ஐ.எஸ். பயங்கரவாதத்தை திடமுடன் எதிர்கொள்ளத் தயாராகும் இந்தோனேசியா

முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால், உலகளவில் பயங்கரவாதம் குறித்த அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்தில் ஜகார்த்தாவின் வீதிகள் வழக்கம் போலக் காணப்பட்டன. குறி வைத்துத் தாக்கப்பட்ட கடைக்குப் பக்கவாட்டில் இருக்கும் சரினா ​ெஷாப்பிங் மாலில் மக்கள் வழக்கம்போல வந்தனர். பயங்கரவாதத்தை எதிர்கொண்டதற்கான பதற்றம் எங்கும் காணப்படவில்லை. அலுவலக நேரங்களில் வழக்கம்போலப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் மந்தமாக ஊர்ந்தன. பங்குச் சந்தை நிலைவரத்திலும் மாற்றம் இல்லை. 5.80 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது. மொத்தத்தில் பயங்கரவாதிகளின் நோக்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் முற்றிலும் மாறாக ஜகார்த்தா நகர வாழ்க்கை சலனமற்ற நீரோடைபோல நகர்கிறது.

தலைநகரில் அமைதி திரும்பிய செய்தி ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் காதுகளுக்கு எட்டியது. இருந்தாலும், உண்மை நிலைவரம் இதுதானா எனத் தெரிந்து கொள்ள அவரே தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கும், குறிப்பிட்ட கட்டடத்துக்குள்ளேயும் நுழைந்து பார்வையிட்டார். ஜனாதிபதியின் இந்தத் துணிகர நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமும் அளித்தது. பயங்கரவாதிகளின் இலக்கு முறியடிக்கப்பட்டதை உலகுக்கு உணர்த்தியது. ஒருவிதத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இந்தோனேஷிய மக்களின் மனோதிடத்தை அவர்களுக்கே உணர்த்தியிருக்கிறது எனலாம். எப்படி பாரிஸ் தாக்குதலை பிரான்ஸ் மக்கள் எதிர்கொண்டு மீண்டு எழுந்து நின்றார்களோ அதே போல இதையும் மக்கள் தாங்கி நிமிர்ந்து நிற்கும் துணிச்சல் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக பயங்கரவாதத்தை அழித்தொழிக்க மக்களும் அரசும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரை அறிவித்ததிலிருந்து இந்தோனேஷியாவும் இதைத்தான் சொல்லி வருகிறது. மக்களைப் பாதுகாப்பதும், பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பதும்தான் அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆகவேதான் பயங்கரவாதத்துக்கு எதிர்த் தாக்குதல் நடவடிக்கையாக இந்தோனேஷிய போலிஸ் படையான டென்சஸ் 88 அடுத்த தினமே பெகேஸி, சிரிபான் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது அசாதாரணக் குற்றம் ஆதலால், அதைக் கட்டுப்படுத்த அசாதாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் குரல்கள் இந்தோனேஷிய வீதிகளில் மட்டுமல், சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கின்றன. “நாங்கள் அஞ்சவில்லை” என்னும் வார்த்தைதான் இன்று வைரலாகப் பரவி வருகிறது. இந்தோனேஷியாவின் அத்தனை உதடுகளும் உச்சரிக்கும் வாசகம் இது.

தமிழில்: ம. சுசித்ரா