கார்த்திகை பூவே

(சுகன்)

போர்க்களத்தைத்தவிர வேறெதற்கும் இந்த நஞ்சுச் செடி நினைவுகூரப்படுவதில்லை. போரிற்குச் செல்லுமுன் செங்காந்தள் மாலையை அணிந்து செல்வதாய ஒரு சித்திரம் புறநானூறில் உண்டு.பெண்களின் கைவிரல்களுக்கு அழகின் உவமானமாகக் கொள்வது இப்பூவின் உருவம்.

கௌரவர்களுடன் யுத்தம் என முடிவெடுத்தபின் திரோபதி இந்த மலரைத் தலையிற் சூடி அதை உறுதிப்படுத்தினாரென பாரத உபகதை உண்டு.Gloriosa superba என தாவர வகைப்பாட்டில் அடையாளப்படுத்தப்படும் இச்செடியருகே பாம்புகள் படுத்திருக்குமெனவும் பார்த்தால் கண்வருத்தம் வருமெனவும் வேலியோரங்களில் தானே வளரும் இதை வெட்டி அழித்துவிடுவார்கள்.

இதைக் குறியீடாகக் கொள்ளும் இனக்குழுக்கள் அழிந்துபோவர்கள் என ஐதீகம்.அழகைக் காட்டினாலும் ஆரும் இம்மலரை அண்டுவதில்லை.தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர் ஒருவர் பிரபாகரனுக்குப் பரிந்துரை செய்தது இது.

தமிழ்நாட்டினதும் சிம்பாப்வேயினதும் தேசிய மலரிது. துக்கத்தின் குறியீடாகக்கூடக் கொள்ளப்படாத இப்பூவையும் செடியையும் ஆடு- மாடு மற்றும் தாவர பட்சணிகள் எதுவும் உணவாகக் கொள்வதில்லை.

பூவே செம்பூவே ..என பாடும் பாடல்களிலும் இதற்கு இடமில்லை,வாசமில்லா மலரிது…மல்லிகைப்பூவே ..மல்லிகைப்பூவே பார்த்தாயா..செந்தூரப்பூவே ..செந்தூரப்பூவே..முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..தாமரை பூத்த தடாகமடி…இப்படியாக வாழ்வோடிணைந்துவரும் பூக்களின் வழியிலும் இதற்கு இடமில்லை.கோவில்களின் சிற்பங்களிலும் இல்லை.பூசைக்கேற்ற பூவிது..எனக் கொண்டோருமில்லை.தண்மையும் குளிர்மையுமற்ற இப்பூ நெருப்பின் தீச்சுவாலை வடிவமாக அனல் மேலெழும் உற்பவமாகப் பார்க்கப்படுவதுமுண்டு “கார்த்திகைப்பூக் காதலர்கள் ” ஆழ்ந்த இரக்கத்திற்குரியவர்கள்.