கலைந்தது பாராளுமன்றம்

பொதுத் தேர்தல் 2019 − ஜனவரி 5
வேட்பு மனுத்தாக்கல் 19−26 வரை
புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 இல் கூடும்

பாராளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது.

இதற்கான, விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியது.

ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்ட இதற்கான விசேட வர்த்தமானி நேற்று இரவு அரசாங்க அச்சக கூட்டுத்தாபன அச்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் (2) (c), 33 வது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் 2019 ஜனவரி 05 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூடவேண்டும் என்பது அரசியலமைப்பு விதிமுறையாகும்.

கடந்த மாதம் 26ம் திகதி (26-.10-. 2018) ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்டம் கட்டமாக 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது. நேற்று இரவு அமைச்சரவை அந்தஸ்துள்ள 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையின் எண்ணிக்ைக 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் அமைச்சர்களின் எண்ணிக்ைக 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையையடுத்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளார்.

உண்மையில், 2020ம் ஆண்டு ஓகஸ்ட் 17 ம் திகதி தற்போதய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது.

என்றாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தீர்மானித்தார். இதன்படி, நடப்புப் பாராளுமன்றம் 21 மாதங்களுக்கு முன்பே கலைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், நான்கரை வருடங்களுக்கு பின்பே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்வதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன, அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு 27.10.2018 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்ததோடு, எட்டாவது பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடங்கும் திகதியாக 16.11.2018 ஆம் திகதியை அவர் நிர்ணயித்தார்.

என்றாலும், கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டும் திகதியை 14.11.2018 ஆம் திகதிக்கு ஜனாதிபதி மாற்றியமைத்தார்.

இதற்கான, வர்த்தமானி அறிவிப்பு கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.

பாராளுமன்றத்தை கலைக்கும் பிரகடனமானது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கு திகதியை தீர்மானிப்பதுடன், அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதகாலத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூடவேண்டும்.

அரசியலமைப்பின் 5(ஏ) என்ற விதப்புரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் 62 ஆவது சரத்தின் 2 ஆவது பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதியானவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் ஒன்றுக்கான திகதியை அல்லது திகதிகளை தீர்மானிப்பதுடன் அவ்வாறான திகதியில் இருந்து மூன்று மாதகாலத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டவேண்டிய திகதிவரை தீர்மானிப்பதற்காக என் 5 (பி) என்ற விதப்புரையில் கூறப்பட்டுள்ளது.

2015 தேர்தல்

2015 ஓகஸ்ட் 17 இல் பாரளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில், இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகினர்.

2015 ஜுன் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 ஜுலை 6 முதல் 13 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.

மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.