காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக காண முடிகின்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதி சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்.

இவர்கள் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

காரைதீவு பிரதேசத்தின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, அடையாளம், தனித்துவம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு காரைதீவு பிரதேசத்தில் இருந்து கட்சி அரசியலுக்கு அப்பால் காரைதீவின் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை உள்வாங்கி ஒரே ஒரு சுயேச்சை குழு மாத்திரம் போட்டியிட வேண்டும் என்று காரைதீவு பிரதேச மக்கள் ஏகோபித்த தீர்மானம் எடுத்தனர். இம்மக்கள் ஆணையை அமுல்படுத்துவதற்காகவே காரைதீவு மகா சபை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஆணையை மதித்து, ஊருக்கு கட்டுப்பட்டு கட்சி அரசியல் செயற்பாட்டை கை விட்டு இம்முறை தேர்தலில் சுயேச்சை குழுவில் போட்டியிட நாமும் சம்மதித்து மகா சபைக்கு பூரண உதவி, ஒத்தாசை ஆகியவற்றை வழங்கினோம். குறிப்பாக எமது கட்சி தலைமைகளுக்கு ஊரின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தி அவர்களை ஆசுவாசப்படுத்தினோம். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை மகா சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சந்தித்து பேசியதை தொடர்ந்து மகா சபையின் போக்கில் பிறள்வு ஏற்பட்டு உள்ளது. மகா சபை அது அமைக்கப்பட்ட நோக்கத்தில் இருந்தும், ஊர் மக்கள் வழங்கிய ஆணையில் இருந்தும் விலகி நடக்க தொடங்கியதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கு காரைதீவில் இருந்து அதன் வேட்பாளர்களை நிறுத்துகின்ற கட்சி நலன் சார்ந்த தீர்மானத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக நின்று அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மகா சபை தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைந்த பட்சம் முறையாக கண்டிக்கவில்லை என்பதோடு மறைமுகமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உதவி, ஒத்தாசையாக செயற்படுவதையும் காண முடிகின்றது.

ஊர் மக்கள் கூடி எடுத்த தீர்மானத்தை மதித்து காரைதீவின் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் வேட்பாளர்களாக போட்டியிட வட்டார ரீதியாக காரைதீவு மகா சபைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் காரைதீவு மகா சபை நிறைவேற்று குழு உறுப்பினர்களில் சிலர் குறிப்பிட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்களை நிறுத்த ஆட்களை தேடி உள்ளனர். அதே போல இம்மகா சபையில் முக்கிய பதவிகள் உள்ள சிலர் அவர்களை வேட்பாளர்களாக வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மூடிய அறைக்குள் மிக திட்டமிடப்பட்ட வகையிலும், நுட்பமாகவும் முறைகேடாக நடத்தப்பட்டு தகுதியும், தகைமையும் அற்ற பல பேர் வேட்பாளர்களாக மகா சபையால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதுடன் சமூக பற்று, பொது நல அக்கறை ஆகியவற்றை உடைய அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளார்கள். ஆகவே காரைதீவு மகா சபை ஊர் மக்களின் தீர்மானத்துக்கு புறம்பாக வேறு ஒரு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது என்பது வெளிப்படையாகி உள்ளது. இதனால் மகா சபையின் போக்கில் காரைதீவு மக்கள் பயங்கர வெறுப்பும், பாரிய அதிருப்தியும் அடைந்து உள்ளார்கள். மகா சபை மீது முற்றாக நம்பிக்கை இழந்து விட்டனர்.

இந்நிலையில் ஊர் மக்களில் கணிசமான தொகையினரும், எமது கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் அவசர அவசரமாக எம்மை சந்தித்து கூட்டு சதியை முறியடிப்பதற்காக நாம் இத்தேர்தலில் எமது தனித்துவத்தை பேணியவர்களாக போட்டியிட வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இந்நிலையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியாகவோ, சுயேச்சை குழுவாகவோ காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிடும் என்பதில் மாற்றம் கிடையாது, அதே போல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்களும் காரைதீவு பிரதேச சபைக்கு நிச்சயம் போட்டியிடுவார்கள். நாம் எந்த வியூகத்தில் இத்தேர்தலில் காரைதீவு மக்களின் முன்னிலைக்கு வருகின்றபோதிலும்கூட ஊரின் நலனே முன்னிறுத்தியவையாகவே எமது அரசியல் செயற்பாடுகள் இருக்கும் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.