.வி.பியின் இனத்துவேஷம், ஐ.தே.க, ஸ்ரீ ல.சு.க ஆகிய பிரதான கட்சிகள் இரண்டையும், கைவிஞ்சும் விதமாக அமைந்ததை மலையகத் தமிழர் பற்றிய அதன் நிலைப்பாடு சுட்டிக் காட்டியது. மலையகத் தமிழரை, இந்திய விஸ்தரிப்பின் கரங்களாக அடையாளங்கண்டு, அவர்களை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்று கோரியிருந்தது.

ஐந்து பாடங்களில் மாக்ஸியத்தையும் தேசிய அரசியலையும் புரட்சியையும் கற்பித்து, திடீர்ப் புரட்சியொன்றை நடத்தலாம் என்று ஜே.வி.பி தலைமை நம்பியது. இளைஞர்களைக் கவரக்கூடியவாறு ஜே.வி.பியின் பிரசாரமும் வேலைமுறையும் அமைந்தன.

அக்காலத்தில் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸில், ஏற்பட்ட இளைஞர் எழுச்சியும் இலத்தின் அமெரிக்காவின் நகரங்களின் சில பகுதிகளைக் குவிமையமாக்கிப் புரட்சியை நடத்தலாம் என்ற கருத்தும் சே குவேரா பற்றிய கவர்ச்சிகரமான படிமமும் ஜே.வி.பியின் புரட்சி பற்றிய பார்வையைத் தீர்மானித்தன.

எனவே, சே குவேராவின் உலக நோக்கத்துடன் எவ்வித உறவுமற்ற ஜே.வி.பி, ‘சே குவேரா குழு’ என்று தன்னை வர்ணித்தமை தற்செயலானதல்ல. எனவே, இளைஞர்களையே புரட்சிகர சக்தி என்றும் தொழிற்சங்கங்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் புரட்சிகர சக்திகளல்ல என நிராகரித்தும், ஓர் அதிரடி நடவடிக்கை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற எண்ணம், கிராமங்களையும் சிறு நகரங்களையும் சார்ந்த சிங்கள இளையோர் பலரையும் ஜே.வி.பியிடம் ஈர்த்தது.

இளைஞர்களால் நடத்தக் கூடிய ஆயுதப் புரட்சி என்ற கனவு, இளைஞர்களைக் கவர்ந்த போதும், ஜே.வி.பி தலைமையில் இருந்த குழுவாதமும் சந்தர்ப்பவாதப் போக்குகளும், ஒருபுறம் சிறு சிறு பிளவுகளுக்கு வழி கோலின. அவற்றில் சில, சாதி வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்தன.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி, அடுத்தடுத்துப் பல பொலிஸ் நிலையங்களை ஜே.வி.பி தாக்கிக் கைப்பற்றியது. பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவை, அவரது வீட்டிலிருந்து சிறைப்பிடித்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி கண்டது.

இராணுவரீதியிலும் ஆயுதரீதியிலும் வலுவற்றிருந்த இலங்கைக்குப் பல நாடுகள் உதவின. பிரதமரின் அவசர உதவிக் கோரிக்கைக்கு பாகிஸ்தானும் இந்தியாவும் உதவின. பாகிஸ்தான் தனது படைவீரர்களையும் ஆயுதங்களையும் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும் தனது இராணுவப் படையணிகளை அனுப்பி உதவியது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் முதலாவது தன்னிச்சையான இராணுவ அமைதிகாக்கும் நடவடிக்கையாக இது அமைந்தது. இதற்கு முன்னர், 1957-58 இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, மனிதாபிமான உதவிகளை இந்திய இராணுவம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியின் கிளர்ச்சி வேகமாகவே நசுக்கப்பட்டாலும், அதன் உடனடி விளைவுகளும் அதற்கான எதிர்வினைகளும் அதன் தொடர்விளைவுகளும் இலங்கை அரசியலிலும் அரசினது தன்மையிலும் அயல் உறவுகளிலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தின.

ஜே.வி.பி எழுச்சியில் கொல்லப்பட்டோரின் தொகை 15,000க்கும் சற்று அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. கொல்லப்பட்டோரில் மிகச் சிலரே நேரடி மோதலில் இறந்தனர். பெரும்பாலானவர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இவை மறைக்கப்பட்டன.

ஆனால், ‘கதிர்காம அழகி’ என அறியப்பட்ட பிரேமாவதி மன்னம்பெரி என்ற பெண், பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விவரங்கள் வெளியாகியதால், தவிர்க்கவியலாமல் அரசாங்கம் குற்றவாளிகளைத் தண்டிக்க நேர்ந்தது. ஆனால், வேறு பல கொடிய குற்றங்கள் கண்டும்காணமலே போயின.

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களினதும் சித்திரவதைகளினதும் தொடக்கம் இதுவே. அதேவேளை, 1971 ஜே.வி.பி கிளர்ச்சி, தென்னிலங்கையில் பொருளாதாரக் காரணங்களால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவு என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

முதலாவது கிளர்ச்சியின் தோல்வியைத் தொடர்ந்து,ஜே.வி.பி பேரினவாத அரசியலை முன்னெடுக்கத் தொடங்கியது. 1970களின் இறுதிப்பகுதிகளில் இது தொடங்கினாலும் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலோடு முழுமை பெற்றது.

1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கையையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் ஜே.வி.பி முற்றுமுழுதாகச் சிங்களப் பேரினவாத நோக்கிலேயே எதிர்த்தது. 1989இல் ஜே.வி.பியின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், 1994ஆம் ஆண்டு பாராளுமன்ற அரசியலில் நுழைந்தது. எனினும், தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை, ஜே.வி.பி எதிர்த்தே வந்தது.

பாராளுமன்ற அரசியலில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் மாற்றான, மூன்றாவது சக்தியாகத் தன்னை வளர்க்க முற்பட்டபோதும், அதனால் நம்பகமான ஓர் இடதுசாரி சக்தியாக வளர இயலாது போயிற்று. அது வேண்டி நின்ற துரித வளர்ச்சிக்கு, அதன் பேரினவாத அரசியல் உதவும் அளவுக்கு, வெகுசன இடதுசாரி அரசியல் உதவாது என்பதால், அது பேரினவாத நோக்கில் அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்ப்பதை முக்கியப்படுத்தியது.

2002இல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நாள் முதலாக, 2009இல் போர் முடியும் நாள்வரை, ஜே.வி.பி போர்மூலம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதையே தன்னுடைய முக்கியமான கொள்கையாக்கியது.

ஜே.வி.பி இடதுசாரிக் கட்சியல்ல; அது, இடதுசாரி வேடம்பூண்ட பேரினவாதக் கட்சி. ஆனால், அதை இடதுசாரிக் கட்சியென்று அழைப்பது பலருக்கு வாய்ப்பானதாகையால், அவ்வாறே அழைக்கிறார்கள். ஜே.வி.பியில் இருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க) அவ்வாறானதே!

மு.சோ.கட்சி, ஜே.வி.பியின் கருப்பையில் உருவான சிசு. ஜே.வி.பியின் பேரினவாத அரசியலின் முழு விருத்தியின் போதும் அதில் பங்காளிகளாக இருந்தோரே இன்று மு.சோ.க தலைவர்களாய் உள்ளனர். அனைத்தினும் முக்கியமாக, எந்த ரோகண விஜேவீரவின் கொள்கைகள் ஜே.வி.பியை அழிவுக்குள் தள்ளி, அதன் பின்னால் அணிதிரண்ட பல்லாயிரக் கணக்கான இளைஞர்களைக் கொலைக்களத்துக்கு அனுப்பினவோ, அதே விஜேவீரவின் பாதையில் உறுதியாகத் தொடர்வோர், தாங்கள் மட்டுமே என்று, அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதன் பின்னணியிலேயே இலங்கையின் இனப்பிரச்சினையில் ஜே.வி.பி பேசுவது பற்றிக் கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதையும் இலங்கையின் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதையும் ஜே.வி.பியும் அதன்வழிவந்த மு.சோ.கவும் ஏற்கிறார்களா? இதற்குரிய பதிலே, அவர்கள் யார் என்பதை விளங்கப் போதுமானது.