கண்டியில் நடப்பது அரசியல் கலவரம்!

புதிய ஆட்சி வந்த பின்னர், உள்ளூராட்சி தேர்தல் வரை, இப்படியான ஒரு குமுறலும் நாட்டில் இருக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின் வென்றவர்கள் , இருக்கும் ஆட்சியை எறிந்து தமது ஆட்சியை கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டார்கள். தேர்தல் கால மேடைகளில் “புதிய அரசை மாற்றுவதற்கான வாக்கெடுப்பு” என்று பேசியே மக்கள் மனதில் விசத்தை விதைத்தார்கள். அதன் பிரதிபலனே இந்த கலவரங்களுக்கான பின்னணி.

ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை உருவாக்க , அம்பாறை பிரச்சனையை ஆரம்பித்தார்கள். அங்கு சில கடைகளும் , பள்ளிவாசலும் எரிக்கப்பட்டன. அது நினைத்தது போல பரவாது தணியும் போது, கண்டி கலவரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தை கொழும்பு பகுதியில் தொடங்குவதே ஆரம்ப திட்டம். ஆனால் கொழும்பில் படைகள் இருப்பதால் தடுக்கப்பட்டுவிடும். கொழும்பு முஸ்லீம்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என களம் மாற்றப்பட்டது.

சிங்களவர் தாக்கும் போது, முஸ்லீம்கள் திருப்பி தாக்க வேண்டும். அப்படியான உணர்வுள்ள முஸ்லீம்கள் செறிந்து, தனியாக வாழும் பகுதியில் மட்டுமே அது சாத்தியம். அதுபோல எதிர் தாக்குதல் நடத்தப்படுமானால் இலங்கை முழுவதும் கலவரத்தை பரவச் செய்யலாம். இப்படியானதொரு திட்டம் தீட்டப்படுவதாக , சிங்களத்தில் வெளிவரும் இணையச் தளமொன்று, சிகப்பு செய்தியொன்றை அம்பாறை பிரச்சனையின் போது பகிர்ந்திருந்தது. அங்கு பெரிதாக கலவரம் செய்ய யாரும் முயலவில்லை. அப்படி அன்று அம்பாறைக்கு போக தயாரான குழுதான், இன்று கண்டிக்கு போயுள்ளது.

ஒரு சிலருக்குள் நடந்த ஒரு தனிப்பட்ட பிரச்சனையே இனப் பிரச்சனையாக உருப் பெற்றுள்ளது. உண்மையில் இறந்தவருக்கும் அடித்தவர்களுக்கும் இது இப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் கிடைக்கும் எதையாவது தமக்கு சாதகமாக்கிக் கொள்ள சிலர் தயாராகவே இருந்தார்கள்.

இந்த பிரச்சனைக்கு விதையான சம்பவம் என்ன?

ஒரு லொறிக்கு பின்னால் வந்த ஆட்டோவை முன்னால் போக விடாமல் லொறி டிரைவர் தடுத்ததுதான் ஆரம்ப பிரச்சனை. லொறி டிரைவர் சிங்களவர். ஆட்டோவில் வந்தவர்கள் இஸ்லாமியர்கள். லொறியை துரத்தி வந்தவர்கள் பிரச்சனைப்படுகிறார்கள். அங்கே ஒரு கண்ணாடி உடைந்து விடுகிறது. அதை இருந்தது போலவே வேண்டும் என தொடங்கும் விவாதம் , அடிதடியில் முடிகிறது. சிங்களவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். தாக்கிய சம்பவத்தோடு தொடர்புடைய நால்வர் போலீசாரால் கைதாகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான சிங்கள இளைஞர் வைத்தியசாலையில் மரணிக்கிறார்.

அதற்கான பழிவாங்கலாக சிங்களவர்கள் திரண்டார்கள் என்றே நாம் நினைக்கிறோம் . அதுதான் இல்லை. கலவரம் செய்வோருக்கும், இறந்தவரது குடும்பத்துக்கும் எந்த உறவும் இல்லை. இங்கே திரண்டவர்களில் பெரும்பாலோனோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த காடையர்களாகவே தெரிகிறது. அவர்களது வீடியோக்களில் அவர்களே வேறு இடங்களில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அதிலிருந்தே கலவரமொன்றுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பது உறுதியாகிறது. அவர்களுக்கு அந்தப் பகுதி பரிட்சயமில்லை. அங்கு ஒரு சிங்கள கடையைக் கூட காண முடியவில்லை. எல்லாம் முஸ்லீம் கடைகள் என குறைப்படுகிறார்கள். அதாவது அவர்கள் அப் பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. அப்பகுதியில் இருப்போராக இருந்தால் அங்கு உள்ளவை முஸ்லீம்களின் கடைகள் என்பது தெரியாமலா இருக்கும்? அங்கு வாழ்வோர் அதே இடத்தில் வாழ்வோரை தாக்க மாட்டார்கள்.

இதன் பின்னால் அரசியல்வாதிகளின் பெரும் சதியொன்று உள்ளது. நடப்பு அரசை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதற்கு செய்யும் சதி என்பது யாருக்காவது புரியாவிட்டால், நீங்கள் பலிக்கடாவாகிவிடுவீர்கள். இங்கே சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சில முஸ்லீம் அரசியல்வாதிகளும் சேர்ந்தே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தத்தமது அரசியல் தேவைக்காக தன் சமூகத்தையே கொழுத்துகிறார்கள். அவர்கள் யார் என்பதை கண்டறியுங்கள்?

இந்த கலவரத்தை எம்மைப் போல சமாதானத்தை விரும்பும், சிங்களவரும் எதிர்க்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். நாலு காவாலிகள் செய்வதை வைத்து, நாற்பது நல்லவர்கள் மனதை புண்படுத்தக் கூடாது. அதில் தெளிவாக இருத்தல் வேண்டும்.

சாதாரணமாக சிங்களவரோடு சிங்களவர் அடிபட்டால் இனக்கலவரமொன்று ஏற்படுவதில்லை. தமிழரோடு தமிழர் அடிபட்டாலும் இனக்கலவரமொன்று ஏற்படுவதில்லை. முஸ்லீம்களோடு முஸ்லீம்கள் அடிபட்டாலும் இனக்கலவரமொன்று ஏற்படுவதில்லை. ஆனால் இனம் மாறி நடந்தால் அது இனக் கலவரமாகி தேசத்தையே எரித்துவிடுகிறது.

இங்கே அனைத்து தரப்பினருள்ளும் , ஒருவர் தாக்கப்படுவதை ரசிக்கும் மனோ நிலை கொண்ட மன நோயாளிகள் இல்லாமல் இல்லை. அவர்களை உதாசீனம் செய்யுங்கள். அவர்களோடு மோதுவதோ அல்லது அவர்களோடு விவாதிப்பதோ இந் நேரத்தில் வேண்டாம்.

உங்கள் சமூகத்தில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையாக செயல்படாமையே இவை இவ்வளவு தூரம் பரவக் காரணம். அவர்களும் இதிலிருந்து வாக்கு வேட்டையை பெறத்தான் கனவு காண்கிறார்கள். யார் முதலில் உதவிக்கு போனது என பதிவு செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களது பிரசார அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள். அவர்களது மெளனத்தை கலைக்க முன் வாருங்கள். இவர்களது கேடு கெட்ட அரசியலால் பாதிக்கப்படுவோர் ஒன்றுமே அறியாத அப்பாவிகளேயாகும். அதை பகிரங்கப்படுத்துங்கள்.

இந்த அரசியல்வாதிகள் யார் எனக் கண்டு பிடிக்க பெரிய புலனாய்வு எல்லாம் தேவையில்லை. கண்டியில் காடையர்களை தலைமை தாங்கி நிற்கும் பிக்குகள் யாருடைய அரசியலை பின்பற்றுகிறவர்கள் எனக் கண்டு பிடித்தால், பின்னால் உள்ள அரசியல்வாதிகளை பிடிக்கலாம்.

சிரியாவுக்காக வீதிக்கு வந்து அமைதிப் போராட்டம் நடத்துவோர் , தன் அயலவனுக்காகவும் வீதிக்கு வந்து அமைதியாக போராட்டம் நடத்துங்கள். இதற்கு பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் என அறிந்து செயல்படுங்கள். உங்கள் அமைதி நாளை உங்களையும் தாக்கும். அவதானம்.

விரைவில் அமைதி திரும்ப வேண்டி பிராத்தனை செய்வோம்.

(Ajeevan Veer)