காலத்திலும் மறக்கப்பட முடியாத போராளி கல்யாணி

இதில் அதிகம் அறியப்பட்டவராக புஸ்பராணி எம்மிடம் உள்ளார்.

தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்றவாறு இளைஞர் படை தீவிரவாதப் போக்குடன் உரிமைகளுக்காக குரல் கொடுத்த 1970 களின் முற் கூற்றில் இருந்து இந்த தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாக இணைந்தவர் கல்யாணி.

அது அவரது தாய், தந்தையர், சகோதரர்கள், குடும்பத்திற்குள் திருமணத்தால் இணைந்து வந்து சேர்ந்தவர்கள் என்று பலருமான இணைப்புடன் இயற்கை எய்தும் வரை போர் குணம் மிக்க வாழ்வியலை தனக்குள் கொண்டிருந்தவர் கல்யாணி.

அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளின் ஆரம்ப காலத்து தலைவர்கள் என்று அறியப்பட்ட சிவகுமார், பத்மநாபா, வரதராஜப்பெருமாள், பிரபாகரன், உமாமகேஸ்வரன், பாலகுமார். தங்க மகேந்திரன், புஸ்பராஜ, சந்திரமோகன், உமா மகேஸ்வரன் என்று எல்லோருடனும் பழகியவர்.

கடற்கரையை அண்டிய வாழ்வியலையும் அதற்குள் இருக்கும் இயல்பான போர்க்குணத்தையும் தனது சிறுவயதில் இருந்து சுமந்துவந்தவர் என்று கல்யாணியின் வாழ்வை வகைப்படுத்தலாம்.

அவரின் தாய் மனை வாழ்விடத்திற்கு பல நூறுதடவை சென்று வந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு.

அந்த மனை இன்றும் அவரின் தாயார் குலம் அக்காவின் மரணத்தின் பின்பும் அடையாளமாக எழுந்துதான் நிற்கின்றது.

அவர் ஈழவிடுதலைக்கான செயற்பாடுகளில் தன்னை வெவ்வேறு கால கட்டங்களில் இடையறாத செயற்பாடுகள் மூலம் இணைத்துப் பயணப்பட்டவர்.

யாழ்ப்பாணத்து தமிழாராய்ச்சி மகா நாட்டு காலகட்டத்தில் போராளிகளின் இரத்தக் கறை படிந்த யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் கதை கல்யாணியைப் பற்றியும் பேசும்.

அதிலும் பெண்களின் இரத்தக் கறையை பொலிஸ் நிலைய சுவர்களில் தனக்கான சித்திரவதை மூலம் தெறிக்க வைத்து வரலாற்றில் இடம்பிடிப்பவர்.

இந்த இரத்தக் கறை பெண்களுக்கான ஏற்படும் மாதவிலக்கு காலத்திற்கு முன்பே சித்திரவதைகளினால் ஏற்பட்ட இரத்தப் பெருக்காலும் ஏற்பட்டது என்பதை இவரோடு அன்று காவலில் இருந்த புஸ்பராணியின் எழுத்துக்களால் நிறுவப்பட்டும் இருக்கின்றன.

புஸ்பராணியின் அகாலம் இவ்வாறு விரிகின்றது…..

யாழ்ப்பாணக் பொலிஸ் நிலையம் அருகில் இருந்த கொழும்பு 4 ம் மாடியிற்கு ஒத்த கிங் கவுஸ் இல் நடைபெற்ற சித்திரவதையில் இரத்தம் உடலின் பல பாகங்களிலும் இருந்து வழிந்தது மட்டும் அல்ல…..

சித்திரவதையின் கோரத்தால் சில நாட்கள் முந்தி வந்த மாதவிடாய் இரத்தப் பெருக்கு என்பதாலும் எற்பட்டது என்பதாக புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற புத்தகம் சாட்சிப்படுத்துகின்றது.

இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த கொடுக்கப்பட்ட அழுக்குத் துணியை ‘பத்திரமாக வைத்திருங்கள் புஸ்பராணி… தோய்த்து நானும் உபயோகிக்க வேண்டி வரும்…..’ என்பதான கல்யாணியின் வாக்கு மூலங்கள் காவல் நிலைய கசாப்புக் கடை வன்முறைகளின் வெளிப்பாடுகளை கூறி நிற்கின்றன.

1970 களின் முற் கூற்றில் ஆயுதப் போராட்டம் என்பது ‘அறியப்படாத’ காலத்தில் கைதுகளும் காவல் நிலைய சித்திர வதைகளும் எவ்வாறு பொடூரமாக இருந்தன என்பதை இதனைவிட உண்மையாக எடுத்தியம்ப முடியாது.

சித்திரவதையின் கொடூரம் எவ்வளவு உக்கிரமானது மனித உரிமை மீறல்களா…? என்று யாரும் ஐநாவிலும் குரல் எழுப்ப முடியாத கால கட்டம் அது.

இதற்கு பழி தீர்க்கும் வன்மங்கள் அவர்களின் மனங்களில் எழுந்ததை விட எம் மக்களுக்கான விளிம்பு நிலை மக்களுக்கான விடுதலை என்பதை முன்னிலைப்படுத்திய மக்கள் போராளியாக தன்னை தகவமைத்துக் கொண்ட சிந்தனையாளர்களாக பலர் அன்று செயற்பட்டனர். இதற்குள் கல்யாணியை நாம் நிச்சயம் அடக்கலாம்.

இந்த சித்திரவதைகளை அவர்கள் சுமக்க வைத்தது எம் மக்களுக்கான விடுதலை என்ற உணர்வுதான்…. அர்ப்பணிப்புதான்…. செயற்பாடுதான்.

இதற்கான உடல் மன வலிமைகளை தனக்குள் கொண்டிருந்த பலரின் வரலாறுகள் அறியப்பட வேண்டியன. இதில் கல்யாணியின் வாழ்க்கை வரலாறும் அடங்கும்.

1972 ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசால் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியரசுச் சட்டதை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தமிழ் மக்களின் அடையாள எதிர்ப்பாக தனது பதவியை இராஜினமா செய்தார்.

பின்பு அங்கு நடைபெற்ற இடைத் தேர்தல் அவரே பங்கு பற்றினார்.

இந்த இடைத் தேர்தல் காங்கேசன்துறைத் தொகுதியில்(அப்போதைய தேர்தல் முறைப்படி தொகுதி அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும்) நடைபெற்றது.

இதில் செல்வநாயகத்தின் வெற்றிக்காக…. தமிழ் பேசும் மக்களின் அடையாள எதிர்ப்பு வெற்றிக்காக மேடைகளிலும் வீடுகளிலும் என்று காங்கேசன்துறைத் தொகுதியின் பட்டி தொட்டி எல்லாம் தொகுதியல் தங்கி இருந்து பிரச்சாரம் செய்தவர் கல்யாணி.

அன்றைய காலகட்டத்தில் இத்தேர்தலில் ஈடுபட்டிருந்த வாக்காளர் அனைத்து காங்கேசன்துறைத் தொகுதி மக்களிடமும் நன்கு அறிமுகமானவராக கல்யாணி விளங்கினார்.

இந்தப் தேர்தல் பிரச்சாக கூட்டங்களில் எல்லாம் மக்களோடு மக்களாக நின்று பிரதம பேச்சாளராக திகழ்ந்தவர் அ. வரதராஜப்பெருமாள் இவர் பின்னாளில் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையின் முதல் அமைச்சாராகவும் செயற்பட்டவர்.

தொடர்ந்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவை என்பது தமக்கு கீழாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகளும் இதற்குள் எற்பட்ட முரண்பட்ட நிலமைகளும்…

இதனால் ஏற்பட்ட பிளவுகளும் அதனைத் தொடர்ந்து உருவான தமிழீழ விடுதலை இயக்கமும்(தற்போதைய அமைப்பு அல்ல) என்பதாக பயணப்பட்டிருக்கின்றது.

இளைஞராக தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியவர் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அங்கமாக இல்லாது சுதந்திரமாக செயற்படும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைப்பிற்குள்ளும் குரல் எழுப்பியவர்.

இதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெற்ற தேசிய இனமாக வாழுதல் என்பதற்கான போராட்டப் பாதையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள். அமையவில்லை….. வீச்சு போதவில்லை என்பதாக தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்து உருவான தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரிஎல்ஓ(TLO)வில் தனது அரசியல் செயற்பாடுகளில் பயணித்தவர்.

அன்றைய காலத்தில் உலகில் அதிகம் அறியப்பட் விடுதலைப் போராட்டமான பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிஎல்ஓ(PLO) இன் பெயரை ஒட்டிய பெயராக ரிஎல்ஓ(TLO) என்று பெயர் சூட்டப்பட்டது தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு.

இந்த நிகழ்வுகள் செயற்பாடுகளில் அதிகம் நெருக்கம்மான செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டவர் கல்யாணி.

இது ஒரு தலைமறைவு இயக்கமான போது….

அன்றைய கால கட்டத்தில் வீட்டிற்கு தேடி வந்து இதில் செயற்படுபவர்களை தமிழ் பொலிசாரே கைது செய்யும் காலத்தில் இதன் முக்கிய தலைவர்கள் பலரின் கைதை தொடர்ந்து அமைப்பை தொடர்ந்தும் செயற்பாட்டிற்கள் வைத்திருப்பதற்காக அடிப்படை போராட்ட தலைமறைவு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான பொருளாதாரத் திரட்டல் என்பதாக புலோலி வங்கி கொள்ளை நடாத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்த யாழ் பொலிசாரின் கைதுகளிலும் கல்யாணியும் ஒருவராகின்றார். தமிழ் சிங்கள பொலிஸ் என்ற பாகுபாடின்றி பெண்களுக்கு செய்யக் கூடிய அனைத்து கொடுமைகளையும் செய்தவர்கள் அன்றைய யாழ் பொலிஸ நிலைய உத்தியோகஸ்தர்கள்.

இந்த அதிகாரப் பொலிஸ் படையில் எலும்புத் துண்டுகளுக்கு நாக்கை தொங்கப் போடுவர்கள் மத்தியில் கனிவாக கையாண்ட அந்த செல்வரத்தினம் என்ற பொலிஸ்காரரையும் நான் நினைவிற்கு கொண்டுவந்தாக வேண்டும்.

ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உக்கிரம் அடைந்த காலங்களில் மனத்தாலும் வேறு பல செயற்பாடுகளினாலும் மக்களின் விடுதலைக்கான தமது ஆதரவுகளை செய்தவண்ணம் தொடர்ந்த கல்யாணியின் வாழ்வு….

1990 களின் பின்பு அதிகம் குடும்பம் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் என்றாக தமிழ் நாடு சென்னையில் உள்ள அடையாற்றிற்குள் சுருங்கிவிட்டதாக சில வருடங்களுக்கு முன்பு கனடா திரும்புவதற்கு முதல் நாள் இரவு உணவாக ஒரு கவழம் சாதத்தை கல்யாணியின் கையால் அன்பான வேண்டுகோளுக்கு மறுக்காமல் உண்டு விடைபெற்ற அந்த நினவுகளுடன்…..

அம்பேக்காரின் வரிகளுடன் அவருக்கான நினைவாஞ்சலியை செலுத்துவோம்…

எவர்கள் இந்நாட்டில் வரலாற்றில்

மறைக்கப்பட்டார்களோ

அவர்களே இந் நாட்டின் வரலாற்றை

திரும்பவும் எழுதுவார்கள்

– அம்பேத்கார்