கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்

பிரான்ஸில் நடைபெற்ற குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய சில அற்புதமான கருத்துக்களை முகநூலில் காணக்கிடைத்தது. (நன்றி: யோகு) சிலிர்த்துப்போய் கணனியின் மீது சில்லறையை விட்டெறியாததுதான் குறை. பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே போகிறார். அடுத்த அன்டன் பாலசிங்கம் கணக்கில் பேசுகிறார். நடு நிசியில் கனவு காலைந்து எழுந்திருந்து பிதற்றுவதைப்போல, ஒரு பெரும் விடுதலைப்போராட்ட அமைப்பின் முக்கியமான முடிவுகள் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிதள்ளுகிறார். இப்போதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்களே, குணா கவியழகன் எல்லாம் ஒரு பொருட்டா என்ன? இருந்துவிட்டு போகட்டும். முன்னுக்கு இருந்து கேட்பவர்கள் எல்லோரும் கதிரை நுனியில்தான் கிடக்கிறார்கள்.

ஆனால், அந்த பதினைந்து நிமிட காணொலியை பார்த்து முடித்தபோது, அது எனக்குள் மிகப்பெரியதொரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது, சிரியாவுக்கு விமானமோட்டிய கந்தர்மட பெடியனின் கதை எவ்வளவு மொக்கையானது என்று விளங்கியது. ஏனெனில், அந்த கதையிலிருந்ததைவிட அதிக சுவாரஸ்யத்தையும் அமோகமான கோமாளித்தனத்தையும் குணா கவியழகன் தனியொருவராக எனக்குள் ஏற்படுத்திவிட்டார்.

இந்தளவு அரசியலை மண்டைக்குள் வைத்துக்கொண்டுதான் இதுவரைகாலமும் இந்த எழுத்தாளர் பெருந்தகை நான்கு புத்தகங்களை எழுதி தள்ளினாரா என்ற ஆச்சரியம் ஒருபுறம். அதேவேளை, இப்படிப்பட்ட ஒருவரைத்தான் ஈழத்தின் நவீன போரிலக்கிய பிதாமகர் என்று ஒரு பஜனை கோஷ்டி தூக்கிவைத்துக்கொண்டு திரிகிறதா என்று எரிச்சல் மறுபுறும்.

அவரது கதாகாலேட்சத்தை கேளுங்கள்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இந்தப்போராட்டம் இப்படித்தான் (முள்ளிவாய்க்காலில்) முடிவடையப்போகிறது என்று முன்னமே தெரியுமாம். அப்படித்தெரிந்துதான் தனது குடும்பத்தையே அதில் ஆகுதியாக்கி – போரை இவ்வாறனதொரு பாதையில் கொண்டுபோய் – முடித்தாராம். அவருக்கு தப்பித்துக்கொள்வதற்கு போதிய வாய்ப்புக்கள் இருந்தனவாம். திருகோணமலையில் அமைதி வலையம் ஒன்றை அமைத்து அங்கு அமெரிக்க படைகள் வந்திறங்கி புலிகளையும் தளபதிகளையும் காப்பாற்றுவதற்கு தயாராக இருந்தனராம்.

இவ்வளவும் பரவாயில்லை! மிகுதியை கேளுங்கள்! இதுதான் ஹைலைட்!

அதாவது, சிங்கள மக்களதும் முழு சிறிலங்காவினது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டுதான் தலைவர் அமெரிக்காவின் ஆதரவுக்கரத்தை பிடிக்காமல் தன்னை அழித்துக்கொண்டு போராட்டத்தையும் முடித்துக்கொண்டாராம்! அதாவது, தானும் தனது தளபதிகளும் அமெரிக்காவிடம் போய் சேர்ந்துவிட்டால், அமெரிக்கா திருகோணமலையில் தளத்தை அமைத்து அங்கு அப்படியே நிரந்தரமாக குந்திவிடுமாம். அந்த நிரந்தர முகாமை சீனாவுக்கு எதிரான கேந்திர புள்ளியாக அமெரிக்கன் மாற்றிப்போடுவான் என்பதை தலைவர் பிரபாகரன் முன்னமே கணித்த விளைவுதான் முள்ளிவாய்க்கால் போர் முடிவாம்.

(இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக இருந்த ஜெப்ரி விடுதலைப்புலிகளை அமெரிக்கா கையாண்டிருக்கவேண்டிய முறைபற்றி எழுதிய மிக முக்கியமான அறிக்கை ஒன்று முன்னர் வெளிவந்திருந்தபோது அதனை தானும் படித்து வன்னியில் ஏனையவர்களோடும் பகிர்ந்துகொண்ட குணா கவியழகன், அதிலிருந்த உண்மையின் ஆழ அகலங்களை தெளிவாக புரிந்திருந்துமிருந்தபோதும்கூட புலம்பெயர்ந்தவுடன் ஏற்பட்ட புத்திமாறாட்டத்தின் வெளிப்பாடாக அவர் கூறிய இந்த பிதற்றல் மிகுந்த ஆச்சரியம்தான். இருந்தாலும் அதனை இப்போது ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு தொடர்வோம்)

ஆக –

இருபது நாடுகளிடமும் ஆயுதங்களை வாங்கி அவற்றை 2 இரண்டு கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் வைத்து கடைசியாக சிறிலங்கா இராணுவம் பொழிந்துகொண்டிருந்தபோது தலைவர் பிரபாகரன், இப்படி தூரநோக்கத்துடன் சிந்தித்த காரணத்தினால்தான் அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் மாய்த்துக்கொண்டாராம் என்பது குணா கவியழகனின் கண்டுபிடிப்பு.

இவ்வாறான பஞ்ச தந்திர கதைகளை எழுதுகின்ற பலே பேர்வழிகள்தான் இன்று போராட்டத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

குணா கவியழகனில் எனக்கு எந்த தனிப்பட்ட விரோதங்களோ குரோதங்களோ கிடையாது. அவரது முக்கால்வாசி எழுத்துக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்பது வேறு விடயம்.

குணா கவியழகன் இள வயதிலேயே போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். போராட்டத்தில் ஒரு காலை இழந்தவர். அது ஒரு மதிமிக்க தியாகம். போர் முடிவடைந்த பின்னர் – ஒரு கால் இல்லாத நிலையிலும் – அரசின் தண்டனையை அனுபவித்தவர். அது அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கவல்ல ஒரு விடயம். அவரது படைப்புலகத்தை எடுத்து நோக்கினால் – “நஞ்சுண்ட காடு” நாவல் ஓரளவுக்கு நேர்மையாக நின்று பேச முற்பட்ட பிரதி என்று கூறலாம்.

இவ்வளவு தராதரங்களையும் கொண்டுள்ள குணா கவியழகன் வன்னியில் பாலகுமரன் – திருநாவுக்கரசு – அன்புமணி – பார்த்தீபன் – நிலாந்தன் போன்றவர்களுடன் புலிகளின் பிழை சரிகளை புலிகளின் காலத்திலேயே பேசியவர். புலிகளின் தோல்விக்குரிய காரணங்களை புலிகளுக்கே விளங்கப்படுத்த முற்பட்டவர். சில இடங்களில் தோல்வியை தவிர்ப்பது பற்றிக்கூட சிந்தித்தவர்.

இது போன்ற பல சிறப்புத்தகுதிகள் குணா கவியழகனுக்கு உண்டு. இவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டுதான் குணா கவியழகனிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

தலைவர் இப்படித்தான் போராட்டத்தை முடிக்க எண்ணினார் என்றும் இதற்காகத்தான் இப்படி முடித்தார் என்றும் தற்போது தனது ஏழாவது அறிவால் கண்டுபிடித்துள்ள குணா கவியழகன், இந்த காரணத்தை வன்னியில் இரண்டு கால்களும் இல்லாமல் மற்றும் போராட்டத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் தரையில் புரண்டுகொண்டு தனது கடைசி காலத்தை கடத்துகின்ற ஒரு போராளியிடமும் நேரில் சென்று கூறுவதற்கு தயாரா?

அல்லது –

காணாமலாக்கப்பட்டவர்களுக்காக அவர்களது உறவினர்கள் ஒரு வருடத்துக்கும் மேல் மேற்கொண்டுவரும் போராட்ட பந்தலில் போய் நின்று இந்த காரணிகளை திருவாய் மலர தயாரா?

அல்லது –

வன்னியில் ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் செத்துக்கொண்டிருக்கும் குடும்பத்திடம் போய் நின்று இந்த போரியல் விளக்கத்தையும் தலைவரின் தீர்க்க தரிசனத்தையும் பீற்றுவதற்கு இவர் தயாரா?

எந்த உலகத்தில் இவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்?

முப்பது வருட போராட்டம் முள்ளிவாய்க்கலில் மூச்சிழந்து போனதற்கு யார் காரணம் என்று குணா கவியழகனுக்கு தெரியாதா?

ஈழத்தமிழன் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் தனது சுயநலத்தின்பால் கரைந்து போராட்டத்திலிருந்து புறவயமாக விலகிய நதியாக பாய்ந்துகொண்டிருந்தபோது தவிர்க்கமுடியாத பெரும் தோல்விக்குள் புதைந்துபோன புலிகளின் வரலாற்றை குணா கவியழகன் மறுக்க நினைக்கிறாரா? மறக்க நினைக்கிறாரா?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தவறுகளை தட்டிக்கேட்பதற்கு துணிவில்லாமல் – அந்த அமைப்பினை வெறும் போர் வெற்றிகளை தேடித்தரும் பந்தய குதிரைகளை போல பணம் கட்டி வேடிக்கை பார்த்தவர்களை நோக்கி கேள்வி கேட்காமல் அந்த தோல்வியை பரணி கிருஷ்ணரஜனிபோல ஒரு போரியல் தந்திரமாக வனைந்து வடிவு பார்க்கும் குணா கவியழகனுக்கு என்ன நடந்தது?

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த போரும் அதன் அழிவுகளும் எமக்கான போராட்டத்தை எம்மால் சரியாக வழிநடத்த தவறிய ஒட்டுமொத்த இனத்தினது கூட்டுக்குற்றமும்தான் என்ற உண்மையை குணா கவியழகன் எள்ளளவேனும் ஏற்க மறுப்பதுதான் அவர் இவ்வளவு காலமும் எழுதிவரும் படைப்பின் அறமா?

இந்த பேருண்மையை – நடைமுறை யதார்த்தத்தை – பேசுவதற்கு துணிவில்லாத குணா கவியழகன், இப்பேற்பட்ட அழிவை தலைவர் எதிர்பார்த்தார் என்றும் அதற்காகத்தான் தான் குடும்பத்தோடு இறந்தார் என்றும் அந்த பேரழிவுக்கு நியாயம் கற்பிக்க முற்படுவது எவ்வளவு கடைந்தெடுத்த போக்கிரித்தனம்?

ஒன்று மட்டும் உண்மை!

ஒரு இனத்தின் பேரழிவுக்கு காரணமான போராட்டத்தின் முடிவில் நியாயம் இருப்பதாகவும் – அந்த திட்டமிட்ட அழிவை நிறைவேற்றியது பிரபாகரனின் ஆளுமையே என்றும் குத்திமுறிந்திருப்பதன் மூலம் குணா கவியழகன் தனது படைப்புலக பயணத்தையும் அரசியல் பார்வையையும் தானே படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார்.

ஒரு சிக்கலான விடயத்துக்கு தீர்வு தெரியாவிட்டால்கூட பரவாயில்லை, ஆனால், அதற்கு இதுதான் தீர்வு என்று ஒரு மகா புரளியை எடுத்துவைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பதுதான் பெரிய கொடுமை. இதனைத்தான், குணா கவியழகன் தனது நூல் வெளியீட்டு விழாவில் செய்து முடித்திருக்கிறார். இதனை கொஞ்சப்பேர் தலைவரின் மாவீரர் தின உரையை கேட்டதுபோல கண்ணிலும் கன்னத்திலும் ஒற்றிப்போட்டு வந்திருக்கிறார்கள். இது பிள்ளையாரை பிடித்த சனி ஆலமரத்தையும் பிடிக்கிற வழமையான புலம்பெயர் கதைதான்.

ஆனால் ஒன்று – குணா கவியழகன் தனது கர்ப்ப நிலத்தின் வழி துப்பியது ஒரு சர்ப்ப விடம்!

(ப. தெய்வீகன்)