கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்

(மொஹமட் பாதுஷா)

மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது.

அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில், வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வறிக்கையில், கரையோர மாவட்டம் குறித்தோ, அன்றேல் முஸ்லிம் தனி அதிகார அலகு குறித்தோ, வழிநடாத்தல் குழுவின் யோசனையாக எதுவும் முன்மொழியப்படவில்லை.

இவற்றை, வழிநடாத்தல் குழுவின் யோசனையாக முன்னிலைப்படுத்துவதில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆக்கபூர்வமின்றி இருந்திருக்கின்றன என்று சொல்ல வேண்டியுள்ளது.

மக்கள் காங்கிரஸ் கட்சி, தமது பிரத்தியேக யோசனையாக கரையோர மாவட்டம் என்ற விடயத்தை மாத்திரம், ‘ஒலுவில் மாவட்டம்’ என்ற பெயரில் முன்வைத்திருக்கிறது.

வடக்கு, கிழக்கு இணைப்புக்குப் பகிரங்கமாகவும் பரவலாகவும் முஸ்லிம்கள் இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றமையால், நிலைமைகளைச் சமாளிப்பதற்கு, “வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், முஸ்லிம்களுக்குத் தனியான அலகு என்ற நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும்” என்ற தோரணையில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பேசத் தொடங்கியிருக்கின்றார்.

ஆனால், அக்கட்சி ஒரு பிரத்தியேக யோசனையாகக் கூட வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதையோ அவ்வாறு இணைக்கப்படின் தனி அலகு வழங்கப்பட வேண்டும் என்றோ வழிநடாத்தல் குழு அறிக்கையில் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை.

அதேபோன்று, கரையோர மாவட்டம் குறித்த அறிக்கையை மு.கா கையளித்ததாகக் குறிப்பிடுகின்றபோதும், அவ்வாறான யோசனையும் கூட, மேற்படி அறிக்கையில் பிரசுரமாகவில்லை.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி பேசப்படுவதற்கு, சமாந்தரமாக முஸ்லிம் தனியலகு பற்றியும் கரையோர மாவட்டம் குறித்தும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

மயக்கமான பேச்சுகளால், ஒன்றுக்கொன்று சமமானவை என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கணிசமான முஸ்லிம்கள் இந்தச் சொல்லாடல்கள் குறித்து, தெளிவற்ற நிலையிலேயே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து, முஸ்லிம் மகாஜனங்கள் முதலில் தெளிவுபெற வேண்டும். சில அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க மாட்டார்கள்.

முதலாவது விடயம், கரையோர மாவட்டத்துக்கும், முஸ்லிம் அலகு அல்லது தனிமாகாணம் என்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருப்பொருட்கள் கொண்டவையாகும்.

இலங்கையில் ஏற்கெனவே இருக்கின்ற 25 நிர்வாக மாவட்டங்களைப் போன்ற, இன்னுமொரு புதிய மாவட்டமாகவே கரையோர மாவட்டம் இருக்கும். இங்கு நிர்வாக ரீதியான செல்வாக்கு இருக்கலாமேயொழிய அரசியல் ரீதியான எந்த அதிகாரமும் முஸ்லிம்களுக்கு இருக்காது.

அதேவேளை, முஸ்லிம் அலகு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய, இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்புபட்டதாகும். இது அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடையதாகும்.

1960களில் பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, சிறுபான்மை மக்கள் பெருமளவில் காணப்பட்ட மூன்று தொகுதிகளில் உள்ள ஓர் ஊரை, மாவட்டத்தின் தலைநகராக நிர்ணயிக்காமல், 500 இற்கும் குறைவான சிங்கள வாக்குகளையே கொண்டிருந்த அம்பாறை நகரம், மாவட்டத்தின் தலைநகராக நிர்ணயிக்கப்பட்டது.

அதை நியாயப்படுத்துவதற்காகவும் அங்கு சிங்கள மக்களின் தொகையை அதிகரிப்பதற்காகவும் அபிவிருத்தித் திட்டங்களின் பெயரால் காலி, மாத்தறை, கம்பஹா, குருணாகல், கேகாலை, மீரிகம போன்ற இடங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள், திட்டமிட்ட அடிப்படையில், அழைத்து வரப்பட்டு, அம்பாறை நகரைச் சுற்றிலும் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இன்றுவரையும் இது நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கு, இது முதன்மைச் சான்று எனலாம். முஸ்லிம் அரசியல்வாதிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சிங்கள ஆட்சியாளர்கள் காரியங்களை சாதிக்கத் தொடங்கிய முதலாவது தருணமாகவும் இதைக் கொள்ள முடியும். அன்றிலிருந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரான அம்பாறையிலேயே கச்சேரி இயங்கி வருகின்றது.

அம்பாறையில் இயங்கும் கச்சேரி என்பது, அரச இயந்திரத்தின் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் அதிகார மையமாகும். இந்த மையம், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சூசகமான முறையில் செய்த பாரபட்சங்களின் பட்டியல் நீளமானது.

மொழிப் பிரச்சினையில் தொடங்கி காணி அபகரிப்பு வரை பல்வேறு சிக்கல்களுக்கு சிறுபான்மையினர் முகம்கொடுக்க நேரிட்டதன் அடிப்படைக் காரணம் அம்பாறையில் மையங்கொண்டிருந்த இந்த நிர்வாகச் சுழிதான் என்றால் மிகையில்லை.

எனவேதான், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து, தற்போதைய அம்பாறை மாவட்டத்துக்குள் தமிழர், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கரையோர மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கரையோர மாவட்டம் என்பது, வெறும் அரசியல் கோஷமல்ல. அது, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல குழுக்களாலும், பல தடவைகளில் கண்டறியப்பட்ட அத்தியாவசியத் தேவைப்பாடு ஆகும். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் போன்றவர்கள் இதைக் கையிலெடுக்க முன்னரே, அதாவது 1977 இல், ‘மொரகொட ஆணைக்குழு’ கல்முனையை மையமாகக் கொண்ட, ஒரு கரையோர மாவட்டம் உருவாக வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவ்வாறு உருவாகுவதற்கு அம்பாறையில் நிலைகொண்டிருந்த இனவாதம் விடவில்லை.

அதன்பிறகு, அரசியல் முன்னெடுப்புகளின் ஊடாக, இதைச் சாத்தியமாக்குவதற்கு முதலில் அஷ்ரப்பும் பின்னர், முஸ்லிம் காங்கிரஸூம் முயற்சி செய்தன. 1994 சந்திரிகா அம்மையார் ஆட்சியில், இதைப்பெற அஷ்ரப் முயன்றார். நடாளுமன்றத்துக்கும் அதை முன்னகர்த்தியிருந்தார்.

அவரது மரணத்துக்குப் பிறகு 2002இலும் 2007இலும் 2012இலும் 2015இலும் மு.காவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அரசியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலும், கரையோர மாவட்டம் பற்றிய உடன்பாடுகள் எட்டப்பட்டன என்று முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சொல்லியிருந்தது.

2015இல் கரையோர மாவட்டம் கிடைத்திருந்தால், அநேகமாக அக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளித்திருக்கும். அதைத் தருவதற்கு பஷில் ராஜபக்ஷ இழுத்தடிக்கின்றார் என்று அறிந்த பிறகுதான், மைத்திரிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை, தபால்மூல வாக்குகள் அளிக்கப்பட்ட பின்னர், மு.கா அறிவித்தது.

இவ்வாறு அரசியல் தீர்மானங்களில் எல்லாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு கருவியாக கரையோர (கல்முனை) மாவட்டம் இருந்து வருகின்ற போதிலும், அதை ஒற்றைக்காலில் நின்று பெற்றெடுக்க, முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளோ காத்திரமான முயற்சிகளை எடுக்கவில்லை.

ஆதலால், அண்மைக் காலங்களில் இது அரசியல் செய்வதற்கான ஒரு கோஷமாகப் பார்க்கப்படுகின்றது. இதை மாற்றியமைத்து, எல்லா நிர்வாக அதிகாரங்களுடனும் கூடிய கரையோர மாவட்டத்தைப் பெறுவது அவசியமாகும். தமிழ், முஸ்லிம் மக்களின் நிர்வாக, சிவில் சிக்கல்களை இது இலகுவாக்கும்.

கரையோர மாவட்டத்தை, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் ஊடாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால், முஸ்லிம் தனி அதிகார அலகு என்பது, இதிலிருந்து எல்லா அடிப்படைகளிலும் வேறுபடுகின்றது. இது, தமிழர்கள் கேட்பதற்கு ஒப்பான, ஓர் அரசியல் அதிகாரமுள்ள நிலப்பரப்பும் ஆளுகையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, முஸ்லிம் தனிஅலகு கோரிக்கை, இன்று நேற்று உருவானதல்ல; இந்த அபிலாஷை 60 வருடங்கள் பழமையானது என்று சொல்லலாம். 1956ஆம் ஆண்டிலிருந்து பல கட்டங்களில், அந்தந்தக் காலங்களில், தமிழர்களுக்கு தலைமைதாங்கிய அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு குறித்துப் பேசி வந்திருக்கிறார்கள். அதைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

ஆனால், பிற்பட்ட காலத்தில், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுகளின், உடன்பாடுகளில், முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் சரியாக வெளிப்படுத்தப்படாமல், ஒரு சிறுகுழு போல முஸ்லிம்கள் காண்பிக்கப்பட்டனர். அத்துடன், ஆயுதங்களின் அரசியலும் வியாபித்திருந்தது.

எனவே, தனிஅலகுக் கோரிக்கையை முஸ்லிம்கள் மீள வலியுறுத்தினர். தமிழர்களுக்கு தனிநாட்டுக்கு சமமான ஒன்று கிடைக்கின்ற போது, அதேபோன்ற ஓர் அதிகார அலகு, முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என அஷ்ரப் கோரினார்.

அவரது மரணத்துக்குப் பிறகு, முஸ்லிம் அரசியல் என்பது, வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியதாலும், கிழக்கு முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வேறுவேறு நிகழ்ச்சி நிரல்களுக்குள் சங்கமமாகி இருந்தமையாலும் வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு விட்டதாலும் மேற்குறிப்பிட்ட கோரிக்கை, உரத்த தொனியில் முன்வைக்கப்படவில்லை.

இருப்பினும், இப்போது இலங்கையின் அரசமைப்பு மறுசீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு கடுமையான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றது, இதுவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்ற காரணத்தினாலும் முஸ்லிம்கள், தனி அதிகார அலகு குறித்தும் சிந்திக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 90 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்களின் நிலைப்பாடு, இப்போது வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதாகும். மாகாணங்களை இணைக்காமல் இருப்பதா அல்லது இணைத்துவிட்டு அதிகார அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு தருவதா விருப்பம் என முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்களுடைய முதன்மைத் தெரிவு, இணையாமல் இருப்பது என்பதாகவே இருக்கும்.

இதற்குப் பிரதான காரணம், இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தரப்படும் எனச் சொல்லப்படுகின்ற அதிகார அலகின் இலட்சணங்கள் எப்படியிருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாதிருக்கின்றமையாகும்.

முஸ்லிம்களுக்கும் அதிகார அலகை அரசியல்மயப்படுத்தி, அதை வலியுறுத்திய அஷ்ரப், வடக்கு, கிழக்கு இணைப்பை வெளிப்படையாகவே எதிர்த்தார். நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்டுமென்று கோரினார். அதன்பிறகு, அதன் சாத்தியத்தன்மை குறித்த பின்னணியில் அவர், தென்கிழக்கு அலகு பற்றியும் பேசியிருந்தார். இதற்கப்பால் தனி முஸ்லிம் மாகாணம் என்ற ஒரு கருத்திட்டமும் முஸ்லிம்களிடையே பேசப்படுவதுண்டு.

இங்கே வடக்கு, கிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு அல்லது மாகாணம் என்பது, இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கிய ஓர் அதிகார மையமாக இருக்கும்.

அவ்வாறு உருவாகும் பட்சத்தில், தமிழர்களின் ஆளுகைப் பிரதேசமும் நிலத்தொடர்பின்றி, இந்தியாவின் பாண்டிச்சேரி மாதிரியிலேயே அமையப் பெறும். அது சாத்தியமில்லாத சூழலில், இணையாத கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலனைக்குரியதாகின்றன. அதாவது, கிழக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய ஓர் அதிகார அலகாக இது இருக்கும்.

இதற்குப் பிறகுதான், தென்கிழக்கு அலகு என்ற விடயம் வருகின்றது. தென்கிழக்கு அலகு என்பதைக் கரையோர மாவட்டத்துக்குள் வருகின்ற ஊர்களை உள்ளடக்கிய ஆளுகைப் பிராந்தியம் என்று அர்த்தப்படுத்துவதற்கு, அன்றேல், அந்தச் சூத்திரத்தின் அடிப்படையில், அதை ஒரு பெரிய தீர்வாகக் காட்டி, முஸ்லிம்களைச் சமாளிப்பதற்கு, முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது.

அது தவறான புரிதலாகும். நிஜத்தில், தென்கிழக்கு அலகு எனச் சொல்லப்படுவது தென்கிழக்கை மையமாகக் கொண்டதும் கிழக்கில் உள்ள அநேக முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கியதுமான ஓர் அரசியல் அதிகார கேந்திரமாகவே கருதப்பட வேண்டும்.

எனவே, கரையோர மாவட்டம் என்பது, ஒரு நிர்வாக மாவட்டத்துக்கான ஏற்பாடாகும். அதற்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் சம்பந்தமில்லை. அதேபோல், முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு அலகு, முஸ்லிம் அலகு என எந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டாலும் அது ஒரு மாகாணத்துக்குச் சமமான ஆட்புலத்தையும் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பிராந்தியமாக அமைதல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தாத தீர்வு, நிரந்தரத் தீர்வாகாது.