ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா

எனினும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ​எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு விரைந்து உதவுவதற்காக, உதவிகளை விரைவுப்படுத்துவதற்காக மேலதிக நேரம் (ஓவர் டைம்) வேலை செய்வதாக, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவசர சத்திர சிகிச்சைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என பேராதனை போத​னா வைத்தியசாலையின் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், விரைந்து செயற்பட்ட ஜெய்சங்கர், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தி மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பணித்திருந்தார்.

இவ்வாறு பல வழிகளிலும் இந்தியா உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கிறது. அதேபோல, கேட்கும் போதெல்லாம் கடன் வழங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான், இந்திய விஜயத்தின் போது, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக, மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இலங்கை மக்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். இனிமேலும் பொறுமையுடன் இருக்கமுடியாத நிலைமையொன்று நாட்டுக்குள் ஏற்பட்டுவிட்டது. இதனை சமாளிப்பதற்காகதான், இலங்கை ஓடோடி கடன் பெறுகின்றது.

எனினும், அண்டைய நாடான இந்தியா, எந்த நேரமும் உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறது. கடந்த காலங்களில் செய்த உதவிக்கு மேல் ஒருபடிச் சென்று, சகல வழிகளிலும் உதவிகளை செய்துவருகின்றது. அந்த உதவும் கரத்தை கடித்துவிடக்கூடாது.

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 5 ஆவது வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டிற்கு வருகைதந்திருந்த ​இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கரின் முன்னிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அதில், இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் புதிய மின் திட்டத்தை அமைக்க இந்திய ஒப்பந்தம் செய்துள்ளமை பிரதானமாக கருதப்படுகின்றது. சீனா ஆதரவுடன் செயல்படுத்தப்பட இருந்த மின் திட்டத்தை மாற்றி இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டெலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பதவி விலக கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

சீனாவின் கடன்

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட சீனா வங்கிகளிடம் வாங்கிய கடனும் காரணம் என சொல்லப்படுகிறது. கடனுக்காக பல திட்டங்களுக்கு சீனாவிடம் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும் செய்து வருகிறது.

ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாகாணத்தில் 3 ஆவது முக்கிய மின் திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முன்னதாக சீன நிறுவனமான சினோசோர்-எடெக்வினுக்கு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை வழங்க முடிவு செய்தது. தமிழ்நாட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்க் விரிகுடாவில் சீனத் திட்டம் வருவதற்கு இலங்கையிடம் இந்தியா உடனடியாக கவலை தெரிவித்தது.

அதே திட்டத்தை கடனை விட மானியத்துடன் செயல்படுத்த இந்தியா முன் வந்தது. இதனால் சீனாவுடனான திட்டத்தை இலங்கை நிறுத்தி வைத்தது. இதற்கு இலங்கையில் உள்ள சீன தூதர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தியா ஒப்பந்தம்

இந்த சூழ்நிலையில் தான் 3 ஆவது திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு சம்பூர் நகரத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் சூரிய மின் உற்பத்தி திட்டம், மன்னார் மற்றும் பூனேரியில் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான அண்மையில் ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா செயல்படுத்தும் மூன்றாவது மின் உற்பத்தி திட்டம் இதுவாகும்.

இதுமட்டுமின்றி இந்தியாவும் இலங்கையும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் 6 மில்லியன் டாலர்கள் இந்திய மானியத்துடன் திட்டத்தை செயல்படுத்த இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, வடமாகாணத்தில் பருத்தித்துறை, பேசாலை, குருநகர், தலைநகர் கொழும்பிற்கு தெற்கே உள்ள பலப்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், தென் காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை வழங்குவதற்கும் இந்தியா உதவும் எனத் தெரிகிறது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை (SL-UDI)  அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை;

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை:

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை;

இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை;

காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடனான ஸ்மார்ட் அட்டைகள் மற்றும் நவீன கணனி ஆய்வு கூடங்களை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை; மற்றும்,

வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

மீனவர்களுடன் தொடர்புடைய விடயங்கள், அதிகார பகிர்வு விடயங்களிலும் இந்திய கூடுதல் கரிசனையை காண்பித்து வருகின்றமையை அவதானிக்கமுடிகின்றது.

அதுமட்டுமன்றி, இந்தியா இலங்கை அபிவிருத்தி பங்குடைமையின் மிளிரும் உதாரணமாக யாழ்ப்பாணக் கலாசார நிலையம் அமைகின்றது. வடமாகாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பினை விஸ்தரிப்பதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நல்லிணக்க திட்டமே இதுவாகும். இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் இக்கலாசார நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறான வழிகளிலும் உதவிகரம் நீட்டிக்கொண்டிருக்கும் இந்தியா, இலங்கைக்காக ​ஓவர் டைம் வேலைச் செய்கின்றது. எனினும், அந்த உதவிகளை எல்லாம் இந்தியா, எவ்விதமான எதிர்ப்பார்ப்புகளும் இன்றி வழங்கவில்லை. அதன் பின்புலத்தில் தூண்டில் போடப்பட்டுள்ளது என, இந்தியாவுக்கு எதிரான தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமையை மறுதலிக்கவும் முடியாது.

(Tamil Mirror)