கென்ய தேர்தல் – 2017

(ஜனகன் முத்துக்குமார்)

கென்யாவில் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் இருந்து, தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்பதுடன், அதில் பெரும்பாலானோர், எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த, கென்யாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குடியேற்றங்களைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மறுதேர்தல் வாக்களிப்பில், தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta), எதிர்க்கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 98 சதவீத வாக்குகளைப் பெற்று, அரச தலைவராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். பதிவாகியுள்ள மொத்த வாக்குகளான 6.4 மில்லியனில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் இது மூன்றில் ஒரு பங்கு என்பதே, ஜனாதிபதியின் வெற்றியை தார்மீக ரீதியாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

கென்யா, பல்வேறு இன, சமூகங்கள், குழுக்களின் ஒன்றிணைந்த நாடாகும். இது மிகவும் செல்வாக்கு வாய்ந்த கிகுயு இன சமூகத்தையும், அவர்களால் புறக்கணிக்கப்படும் சிறுபான்மைச் சமூகமான லுவோவையும் கொண்டிருப்பதுடன், இவ்விரு இன சமூகங்களுக்கிடையிலான கசப்புணர்வானது, இரு சமூகங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்திருந்தது. கென்யாட்டா, 55, ஒரு கிகுயு. எதிர்க்கட்சியை வழிநடத்தும் 72 வயதான மூத்த அரசியல்வாதியான ரெயேசா ஒடிங்கா, ஒரு லூவோ ஆவார். இந்நிலையிலேயே இவ்விரு சமூகங்களுக்கும் இடையிலான கசப்புணர்வின் மத்தியில் கென்ய அரசாங்கம், தனது தேர்தலை அறிவித்திருந்தது. இதுவே 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களுக்குப் பிந்தைய இக்காலப்பகுதி வரை, இனக்கலவரம் தொடரவும் 1,200 மரணங்களுக்கும் வழிவகுத்திருந்தது.

கென்யாட்டா, வியாழக்கிழமையன்று வாக்களித்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள், பழங்குடி அரசியலில் ஈடுபடுவதால், எங்களின் இலக்குகளை அடைய முடியாது. நாம் அனைவரும், எமக்குள்ளான பிரச்சினைகளை மறந்து, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல ஒன்றுபட வேண்டும்” என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மில்லி ஒடிஹாம்போ கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் வன்முறைகளைத் தூண்டிவிட விரும்புகிறது எனத் தெரிவித்திருந்தார். “அவர்கள், ஓர் இனக்குழு பற்றிக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், இந்த நாட்டில் உள்ள மக்கள், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்” என்று கூறினார்.

வியாழக்கிழமையன்று நடந்த கருத்துக்கணிப்புகள், பொலிஸ், அரசாங்க சார்புக் குழுக்களால் தடுத்து நிறுத்தப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய அவர், கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள நான்கு மாவட்டங்களில் வாக்கெடுப்பு, கடந்த சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டமையையும், மீண்டும் மீண்டும் மோதல்களுக்குப் பின்னர் மறுபடியும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டமையையும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், தேர்தலுக்காக புதிய திகதிகள் வழங்கப்படாமை பற்றியும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கென்ய மக்கள் வாக்களிக்கும் உரிமையை மறுக்கும்படி எதிர்க்கட்சி கேட்டிருந்தமை மற்றும் அது தொடர்பாக மிரட்டல்களையும் வன்முறைகளையும், தாம் முற்றாக எதிர்ப்பதாக, அரசாங்க ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவில் அதிகரித்துவரும் குழப்பமான அரசியல் நாடகம், 8 ஓகஸ்ட் தேர்தலில் கென்யாட்டாவின் வெற்றியை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன் ஆரம்பமாகியிருந்தது. இத்தேர்தலானது சுதந்திரமான தேர்தல் மற்றும் எல்லை தொடர்பான ஆணைக்குழு (Independent Electoral and Boundaries Commission), குறித்த தேர்தலானது ஒழுங்கற்ற மற்றும் தவறான முறையில் மேற்கொள்ளப்பட்டது என கென்ய உச்சநீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆரம்பமாகியிருந்தது. குறித்த வாக்கெடுப்புக்கான வாக்கெடுப்பில் பங்குபற்றியோர், 80 சதவீதம் ஆகும். கடந்த தேர்தலில் கென்யாட்டா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் இம்முறை தேர்தலும் அதேமுறையில் அர்த்தமற்றதாகிவிடும் என்ற கவலையையும், கென்யாட்டா அண்மையில் வெளியிட்டிருந்திருந்தார்.

புதிய தேர்தலுக்கான முடிவுகளில், பல சட்ட சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வாளர்கள், நெருக்கடியிலிருந்து வெளிப்படையான முறையில் புதிய அரசாங்கம் அமைவதற்குச் சாத்தியம் இல்லை என்று நம்புகின்றனர். மேலும் கென்யாட்டா, ஒடிங்கா முகாம்களுக்கு இடையே, நீடித்ததோர் அரசியல் முரண்பாட்டை இத்தேர்தல் கொண்டுவரும் என, அநேக கென்யர்கள் அஞ்சுகின்றனர்.

“நீதிமன்றங்கள் தேர்தலை இரத்துச் செய்யாவிட்டால், கென்யாட்டா, தெளிவானதோர் ஆணை இல்லாமல், தனது அரசாங்கத்தை அமைக்கமுடியும். எனினும் இது வெற்றிபெறாத ஓர் அரசாங்கமெனக் காட்டுவதற்கு, எதிர்க்கட்சியினருக்கு எதிர்ப்பு மூலோபாயத்தை ஏற்படுத்தும்” என்று, சர்வதேச நெருக்கடிக் குழுவின் நைரோபி சார்ந்த ஆய்வாளர் முரிட்டி முட்டிகா கூறினார்.

மறுபுறத்தே குறித்த தேர்தலின் நிலைபெறும் தன்மை, உச்சநீதிமன்றில் கேள்விக்குட்படுத்தப்படுமாயின், அரசியலமைப்பின் விதந்துரைகளுக்கு முரணாக, நாட்டின் சில பகுதிகளில் தேர்தல் நிலையங்களைத் திறக்க அரசாங்கம் தவறியதென, எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்ட முடியும். இது, தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் தேவையான எண்ணிக்கையில் தேர்தல் அதிகாரிகளை முறையாக நியமனம் செய்யவில்லை என்று ஏற்கெனவே மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்துமாயின், குறித்த தேர்தல் செல்லுபடியற்றது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என்பதே, ஆளுங்கட்சியின் அச்சப்பாடு.

ஓகஸ்ட் தேர்தல் முடிவுகளை தடைசெய்வதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கென்யாவில் ஜனநாயகத்துக்கான ஒரு வெற்றியாகவே பார்க்கப்பட்டது. மோதல்கள், மனிதாபிமான நெருக்கடிகள், ஆழ்ந்த சுற்றுச்சூழல் துயரங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தில், உச்சநீதிமன்ற சுயாதீனத்தன்மை, ஸ்திரத்தன்மைக்கு ஓர் அரணாகக் கருதப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் இத்தேர்தல் முடிவுகளைச் செல்லுபடியற்றவையெனத் தீர்ப்பளிக்குமாயின், அது நாட்டின் உள்நாட்டுக் கலவரங்கள் இலகுவில் தீர்வதற்கு ஒருபோதும் வழிசமைக்காது.