குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி, மாணவர்கள் கொலைக்குப் பதிலடியாகச் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸாரைத் தாமே வெட்டிக் காயப்படுத்தியதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் உரிமை கோரப்பட்டிருந்தது.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில், தமிழ்ப் பொலிஸாரே மாணவர்கள் கொலைக்கு துணைபோனதாகவும் கொலையில் முக்கிய பங்கு வகித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அவர்களைத் தாம் தண்டிக்கப் போவதாகவும் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆவா குழுவின் துண்டுப் பிரசுரம் வெளியாகிய சுமார் ஒரு வாரம் கழித்து, பிரபாகரன் படை என்ற பெயரில் இன்னொரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது.

அதில், தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்ப் பொலிஸாரும் குறிவைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழ் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்; அல்லது இடைவிலக வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அடுத்து தமிழ்ப் பொலிஸார், வடக்குக்கு வெளியே இடமாற்றம் பெற்றுச் சென்று விட வேண்டும் அல்லது விலகிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். அதற்கு 21 நாட்கள் காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு துண்டுப் பிரசுரங்களிலும் தமிழ்ப் பொலிஸார் குறிவைக்கப்பட்டிருப்பதும், தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் தமிழரின் உரிமைக்காகவே தாம் செயற்படுவது போலவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அதுபோலவே, இந்த இரண்டு துண்டுப் பிரசுரங்களும் இன விடுதலை, சிங்கள ஆக்கிரமிப்பு போன்றவற்றை முன்னிறுத்தியிருந்தன.

வாள்வெட்டுகள் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவும் அந்த அடையாளம் விட்டு விலகி, தம்மை இன விடுதலைக்கான போராளிகளாக அடையாளப்படுத்துவதற்கு, சுன்னாகம் சம்பவத்தையும் அதற்குப் பின்னரான துண்டுப் பிரசுரத்தையும் பயன்படுத்திக் கொள்ள முயன்றது.

அதுபோலவே, துண்டுப் பிரசுரத்தில் வெளியிட்ட தமது பெயரிலேயே இன விடுதலை அடையாளத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது பிரபாகரன் படை.

இந்த இரண்டு துண்டுப் பிரசுரங்களிலும் கூறப்பட்டுள்ளது போன்று, ஆவா குழுவும் பிரபாகரன் படையும் வடக்கில் உண்மையிலேயே இயங்குகின்றனவா அல்லது யாராலும் இயக்கப்படுகின்றனவா? என்பது தெரியாது.

எனினும், இதுபோன்ற அநாமதேயத் துண்டுப் பிரசுரங்களின் மூலமும் எச்சரிக்கைகளின் மூலமும் வடக்கில் குழப்பத்தை உருவாக்கி, இயல்பு நிலையைச் சீரழிக்கும் நோக்கத்துடன் பலர் செயற்படுகின்றனர் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடிகிறது.

வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பாக போர்க்காலங்களில் இதுபோன்ற ஏராளமான குழுக்களும் படைகளும் முளைத்திருந்தன.

எல்லாளன் படை, சங்கிலியன் படை, நாக படை, கழுகுப் படை, செம்படை, மண்டையன் குழு என்பன போன்ற பல குழுக்களின் பெயரில், எச்சரிக்கை அறிக்கைகளும் துண்டுப்பிரசுரங்களும் வெளியாகியிருந்தன.

எல்லாளன் படை கொழும்பையும் தென் பகுதியையும் ஒரு காலத்தில் கலக்கியது. சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர், அங்கு அரசாங்க நிர்வாகத்தைக் குழப்புவதற்கு, அஞ்சலில் அனுப்பப்பட்ட சங்கிலியன் படையின் துண்டுப் பிரசுரங்கள் போதுமானவையாக இருந்தன.

காலத்துக்குக் காலம் இதுபோன்ற துண்டுப் பிரசுரங்களின் ஊடாக வடக்கில் ஏதோ ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தவோ, அல்லது இயல்பு நிலையைச் சீரழிப்பதற்கோ முயற்சிக்கப்பட்டு வந்துள்ளது.

போர்க்காலத்தில் இதுபோன்ற துண்டுப் பிரசுரங்கள் ஓர் உளவியல் போர் உத்தியாகவும் பயயன்படுத்தப்பட்டு வந்தன.

இப்போது வெளியாகியிருக்கின்ற துண்டுப் பிரசுரங்கள் தமிழ்ப் பொலிஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள உளவியல்ப் போராக இருந்தாலும், இதன் பின்னால் பல்வேறுபட்ட அடிப்படை நோக்கங்கள் இருப்பதையும் உணர முடிகிறது.

வாள்வெட்டுகளுக்குப் புதிய நியாயம் கற்பிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இனவிடுதலைக்காகவும் சமூகத்தைச் சீரழிவில் இருந்து பாதுகாக்கவுமே வாள்வெட்டுகள் நடத்தப்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்றிருக்கிறது ஆவா குழுவின் துண்டுப் பிரசுரம்.

பிரபாகரன் படையின் துண்டுப் பிரசுரமோ, சிங்களப் பேரினவாதம், சிங்களக் குடியேற்றம், ஆக்கிரமிப்பு போன்ற சொற்களின் ஊடாக தமிழ்த் தேசியவாதிகளாகவும் பிரபாகரனின் வாரிசுகளாகவும் தம்மை அடையாளப்படுத்தவும் முயன்றிருக்கிறது.

இந்த முகமூடியைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் தாம் இனிமேல் செய்ய நினைக்கும் செயல்களை நியாயப்படுத்தப் போகின்றனர்.

இத்தகைய குழுக்களை யார் இயக்குகின்றார்கள், இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகள் இருந்தாலும், பொதுப்படையாக ஒரு சந்தேகம் அனைவரிடத்திலும் நிலவுவது உண்மை.

வடக்கின் இயல்பு நிலையைக் குழப்புவதன் மூலம், எப்போதும் பிரச்சினைக்குரிய பகுதியாக அடையாளப்படுத்துவதன் மூலம், இவர்கள் காரியம் சாதிக்க நினைக்கிறார்கள்.

அதற்குத் தமிழ்ப் பொலிஸார் தடையாக இருப்பார்கள் என்பதால் தான், அவர்களை முதலில் குறிவைத்திருக்கிறார்கள்.

பொலிஸ் நிர்வாகத்தைத் தமிழர்களுக்கு (மாகாண சபைக்கு) வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும் வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிஸார் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும்தான் தமிழ்ப் பொலிசாரை வடக்கில் இருந்து வெளியேற்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

தமிழ் தெரியாத சிங்களப் பொலிஸார் வடக்கில் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள், மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, தமிழ் பேசும் பொலிஸாரை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கமும் அதற்கு இணங்கியிருக்கிறது.

இத்தகைய நிலையில், தமிழ்ப் பொலிஸாரை வடக்கில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்படுவதன் அர்த்தம் என்ன? அதன் மூலம் பிரபாகரனின் படையும் ஆவா குழுவும் எதனைச் சாதிக்கப் போகின்றன?

மீண்டும் வடக்கில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கத்தையும் அடாவடித்தனங்களையும் தான் அது ஊக்குவிக்கப் போகிறது. அதற்காகத் தான் இந்த இரகசியக் குழுக்களின் பெயர்களின் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொக்குவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் எவருமே தமிழர்கள் இல்லை; சுட்டவரும் தமிழர் அல்ல!

இப்படியான நிலையில், ஆவா குழுவின் பெயரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தமிழ்ப் பொலிசாருக்கு எதிராக தமிழ் மக்களைத் திருப்பி விடும் நோக்கத்தில் தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக, சமூக விரோதச் செயல்களாயினும் சரி, தீவிரவாதச் செயல்களாயினும் சரி, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாலேயே அது சாத்தியமாகும்.

தமிழ்ப் பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், தமிழ்ப் பொலிஸாரைத் தான் அதிகளவில் நியமிக்க வேண்டும். அவர்களால்த்தான் கூடுதல் தகவல்களைத் திரட்ட முடியும். சிங்களப் பொலிஸாரால் அதற்கான சாத்தியங்கள் குறைவு. மொழிக்கும் அப்பால் அவர்களின் தொடர்பாடல் வட்டமும் குறைவாகவே இருக்கும்.

பஞ்சாபில், ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டது அங்கிருந்த பொலிஸாரால்த் தான். எம்.எஸ்.கில் என்ற சீக்கிய பொலிஸ் அதிகாரி தான், காலிஸ்தான் தனிநாடு கோரும் போராட்டத்தை ஒடுக்கினார்.

விடுதலைப் புலிகளும் தமது போராட்டத்தின் ஆரம்பத்தில் குறிவைத்தது தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகளையும் புலனாய்வாளர்களையும் தான். ஏனென்றால், அவர்கள் மூலம் அரசாங்கம் மற்றும் படைத்தரப்புக்குத் தகவல்கள் கிடைப்பதைத் தடுக்க முயன்றார்கள்.

வடக்கில் தற்போது தமிழ்ப் பொலிஸார் செயற்படுவதை விரும்பாத சக்திகள் தான் இத்தகைய துண்டுப் பிரசுரங்களின் பின்னால் இயங்கின்றன. பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது என்று விரும்பும் சக்திகள்தான் இதன் பின்னால் இருக்கின்றன.

வடக்கில் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு, பேரினவாதத் திணிப்பு பற்றியெல்லாம், தமது துண்டுப் பிரசுரத்தில் பேசியுள்ள பிரபாகரனின் படை, வடக்கில் இருந்து தமிழ்ப் பொலிஸாரை வெளியேற்றினால், சிங்களப் பொலிஸாரின் முழு நிர்வாகமே நடக்கும் என்பதை எப்படி மறந்து போனது?

அது சிங்களப் பேரினவாத திணிப்புக்கும் குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கும் இன்னும் துணையாக அமையும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?

இது ஒன்றும் அவர்களுக்குத் தெரியாத விடயமல்ல. அதுவே நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தமிழர்களின் கையில் பொலிஸ் அதிகாரங்கள் கிடைத்து விடக் கூடாது என்பதையும் வடக்கில் குழப்பம் நீடித்திருக்க வேண்டும் என்பதுமே இவர்களின் திட்டமாக இருக்கிறது. அதற்காகத் தான் இவர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
(கே. சஞ்சயன்)