ஒரு ஐந்து நிமிடங்கள்ஒ துக்கி இதை_படியுங்கள்

படத்தில் இருக்கும் பெரியவரை சென்னை பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிரே புதியதாக திறந்து இருக்கும் ஹோட்டலின் வாசலில் பார்த்தேன்.. தள்ளாடும் வயதில் வரும் வண்டிகளுக்கு பார்க்கிங் பார்த்து கொண்டு இருந்தார்… சாப்பிட உள்ளே நுழைந்த போது இவரிடம் பேசவில்லை.. திரும்பிய போது, இரவு பத்து மணி இருந்ததால், கூட்டம் குறைவாக இருந்தது.. வண்டி எடுக்கும் போது இவரிடம் பேச்சு கொடுத்தேன்.

(பொதுவாக இப்படி சென்னையில் அல்லது வெளியூர் பயணங்களில் ஹோட்டல் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி களிடம் பேச்சு கொடுப்பது வழக்கம்.. ஒரு பதிவும் அதை பற்றி நான் போட்டுள்ளேன்..ஹோட்டல் உள்ளே டிப்ஸ் தருவதை விட இவர்களுக்கு பொதுவாக கொடுப்பேன். பொதுவாக இவர்கள் வாழ்ந்து கெட்டவர்கள் தான்…. நிறைய கதைகள்… இவர் கதை எதுக்கும் சளைத்ததல்ல)

கையிலிருந்த ஐம்பது ரூபாயை இவருக்கு தந்து விட்டு
“ஐயா… எந்த ஊரு நீங்க… ”
” நான் வேலூர் பக்கம்..”
“இங்க எங்க இருக்கீங்க…”
“மேடவாக்கம்…”
” இந்த ஹோட்டல் ல தான் வேலை பார்க்கறீங்களா..”
“ம்ம்..”
“எவ்வளவு நாளா…”
“ஹோட்டல் திறந்தது லேர்ந்து.. ஒரு ஒன்னரை மாசம் இருக்கும்..”
“எவ்வளவு நேரம் வேலை…”
“சாயங்காலம் போல வருவேன்… காலை வர இருப்பேன்.. ”
” நைட் வாட்ச்மேன் வேலை யுமா… ”
” ம்ம் ”
” இந்த வயசுல வேலை பார்க்கறீங்களே.. பசங்க? …”
” மூனு பசங்க, ஒரு பொண்ணு… தனி தனியா போயிட்டாங்க.. ”
” இப்ப யாரு கூட இருக்கீங்க… ”
” ஒரு பையன் என் கூட தான் இருக்கான்..”
” அவர் வேலை க்கு போலயா…”
” போனான்.. ” சற்று இடைவெளி விட்டு.. குரல் உடைகிறது… கண்ணீர் அடைக்க..” என் வீட்டுல தவறிடுச்சி…. அதுக்கு அப்புறம் போறது இல்ல ”
இப்போது கண்ணீர் வந்தே விட்டது
அவர் தோளை தட்டி கொடுத்து..
” தைரியமா இருங்க.. ஐயா.. எப்ப இறந்தாங்க..? ”
” இரண்டு மாசம் இருக்கும்… ”
” பையன் ஏன் வேலை க்கு போறது இல்ல…”
“பேரன் க்கு சாப்பாடு கட்டணும்.. அவன பார்த்து க்கணும்.. “… வேற காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றியது
” உங்க பையன் வீட்டுக்காரங்க எங்க .. ”
“அது முன்னாடியே செத்து போச்சு.. உடம்பு சரியில்லாம..”
நான் சற்று இடைவெளி விட்டு..
“இங்க எவ்வளவு சம்பளம் தர்றாங்க… ”
” எழுநூறு ரூபா… ” என்றார்
நான் ஒரு நொடி யோசிக்காமல்” ஒரு நாளைக்கா.. ” என்றவுடன் அருகிலிருந்த என் மனைவி.. “ஏங்க.. ” என்றவுடன் தான் சுதாரித்தேன்… அதுக்குள்ள அவரே” மாசத்துக்கு ” என்றார்
ஒரு நிமிடம் டோட்டலா ப்ளாங்க் ஆகி போனது எனக்கு…
எழுநூறு ரூபாய் சம்பளம் ஒரு மாதத்துக்கு… நாங்கள் ஹோட்டலில் செலுத்திய சாப்பிட்ட பில் கிட்டத்தட்ட அது தான்… எழுநூறு ரூபா ஒரு மாதத்திற்கு… என்ன செய்ய முடியும்… இந்த வயதில் யாரும் வேலைக்கு சேர்த்துக்காத தால் இந்த ஹோட்டலில் இவரை சேர்த்து கொண்டாலும், எழுநூறு ஜீரணிக்க முடியவில்லை…
“வெறும் எழுநூறு ரூபா வா..”
” ம்ம்ம்.. அப்புறம் ஏத்தி தர்றேன்னு சொன்னாங்க..”
அதற்குள் பர்சில் இருந்த சில நோட்டுக்களை அவர் கையில் திணித்தேன்..
மாத சம்பளமே கிட்டத்தட்ட கிடைத்த சந்தோசமா, அல்லது இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்கிற பெரும் வலியா.. தெரியவில்லை.. மீண்டும் அவரின் கண்களில் நீர்….
” ஐயா.. எப்படி சமாளிக்கிறிங்க.. ”
” இரண்டு மாசமா தானே என் பையனுக்கு வேலை இல்ல.. ரேசன் அரிசி வெச்சு ஓட்டுறோம்…”
“மத்த பசங்க ளாம்”
“அவனவன் வேலைய பாக்குறாங்க”
“வீடு… வாடகை…”
“இல்ல அது சொந்த வீடு தான்…”
“இங்க உங்களுக்கு சாப்பாடு தர்றாங்களா..”
“அதெல்லாம் தர்றாங்க”
” என்ன குடுப்பாங்க… ”
” என்ன இருக்கோ.. ”
“உங்க பேரன் என்ன பண்றான்….”
“குரு நானக் காலேஜ் ல படிக்கிறான்.. First year ”
” அவனுக்கு ஃபீஸ்… ”
” நான் சம்பாதிச்ச பணம் மொத்தமா ஒரு அம்பதாயிரம் வச்சிருந்தேன். அதை வெச்சு கொஞ்ச குடுத்தேன்.. இனி பார்க்கணும்.. ”
” உங்க பையன்… வேலை க்கு போவாரா? ”
” போகணும்.. இதோ இங்க தான் (ஜெயச்சந்திரன்) செக்யூரிட்டியா இருந்தான்… இப்ப மறுபடியும் கேட்டிருக்கேன்.. அடுத்த வாரம் வர சொன்னாங்க.. தெரில… ”
” அவர் வேலை க்கு போயிட்டா, நீங்க வேலை க்கு வர்றது நிப்பாட்டி டுவீங்களா.. ”
மௌனமாக நின்றார்…. மனைவியும் இல்லாம வேறொரு கையை எதிர்பார்க்க பயப்படுகிறார் என்பது யூகிக்க முடிந்தது.. தவிர வாழ்க்கை யில் பல அடிகள் பார்த்து கிட்டத்தட்ட செல்லரித்து போன ஏணி.. அப்படி தான் இருக்கும்.
” உங்க வயசு என்னங்க… ”
” எழுபத்தி ரெண்டு.. ”
” உங்க பேரு ”
“ரகுபதி”
” சரி ஐயா… என்னால என்ன முடியும் ன்னு பார்க்குறேன்… உங்க ஃபோன் நம்பர் குடுங்க… உங்க பேரன் போன் இருக்கா…”
வைத்திருந்த பாக்கெட் நோட்டு தந்தார்.. அதில் வேற நிறைய நம்பர் இருந்தது… ரகுபதி என்று போட்டு ஒரு நம்பர் இருந்தது… அதை குறித்து கொண்டேன்…அவருக்கு தெரியவில்லை.. அந்த நம்பர் க்கு அழைத்தேன்.. அவர் பாக்கெட் டில் ஒரு பழைய போன் ஒலித்தது…” அது நான் தான்.. என் பெயர் ராஜகோபாலன்.. உங்க பேரன் எனக்கு கால் பண்ண சொல்லுங்க.. அவன் படிப்பு பற்றி பேசணும் (எங்கள் மாற்றம் அறக்கட்டளை மூலம் அவனை படிக்க வைக்க முடியுமா என்று பார்க்க திட்டமிட்டேன்) ..”
தலை அசைத்து கொண்டார்…சொல்லுவாரா மறக்காம என்று தெரியவில்லை…
மேற்கொண்டு கொஞ்சம் கையில இருந்ததும் அவருக்கு தந்தேன்….
“நான் வர்றேன் ஐயா..தைரியமா இருங்க…” தலையசைத்து கை எடுத்து கும்பிட்டார்…

அந்த வலி மிகுந்த கண்கள், வாழ்ந்து கெட்ட பல கதைகளுடன் என்னிடமிருந்து விடை பெற்றது.

அவரின் நம்பர் இது…
திரு. ரகுபதி – 8939608027

அதை அவர் எடுத்து ஒழுங்கா பேசுவாரா தெரியவில்லை…

மேடவாக்கம் சுற்றியுள்ளவர்கள், அபார்ட்மென்ட் வாசிகள், கடை வைத்து இருப்பவர்கள் இவருக்கு ஏதாவது வேலை தர இயலுமா பாருங்கள்…

இவருக்கு தற்போது வேலை தந்திருப்பவர்களால் எழுநூறு ரூபாய் தான் முடிகிறது.. அதை வைத்து ஒன்றுமே செய்ய இயலாது….

அவரின் பையன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள், அவருக்கு வேலை தர முடிந்தாலும் நல்லது… இந்த பெரியவருக்கும் ஓரளவு சுமாரான சம்பளத்தில் யாராவது தர மனது இருந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்…

இன்னும் சில வருடங்களே நிறைந்த அந்த பெரும் வாழ்க்கை கௌரவமாக வாழ முற்படுகிறது, அதுக்கு உங்களால முடிந்த உதவி செய்யுங்கள்…
நானும் என்னளவில் தந்தை மகனுக்கு என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்…. அவரின் பேரன் படிப்பு க்கு என்ன செய்ய முடியும் என்பதும் பார்த்து வருகிறேன்…

இந்த பதிவை படிக்கும், அவரை வேலையில் வைத்திருக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் கவனத்திற்கு – தயவு செய்து அவருக்கு வேறு சற்று அதிக சம்பள வேலை கிட்டும் வரை, அவரை வேலை விட்டு நீக்க வேண்டாம்… அவருக்கு ஒரு வேலை தந்தமைக்கு நன்றி, முடிந்தால் கொஞ்சம் அதிக சம்பளம் குடுங்க…வேறென்ன சொல்ல… இவரை போன்றவர்கள் க்கு சரியான சம்பளம் தருவது உங்க தலைமுறைகளை வாழ்த்தும்

இந்த பதிவை படிக்கும் நண்பர்கள்…
உங்களால் முடிந்ததை செய்யுங்கள்..அந்த பக்கம் போகும் போது, அந்த இடத்தில் இவர் இருந்தால், கையில் இருக்கும் ஒரு பத்து இருபது அவருக்கு கொடுங்க…அது ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சாப்பாடு செலவு..
நான் முந்தைய பதிவுகளில் சொன்னது போல, இவரை போல, ஹோட்டல் வாசலில், நெடுஞ்சாலை களில் கொடி அசைப்போர், ATM வாசல் தாத்தா… இவர்களுக்கு முடிந்ததை கொடுங்க…. நான் எப்பவும் செய்கிறேன்… அந்த கண்களில் அப்படி ஒரு ஏக்கம் கலந்த நன்றி இருக்கும்…. ஹோட்டலில் நீங்க ஆர்டர் செய்து மிச்சமாகும் சாப்பாட்டை, குப்பையில் விடாமல், பார்சல் செய்ய சொல்லி, வெளியில் நிற்கும் இந்த மாதிரி வயதானவர்களுக்கு கொடுங்கள்.. அவர்களுக்கு அது தேவாமிர்தம்….இந்த பதிவை பகிருங்கள்.. ஏதாவது நல்லது நடக்கட்டும் விரைவில்.

இந்த பதிவை படிக்கும், அவரின் மற்ற, சுகமாக வாழும் வாரிசுகள்…
இந்த வயதில் அவரை இப்படி கஷ்ட பட விட்டதுக்கு உங்களுக்கு காலம் பதில் சொல்லும்… KARMA IS A BOOMERANG…
ஆனால் தினம் ஒரு வேலையாவது கழுவுற கையிலேயே சாப்பிடுங்கள்…

-இரா. இராஜகோபாலன்