கனடாவில் “ வேட்கை “ !?

முன்னாள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் உறுப்பினர், பின்பு கருணாவுடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர், தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை மகிந்த அரசு நீதிமன்ற துணை கொண்டு பிரித்தபின் நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் வென்று முதல் அமைச்சர் ஆனவர், இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டவராக தடுப்பு காவலில் இருப்பவர் என பலமுகம் கொண்ட பிள்ளையான் என அறியப்படும் சந்திரகாந்தன் அவர்களால் எழுதப்பட்ட அவரது அனுபவம் தான் “ வேட்கை “ எனும் அவரின் அவரின் அனுபவ குறிப்பு.

இதுவரை அந்த புத்தகம் என் கரம் வந்து சேரவில்லை. முதலாவது பதிப்பு வந்தபோது எஸ் எல் எம் ஹனிபா அனுப்புகிறேன் என்றார். பாரிஸில் வெளியிடுவது அறிந்து ஞானம் ஸ்டாலின் அனுப்புகிறேன் என்றார். மட்டக்களப்பில் இருந்து திலீப் குமார் அனுப்புவதாக கூறினார். எனக்கு கொடுப்பனவு இல்லை என்பதை இதுவரை அது என் கரம் சேராததில் இருந்து புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்த புத்தகம் பற்றிய பரபரப்பான செய்திகள் மட்டும் உடனுக்குடன் முகநூலில் வந்தது. பாரீசில் எரிக்கும் படம் பார்த்த எனக்கு விமர்சன காட்சி பதிவை கனடாவில் இருந்து நண்பன் கந்தையா சிவா மெசஞ்சரில் அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் இருக்கை எது என்ற அறிவுறுத்தலுடன் அவரின் ஆரம்ப உரையில் அவர் பாராட்டியது ஏற்பாட்டாளரை. பல்வேறு கருத்துகள் கொண்டவரை ஒரே அரங்கில் விமர்சனம் செய்ய அழைத்தது பற்றி அவரை சிலாகித்து பேசி முப்பது வருடங்களுக்கு முன்பு நாம் தவறவிட்ட சந்தர்ப்பத்தை நொந்து கொண்டார். கிழக்கின் மீதான மையல், அவர்களின் விருந்தோம்பல் என பல விடயங்கள் தன்னை அந்த மண்ணின் மணாளன் ஆக்கும் நிலை கூட இருந்தது என கூறியவர் ஈழ போராட்ட அமைப்புகளில் அதிகம் இணைந்து வீரகாவியமானவர் கிழக்கு மண்ணின் மைந்தர்கள் என்பதையும் உறுதியுடன் பதிவிட்டார்.

புத்தகம் பற்றி விமர்சிக்க, கருத்து கூற அவர் முதலில் அழைத்தது அவருடன் உறவாடும், முரண்படும் சில வேளைகளில் பேசக்கூட மறுக்கும் அவரது நண்பன் யோகராஜன் என்பவரை. மிகமிக சரியான கோணத்தில் அவரது விமர்சனம்/ கருத்து/ மற்றும் அபிப்பிராயம் அமைந்தது மறுக்க முடியாத என் மனதை திருப்பதி படுத்திய விடயம். ஒரு விடயம் பற்றிய புரிதல் இல்லாதவர் கொடுத்த பணியை விட்டு மாடு பற்றி பேச சொன்னால் மாட்டை கொண்டு போய் மரத்தில் கட்டி விட்டு மரம் பற்றி விளாசி தள்ளுவர். தான் சுரேஸ் ஆதரவாளர் என்பதால் நிகழ்ச்சிக்கு போகாதே என கூறியவர் கூற்றை ஏற்காது புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் ஓட்டத்தை தெளிவாக விமர்சித்தார்.

ஒருவரின் புத்தக வெளியீட்டில் பேணப்பட வேண்டிய அத்தனை பண்புகளும் தலைமை வகித்தவர், யோகராஜா மற்றும் மித்திரன் உட்பட பலரிடம் காணப்பட்ட போதும் ஒருசிலர் பாதை மாறி போனது வேதனையானது. இத்தனைக்கும் இங்கு கலந்து கொண்ட பலருடன் எனக்கு நேரடி அறிமுகம் இல்லை. அறிந்தவருடனும் கூட எனக்கு பல ஆண்டுகள் எந்த வித சந்திப்புகளோ உரையாடலோ கிடையவே கிடையாது. அதனால் தான் எனக்கு விருப்பம் இல்லாத வார்த்தை பிரயோகம் செய்து விமர்சனம் செய்தவரை பாதை மாறிய சிலர் என்று சொல்கிறேன். முப்பது வருடங்களின் பின் வந்த ஒன்று கூடல் என் எழுத்துகளால் சேதாரம் ஆகி விட கூடாது என்பதால் அவர்கள் பற்றி பதியவில்லை.

இலங்கையில் எதிர்த்தார்கள்! பிரான்சில் எரித்தார்கள்? கனடாவில் விமர்சித்தார்கள். இங்கு நான் தலை சாய்த்து இரு கரம் கூப்பி நன்றி கூறுவது கனடா அன்பர்களுக்கே. கூட்டு குடும்பத்தில் கூட கருத்து மோதல் வரும். ஆனால் அங்கு அது நாகரீக வார்த்தை பிரயோகங்கள் கொண்டதாகவே இருக்கும். வாய் பேச்சு வரையறைக்குள் இருக்கும். அராஜகம் அங்கு கோலோச்சாது. எம் மண்ணின் அடிப்படை பண்பாடு எடுத்தாளப்படும். அசிங்கங்கள் அரங்கேறாது. அத்தனைக்கும் நடைமுறை உதாரணமாக நடந்து நிகழ்ச்சியை அடுத்தவருக்கு ஒரு முன் உதாரணமாக நடத்தி முடித்த ஏற்ப்பாட்டாளர், தலைமை தாங்கியவர் கலந்து கொண்ட கருத்துரையாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி – மகிழ்ச்சி –
– ராம் –