காத்தான்குடிக்குள்ள காணி வாங்கப்போன கந்தப்போடியார் !

நம்மட கந்தப்போடியார் கடைசி காலத்தில காத்தான்குடிக்குள்ள இருப்பம் இஞ்ச இருந்தா டாக்டரிட்ட போறத்திற்கு மருந்து எடுக்கிறதுக்கெல்லாம் வசதியாக இருக்கும் அது மட்டுமல்ல அவருக்கு காத்தான்குடியிலதான் நிறைய கூட்டாளிமாரும் இருக்காங்க. சகோதர இனத்துடன் வாழ்ந்துதான் பார்ப்போம் என்று நினைச்சி மனிசன் ஆறு மாதமாக ஒரு துண்டு காணி வாங்கலாம் என அலைஞ்சாரு பாருங்கோ. ஒருத்தரும்ஒரு துண்டுக் காணியும் கொடுக்கவில்லை.வாடகைக்கு வீடும் கேட்டுப் பார்த்தார் கிடைக்கவே இல்லை.

மனிசன் நல்லா மனம் நொந்து போய் ஆதம் காக்காட்ட தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி இருக்கார். அதுக்கு ஆதம்காக்கா சொன்ன பதில் தெரியுமா ? போடியார் வாங்க போங்க நல்லாப்பழகுகிங்க சாப்பிடுங்க குடிங்க எங்கட கடையில வந்து சாமானுகளை வாங்கிப்போங்க

பசளை எண்ணெய் எல்லாம் தாரம், வேளாண்மை வெட்டின பிறகு நெல்லைக் கொண்டு வந்து எங்களுக்கு தாங்க ஆனா இஞ்ச குடியிருக்க மட்டும் இடத்தை கேட்காதிங்க . இது எங்கட ஏரியா இஞ்ச எல்லாம் எங்கட சனம் மட்டும்தான் இருக்கு. வேற ஆட்கள் வந்து இஞ்ச இருக்க பள்ளிவாசல் ஆட்களும் மட்டுமல்ல எங்கட அரசியல்வாதிகளும் விரும்பமாட்டாங்க.

நீங்க இருக்கப்போறம் என்று வருவிங்க பிறகு கும்பிடுறத்துக்கு என்று ஒரு பிள்ளையார் கல்லை வைப்பிங்க பிறகு அதுக்கு கோயில் கட்டி கோயிலுக்கு அர்ச்சகர் அவருடைய குடும்பம் என எங்கட இடம் பறிபோய்விடும். நல்லா இருக்கிற நம்மட ரெண்டு சமுகத்துக்குள்ளும் ஏன் வீண் பிரச்சினை போடியார், என்று ஆதம்காக்க நல்ல விளக்கம் கொடுத்தாரு பாருங்கோ.

இதெல்லாம் கேட்டு பழமும் தின்று கொட்டையும் போட்ட கந்தப்போடியாருக்கு வந்தது கோபம் திரும்பிக்கேட்டார் பாருங்கோ ஒரு கேள்வி. உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா. உங்கட ஆட்கள் எங்கட தான்தோன்றி அப்பன் இருக்கிற தனித் தமிழ் கிராமத்தில காணி கேட்டும் வீடு வாடகைக்கு கேட்டும் திரிகிறாங்க ளே அது என்ன நியாயம்?.

ஆதம்காக்கா இப்ப காணி கேப்பிங்க, கடை கட்டுவிங்க, கடைக்கு தமிழ் பிள்ளைகளை வேலைக்கு எடுப்பிங்க பிறகு அதுகளுக்கு எதாவது வில்லங்கம் வர அதைப் பார்த்து ஊரே குழம்பும். அது மட்டுமல்ல பள்ளிவாசல் கட்டுவிங்க, வெள்ளிக்கிழமைகளில கோயில்ல அர்ச்சனை நடக்கிறபோது வாங்கு சொல்லுவிங்க ஆது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்

பள்ளிவாசலைச்சுற்றி குடும்பங்களை குடியேற்றுவிங்க, பிறகு பிள்ளைகள் படிக்க தனிப்பள்ளிக்கூடம் என, இப்படி கதை நீளுறது மட்டுமல்ல, உங்கட ஆளேயே பிரதேச செயலாளராகவும் நியமிப்பிங்க இதெல்லாம் துவேசத்தில சொல்லல உண்மையைச் சொல்லுகிறேன். நல்லா இருக்கிற நம்மட சமுகத்துக்குள்ள ஏன் பிரச்சினையை வளர்ப்பான்.

நீங்களும் வாங்க, போங்க வியாபாரம் செய்யுங்க, நல்லநாள் பெருநாளுக்கு வந்து போங்க. அங்க வந்து காணி வாங்கி வீடுகட்டி கடைபோடுகிற எண்ணத்தை விட்டுங்க. புட்டும் தேங்காய்பூவும் மாதிரி இருந்த எங்களுக்கு இதுதான் சரியென்றுபடுகிது

நான் இன்றைக்கே போய் தேசத்துக் கோயில கூட்டம் போட்டு உங்கட ஆட்களுக்கு காணி விற்கிறத்தால எதிர்காலத்தில என்ன பிரச்சினை வரும் என்றத்தைச் சொல்லப்போறன் என்று சைக்கிளில ஏறி மண்முணைப் பாதையால கொக்கட்டிச்சோலைக்கு வந்தார் கந்தப்போடியார்.

போடியாரின் முடிவும் சரிதான் ஆதம்காக்கா சொன்னதும் சரிதான் என கூவான் கோழியும் கொட்டைப்பாக்கான் குருவியும் தமக்குள் தலையை ஆட்டிக்கொண்டன.

– சுபீட்சம்.கொம் –

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” -கவிஞர் கண்ணதாசன் – ( பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சொக்கியம்மா ? பாடல்.)