காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி

இலங்கையிலும் 1953ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக திடீரென உயர்த்தப்பட்ட போது, நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டில் பல பகுதிகளில், மக்கள் ஆரப்பாட்டங்களை நடத்தினர். அம்பலாங்கொடை மக்கள், காலி வீதியில் அடுப்புகளை மூட்டி, உணவு தயாரித்து, வீதிப் போக்குவரத்தைத் தடுத்தனர்.

இறுதியில், அச்சம் கொண்ட பிரதமர் டட்லி சேனாநாயக்க, அமைச்சரவையைக் கூட்டத்தை, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் ஒன்றிலேயே கூட்டினார். பின்னர், தனக்குச் சுகமில்லை என, பிரதமர் பதவியையும் இராஜினாமாச் செய்தார். ஹர்த்தால் போராட்டம் என்ற பெயரில், இடதுசாரிகள் இன்னமும் ஒவ்வோர் ஆண்டிலும் ஓகஸ்ட் 12ஆம் திகதியில், அந்தப் போரராட்டத்தை நினைவு கூருகின்றனர்.

விலைவாசி உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, நாளொன்றுக்கு 10 மணித்தியாலம் வரையிலான மின்வெட்டு போன்றவற்றுக்கு எதிராக, தற்போது நாட்டில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் நாட்டு மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டங்களாகும். இவை, அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல.

கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி பதவியில் அமர்த்த வாக்களித்த 69 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் ஒருசாராரும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது போராட்டத்தில், அரசியல்வாதிகள் கலந்து கொள்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பவில்லை. பல இடங்களில், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற அரசியல்வாதிகள், அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர்.

இது, இலங்கையில் அரசியல்வாதிகள் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதையும் மக்கள் அரசியல்வாதிகளை எந்தளவு வெறுக்கின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

மக்கள் அச்சமின்றி, ஜனாதிபதியையும் அரச தலைவர்களையும் ‘திருடர்கள்’ எனக் கூறுகின்றனர். ஜனாதிபதி பதவி துறக்க வேண்டும் என்ற அர்த்தம்பட, ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற வாசகம் தாங்கிய அட்டைகளை, ஆர்ப்பாட்டங்களின் போது எடுத்துச் செல்கின்றனர்.

தேர்தல் வந்தால், இந்த மக்கள் மாறலாம். தாம், திருடர்கள் என்ற கூறியவர்களுக்கும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால், தமது உண்மையான பிரச்சினைகளை முன்வைத்து, சுயமாக நடத்தும் போராட்டங்களின் போது, அவர்கள் அரசியல்வாதிகளை நம்பவில்லை. எனவே, பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் தனியாக ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னர், இந்தளவு மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்ட இலங்கையின் முதலாவது அரசாங்கம் இதுவாகும். சாதாரணமாக, சமூகத்தில் கீழ்மட்ட பொருளாதார நிலையில் உள்ளவர்களே வீதிப் போராட்டங்களில் ஈடுபடுவர். ஆனால், தற்போது நடைபெறும் போராட்டங்கள் வித்தியாசமானவை ஆகும். இந்தப் போராட்டங்களில், உயர் மத்தியதர வர்க்கத்தினரும் ஆங்கிலம் பேசும் உள்ளூர் சமூகத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

வியாழக்கிழமை (மார்ச் 31) இரவு மிரிஹானையில் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்துக்கு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம், இப்போராட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். ஆரம்பத்தில், அப்பிரதேசவாசிகள் சிலர் ஆரம்பித்த சிறிய ஆர்ப்பாட்டமொன்றே, பின்னர் பாரியதோர் ஆர்ப்பாட்டமாகியது.

அப்போது, ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி கற்களைக் எறிந்தனர். இராணுவம் பாவித்த பஸ்ஸூம் பொலிஸாரின் சில வாகனங்களும் தீயிட்டு கொழுத்தப்பட்டன. பொலிஸ் தடியடியில் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர்.

ஏப்ரல் மூன்றாம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, மக்கள் சுயமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்பாடு செய்து வந்த நிலையிலேயே, அந்தப் போராட்டம் இடம்பெற்றது. எனவே, அரசாங்கம், வெள்ளிக்கிழமை இரவு நாடு தழுவிய ரீதியில் அவசர கால சட்டத்தைப் பிறப்பித்து, திங்கட்கிழமை காலை வரை ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்தது.

ஆனால், கொதித்தெழும் மக்களைத் தடுக்க, அச்சட்டங்களால் முடியவில்லை. நாட்டில் பல பகுதிகளில் மக்கள், அவசரகாலச் சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாது, வீதியல் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்தப் போராட்டங்கள், நகர் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் பரவின.

ஏற்கெனவே, மனிதஉரிமைகள் மீறல் தொடர்பாக, சர்வதேச ரீதியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட, அரசாங்கம் அச்சப்படுகிறது போலும். எனவே தான், தமது சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தவிர்ந்த, தமது அமைச்சரவையை இராஜினாமாச் செய்யுமாறு ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதி பணித்தார்.

அதன் பின்னர், சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை அமைக்க முன்வருமாறு அவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அது வரை நான்கு பேரைக் கொண்ட தற்காலிக அமைச்சரவையையும் நியமித்தார்.

நிதி அமைச்சராக அலி சப்ரியையும் (இவர் நேற்று (05) இராஜினாமா செய்து விட்டார்) வெளிநாட்டு அமைச்சராக ஜீ.எல்.பீரிஸையும் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவையும் பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

நிதி அமைச்சர் ஒருவரையும் வெளிநாட்டமைச்சர் ஒருவரையும் நியமித்ததை விளங்கிக் கொள்ளலாம். மற்ற இருவரும், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி கொறடாவாகவும் சபை முதல்வராகவும் இருப்பதால் அவர்களை அமைச்சர்களாக நியமித்ததாக அரச தரப்பில் கூறுப்படுகிறது. ஆனால், ஆளும் கட்சிக் கொறடாவோ சபை முதல்வரோ, அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு கட்சியும், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் சேர முன்வரவில்லை. அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், கடந்த வியாழக்கிழமையே (31) இவ்வாறானதொரு பலகட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். அவர்கள், ஞாயிற்றுக்கிழமை (03) ஜனாதிபதியோடு நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் இக்கருத்தைத் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த இருவராவது அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வரவில்லை. அவர்களது ஆலோசனையின் படி அல்லது, அதற்கு ஏற்றவாறு அமைச்சரவையை அமைக்க, ஜனாதிபதி முற்பட்ட நிலையில், அமைச்சுப் பதவிகளை ஏற்க அவர்கள் விரும்பியிருக்கலாம். எந்த வகையிலாவது, இழந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதே அவர்களது நோக்கமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், எந்தவொரு கட்சியும் அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வராத நிலையில், அவர்களும் தற்போது மௌனமாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் பொதுமக்களின் கோபத்துக்கும் தீர்வு, எவரிடமும் இல்லாத நிலையில், மற்றைய கட்சிகள் அமைச்சர் பதவிகளை ஏற்க முற்படா. தற்போது அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், தம்பக்கமும் திரும்பலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கலாம்.

இதற்கு முன்னர், ஏனைய கட்சிகளின் சரியான ஆலோசனைகளையாவது கேட்க விரும்பாத ஜனாதிபதியே, இப்போது அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு அவர்களிடம் மன்றாடுகிறார். தற்போதைய பொருளாதார சிக்கலில், அவர்களையும் சிக்க வைத்தால் தாம், விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அவர் நினைக்கிறார் போலும்.

நேர்மையாக நடந்து, ஊழலைக் கூடிய வரை தடுத்து, பாரியதொரு நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டால், குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைப் பெற்று, வெளிநாட்டு கடன்களை ஓரளவுக்குத் தள்ளிப் போடலாம். அத்தோடு, ஓரிரு வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகள் வந்து, வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையும் ஓரளவுக்கு தீரலாம்.

ஆனால், கோட்டாபய தலைமையில், ஊழல் இல்லாத நிர்வாகம் ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்ப முடியாது. இதுவரை, அவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அவ்வாறு முடியுமாக இருந்தாலும், மக்கள் உடனடியாகத் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள்; அது சாத்தியமற்ற விடயமாகும்.

எனவே, வரப்போகும் நாள்களில் நாடு மிக மோசமான அரசியல், பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது.